text
stringlengths
309
27.8k
முல்லாவின் நண்பர் ஒருவர் பெரிய பணக்காரர். அவர் வீட்டுக்கு முல்லா செல்லும் போதெல்லாம் பணக்காரர் தமது திரண்ட சொத்துக்களை தம் மக்களுக்கு எவ்வாறு பிரித்து உயில் எழுதி வைப்பது என்பது பற்றியே அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார். உயிலை எழுவதால் அவருக்கு சிக்கல் ஏதும் இல்லை. ஆனால் தம்முடைய செல்வச் செருக்குனை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே யாரைக் கண்டாலும் உயிலைப் பற்றிப் பேச்செடுத்து மணிக்கணக்கில் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார். அவருடைய பணச் செருக்கு முல்லாவுக்கு எரிச்சலாக இருக்கும். ஒருநாள் செல்வந்தர் முல்லாவைத் தேடிக் கொண்டு முல்லாவின் வீட்டுக்கு வந்தார். அப்போது முல்லா ஒரு தாளில் ஏதோ தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பதை செல்வந்தர் கண்டார். " இவ்வளவு தீவிர சிந்தனையுடன் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்?" என்று செல்வந்தர் கேட்டார். " என் உயிலைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன் தயாரித்து முடிப்பதற்குள் உயிர் போய்விடும் போலிருக்கிறது. ஒரே குழப்பம் சிக்கல் " என்றார் முல்லா. " நீரும் உயில் எழுதுகிறீரா? உயில் எழுதும் அளவுக்கு உம்மிடம் சொத்தோ பணமோ ஏது? ஒன்றும் இல்லாதபோது குழப்பமும் சிக்கலும் எங்கிருந்து வந்தது?" என்று செல்வந்தர் வியப்புடன் கேட்டார். " சொத்தோ செல்வமோ இல்லாததனால்தானே உயில் எழுதுவதில் சிக்கல் இல்லாத சொத்து அல்லது செல்வத்தை எவ்வாறு என் மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பது என்றுதான் எனக்கு விளங்கவில்லை" என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார். தம்மை மட்டம் தட்டவே முல்லா இவ்வாறு கூறுகிறார் என்று உணர்ந்த செல்வந்தர் வெட்கத்துடன் தலைகுனிந்தார்.
பரமார்த்த குருவுக்கு ஒரு பணக்காரன் இலவசமாக ஒரு குதிரையைக் கொடுத்தான். அந்தக் குதிரையோ கிழடு தட்டிப் போயிருந்தது. ஒரு கண் நொள்ளை! ஒரு காது மூளி! முன் கால்களில் ஒன்று நொண்டி! பின் கால்கள் வீங்கிப் போய் இருந்தன. உடம்பு பூராவும் சொறிபிடித்து, பார்ப்பதற்கு அசிங்கமாக இருந்தது. இருந்தாலும், பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் பரம சந்தோஷம். “பணம் செலவு செய்யாமல் இலவசமாகக் கிடைத்ததே!” என்று நினைத்தனர். “குருவே! கடிவாளம் கட்டுவதற்கு வார் இல்லை. அதனால் வைக்கோல் பிரியைச் சுற்றி விடலாம்!” என்று அப்படியே செய்தான் மட்டி. குரு உட்காருவதற்காக, கிழிந்து போன பழைய கந்தல் கோணி ஒன்றைக் குதிரைமேல் போட்டான் மண்டு. எருக்கம் பூவைப் பறித்து மாலையாக்கி குதிரையின் கழுத்தில் அணிவித்தான், முட்டாள். இவர்கள் செய்வதைப் பார்ப்பதற்கு ஊரே கூடி விட்டது. குதிரைக்கு எல்லா அலங்காரமும் முடிந்தது. தொந்தியும், தொப்பையுமாய் இருக்கும் பரமார்த்தர், குதிரையின் மேல் பெருமையோடு ஏறி உட்கார்ந்தார். அவ்வளவுதான்! கனம் தாங்காமல் வலியால் குதிரை அலற ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அப்படியே படுத்து விட்டது. “சே, சே! இதென்ன சண்டித்தனம் பண்ணுகிறது?” என்று சலித்துக் கொண்டே கீழே இறங்கினார் குரு. முட்டாளுக்கு ஒரு யோசனை தோன்றியது. கையில் வைத்திருந்த கொள்ளிக் கட்டையைக் கொண்டு போய் குதிரையின் காலில் வைத்தான். உடனே அது விலுக்கென்று உதைத்துக் கொண்டு எழுந்தது. இப்படியும் அப்படியுமாக கொஞ்ச தூரம் ஓடி நின்றது. மறுபடியும் குரு அதன் மேல் உட்கார்ந்தார். இப்போது மட்டி, அதன் வாலைப் பிடித்து முறுக்கினான். கோபம் கொண்ட குதிரை எட்டி ஓர் உதை விட்டது. அது உதைத்த உதையில் கீழே விழுந்து புரண்ட மட்டிக்கு நாலு பற்கள் உடைந்து விட்டன! வாயெல்லாம் ரத்தம். இதை எல்லாம் பார்த்த குருவுக்கு உதறல் எடுத்தது. “சீடர்களே! எனக்குப் பயமாக இருக்கிறது. நான் கீழே இறங்கி விடுகிறேன்!” என்றார். “குருவே! நீங்கள் கவலையே பட வேண்டாம். அப்படியே உட்கார்ந்து இருங்கள். நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்!” என்று பதில் சொன்னான் முட்டாள். மண்டுவுக்கும் மடையனுக்கும் வேறு ஒரு யோசனை உதித்தது. குதிரைக்கு முன்னால் நின்று கொண்டு, முகத்தைக் கோணலாக்கி, கண்களை உருட்டி, உதட்டைப் பிதுக்கி, “ஆ….ஊ….ஊ…” என்று ஊளையிட்டுப் பயம் காட்டினார்கள். இதனால் குதிரை ஒரேயடியாக மிரண்டு, மெல்ல மெல்லப் பின் பக்கமாக நடக்க ஆரம்பித்தது! குருவுக்கும், சீடர்களுக்கும் அதிசயமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. சுற்றி இருந்தவர்கள் கைதட்டிச் சிரிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து பின்பக்கமாகவே குதிரை ஓடவும் தொடங்கியது. “நொண்டிக் குதிரை! நொள்ளைக் குதிரை! குருவுக்கேற்ற குதிரை! கழுதைபோல எட்டி உதைக்கும்! நாயைப் போல் ஆளைக் கடிக்கும்! ஓரம் போங்கோ! வழியை விடுங்கோ!” என்று பாடியபடி சீடர்கள் போய்க் கொண்டு இருந்தனர். பின்பக்கமாகவே ஓடுவது குதிரைக்குப் பழகி விட்டது. அப்போது அடுத்த ஊரின் எல்லை வந்தது. அங்கிருந்த மணியக்காரன் இவர்களை நிறுத்தினார்கள். “வெளியூர்க் குதிரைக்கு வரி கட்ட வேண்டும். பத்துப் பணம் எடுங்கள்” என்றான். “வரியா? நான் ஏறி வருகிற குதிரைக்கு வரிக வாங்கலாமா? அதுவும் இது இனாமாகவே வந்த குதிரை. இதற்கு வரி கட்ட மாட்டோம்!” என்று கூறினார் குரு. “எதுவானாலும் சரி. வரி கொடுக்காவிட்டால் விடமாட்டேன்” என்று சொல்லி அவர்களை மடக்கினான், மணியக்காரன். “நாம் கொடாக்கண்டன் என்றால் இவன் விடாக்கண்டனாய் இருக்கிறானே!” என்று நினைத்து ஐந்து பணம் கொடுத்தனர். “இன்னும் ஐந்து பணம் கொடுங்கள்” “ஒரு குதிரைக்கு ஐந்து பணம்தானே வரி?” “ஒரு பக்கம் மட்டும் போகும் குதிரைக்குத்தான் ஐந்து பணம். உங்கள் குதிரை பின்னாலும் போகிறதே!” “இதென்ன அநியாயம்?” என்று வருத்தப்பட்டு மேலும் ஐந்து பணம் தந்தனர். “இந்தக் குதிரையால் நமக்கு எவ்வளவு பணம் நஷ்டமாகிறது?” என்று சொன்னபடி பயணத்தைத் தொடர்ந்தனர். ஒரு வழியாக ஊருக்குள் நுழைந்து, ஒரு மடத்துக்குப் போனார்கள். அப்போது இரவு நேரம். எல்லோருக்கும் களைப்பாக இருந்ததால், குதிரையைக் கட்டிப்போட மறந்து, தூங்கி விட்டனர். காலையில் எழுந்து ஆளுக்கொரு பக்கமாகத் தேடிக் கொண்டு போனார்கள். கடைசியில் ஒரு வயலுக்குப் பக்கத்தில் அந்தக் குதிரை கட்டப்பட்டு இருந்தது! “இது இரவு முழுவதும் என் வயலில் இறங்கி பயிர்களை எல்லாம் நாசம் செய்து விட்டது. அதற்குப் பதிலாகப் பத்துப் பணம் கொடுத்தால்தான் குதிரையை விடுவேன்” என்று சொன்னான், அதைக் கட்டி வைத்திருந்த உழவன். அவனிடம் பேரம் பேசி நான்கு பணம் கொடுத்து விட்டுக் குதிரையை ஓட்டி வந்தனர். “சீ…சீ…!” இந்தக் குதிரையால் நமக்குப் பெரும் தொல்லை. என் மானமே போகிறது.! பேசாமல் இதை விட்டு விடலாம்! என்று வருத்தப்பட்டார் குரு. அப்போது அங்கிருந்த ஒருவன், குதிரைக்குப் பீடை பிடித்துள்ளது. அதனால்தான் இப்படி ஆகிறது. அந்தப் பீடையைக் கழித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும். செலவோடு செலவாக எனக்கும் ஐந்து பணம் கொடுங்கள் என்று யோசனை சொன்னான். குருவும், சீடர்களும் மூக்கால் அழுது கொண்டே அவனிடம் பணம் கொடுத்தனர். பிறகு, குதிரையின் ஒரு காதைப் பிடித்துக் கொண்டு “ஆ! பீடையெல்லாம் இந்தக் காதிலேதான் இருக்கிறது. இதனால்தான் ஏற்கனவே ஒரு காதை அறுத்திருக்கிறார்கள். இப்போது இந்தக் காதையும் அறுத்து விட்டால் சரியாகி விடும்!” என்றான், ஏமாற்றுக்காரன். உடனே மட்டி, மண்ணில் விழுந்து புரண்டு, “சீக்கிரம் காதை அறுங்கள்!” என்று குதித்தான். மூடனோ ஓர் அரிவாளைத் தீட்டிக் கொண்டு வந்து கொடுத்தான். எல்லோரும் பிடித்துக் கொள்ள, ஏமாற்றுக்காரன், குதிரையின் காதை அறுத்து எடுத்தான்! குதிரையோ வலி தாங்காமல் கீழே விழுந்து கதறியது. பிறகு உயிரை விட்டது! எல்லோரும் அறுத்த காதைக் கொண்டு போய் ஆழக் குழி தோண்டிப் புதைத்தனர். “ஒழிந்தது பீடை! இனி மேல் கவலையில்லை!” என்றான், ஏமாற்றுக்காரன். பரமார்த்த குருவும் சீடர்களும் மகிழ்ச்சியோடு அடுத்த ஊருக்குப் புறப்பட்டார்கள்.
ஒருநாள் காலையில் அக்பர் தன் அரண்மனை உப்பரிகையில் உலவிக் கொண்டிருக்கையில், அவர் பார்வை நந்தவனத்தின் மீது சென்றது. அது வசந்த காலம் என்பதால் மரங்களும், செடிகளும் வண்ண மலர்களுடன் பூத்துக் குலுங்க, அவற்றிலிருந்து வீசிய நிறுமணம் மனத்தைக் கிறங்கச் செய்தது. இளங்காலையில் வீசிய தென்றல் அவர் உடலை இதமாக வருடிச் செல்ல, அவர் காற்றில் மிதப்பதைப் போல் உணர்ந்தார். இவ்வாறு தன்னை மறந்த நலையில் உலவிக் கொண்டிருந்த அக்பர், நந்தவனத்தில் நடந்து செல்லும் வழியில் கல் ஒன்று இருப்பதை கவனிக்கத் தவறி விட்டார். அதில் கால் இடறி இடித்துக் கொள்ள, கால் கட்டை விரலிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அதுவரை அவர் மனத்தில் பொங்கிய உற்சாகம் கணத்தில் மறைந்து போக, கோபமும், எரிச்சலும் குடி கொள்ள, அவர் “தோட்டக்காரன் எங்கே? எங்கே இருந்தாலும் வா!” என்று கத்தினார். தோட்டக்காரன் மண்வெட்டியை எடுக்கக் குடிசைக்குள் சென்று இருந்ததால், அக்பரின் கூக்குரல் அவன் காதில் விழவில்லை. கூப்பிட்ட குரலுக்கு தோட்டக்காரன் வராததால், அக்பரின் கோபம் தலைக்கு ஏறியது. அரண்மனையை அடைந்தவுடன் காவல் அதிகாரியை அழைத்தவர், நடந்தவற்றைக் கூறி தோட்டக்காரனை தூக்கிலுடும் படி உத்தரவிட்டார். காவல் அதிகாரிக்கு அதைக் கேட்டு தூக்கி வாரிப் போட்டது. ஒரு சாதாரணத் தவறுக்கு மரண தண்டனையா என்று அதிர்ந்து போனார். ஆனால் சக்கரவர்த்தி மிகவும் கோபமாக இருந்ததால், அவரிடம் எதுவும் கேட்கத் துணிச்சலின்றி, அவர் பின் வாங்கினார். பின்னர் தன்னுடைய இரு காவலர்களை அழைத்துக் கொண்டு, தோட்டக்காரனை நோக்கிச் சென்றார். காலை நேரத்தில் காவல் அதிகாரி தன் ஆட்களுடன் தன்னைத் தேடி வருவது கண்டு தோட்டக்காரன் திடுக்கிட்டான். “என்ன விஷயம் ஐயா?” என்று நடுங்கும் குரலில் கேட்க, “தோட்டத்தில் சக்கரவர்த்தி உலவும் போது ஒரு கல்லில் அவர் காலை இடித்துக் கொண்டார். அது உன்னுடைய தவறு என்பதால் உனக்கு நாளைக் காலை தூக்கு தண்டனை!” என்றார் அதிகாரி. இதைக் கேட்டதும் தோட்டக்காரன் துடித்தான். அவன் மனைவியோ அதைக் கேட்டு அலறி அழுதாள். “கால் இடித்துக் கொண்டதற்கு தூக்கு தண்டனையா? இது என்ன அநியாயம்? நீங்கள் சக்கரவர்த்தியிடம் எடுத்துச் சொல்லக் கூடாதா?” என்றாள். “எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. உன் கணவன் தோட்டத்தில் விட்டு வைத்த கல் இப்போது அவன் தலையிலேயே விழப் போகிறது” என்ற அதிகாரி சற்று யோசித்தபின், “தூக்குதண்டனை நாளைக்குத்தான், இன்னும் ஒருநாள் சமயம் உள்ளது. நீ பீர்பாலிடம் போய் உன் கணவனைப் பற்றிக் கூறி விடுவிக்க முயற்சி செய்” என்று சொல்லிவிட்டு, தோட்டக்காரனின் கைகளில் விலங்கு மாட்டி இழுத்துச் சென்றனர். உடனே, தோட்டக்காரனின் மனைவி தலைவிரி கோலமாக பீர்பல் வீட்டிற்கு ஓடிப்போய் அவரை சந்தித்துத் தன் கணவனை எப்படியாவது விடுவிக்குமாறு மன்றாடினாள். அவள் மீது இரக்கம் கொண்ட பீர்பால் “கவலைப்படாதே, உன் கணவனை விடுதலை செய்ய முயற்சிக்கிறேன்” என்று சிறைச்சாலையை நோக்கிச் சென்றார். சிறை அதிகாரியிடம் தோட்டக்காரன் எங்கே சிறை வைக்கப்பட்டிருக்கிறான் என்ற விவரத்தை அறிந்தபின், அவனைச் சந்திக்க அனுமதி கேட்டார். பீர்பால் சக்கரவர்த்திக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால், தோட்டக்காரனை சந்திக்க உடனே அனுமதி கிடைத்தது. அவனுக்கு தைரிமூட்டிய பீர்பால் அவனிடம் ரகசியமாக ஏதோ கூறினார். அதைக் கேட்ட தோட்டக்காரன் “ஐயோ, உயிர் பிழைக்க வழி சொல்வீர்கள் என்று பார்த்தால் உயிர் போக வழி சொல்கிறீர்களே” என்று அலற, “நான் சொல்வது போல் செய், ஒன்றும் ஆகாது” என்று கூறிவிட்டு பீர்பால் சிறைச்சாலையை விட்டு அகன்றார். மறுநாள் காலை தர்பார் கூடியது. அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது காவலர்கள் உள்ளே நுழைந்து, தோட்டக்காரன் தூக்கிலிடுமுன் அவரைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்கள். அக்பரும் அதற்கு சம்மதிக்க, கை விலங்குடன் உள்ளே நுழைந்த தோட்டக்காரன் அக்பருக்கு சலாம் செய்துவிட்டு, பின்னர் திடீரென சபையில் காறி உமிழ்ந்தான். அதைக் கண்ட அக்பருக்கு பயங்கர கோபம் உண்டாகியது. உடனே, தோட்டக்காரன் பணிவுடன், “மன்னிக்கவும் பிரபு, என்னுடைய சாதாரணத் தவறுக்காக நீங்கள் தூக்கு தண்டனை விதித்திருப்பது நியாயம் அல்ல என்று மக்கள் உங்களை எதிர்காலத்தில் அவதூறாகப் பேசலாம். அப்படி உங்களைக் குறை கூறக் கூடாது என்பதற்காகத்தான் தர்பாரில் காறி உமிழ்ந்தேன். இனி உங்களை யாரும் குறை கூற மாட்டார்கள். நான் நிம்மதியாக சாகலாம்” என்றான். உடனே அக்பருக்கு அவன் தன் நியாயமற்ற தண்டனையை குத்திக்காட்டுகிறான் என்று விளங்கிவிட்டது. அதேசமயம், இந்த யோசனையை அவனுடையதல்ல வேறு யாரோ அவனுக்கு சொல்லிக் கொடுத்துஇருக்கிறார்கள் என்றும் புரிந்தது. “இந்த யோசனையை உனக்கு யாரப்பா சொல்லிக் கொடுத்தார்கள்?” என்று அக்பர் கேட்க, தோட்டக்காரன் பீர்பால் பக்கம் நோக்கினான். உடனே அக்பருக்கு புரிந்து விட்டது. “பீர்பால், ஏதோ கோபத்தில் தெரியாமல் அவனுக்கு தூக்குதண்டனை விதித்து விட்டேன். அந்தத் தவறு நிகழாமல் தடுத்ததற்கு உனக்கு நன்றி” என்றார் அக்பர். அத்துடன் தோட்டக்காரனை விடுதலை செய்வதாக அறிவித்தார்.
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது பழமொழி. சின்ன வயதிலேயே அந்தச் சிறுவன் மிகவும் துரு துருவென்று இருப்பான்.ஒருநாள் அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு மரத்திலே ஏறி, மரக்கிளையில் இருந்து தலை கீழாகத் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள். விபரீதமான இந்த விளையாட்டைப் பார்த்த அந்தப் பையனுடைய தாத்தா, பையன்கள் கீழே விழுந்தால் உயிருக்கு ஆபத்தே என்று நினைத்தார். உடனே அனைவரும் கீழிறங்கி வாருங்கள் என்று சப்தம் போட்டார். அவர்கள் வந்ததும்," இந்த மரத்திலே ஒரு பேய் இருக்கிறது. இப்படி மரத்தில் ஏறி விளையாடினால் அது உங்கள் அடித்துக் கொன்றுவிடும். அதனால் மரத்தில் ஏறாமல் கீழேயே விளையாடுங்கள்" என்று பயமுறுத்தினார். இதைக் கேட்டு எல்லா சிறுவர்களும் பயந்துவிட்டார்கள். நமது சுட்டிப் பையனும் சரி சரி என்று தலையை ஆட்டினான். ஆனால், அவர் அந்தப் பக்கம் போனதும், மறுபடியும் மரத்திலே ஏற ஆரம்பித்தான். அவனது நண்பர்கள், "ஐயையோ…ஏறாதே….பேய் உன்னை அடித்துவிடும்" என்று கத்தினார்கள்." இந்த மரத்திலே பேய் இருக்கிறதாக தாத்தா சொன்னார்…சரிதான். ஆனாலப்படிப் பேய் இருந்திருந்தால் இன்னேரத்துக்கு அது நம்மை அடித்துக் கொன்றிருக்கும். தாத்தா சும்மா நம்மைப் பயமுறுத்தியுள்ளார்." என்று சிறுவர்களுக்குப் பதில் கூறினான். அதற்கு மற்ற சிறுவர்கள்," அது சரி…உன் தாத்தா சொன்னபோது…சரி என்று தலையை ஆட்டினாயே…அது ஏன்?" என்று கேட்டதற்கு, "எதிர்த்துப் பேசினால் அவர் மனது கஷ்டப்படுமே. அதனால் தான் அவரை சமாதானப்படுத்த சரி என்றேன்". குழந்தைகளா, மரத்தில் ஏறிய அந்தப் பையன் யார் தெரியுமா?….. எண்ணற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் சுவாமி விவேகானந்தர்தான், அந்தச் சிறுவன். அதோ படத்தில் இருக்கிறார் தானே, அவரே தான். அவரைப் பற்றி நிறைய கதைகல் இருக்கின்றன, விரைவில் சொல்கிறேன்.
. மாசக் கடைசியில் ஒவ்வொரு மாசமும் அப்படித்தான் - பருப்புத் தட்டுப்பாடில் ஆரம்பித்து சிறுகச் சேர்ந்து கட்டுக்கடங்காமல், திடிரென்று பெருத்துவிட்ட பூதத்தைச் சமாளிக்க P.F. இல் கடன் வாங்குவது பற்றிப் பாரதியுடன் இறங்கிவிட்ட பேச்சு சுவாரஸ்யத்தில் தான் திடீரென்று நின்ற இடத்திலிருந்து தள்ளப்படுவதுகூடத் தெளியாத அதிர்ச்சியில் தள்ளாடிப் போனான். "ஸாரி மாடம்! மன்னிச்சுடுங்க மாடம்!" அந்த வாலிபனின் கைகளும் கண்களும் தவித்தன, கன்னங்கள் கருங்குழம்பு. "நான் எதிரே பார்த்துண்டு வரல்லே " அப்போதுதான் விஷயம் புரிந்து கடுங்கோபம் பற்றிக்கொண்டது. "எதிரே குத்துக்கல் மாதிரி நிக்கறேன், அப்படி என்ன கண் தெரியாமல் பராக்குப் பார்த்துண்டு வரது? இதென்ன நிஜம்மா பராக்குத்தானா இல்லே Jayvalking, eveteesing இலே புது டெக்னிக்கா?", "இல்லேம்மா, நான் இந்தப் பக்கம் வந்து இருபத்தி அஞ்சு வருஷத்துக்கு மேலே ஆறது. இங்கே ஒரு கட்டடத்தைத் தேடி வரேன். அதிலே எதிரே வரவா நினைப்பேயில்லே!", "உன்னுடைய இருவத்தி அஞ்சு வருஷத்தில் கட்டடம் பறந்துடுமா என்ன? இடிச்சுப் போட்டுப் புதுசு எழுப்பியிருப்பாங்க. ஆனால் காணாமல் போற புதுமையை உன்னிடமிருந்துதான் தெரிஞ்சுக்கணும். "அது ஸ்கூல் நான் படிச்ச ஸ்கூல்", "இந்தச் சிரத்தை இந்த நாளில் சத்தே ஆச்சரியந்தான். ஸ்கூல் இங்கேதான் இருக்கு ஆனால் பெரிசாகி கட்டடம் விரிவடைஞ்சு, முதலதைப் பின்னுக்குத் தள்ளிடுத்து. "ஓ Quite possible. என்னை இங்கே விட்டுத் துரத்திட்டாங்க. L..K.G. யிலிருந்து,", "ஓ அப்பவே உன் நடத்தை இப்படி இருந்திருந்தால், அதில் ஆச்சரியமில்லே. விளையும் பயிர் முளையிலே", "எனக்கு கோபம் வராதம்மா. நான் இடிச்சது தப்புத்தானே! அங்கே நான் தேடற டீச்சர் இப்போஇருக்காங்ளோ ரிடையர் ஆயிருப்பாங்களோ!" அவளுக்குக் கோபம் மறந்து curiosity தூக்கிற்று. நான் இங்கேதான் வேலை செய்யறேன். யார் அந்த டீச்சர்?", "டீச்சர் சுமதி. நான் தான் டீச்சர் சுமதி" அவன் திக்கெனப் பின்னடைந்தான். "நான் விளையாடல்லேம்மா", "ஏன் நீ இருவத்தி அஞ்சு வருஷத்துக்கப்புறம் தேடிட்டு வரப்போ, நான் இங்கேயே முப்பது வருஷம் சர்வீஸ் பார்க்கக்கூடாதா? அடுத்த வருஷம் ரிடையர்மெண்ட்" அதன் Problem அதுக்கு மேலே இருக்கு அதையெல்லாம் உன்கிட்ட சொல்லியாகணுமா?" அவன் ஒன்றும் பேசவில்லை. சற்று திடப்பட்டு நின்று அவளை மேலுங்கீழுமாய்ப் பார்த்தான். ஆமாம், இருக்கக் கூடும். உடம்பு சற்று அகன்று தடித்துவிட்டது. கூந்தல் சாம்பல் பூத்து (வேறு எப்படி இருக்க முடியும்?) விட்டதே தவிர அடர்த்தி குறைந்த மாதிரி தெரியவில்லை. முகவார்ப்படம் எல்லாம் அவளாய் இருக்கக்கூடும். Yes, அவளேதான். அந்த அடையாளம் நிச்சமானதும் அவனுள் ஒரு எழுச்சி பொங்குவதை உணர்ந்தான். தான் ஆடிப்போகாமல், பூமியில் பாதங்களை அழுத்தமாய்ப் பதித்துக் கொண்டான். "என்னைத் தெரியல்லே? நான் கண்ணன் அம்மா?", ""இந்த சர்விஸ்ஸிலே எத்தனை கண்ணன்கள் கசுமாலங்கள் வந்து போயிருக்கும்! எதைத் தனியா நினைவு வெச்சுக்க முடியறது!", "நான் ஸ்பெஷல் துஷ்டை", "சர்க்கரை போட்டிருக்குமா, இல்லே ஸ்பெஷல் மாசலா சேர்த்திருக்குமா?", " அப்படித்தான் வெச்சக்கோங்களேன்". பையன் படு உற்சாகமாகிவிட்டான். "பக்கத்துப் பெஞ்சு பசங்களைச் சீண்டிக் கிட்டேயிருப்பேன், பின்பெஞ்சைக் கூட விடமோட்டேன். பின்னலைப் பிடிச்சு இழுக்கறது. அவங்க கொண்டுவந்த ஸ்னாக்ஸைப் பிடுங்கியோ திருடியோ தின்கறது, அவங்க பென்சிலைப் பிடுங்கிக்கிறது. ஜன்னல் வழியா வீசி எறியறது. அவங்க மூஞ்சியை நாய்க்குட்டியாட்டம் நக்கறது, கையிலே எச்சில் துப்பறது, சொல்லிண்டே போகலாம்", "எந்தப் பையன் செய்யாத Mischief புதுசா நீ செஞ்சுட்டே?", "இதே வார்த்தையை அப்படியே பிட்டு வெச்சுதுப் போலத்தான் என் தாத்தா, பிரின்சிபாலிடம் சொன்னார், அவர் சீட்டெழுதி எங்களுக்கு அனுப்பிச்சபோது! அப்போது Principal உங்களுக்குச் சொல்லி அனுப்பிச்சு, நீங்க வந்து அவர் பக்கத்திலே உக்கார்ந்தீங்க", "எல்லாம் வானரங்கள்னா வாலில்லாத வானரங்கள்! இன்னமும் க்ளாஸ் கூட மாத்தல்லே. இன்னமும் L..K.G. லேதான் மாரடிச்சுண்டிருக்கேன். இதுவே போறும்னு Management தீர்மானிச்சுடுத்து. என் பிழைப்பும் இப்படியே போயிடுத்து. சே! என்ன பிழைப்போ?" அவள் அவனை மறந்தாள். பாரதியை மறந்தாள். தன் பொருமலில் எதிரே போவோர் வருவோர் அவளைச் சற்று ஆச்சரியத்தில் பார்த்துக்கொண்டே போமளவுக்கு அவள் சத்தமாகிவிட்டதை உணர முடியவில்லை. அவன் அதைக் கண்டுகொள்ளாதது மாதிரி "என் தாத்தா இது வேறே சொன்னார்: இவன் ஜாதக ராசிப்படி இவன் அசாதாரணமானவன். ஒண்ணு பெரிய பதவிக்குப் போயிடுவான், இல்லே உலகம் மெச்சும் துறவி ஆயிடுவான், ஸ்வாமி விவேகானந்தர் மாதிரி அதீதம்தான். மொத்தத்தில் உங்கள் பள்ளிக்கூடத்துக்குப் பெருமையைத் தரப்போறான். இவனை நீங்கள் வெளியே அனுப்பினால் பள்ளிக்கூடத்துக்குதான் நஷ்டம். நான் தம்பட்டமடிச்சுக்கலே. எனக்கு Astrology கொஞ்சம் தெரியும். சயன்ஸாகவே ஆராய்ஞ்சிருக்கேன். பிரின்சிபால் உங்கள் பக்கம் திரும்பி "சிஸ்டர் என்ன சொல்றீங்க?" நீங்கள்: "இல்லேங்க இவனைச் சமாளிக்கிறது கஷ்டம் பேரண்ட்ஸ் கம்ப்ளெயின்ட் பண்றது சமாளிக்கமுடியல்லே." I wish him all luck in his next school- அங்கேபோய் சரியாக மாறலாம். இங்கே நமக்கு அதிர்ஷ்டம் இல்லை. அதுதான் இப்போ தெரியுது. we have given him all chances" பிரின்சிபால் உதட்டைப் பிதுக்கிக் கையை விரித்தார். "நீங்களே கேக்கிறீங்க. நாங்க இப்போ நடக்கறதைக் கவனிக்க வேண்டியிருக்கு. எங்கள் பள்ளிக்கூடம் நடக்கணும் and we have to live know. I am sorry, next year வாங்க, பார்க்கலாம்." தாத்தா சிரித்தார். "Next year நான் இருக்கேனோ இல்லேயோ?" பிரின்சிபால் நாற்காலியை விட்டு எழுத்தார். " நாம் டாப்பிக் மார்றோம். இந்த விஷயம் முடிஞ்சுப் போச்சு டயம் வீணாவுது." நீங்களும் எழுந்தீங்க. "வரேன். பாதி கிளாஸ்லே வந்திருக்கேன். அழைச்சீங்களேன்னு வந்தேன்." ஆகவே நீங்க "Out" முத்திரை குத்தித்தான் நான் இந்த ஸ்கூலை விட்டு வெளியே வரும்படி ஆயிடுச்சு.", "ஆமாம் லேசாக கண்ணுல பூச்சி பறக்கற மாதிரி நினைப்பு. ஒரு பையன். அவன் மண்டை குடுமி பிய்ச்ச தோங்காய் மாதி ரி உருண்டையாய் இருக்கும். Special feature", "Correct" பையன் சந்தோஷத்தில் கைகொட்டிச் சிரித்தான். "பிரசவக் கோளாறு ஒண்ணும் கிடையாது. இன்ஸ்ட்ரூமென்ட் ஒண்ணும் அப்ளையாவல. வயிற்றைக் கிழிச்சு அப்படியே அலாக்கா எடுத்துட்டாங்க. ஸிஸரியன் - குறைமாஸம் அதனால் hyperactive. இப்பவும் அப்படியே தான் இருக்கு ஆக்ஸிடென்ட் அது இதுன்னு மண்டையை உடைச்சுக்கலே நசுங்கலே.", "இன்னொரு நல்ல பாயின்ட் ஞாபகம் வருது. உனக்கு இஷ்டப்பட்டால் "நல்லா recite பண்ணுவே. மாரிலே கை கட்டிக்கொண்டு ஸ்லோகம் சொன்னால் கடைசிவரை க்ளியரா, நல்லா சொல்லுவே. அந்தச் சமயத்துலே அழகாயிடுவே.", "ம்ம்......." அவன் முகத்தில் சந்தோசம் குழுமிற்று. "ஆமாம் கண்ணன், உங்க தாத்தா ஜோஸ்யம் என்னவாச்சு?", "தாத்தா போயிட்டாரு. ஆனா ஜோஸ்யம் பலிச்சிடுச்சி. நான் படிச்சு படிப்படியா உசந்து சிங்கப்பூர் சைனான்னு தேசம் தேசமா சுத்தி இப்போ அமெரிக்காவுல மூணு வருசமா இருக்கேன். ஒரு மாசம் லீவுலே வந்திருக்கேன். என் employers அனுப்பிச்சிருக்காங்க. அங்கே அவங்க ஆபீஸ மானேஜ் பண்றேன். அதை விருத்தி பண்ணும் பொறுப்பு. அவங்க நல்ல பேரிலே இருக்கேன்." அவள் முகம் லேசாக வெளிறிற்று. "அப்போ தாத்தா ஜோஸ்யம் பலிச்சுப்போச்சு!", "எல்லாம் பெரியவர் ஆசீர்வாதம். உங்கள் ஆசீர்வாதம். ஆனால் எனக்கு சர்ட்டிபிகேட்டு கொடுத்து அனுப்பிட்டிங்க.", "என்னை என்னப்பா பண்ணச் சொல்றே அன்னிய நிலைமை அப்படியிருந்தது. இப்பொ சொல்லிக்காட்டி வஞ்சம் தீர்த்தாச்சு இல்ல?", "வஞ்சம் தீர்ப்பதா?" அவன் வெளியில் சொல்லவில்லை. அன்றைய சுமதி டீச்சர் - அவள் வழக்கை மன்றாட அவன் தாத்தா பள்ளிக்கு வந்திருந்தபோது, பிரின்சிபாலுடன் உட்கார்ந்திருந்த அன்றையவளை நினைத்துக்கொண்டிருந்தான். அவளுடைய பழுப்புநிற அழகுடன் மனம் எங்கோ நூலோடிவிட்டது. உடம்பை உருவினாற்போல உடுத்தியிருந்தாள். ஒரு சுருக்கமில்லை வாட்டசாட்டமான ஆகிருதியில் ரவிக்கை சதைப்பிடிப்பாய் - அவள் வயதை நிர்ணயிக்கும்படி அவள் தோற்றமில்லை. மதிப்பிட அவனுக்கும் தகுதியேது? ஆனால் ஏதோ காந்தம் அவளிடமிருந்தது. முதல்நாள் அவன் கொண்டு வந்திருந்த சாக்லேட், குழந்தைகளுக்குப் பங்கீடானபோது வெட்கத்துடன் அவளிடம் இரண்டு சாக்லேட் நீட்ட, அவள் அவன் வாயைத் திறந்து ஒன்றைப் போட்டு மற்றதைத் தான் போட்டுக் கொண்டாள். "O.K.?" அவன் மறக்கவே மாட்டான். முடியல்லியே? மேஜையை அடிக்கடிக் கையால் தட்டுவாள், பையன்கள் சத்தம் போடாதிருக்க. அது நடக்கிற காரியமா? "தங்களுக்குத் தொந்தரவு கூடாதுன்னு பெத்தவங்க இங்க அனுப்பிச்சுடறாங்க. நம்ம மேய்க்க வேண்டியிருக்கு." மூட் அவுட் ஆனால் அலுத்துக் கொள்வாள். மற்ற நேரங்களில் சிரித்தபடிதான். எல்லாரும் என் குழந்தைகள்தான். இல்லாட்டி என்னால் இத்தனை பெத்துக்கொள்ள முடியுமா? இப்படிச் சொன்னதும் அதன் தமாஷ் உரைத்ததும் அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டாள். விஷயம் புரியாமலே அவனும் சிரித்தான். என் சுமதி டீச்சர்.....ஏதோ பெருமையாயிருக்கும். அவள் சொல்லும் பாடங்களைக் கோட்டானோ? ஏதோ சத்தம் இந்தக் காதில் புகுந்தது அந்தக் காது வழி.. அழுந்த வாரிய அவள் கூந்தலில் நெற்றியின் பக்கவாட்டில் இரண்டு பிரிகள் எதிரும் புதிருமாய் ஓடி விளையாடிக்கொண்டிருந்தன. அவைகளைக் கவனித்துக் கொண்டிருப்பான். இப்போது அவை இருக்குதோ, அன்றைய சகவாச ஞாபகத்தில் கண்கள் தேடின. இருப்பதாய்த் தெரியவில்லை. உதிர்ந்து போயிருக்கும் அல்லது இப்போது அழுந்தியிருக்கலாம். என்ன அசட்டுத்தனம்! இன்னுமா குழந்தைத் தனம்? Why not? இப்போது நார்மலாகவா இருக்கேன். ஏதோ துக்கம் தொண்டையை அடைத்தது. என் அம்மவைவிட ஏன் எனக்கு இவளைப் பிடிச்சப்போச்சு?. குழந்தைகள் பாடு நிம்மதி என்கிறோம். பார்க்கப்போனால் அவர்கள் வாழ்க்கைதான் சலனமும் சஞ்சலமும். ஒவ்வொரு உணர்வும் அப்போதுதான் விழித்தெழுந்து அழுத்துகின்றன. அவைகளின் அந்நியம் தாங்க முடியனவாக இல்லை. இவ்வளவு ஸ்பஷ்டமாய் இப்போது விளங்கி என்ன பயன்? அதுவே புரியாத கோபம், பக்கத்துப் பையன்கள்மேல் ஆத்திரம். தன் மேலேயே ஆத்திரம். பசிப்பதில்லை. சாப்பிடத் தோன்றுவதில்லை ஒரு நாள் கொண்டுவந்திருந்த இட்லியை, வகுப்பின் குப்பைத் தொட்டியில் ஒவ்வொன்றாய் அவன் எறிந்து கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு முதுகில் அறைந்தாள். "திக்கென ஆகிவிட்டது. "அத்தனை குட்டி குட்டியா அவ்வளவு சிரத்தையா அன்போட வார்த்து அனுப்பிச்சிருக்கா. அவ்வளவு திமிரா உனக்கு ராஸ்கல்." பிறகு அவளுடைய மதிய சாப்பாட்டு வேளையில் தன்னுடைய டிபன் பாக்ஸிலிருந்து ஒரு வாய் அவனுக்கு ஊட்டி, கையிலும் ஒரு கவளம் வைத்தாள். "அப்படியெல்லாம் செய்யக்கூடாதுடா கண்ணு, பசிக்குமில்லே! அம்மா இல்லே!" அந்த ரசஞ்சாதம், தான் கொண்டு வந்திருந்த இட்லிக்கீடாகுமா? அவனுக்குத் தெரியாதா? இருந்தாலும் இன்னொரு பிடி கொடுக்கமாட்டாளா? நான் ஏன் இப்படி ஆயிட்டேன். அப்படித் தன்னையே கேள்வி கேட்டுக்கொள்ளக்கூடத் தெரியாத வயசு. ஆனால் துக்கம் தொண்டையை அடைத்தது. அவளுடைய மேலுதட்டில் லேசாய் செவ்வரும்பு கட்டியிருந்தது. இப்போது அகு இருக்கமோ? Damn It, எனக்கு பைத்யம் பிடிச்சுடுத்தா? இல்லை இன்னும் விடல்லியா? மாலைவேளையில் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அவள் புருஷன் வருவார் (வருவான்). நல்லாத்தான் இருந்தார்(ன்). டைட்பான்ட், டீசர்ட். ஆனால் இல்லை, அதனாலேயே அவனுக்கு அவரைப் பிடிக்கவில்லை. லேசாகிக் கொண்டிருக்கும் மண்டையுச்சியைச் சாமர்த்தியமாய் மறைத்து, விரலிடுக்கில் சிகரெட்டை இடுக்கிக்கொண்டு...... அவன் தன் உதடுகளை விரலால் பொத்தி எச்சரித்தும் கேட்பதாயில்லை. ஒரு நாள் கண்ணன் எதிரிலேயே அவளுடைய வார்த்தை தடித்தது "இங்கே உங்களுடைய சிகரெட் துண்டுகளைப் போட்டுவிட்டுப்போனால் என் பேர் கெட்டுவிடும். குழந்தைதகள் புழங்குற இடத்தில் நல்ல அடையாளம். நியாயமாய் நீங்கள் ஸ்கூல் காம்பவுண்டுக்குள்ளேயே வரக்கூடாது. நீங்கள் வந்தாலே என் ஸஹாக்களின் நெத்தியும் முதுகுத்தண்டும் சுருங்குது. என் பிழைப்பைக் கெடுத்தீடாதீங்க." அப்பவும் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் சிரிப்பு நல்லாயிருந்தது. கன்னங்கள் இறுகிக் குழியும். அவளுக்க ஒரு தெற்றுப்பல். ஆனால் அழகு. இப்போது அவர் இருக்கிறாரோ? பாரதியைக் காட்டி "இவள் யார்?", "இவள் என் பெண்?" சுமதி டீச்சர மாதிரி இவள் இல்லை; சதைப் பிடிப்பாய் அப்பா ஜாடை தூக்கல் இருந்தாலும் என் சுமதி டீச்சர் மகள்", "அதுசரி உன் சுவிஷத்தைப் பத்தி மொத்தமா சொல்லிட்டே, சந்தோசம். இத்தனை நாள் கழிச்சு என்ன இந்தப் பக்கம்? இருவத்தி மூணு வருசங்கழிச்சு உன் பள்ளிக்கூடத்தைத் தேடிண்டு வரது பெரிசுதான். எங்களுக்குப் பெருமைதான். யார் இவ்வளவு சிரமமெடுத்துக்கறா?", "டீச்சர், நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். உங்களை மறக்க முடியல்லே. I was in love with you.", "so you have come to declare your love?"கை கொட்டிச் சிரித்தாள். "நீங்கள் சிரிக்கிறமாதிரி இல்லை. இருவத்தி மூன்ற வருஷங்கள் டீச்சர்." சட்டெனத் தெளிந்தாள். " That happens sometimes; that is called puppylove" - ஒரு disease, வந்து இருந்துவிட்டுப் போயிரும்,", "அது மாதிரி டீச்சருக்கு studendt மேல் நேர்வதில்லையா?" அவன் பரிதாபமாயிருந்தான். Oh, Yes எங்களுக்குக் குழந்தைகள் மேல் நேர்வது சகஜம். இயற்கையிலேயே எங்களுக்கு தாய்மை உண்டே! உள்ளத்திலும் உடல் அமைப்பிலும் அப்படித்தானே இருக்கிறோம்!", "நான் மனதில் அதை வைத்துக் கேட்கவில்லை", "புரிகிறது. அப்போ அவள் கிருஷ்ணப் பிரேமி ஆகிவிடுகிறாள், ஹே ராதா கிருஷ்ணா. பரவசமானாள். ஆனால் புத்தகத்தில் படிக்கிறோமே. ஒழிய அப்படி நிகழ்வது ரொமப அபூர்வம். யைன்கள் வகுப்பு மாறும்போது அல்லது பள்ளியையே விட்டுப் போகும்போது எல்லா முகங்களும் ஒருமுகமாத்தான் தெரியும். முகங்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றனவே. நாங்கள் கோபியர், எங்களுக்குப் பிருந்தாவனம் ஒன்றுதான் உண்டு. மாறுவதில்லை. நாங்களும் மாறு வதில்லை. "கலியாணம் ஆகி பள்ளியைவிட்டு, ஊர் விட்டு நாட்டையே விட்டுப் போனால் எங்கள் கிருஷ்ணனை ஏந்திக் கொண்டு விடுகிறோமே!" அவரவர் சிந்தனையில் ஆழ்ந்தனர். ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. தழும்பேறிவிட்டாலும் இப்போது புதிதாய்ச் சூட்டைக் காய்ச்சியிழுத்தாற்போல் நெஞ்சு "சுறீல்". அன்றொரு நாள் வகுப்பில் அவள் அவன் பக்கமாய் வருவதற்கும், அவளைப் பார்க்காமல் அவன் தன்னிடத்திலிருந்து எழுவதற்கும் சரியாக - பென்சிலைத் தேடினானோ ரப்பரைத் தேடினானனோ இருவரும் மோதிக்கொண்டனர். அவன் மார்பின் விம்மலின் அவன் முகம் பதிந்தது. மார்த்துணி ரவிக்கை முடிச்சுக்கும் கீழே சரிந்தது. அவளுக்குக் கோபம் வரவில்லை. வீறிட்ட சிரிப்பை அடக்கிக்கொண்டு, மேலாக்கையும் இடுப்புச் செருகலையும் சரிப்படுத்திக்கொண்டு..... "என்ன அப்படித் தட்டுக்கெட்டுப்போற அவசரம்?" குரல் உயரக்கூட இல்லை. Soft and melodious. அவனுக்குக் கேட்டதோ இல்லையே? மூர்ச்சையாகிவிட்டான். ஜன்மம், ஜீவராசி யாவதுக்கும் பொதுவாய் ஆண், பெண் எனும் அடித்தளம் தான் உண்மைநிலை. தன் முகம்,இனம் இழந்த ஆதிவேட்கை அவன் பச்சைப் பாலகன் அவள் முதிர்ந்த மாது பகலிலிருந்து இரவா? இரவிலிருந்து. எது முன்? எது பின்? விடியிருட்டின் விழிம்பில் வெள்ளி எதைத்தான் யார் அறிவார், ஆனால் Ecstasy அவனுடையது அது என்று ஒன்று உண்டு என்று பாவம் அதையும் அறியான். திகைப்பூண்டு மிதித்தமாதிரி அவன் வளையவந்தான் அவள் எதையும் கண்டுகொள்ளாமலே வளைய வந்தாள். Yes, that is as it should be. We Forget because we must. such is the cavalcade of life. முதலில் அவன்தான் மீண்டான். குரல் சற்று அடக்கமாய் "சரி, உங்களைத்தான் கட்டிக்க முடியாது. உங்கள் பெண்ணைக் கட்டிக்கலாமில்லையோ?", "என்ன உளறல்?", "இல்லை. சரியாய்த்தான் பேசுகிறேன். கலியாணம் பண்ணிக்கத்தான் அமெரிக்காவிலிருந்து ஒரு மாத லீவில் வந்திருக்கிறேன். அதற்குள் எனக்குப் பெண்பார்த்து என் பெற்றோர்கள் எனக்குக் கலியாணம் பண்ணி எங்கோ அமெரிக்காவுக்குக் குடித்தனம் பண்ண அனுப்பிவிடுவார்கள். எனக்கு இந்தப் பெண் பிடிச்சும் போச்சுன்னு நான் சொன்னால் அப்பா அம்மா குறுக்கே நிக்கமாட்டா. அப்படி ஒண்ணும் மீனமேஷம் பாக்கறவாயில்லே. போன இடத்தில் தனியா உழன்று மாட்டின்டு அவா பாஷையிலே கழநீர் பானையில் கைவிடாமல் இருந்தார் சரி. சம்பந்தம் பேச உடனே வாருங்கள். கன்னாபின்னான்னு கேக்கமாட்டா. மஞ்சள் கயிறிலே மாட்ட ஏன், அதையும் நான் பாத்துக்கறேன். பையன் பெரியவனாயிட்டான். என்னை என்ன பண்ணமுடியும்?" பேச்சும் இந்த முத்தல்லே போறதுனாலே, அவள் தடுத்தாள் "நீ ஒண்ணு தெரிஞ்சுக்கணும் இவளுக்கு அப்பா இல்லை.", "அப்படின்ன அன்னிக்கு அவரைப் பார்த்தேனே" குழம்பினான். "இவளுக்கு அப்பா இல்லை நான் ஏமாந்து போனேன் கண்ணா, இவள்தான் அவர் தந்த பரிசு!", "So what! அதை நாமா தெரிவிச்சுக்கணுமா? தண்டோரா போட்டு ஊரை அழைக்கப்போறோமா? A Simple Affair", "கோவிலில் தெரியாமல் இருக்கப்போறதா?", "அட தெரிந்தால்தான் தெரியட்டுமே" அவள் சற்று நேரம் மௌனமாய் அவனைப் பாத்துக்கொண்டிருந்தாள். முகம் பிட்டாய் பிசைந்தது. உதடுகள் நடுங்கின. அவன் மேல் சாய்ந்து கட்டிக் கொண்டு பொட்டென உடைந்துபோனாள். அவன், அவளை அணைத்துக்கொண்டான். எத்தனை நாள் பாரமோ! வேடிக்கை பார்ப்பவர் பார்த்துக்கொண்டு போகட்டும். சுமதியைத் தாண்டி அவன் பார்வை பாரதிமேல் தங்கிற்று. பாரதி சுமதியாக மாட்டாள் பரிகாரமாகக் கூட மாட்டாள். சுமதியே அவன் கண்ட சுமதியாகமாட்டாள். அந்த சுமதி அவன் நெஞ்சில் உண்டானவள். அங்கிருந்து நெஞ்சக்கடலில் ஆழ்ந்து அதன் ஆழத்தில் புதைந்து போய்விட்டாள் இனிமேல் வரமாட்டாள். அழியவும் மாட்டாள்.
“குரு நாதா! இனிமேல் நாம் மருத்துவத் தொழில் செய்தால் என்ன?” எனக் கேட்டான், முட்டாள். “அதனால் நமக்கு என்ன பயன்?” என்று பரமார்த்த குரு கேட்டார். “பணம் கிடைக்கும். அத்துடன் புண்ணியமும் கிடைக்கும்” என்றான், மூடன். “அப்படியே செய்வோம்” என்றார் குரு. “மனிதர்களுக்கு மட்டும்தானா?” என்று கேட்டான் மண்டு. “மனிதர்க்கும் வைத்தியம் செய்வோம்; மாட்டுக்கும் செய்வோம்; குழந்தைக்கும் செய்வோம்; குரங்குக்கும் செய்வோம்!” என்றான் மட்டி. பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும் மருத்துவம் செய்யும் செய்தி ஊர் முழுதும் பரவியது. காய்ச்சலால் அவதிப்பட்ட ஒருவன் வந்தான். அவன் உடலைத் தொட்டுப் பார்த்த மடையன், “குருவே! இவன் உடம்பு நெருப்பாகச் சுடுகிறது!” என்றான். “அப்படியானால் உடனே உடம்பைக் குளிர்ச்சி அடையச் செய்ய வேண்டும்!” என்றார் பரமார்த்தர். “அதற்கு என்ன செய்வது?” எனக் கேட்டான் முட்டாள். “இந்த ஆளைக் கொண்டுபோய்த் தொட்டியில் உள்ள தண்ªரில் அழுத்தி வையுங்கள். ஒரு மணி நேரம் அப்படியே கிடக்கட்டும்” என்றார் குரு. உடனே மட்டியும் மடையனும் அந்த நோயாளியைத் தூக்கிக் கொண்டு போய், தொட்டி நீரில் போட்டனர். முட்டாளும் மூடனும் மாற்றி மாற்றி அவனை நீரில் அழுத்தினார்கள். நோயாளியோ “ஐயோ, அம்மா!” என்று அலறியபடி விழுந்தடித்து ஓடினான். கொஞ்ச நேரம் கழித்து ஒரு கிழவி வந்தாள். “கண் வலிக்கிறது” என்றாள். “இப்போது நேரமில்லை. உண் கண்ணை மட்டும் தோண்டி எடுத்துக் கொடுத்து விட்டுப்போ. சரி செய்து வைக்கிறோம்!” என்றான் முட்டாள். கிழவியோ, “ஐயையோ” என்று கத்திக் கொண்டு ஓடினாள். சிறிது நேரம் சென்றது. “உடம்பெல்லாம் வெட வெட என்று நடுங்குகிறது என்றபடி ஒருவன் வந்தான். “சும்மா இருப்பதால்தான் ஆடுகிறது. உடம்பு முழுவதும் கயிறு போட்டுக் கட்டி விடுங்கள்! அப்போது எல்லாம் சரியாகிவிடும்” என்றார் பரமார்த்தர். முட்டாளும் மூடனும், வந்தவனை இழுத்துக் கொண்டு சென்று தூணில் கட்டி வைத்தனர். கட்டி வைத்த பிறகும் அவன் உடம்பு நடுங்குவதைக் கண்ட மட்டி, “குருதேவா! இது குளிரால் வந்த நோய். இது தீர வேண்டுமானால், இவன் உடம்பைச் சூடாக்க வேண்டும்!” என்றான். அதைக் கேட்ட முட்டாள் தன் கையிலிருந்த கொள்ளிக் கட்டையால் நோயாளியின் உடல் முழுவதும் வரிவரியாகச் சூடு போட்டான். வலி தாங்காத நோயாளி சுருண்டு விழுந்தான். “பல் வலி தாங்க முடியவில்லை. என்ன செய்வது?” என்று கேட்டபடி வேறொருவர் வந்தார் “வலிக்கிற பல்லை எடுத்து விட்டால் சரியாகி விடும்” என்றார் பரமார்த்தர். சீடர்களோ, ஆளுக்குக் கொஞ்சமாக எல்லா பல்லையும் கத்தியால் தட்டி எடுத்துப் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தனர்! “இனிமேல் உனக்குப் பல்வலியே வராது!” என்றார் பரமார்த்தர் சற்று நேரம் கழிந்தது. யானைக்கால் வியாதிக்காரன் ஒருவன் வந்தான். “உலகிலேயே இதற்கு இரண்டு வகையான வைத்தியம்தான் இருக்கிறது. நன்றாக இருக்கிற காலை வெட்டிவிட்டு, அந்த இடத்தில் யானையின் காலை ஒட்டி விட வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் காலுக்குச் சமமாக இந்தக் காலில் உள்ள சதையைச் செதுக்கி எடுத்து விட வேண்டும்!” என்றார் பரமார்த்தர் யானைக்கால் வியாதிக்காரனோ, “காலை விட்டால் போதும்” என்று தப்பினான். “ஐயா! ஒரே இருமல். தொடர்ந்து இருமிக் கொண்டே இருக்கிறþன்” என்றபடி வேறு ஓர் ஆள் வந்தார். வாயைத் திறப்பதால்தானே இருமல் வருகிறது. வாயை மூடிவிட்டால் என்ன? என்று நினைத்தார், பரமார்த்தர். “இவர் வாயை அடைத்து விடுங்கள்!” என்று கட்டளை இட்டார். குருவின் சொல்படி, கிழிந்த துணிகளை எல்லாம் சுருட்டி, இருமல்காரனின் வாயில் வைத்துத் திணித்தான் மட்டி. “என் ஆடு சரியாகத் தழை தின்னமாட்டேன் என்கிறது” என்றபடி ஒருவன் வந்தான். அந்த ஆட்டைக் கண்ட குரு, “தொண்டையில் ஏதாவது அடைத்துக் கொண்டு இருக்கும்” என்றார். “வாயைப் பெரிதாக ஆக்கிவிட்டால் போதும்” என்றான் மடையன். கத்தி ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்தான், முட்டாள். அதைப் பிடுங்கி, ஆட்டை வெட்டப் போனான் மூடன். பயந்துபோன ஆட்டுக்காரன், ஆட்டை இழுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான். குருவும் சீடர்களும் வைத்தியம் என்ற பெயரில் கண்டபடி நடந்து கொள்வதைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டனர். ஊர் பெரியவர்கள் கூடி இனி குருவையும் சீடர்களையும் ஊருள் நுழையவிடக் கூடாதென முடிவெடுத்தனர்..
நீண்ட செவ்வகக் கண்ணாடித் துண்டம்போல அசைவற்றிருக்கும் அந்த நீர்த்தொட்டி அடிக்கடி உயிர்பெற்று, ஒளியலைகளைச் சுவரெங்கும் விசிறும். அதன் எண்ணற்ற கண்களென அசையும் நிறம் நிறமான மீன்கள். ஆளற்ற வீட்டின் தரையிலும், சுவரிலும் ஆடும் கண்ணாடி நிழல்கள், கூடத்தில் யாரோ அமைதியாக அமர்ந்து உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உறுத்தலையும், சங்கடத்தையும் ஏற்படுத்தும். அலுவலகத்திலிருந்து திரும்பும் ராதா கதவைத் திறந்ததுமே நடுக்கூடத்தில் உட்கார்ந்திருக்கும் அதனுள்ளிருந்து துருவும் பார்வைகள் தன்மீது மோதுவதை வெறுத்து, கைப்பையை விட்டெறிந்து, வாஷ்பேஸினுக்கு ஓடி முகத்தைக் கவிழ்த்துக்கொள்கையில், இறைஞ்சிக் குவிந்த உள்ளங்கைகளில் தடைகளற்றுப் பொழியும் நீரின் ஆறுதல். தொட்டி நீருள் ஆழத் துள்ளும் மீன்கள் குழந்தை நவீனாவிற்கு மிகவும் ப்ரியமானவை. பள்ளி விட்டதும் அதன் முன்பு உட்கார்ந்து கொள்வாள் மணிக்கணக்காக. "அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு இதை வாங்கவென்று, மீன்பண்ணைக்குப் போன நாளை ஞாபகம் கொண்டாள். தான் கழற்றியிருந்த ஹெல்மட்டை மகளின் தலையில் மாட்டிச் சிரித்தார் அப்பா. பெரிய கவசத்திற்குள் சின்னஞ்சிறிய தலை. "விண்வெளி வீராங்கனை மாதிரியே இருக்கிறாள்" என்றார். வரிசையாக மீன்தொட்டிகள் அடுக்கிய நீள் அறையைச் சுற்றி நடந்தார்கள். விரிந்த கண்களைக் கொட்டாமல், விடுபட்ட அப்பாவின் கைகளை மறந்து மீன்களைக் கவனித்தாள்; நீலத்தில் வெண் கோடிட்ட சிவப்பில் கரும்புள்ளியுள்ள கத்தியாக நீண்ட, நெல்மணிகளைப் போல் பொடிப் பொடியான மீன்கள். பழுப்பு நிறத்தில் படுத்துக் கிடக்கும் ஒரு தூங்குமூச்சி, இன்னொன்று செயற்கைப் பாறைகளில் முகத்தை முட்டி முட்டிக் குமறும் அழுகுணி. சாம்பல் நிறத்திலிருக்கும் மற்றொன்று சிறு கற்களின் மீது, சிந்தனையே உருவாகக் குந்தியிருக்கும். நவீனாவின் தொட்டியில் தங்கம் தடவிய, சாம்பல் வரிகளோடிய சிறு மீன் ஒன்றும் சிறு மயிர்கள் போன்ற கருஞ்செதிள்களோடு இருந்தது. அது அம்மாவின் மூடிய இமைகளைப் போலிருக்கிறதென்று நினைத்தாள்; அவர்கள் வீடு சேர்ந்தபோது வியர்த்த முகத்தோடு அடுப்படியிலிருந்து வெளிவந்த ராதா மீன்தொட்டியை வெறித்தாள். அவள் முகத்திலொரு அசாதாரணமான திகில் படர்ந்தது. "உள்ள வேலையே பார்க்கத் தீரல. இதில் இது வேற எதுக்கு இப்ப? உங்க ஆபீஸ் பெங்களூரில். நீங்க போயிடுவீங்க நாளைக்கே. நானும் ஆபீஸ•க்கு. இவ ஸ்கூலுக்கு. யார் இதைக் கட்டிச் சேவிக்கிறதாம்?" வழக்கத்துக்கு மாறான உரத்த குரலில் சிடுசிடுத்தாள் ராதா. வீட்டைப் பெருக்கிக்கொண்டிருந்த முத்தம்மா, "பிள்ளை ஆசை ஆசையா வாங்கியாந்திருக்கு. இருந்துட்டுப் போகட்டுமேம்மா. நான் பாத்துக்கிறேனே" என்றாள் தயங்கியபடியே. ரகு - எத்தனை நாளைக்கொருதரம் எப்படித் தண்ணீர் மாற்ற வேண்டும் என்ற விவரமும், உணவளிக்கும் விதமும் சொல்லச் சொல்ல, அப்பவையே ஆர்வத்தோடு பார்த்தாள் நவீனா. மறுபடி சலிப்போடு அடுப்படிக்குள் நுழையப்போன அம்மாவிடம் மகள் பாரும்மா, "இதன் நீ" என்றால் தங்கமீனைச் சுட்டி. நெருப்புத் தீண்டிய துணியாகச் சுருங்கியது ராதாவின் முகம். "இல்லை; அது நானில்லை என்னால் எந்தத் தொட்டியிலும் அடைந்து கிடக்க முடியாது " முணுமுணுத்தாள் சோர்வாக. வெளியூர் வேலையில் அப்பா. வீட்டிலில்லாத அம்மா. பள்ளி முடிந்ததும், எதிர் வீட்டில் சாவி வாங்கித் திறந்து யாருமற்ற வீட்டிற்குள் மீன்களோடிருப்பாள் நவீனா. அவற்றிற்குப் பெயரிடுவாள் யோசித்து, யோசித்து, "ஜிட்டு, பட்டு, ஜில்லு, குலு, ஜங்லி" என்று என்னென்னவோ பெயர்கள். "சாப்பிட்டாயிற்றா" என்று விசாரிப்பில் துவங்கி அவற்றோடு சளசளவென்று பேசுவாள். பள்ளிக் கதைகள், அப்பா-அம்மாவின் சம்பள நாள் சண்டைகள், பாதையோரச் செடியிலிருந்த மஞ்சள் வயிறுள்ள பறவை. ஏதேதோ கேள்விகளோடு, மீன்களின் பதில்களுக்கான இடைவெளியைக் கவனமாக விடுவாள். "ம்ம்ம்" என்று தலையாட்டிக் கொள்வாள். வாயைத் திறந்து திறந்து மூடும் மீன்களை வெளிக் கண்ணாடியில், முகம் பதித்து முத்தமிடுவாள் செல்லமாக. இன்றென்னவோ அவள் கூம்பிய முகம்; சிவந்த கண்கள்; இறுகிய உதடுகள். கவனித்து மிரண்ட இரட்டை வால் மீன் ஓடிப்போய் சண்டைக்காரனிடம் சொன்னது. நட்சத்திர மீன்கள் சுழன்றுகொண்டே கேட்க, முதிர்ந்து பழுத்த பஞ்சாயத்துக்கார மீனும் நீண்ட தாடியைத் தடவியபடியே யோசித்து தீவிரமாக நவீனா தன் குட்டை ஜடையில் பட்டாம்பூச்சிக் க்ளிப்பைப் பிடுங்கித் தரையில் விட்டெறிந்தாள். அந்தச் சத்தத்திற்குப் பதிலாக அம்மாவின் அறையிலிருந்து, ஒரு அசைவோ, அதட்டலோ எழும்பாததில் எரிச்சலாகி இன்னும் சிவந்தது அவள் முகம். அவள் தன் சிறிய நாற்காலியை மீன்தொட்டிக்கு அருகில் இழுத்துப்போட்டு, ஏறிநின்று நீண்ட கைப்பிடியுள்ள பிளாஸ்டிக் வலையால் தண்ணீரைத் துழாவத் தொடங்கினாள். வெறிகொண்ட சிறு கைகள் நீரைப் புரட்டின. மிரண்ட மீன்கள் பதற்றத்தில் அங்குமிங்கும் சிதறி, தொட்டியிலிருந்த சிறுகற்களூடேயும், தாவரங்களுக்கிடையேயும் ஒண்டின. தங்கமீன் மட்டும் தன்னந்தனியே மிதந்து கொண்டிருந்தது அலட்சியமாக. பிளந்த வால் நொடிக்கொரு தரம் சிமிட்டியது. அணைந்து கிடந்த தொலைக்காட்சித்திரை நீர் நிழல்களாடத் தன்னைத் தந்திருந்தது. குரோதம் பெருகும் விழிகளால் தங்கமீனைக் குத்தினாள் நவீனா. வலையை அதன் மீது வைத்து அழுத்தினாள். அவசரமாக அது அடித்தளத்திற்கு நழுவப் பார்க்கையில் தன் கையைத் தோள் வரையிலும் தொட்டிக்குள் விட்டு, ஒரு சிறுமிக்குச் சாத்தியமேயற்ற பலத்துடன் அதை நசுக்கித் தீர்த்தாள். வலையைத் தொட்டிக்குள்ளேயே எறிந்துவிட்டு ஸோபா மூலையில் சுருண்டு கொண்டாள். சென்ற வாரத்தின் அந்த இரவு. அரை உறக்கத்தில் முதுகை வருடிய அம்மாவின் விரல்கள். அம்மா அவள் கருவிழிகள் அசையவில்லையெனத் தன் சுண்டுவிரலை மிக மென்னையாக மூடிய இமை மீது வைத்துச் சோதித்தாள். மகளின் கையிலிருந்த தன் முந்தானையை விடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள். ஆனால் அவளுக்குக் குழந்தை ஏன் இவ்வளவு சீக்கிரமே தூங்க வேண்டும் என்றிருந்தது. ஆழ்ந்த உறக்கத்திலும் அவ மீன்களைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். தனது அறைக்குள் ராதா நுழைந்தபோது காற்றிலாடிக் கொண்டிருந்தன ஜன்னல்கள். சற்றுத் தொலைவில் புரண்டு கொண்டிருந்தது கடல் ரகசியமாகக் காமமுற்ற பெண்ணைப் போல. மங்கலான நிலவொளியில் அதன் கருநீல அலைகள் நிலைகொள்ளாமல் நெளிந்தன. பொங்கி எழும்பின. தயங்கித் தணிந்தன. ராதா கட்டில் விளிம்பிலிருந்த தன் கல்யாணப் புகைப்படத்தைத் திருப்பி வைத்தாள். மறுபடி அதை எடுத்து ரகுவை ஒரு தரம் பார்த்துவிட்டுக் கவிழ்த்துக் போட்டாள். கலைந்த புடவை கொடியிலாடித் துடித்துக் கொண்டிருந்தது. தானுமொரு கருங்கடலாய் உருக்கொண்ட இரவு அலையோசையை அதிரவிட்டது அவள் உடலெங்கும். படுக்கையருகே துழாவி, அந்தப் புத்தகத்தை எடுத்துத் திறந்தும் அரை இருளிலும் ஒளிர்ந்துகொண்டிருந்தன விஷ்ணுவின் விழிகள். மென்நீல விளக்கொளியை அமைத்துக் கட்டிலில் சரிந்து அவன் புகைப்பட முகத்தை உற்றுக்கொண்டிருந்தாள் நெடுநேரம், கடுமையும், எச்சரிக்கையும் தொனிக்கும் கண்கள். சட்டென ஒற்றை விரல் அவற்றை மறைத்ததும், அந்த உதடுகள் குவிந்த நெசிழ்ந்து அழைப்பதாக உணர்ந்தாள். ஒருவருமற்ற அறையின் தனிமையை மறுதரமும் உறுதிப்படுத்திக்கொண்டு, நா நுனியால் அந்த உதடுகளைத் தீண்டினாள். ஒரு நாள் எதிர்பாராமல் வீட்டினுள் நுழைந்த அவன் இதே செயலில் இருந்த அவளைக்கண்டு சிரித்தான். களவில் பிடிபட்டதைத் தாளமுடியாமல், சமையலறைக்கு ஓடியவளைத் துரத்திச் சொன்னான்: "முத்தம் மட்டும் இடாதே" காதோரம் கிசுகிசத்த அவன் வார்த்தைகள் முதலில் புரிபடவில்லை. புரிந்ததும் அடுப்பின் ஆரஞ்சுத் தழல் அவள் கன்னங்களிலாடியது. அவன் எப்போதோ போய்விட்டிருந்தான். இன்னொருமுறை புகைப்படத்தில் குவியும் அவள் இதுழ்கள், அறைக்குள் ததும்பும் கருமையின் தாபம், மார்பில் கவிழ்ந்திருந்த புகைப்படம். பாதிமயக்கத்தில் விழி மூடிப் புரண்டதில் இடுப்புக்குக் கீழே நழுவியதும் திடுக்கிட்டு அதை மறுபடி புத்தகத்துக்குள்ளேயே ஒளித்தாள். தான் வெளிச் சொல்லாத வெற்றுக் கனாக்களில் ஒன்றினைப் போல. அலுவலகத்தில் விஷ்ணு தன்னைச் சுற்றிலும் எழுப்பியிருப்பவை அச்சமூட்டும் வலுவான அரண்கள்: "என் அறைக்குள் உத்தரவின்றி நுழையாதே - முன் அனுமதியின்றி தொலைபேசாதே, பேசுமுன் யோசித்துப் பேசு. உன் வேலையைப் பாரு" என்று எரிந்து விழுவான்; விரட்டித் தள்ளுவான். அவள் தொடவே கூடாத ஏதோ ஒன்றைப் பதுக்குவான் மன ஆழத்திற்குள். உரையாடல்களில் அவன் உருவாக்கியபடியே இருக்கும் விடுவிக்க முடியாத சிடுக்குகள், புதிர்கள். திரைகள் மௌனம் காக்க, கடல் நிம்மதியற்றுப் புரள நினைவில் இறைந்த சொற்களை மீண்டும் மீண்டும் மனநுனியால் தீண்டி ஒலியெழச் செய்துகொண்டிருப்பாள் இரவெல்லாம். "என்ன செய்கிறீர்கள்?" எனும் அவளதுதொலைபேசிக் கேள்விக்கு. "என் தோழியோடு படுக்கையில் காதல் செய்கிறேன். இப்போது அவள் தூங்குகிறாள். போதுமா?" என்பான் மர்மமான தொனியில். பிறகொரு நாள் "அதெல்லாம் சும்மா. உன்னைச் சீண்ட" என்றொரு முடிச்சிடுவான். பேச்சேயற்ற சில நாட்களுக்குப் பின்னதான தனிமையில், தன்னையறியாமல் அனிச்சையாக அவன் எண்களை ஒற்றுவாள் தொலைபேசியில். ஒரு "ஹலோ"வில் நிரம்பி விடும் கண்களை, நல்லவேளை, அவன் பார்க்கவே முடியாது என நிம்மதியுறுவாள். "பிடிக்கலைன்னு சொன்னேனா என்ன? என்ன பிரச்னை, அடிகிடி விழுந்ததா வீட்டில்?" அதிசயமாய்க் கனியும் அவன் குரல் மறுநாளே " பிடிக்குதுன்னு சொல்லலியே?" என்று அகப்படாமல் நழுவும். "உன் அழுகுணிக் கதைகள் எனக்கு வேண்டாம்" என்பான் முறைப்பாக. குழம்பிச் சரிவாள் தலையணையில். உள்ளங்கைக்குள் இருக்கும் அவன் நிழற்படத்திடம் ரகசியமாகக் கத்துவள். "முரண்பாடுகளின் மூட்டை". கடலின் விடாத கூப்பிடுதல் சபலமூட்டும்; சுவர்களை மீறி வந்து அவளுடலை மோதும். விறைத்த முலைகளில் கிளைத்த பச்சை நரம்புகள் விரிந்து வெடித்துத் தேகமெங்கும் வலையாகப் படரும். அடி வயிற்றை உள்ளங்கை அழுத்தும். மனம் முணுமுணுக்கும். "இது தான் காமம். இது ரஜோ குணத்திலிருந்து உண்டானது. பெருந்தீனி தின்பது மஹாபாவம் இது. இவ்வுலகில் காமமே பெரும் பகைவனென்று அறிவாயாக!" தூங்கிவிட்ட மகளிடம் ஓடி சிறு கட்டிலுக்கு வெளியே நீண்டு தொங்கும் குட்டிக் கையைத் தொட்டுக் கொண்டு, குளிர் பரவிய வெற்றுத் தரையில் குப்புறக் கிடப்பாள். உடலுள் அலைகளாட, உள்ளங்காலைச் சிறு மீன்கள் சீண்டக் கண்கள் கரித்து வழியும். எதுவோ கீறலுறும் ஒலியில் பதறியெழுந்து மீன்தொட்டியைக் கவனமாகச் சோதிப்பாள். ஒற்றை விரலால் அணுஅணுவாக வருடுவாள். அவள் தொடுகையை ஏற்று மீன்கள் துள்ளும். தொட்டி இருக்கும் அசையாத திடத்தோடு நெருடலேயற்று. மீன்கள் நெருங்கி, உரசி முத்தமிட்டன. உடனடியாக விலகின. தொட்டியின் சுவர்களோடு சமரசமாக உலவின. விரிந்து, விரிந்து வீடளவு விஸ்தாரம் கொண்டது தொட்டி. அலைகளின் தன்மையை நிராகரிக்க இயலாதது அறைச்சுவர்களின் உறுதியின்மை. படுக்கையிலேயே காத்துக்கிடந்தது அந்தப் புகைப்படம். இறுகக் கடித்த உதடுகளோடு அதைப் புத்தகமடிப்பில் செருகினாள்; காற்றில் கலைந்து, மறுபடி வெளிவந்து படபடத்தது கேலியாக. உடைகள் உடலை விலக்கித் துடிக்க, காற்றில் கூந்தல் உளைய தன்னையறியாமல் நகர்ந்து கொண்டிருந்தாள். கோடி நாகங்களின் விரிபடங்கள் ஜொலிக்கும் அலைகளை நோக்கி. பாதங்களை வருடி மீட்டும் அலைகள் கணுக்காலைக் கடந்து முழுங்காலுக்கு மேல் தொடைகளைத் தொட்டதும் திகிலுற்றுக் கட்டிலுக்கு ஒடிக் கனமான போர்வைக்குள் தன்னைப் பொதிந்தாள். அவன் விரல்கள் பிடரியை நெருடின. திகைத்து எழுந்ததும் போர்வைகள் சரிந்தன. அவன்தான். அஞ்சி நடுங்கும் குரலில், "எப்படி வர முடிந்தது?" என்றவாறே மேற்கூரைத் தளத்தை ஆராய்ந்தாள், சந்தேகமாக. "சொன்னேனே, வருவேனென்று" குறும்பாக நிசப்தங்களை ஊடுருவும் சிரிப்பு. "ஆனால் எப்படி?", "வாசல் வழியாகத்தான்", "நான் கதவை இறுக்கமாகப் பூட்டியிருந்தேனே" குழம்பினாள். "உனது பூட்டுகள் மிகவும் பலவீனமானவை. நீ எப்போதும் எல்லைகளை மீற விரும்புபவளாகவே இருக்கிறாய்" அவள் மறுத்தாள் அவசரமாக. "இல்லை நான்..." குறுக்கிட்டான்" ஆமாம் நீ!" படுக்கையில் கிடந்த அவன் படம் கசங்கி விடக்கூடாதேயென்று பயந்தாள். மனத்தடைகள் நெகிழ, பொங்கும் கடலின் போக்கில் சுழன்றன உடல்கள். மதில்கள் விலகி நடந்தன. முத்தங்களில் அகலமாயின ஜன்னல்கள். இடையில் அழுந்தும் அவன் முகம். அவளுடலின் பிரியமான பகுதிகளைத் தொட்டுச் சுட்டி நகரும் விரல். ஈர மணலில் குறுகுறுக்கும் பாதம். கடலைக் குடித்துப் போதையுற்ற அரையில், அணைப்பில் கிறங்கிய அவள் கண்ணில் பதியவே பதியாமல் கடந்தது ஒருக்களித்திருந்த ஜன்னலில் - ஒரேயொரு நொறுங்கிய நொடி மட்டும் தெரிந்த மகளின் நுனி விழி, பளபளவென்ற கத்தி முனைபோல, சிறு திமிறலும் சாத்தியமின்றி அவனோடு ஒன்றிவிட்ட உடலை மீட்க முடியவில்லை புரிந்தவனாக, "சும்மாயிரு அவள் நன்றாகத் தூங்குகிறாள்" என்றான். கடல் முடிவேயற்றுப் பெருகியது. காலையில் தன் குற்றவுணர்வின்மையே ஒரு குற்றமெனத் திரட்ட முயற்சித்தாள். வழக்கமான அடங்கள் இல்லாமல் மௌனமாகச் சாப்பிடும் மகளின் சலனமற்ற முகம் எதுவுமே சொல்லவில்லை. செத்து மிதந்த தங்கமீன் குப்பைவாளியில் கிடந்தது விறைத்த விழிகளோடு. பிறகு வந்த நாட்களில் ஒவ்வொன்றாக உயிரிழக்கத் தொடங்கின மீன்கள். ரகு ஊரிலிருந்து வந்த நாளில் துடித்துக் கொண்டிருந்த கடைசி மீனும் செத்ததை அவன் கவலையோடு கவனித்தான். அவன் கொண்டு வந்திருந்த கண்ணாடி ஜாடியில் புதிய மீன்களிருந்தன. சிறியதொரு தங்கமீனும் கூட. மீன்களில் சாவுதான் மகளின் உற்சாகமின்மைக்குக் காரணமென்றெண்ணினான். இந்தப் புதிய மீன்களால் அவள் பழைய குதூகலத்திற்குத் திரும்புவாள் என நம்பினான். சாப்பாட்டு மேஜையில் மூவரும் உட்காருகையில் மின்சாரம் அறுந்தது. காத்திருந்தாற் போல் இருள் வீட்டிற்குள் நுழைந்தது பரபரவென்று. தயாராக இருந்த மெழுகுவர்த்திகளை ராதா ஏற்றினாள். சுடர்கள் எதற்கோ பதறி நடுங்கின. ஜாடி மீன்கள் ஒளியேற்றி நீந்தின. எதிர்எதிராக அவளும், கணவனும். தனி மூலையொன்றில் குழந்தை. "இருட்டில் சாப்பிட்டால் பேய்களும் நம்மோட சாப்பிடுமாம் சேர்ந்து" என்றால் ராதா சகஜமான புன்னகையோடு. குழந்தையின் உதடுகள் அழுகைக்கு ஆயத்தமாவது போல் குவிகையில் அவள் ஒரு விதமான நிம்மதியையும் விடுவிடுப்பையும்" உணர்ந்தாள். " சொல்லட்டும், சொல்லிவிடட்டும் " ராதா காத்திருந்தாள். குழந்தை கண்ணாடிஜாடியின் வளைவுகளோடு மன்றாடிக் கொண்டிருந்த மீன்களைப் பார்த்தபடியே சொன்னாள். அவள் குரல் அபூர்வமான ஈரமும், சாந்தமும் நிறைந்ததாயிருந்தது. "இனிமேல் இந்த மீனையெல்லாம் கடலிலேயே விட்டுடுங்க அப்பா, தயவு செய்து" -பிறகு அவள் வேகவேகமாகச் சாப்பிடத் தொடங்கினாள்.. நன்றி - புதிய பார்வை.
ஸொயான் ஸாகுவின் சீடன் ஒருவன் கூறிய நிகழ்ச்சி இது. "எங்களுடைய ஆசிரியர் தினமும் பகலில் சிறுதுயில் (உறக்கம்) போடுவது வழக்கம். நாங்கள் ஆசிரியரை எதற்காக மதிய வேலையில் தூங்குகிறிர்கள் என்று கேட்டதற்கு, 'கான்பூசியஸினைப் போல் நானும் கனவு உலகத்திற்கு சென்று பண்டைய முனிவர்களையும் அறிஞர்களையும் பார்த்து விட்டு வருகிறேன்' என்று பதில் கூறுவார்." கான்பூசியஸ் சைனாவில் பிறந்த சிறந்த தத்துவஞானி. அவர் மக்களுக்குத் தேவையான வாழ்க்கைக் கோட்பாடுகளையும், அரசர்களுக்கும், அரசுக்கும் தேவையான அரசாட்சி முறையையும் பற்றி விரிவாக எடுத்துக் கூறியவர். ஆசிரியராக இருந்து பல மாணவர்களுக்கு நல்லுபதேசங்களை வழங்கியவர். கான்பூசியஸ் கருத்துக்கள் பல சீன மன்னர்களாலும், மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டு இன்றும் நடைமுறையில் உள்ளது. "இன்னும் வாழ்வதைப் பற்றியே நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை, எப்படி இறப்பைப் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடியும்" என்றவர் கான்பூசியஸ். அவர் தூங்கிய போது கனவுகளில் பழங்காலத்து முனிவர்களை சந்தித்ததாக விழித்ததும் தன்னுடைய சீடர்களிடம் அந்த முனிவர்களைப் பற்றி கூறுவார். "ஒரு நாள் மிகவும் வெப்பமாக இருந்தது. எங்களில் சிலர் மதிய உறக்கம் போட்டோம். எங்கள் ஆசிரிய ஸொயான் ஸாகு எங்களை கடிந்து கொண்டார். 'நாங்கள் கனவுலகத்திற்கு சென்று பண்டைய முனிவர்களைப் பார்ப்பதற்காக கான்பூசியஸினைப் போல் சென்றோம்' என்று அவர் கூறியதையே அவரிடம் கூறி மடக்கினோம். 'அப்படியா, என்ன செய்தியினை அந்த முனிவர்கள் உங்களிடம் சொல்லி அனுப்பினார்கள்? பதில் சொல்லுங்கள்' என்று எங்கள் பள்ளி ஆசிர்யர் எங்களை கட்டாயப் படுத்தினார்." "எங்களில் ஒருவன், 'நாங்கள் கனவுலகத்திற்கு சென்று முனிவர்களை சந்தித்து, எங்கள் பள்ளி ஆசிரியர் மதிய வேலையில் உங்களை சந்திப்பதற்கு வருகிறாரா என்று கேட்டோம். நீங்கள் கூறியது போல் யாரும் மதியவேலைகளில் எங்களைப் பார்ப்பதற்கு வருவதில்லை என்று பதில் கூறினார்கள்' என்றான்"
ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர். குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் “எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?” என்று கேட்டான். குயவன் “அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை.. நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு … கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உன்னைப் போல வெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது? அலுப்புத் தட்டுகிறது போ!” என்று கொட்டாவி விட்டான். அதற்கு வைர வியாபாரி சொன்னான் “உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி… நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப் படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு? உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே. வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம். இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும்…” என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான். எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா? மகிழ்ச்சியான வேலைதான் எது? என்று இருவரும் சிந்தித்தார்கள். அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை. ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று “ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். பெரியவர் புன்னகைத்துக் கொண்டே “உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார். அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில் கூறினார்கள். “உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்?” என்று அவர்களிடம் கேட்டார். “எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்!” பயத்துடன் பதில் சொன்னார்கள். “அப்படியானால் உங்கள் வேலைக்கு என்ன மதிப்பு?” பெரியவர் கேட்டார். “களிமண்ணை பாண்டமாக உருவாக்குவதும், இயற்கையில் கிடைக்கும் வைரத்தை மின்னல் போல் பளபளக்கச் செய்வதும்தான்” என்று இருவரும் சொன்னார்கள். “உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். அந்தத் திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள். மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் உங்கள் நோக்கிலேயே இருக்கிறது. செய்யும் வேலையில் இல்லை. குறைகளை அவற்றை நிறை செய்யும் வாய்ப்பாகப் பார்ப்பவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். குறையை அதில் உள்ள சிரமங்களாகப் பார்ப்பவன் வருத்தத்துடன் இருக்கிறான்” என்று முடித்தார்.
ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவள் மிகுந்த அறிவுடையவளாக விளங்கினாள். யார் பேசினாலும் தன் அறிவு கூர்மையால் அவர்களை மடக்கி விடுவாள் அவள். இளவரசி திருமணப் பருவம் அடைந்தாள். தன் மகளுக்கு யாரைத் திருமணம் செய்து வைப்பது என்று சிந்தித்தான் அரசன். தந்தையே! இளவரசனாக இருந்தாலும் சரி, ஏழைப் பிச்சைக்காரனாக இருந்தாலும் சரி. பேச்சாற்றலில் யார் என்னை வெற்றி கொள்கின்றாரோ அவரையே மணப்பேன் என்றாள் அவள். இந்தச் செய்தி பல நாடுகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. பல நாட்டு இளவரசர்களும் அறிஞர்களும் போட்டியில் கலந்து கொள்ள அரண்மனைக்கு வந்தனர். வந்த ஒவ்வொருவரையும், சிறிது நேரத்திற்குள் தோற்கடித்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தாள் இளவரசி. நாள் தோறும் ஏராளமான கூட்டம் அரண்மனைக்கு வந்த வண்ணம் இருந்தது. இப்படியே சென்றால் நாட்டில் உள்ள எல்லோருடனும் இளவரசி பேச வேண்டி இருக்கும். வருகின்ற கூட்டத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது? பொழுது போக்குவதற்காக இங்கு வருபவர்களை எப்படித் தடை செய்வது என்று குழம்பினான் அரசன். போட்டியில் வென்றால் திருமணம், தோற்றால் நூறு கசையடி, என்று நாடெங்கும் முரசறைந்து தெரிவிக்கச் சொன்னான் அவன். இதனால் இளவரசியுடன் போட்டியிட வருகின்றவர் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. வந்தவர்களும் தோற்றுக் கசையடி வாங்கிக் கொண்டு சென்றனர். அந்த நாட்டில் பிச்சைக்கார இளைஞன் ஒருவன் இருந்தான். இளவரசியை மணப்பதற்காக நிகழும் போட்டியைப் பற்றி அறிந்தான் அவன். முயற்சி செய்து பார்ப்போம். நல்ல வாய்ப்பு இருந்தால் இளவரசியை மணப்போம். இல்லையேல் கசையடி வாங்கி இறந்து விடுவோம் என்று நினைத்தான் அவன். தன் ஊரில் இருந்து தலைநகரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான் அவன். நீண்ட தூரம் நடந்தான் அவன். இறந்து போன கோழி ஒன்று வழியில் கிடந்தது. இது எதற்காவது பயன்படும் என்று நினைத்தான் அவன், தன் தோளில் கிடந்த சாக்குப் பைக்குள் அந்தக் கோழியைப் போட்டான். இன்னும் சிறிது தூரம் நடந்தான். வழியில் கிடந்த சிறு தொட்டியில் அவன் கால் இடறியது. அந்தத் தொட்டியையும் எடுத்துசூ சாக்குப் பைக்குள் போட்டுக் கொண்டான். வழியில் மாடு ஆடுகளைக் கட்டும் தடி ஒன்று கிடந்தது. குதிரையின் கால் குளம்பு கிடந்தது. பல வளைவுகளை உடைய ஆட்டின் கொம்பு ஒன்று கிடந்தது. எல்லாவற்றையும் எடுத்துப் பைக்குள் போட்டுக் கொண்டான். சாக்குப் பையைத் தூக்கிக்கொண்டு மெல்ல நடந்து அரண்மனையை அடைந்தான் அவன். காவலுக்கு இருந்த வீரர்கள் கந்தல் ஆடையுடன் காட்சி அளித்த அவனைக் கண்டு சிரித்தனர். இளவரசியுடன் போட்டியிட வந்துள்ளேன். என்னை உள்ளே விடுங்கள், என்றான் அவன். பிச்சைக்காரனாகிய உனக்கு என்ன தெரியும்? நீயா இளவரசியுடன் போட்டியிடப் போகிறாய் என்று கேலியாகக் கேட்டான் வீரன் ஒருவன். என் மூக்குக்குக் கீழே வாய் உள்ளது. வாய்க்கு உள்ளே நாக்கு உள்ளது. என் திறமையான பேச்சினால் இளவரசியை வெல்வேன், என்றான் அவன். உம்மைப் போன்ற முட்டாளிடம் இளவரசி பேச மாட்டார். நீ திரும்பிச் சென்று நல்ல அறிவு பெற்று மீண்டும் இங்கே வா, என்றான் இன்னொரு வீரன். நான் இங்கிருந்து நகர மாட்டேன், போட்டியிட வந்திருக்கிறேன். இளவரசியிடம் சொல் என்று உறுதியுடன் சொன்னான் அவன். வீரர்கள் இளவரசியிடம் சென்றார்கள். பிச்சைக்கார இளைஞன் ஒருவன் போட்டிக்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள். விளையாடுவதற்காக அந்த முட்டாள் இங்கு வந்திருக்கிறான். நன்கு அவமானப்படப் போகிறான். அவனை இங்கு அனுப்பி வையுங்கள், என்றாள் கோபத்துடன் அவள். பிச்சைக்காரன் உள்ளே நுழைந்தான். இளவரசியைப் பணிவாக வணங்கினான். பனிக்கட்டியை விட குளிர்ந்த கைகளை உடைய இளவரசியாரே வணக்கம், என்றான் அவன். என் கைகள் குளிர்ச்சியாக இல்லை. சூடாக உள்ளது. இந்தச் சூட்டில் ஒரு கோழியை வறுபட்டு விடும். இது உனக்குத் தெரியுமா? என்று வெடுக்கெனப் பதில் தந்தாள் அவள். அப்படியா? கோழி வறுபடுமா என்று பார்க்கிறேன், என்ற அவன் சாக்குப் பைக்குள் கையை விட்டான். செத்த கோழியை வெளியே எடுத்தான். எதிர்பாராதது நடந்ததைக் கண்ட அவள் திகைத்தாள், தன் திகைப்பை மறைத்து கொண்டு சூடு பட்டால் கோழியின் கொழுப்பு ஒழுகுமே, என்றாள். பைக்குள் கைவிட்டுத் தொட்டியை எடுத்தான் அவன் ஒழுகுவதை இதற்குள் பிடித்துக் கொள்ளலாம், என்றான். தொட்டி விரிசல் விட்டிருந்தால் ஒழுகுமே என்றாள் அவள். குதிரைக் குளம்பை எடுத்த அவன், விரிசல் உள்ள பகுதியில் கீழே இதை வைத்து அடைத்து விடலாம், என்றான். எப்படி எதிர்க் கேள்வி கேட்டாலும், பதில் வைத்திருக்கிறானே என்று நினைத்தாள் அவள். தொட்டியை விட குளம்பு பெரிதாக இருக்கிறது. எப்படித் தொட்டியை அதனால் நெருக்க முடியும்? என்று கேட்டாள் அவள். தடியை வெளியே எடுத்தான் அவன். இதைப் பயன்படுத்திக் குளம்பிற்குள் தொட்டியை இறுக்கமாகப் பொருத்த முடியும், என்றான் அவன். ஏறுமாறான கேள்விகளுக்குத் தக்க பதில் தருகிறானே. அவன் கை ஓங்கி வருகிறதே, என்று திகைத்தாள் அவள். அவனை மடக்க நினைத்த அவள், இளைஞனே! நான் என்ன சொன்னாலும் அதை வேறொன்றாகத் திருப்பி விடுகிறாய். நாக்கு பல திருப்பங்கள் இருப்பது போல நீ நடந்து கொள்கிறாய், என்றாள் அவள். தன் பைக்குள் கையை விட்ட அவன் ஆட்டுக் கொம்பை எடுத்தான். அதை அவளிடம் காட்டி, இதைவிட அதிக திருகுகள் உள்ளதைப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டான். அவள் என்ன பதில் சொல்வது என்று சிந்தித்தாள். நீண்ட நேரம் ஆயிற்று. அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. பிறகென்ன, இளவரசிக்கும் அவனுக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடந்தது.
தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் ஒரு மாலைப் பொழுதில் உலாத்திக் கொண்டிருந்தன. குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான். “அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?” தாய் எப்போதும் பொறுமையாக பதில் சொல்லும். “நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனத்தில் தண்ணீர் பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துக் கொண்டு வேண்டும் போது உபயோகப் படுத்திக் கொண்டால் தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்கை திமிலைக் கொடுத்திருக்கு” குட்டி திரும்பவும் கேட்டது. “அப்போ நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக் கொள்ள மூடி இருக்கே? மத்த மிருகத்துக்கு அப்படி இல்லையே. அது ஏன்” தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக் கொண்டு சொன்னது. “பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும், அப்போ சட்டுன்னு ஒதுங்க இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைன்னா கண்ணுலயும் மூக்குலையும் மணல் போயிடுமே. அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு” குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது. “இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு?” “அது கண்ணு, மணல்ல நடக்கும் போது நம்ம கால் மணல்ல புதையாம நடக்கத்தான்”. பொறுமையாக பதில் சொன்னது அம்மா ஒட்டகம். “பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியா, தடியா இருக்கே. அது ஏன்?”. இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி. அம்மா ஒட்டகம் சொன்னது. “பாலைவனத்தில் செடி கொடியெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சவைத்துத் தின்ன வேண்டாமா?” இப்போது குட்டி பட்டென்று கேட்டது. “அம்மா! இதையெல்லாம் வைத்துக் கொண்டு லண்டன் குளிரிலே இந்த மிருகக் காட்சி சாலையிலே நாம ரெண்டு பேரும் என்ன செஞ்சுகிட்டு இருக்கோம்?”
அந்த ஊரில் ஒரு வழக்கம் உண்டு யாராவது ஒருவர் நல்ல செய்தியொன்றைச் சொன்னால் அதற்காக அவர்களுக்கு பணம் வசூலித்து அன்பளிப்பாகக் கொடுப்பார்கள். அந்த வழக்கம் ஒருவிதமான மூடநம்பிக்கை என்பது முல்லாவின் கருத்து. அந்த மக்களுக்குப் புத்தி கற்பிக்க வேண்டும் என்று முல்லா கருதினார், ஒருநாள் அவர் சந்தை கூடும் இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த ஒர் இடத்தில் நின்று கொண்டு " அன்பார்ந்த பொதுமக்களே உங்களுக்குச் சொல்வதற்காக அருமையான நல்ல செய்தி ஒன்றை வைத்திருக்கிறேன் எனக்குப் பரிசு தருவதற்காக உடனே பணம் வசூலியுங்கள் " என்று கூச்சல் போட்டார். முல்லா ஒரு செய்தியினைச் சொல்லுகிறாார் என்றால் உண்மையிலேயே அது நல்ல செய்தியாகத் தான் இருக்கும் என்ற நம்பிய மக்கள் அவசர அவசரமாக பணம் வசூலித்து ஒரு கணிசமான தொகையை முல்லாவிடம் கொடுத்தனர். அந்த அன்பளிப்புத் தொகையை வாங்கி எண்ணி சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்ட முல்லா மக்களை நோக்கி அன்பார்ந்த பொதுக்களே நான் கூற இருக்கும் நல்ல செய்தி இதுதான் இந்த முல்லா ஒரு மகனுக்குத் தந்தையாகியிருக்கிறார் என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்..
ராமுவும் மாரியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. இது போதாதென்று ராமுவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மாரியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்களுக்குச் சிறிது தொலைவில் உள்ள மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். மாரி சலிப்புடன் சொன்னான்", "என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை?" ராமு சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான்: "நண்பா! யோசித்துப் பார். உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக் கொள். எனக்கு வழியைச் சொல்லிக் கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரமுடியும்" ராமுவும் மாரியும் திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்!! 1. நம் பலங்கள் எவை என்பதை எப்பொழுதும் உணர்ந்திருப்பது அவசியம். அவற்றைத் தகுந்த சமயத்தில் உபயோகிக்கத் தெரிய வேண்டியதும் அவசியம் 2. ஏன் நம்மால் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது என்று யோசிப்பதை விட, எப்படி சாதிக்க முடியும் என்று யோசிப்பது அதிகப் பயன் தரும். 3. அடுத்தவர் பலங்கள் நமக்குப் பயன் தர வேண்டுமானால், அவர்களுக்குத் தேவையான நமது பலங்களின் பயன்களை அவர்களுக்கு அளித்து உதவத் தயங்கக்கூடாது 4. முயன்றால் முடியாதது எதுவுமில்லை
"குருநாதா! நாம் ஒரு ஓலைச் சுவடி பத்திரிகை ஆரம்பித்தால் என்ன?" என்று கேட்டான் முட்டாள். "பத்திரிகையா? அதனால் நமக்கு என்ன லாபம்?" என்றார் பரமார்த்தர். "தினம் தினம் நம்மைப் பற்றிப் புகழ்ந்து எழுதிக் கொள்ளலாம். நமக்குப் பிடிக்காதவர்களை விருப்பம் போல் திட்டலாம்" என்றான் மூடன். "அப்படியானால் நம் பத்திரிகைக்குத் "தினப் புளுகு" என்று பெயர் வைக்கலாம்" என்றார் குரு. "பெயருக்குக் கீழே "கெட்டிக்காரன் புளுகு - எட்டு நாள் உண்மை!" என்று போடலாம்" என்றான் மண்டு. அன்று முதல் பரமார்த்தரின் மடம், பத்திரிகை அலுவலகம் ஆயிற்று. பரமார்த்தர், "தினப் புளுகு" நாளிதழின் ஆசிரியராக பதவி ஏற்றுக் கொண்டார். மட்டியும், மடையனும் நிருபர்களாக நியமிக்கப்பட்டனர். இருட்டத் தொடங்கியதும், நிருபர்களான மட்டியும், மடையனும் வெளியே புறப்பட்டனர். அப்போது அந்த நாட்டு அரசன், நகர சோதனை செய்வதற்காக மாறு வேடத்தில் புறப்பட்டான். அதைக் கண்ட மட்டி, "அரசர் ஏன் மாறு வேடத்தில் போகிறார்?" என்று கேட்டான். "திருடுவதற்காக இருக்கும்" என்றான் மடையன். "ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்க்கிறாரே, ஏன்?" என்று சந்தேகம் கொண்டான், மட்டி. "எந்த வீட்டில் கொள்ளையடிக்கலாம் எனத் திட்டம் தீட்டுகிறார்" என்று விளக்கினான், மடையன் "அப்படியானால் இதைச் சும்மா விடக் கூடாது. முதல் பக்கத்திலேயே பெரிதாக எழுத வேண்டும்!" என்றான் மட்டி. மடத்துக்கு வந்ததும், திரட்டி வந்த செய்திகளை எழுதத் தொடங்கினார்கள். வேலியே பயிரை மேய்கிறது! பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க அரசரே திட்டம்!! இரவு நேரத்தில், மாறு வேடத்தில் ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்த்தார். இந்தத் தலைப்பின் கீழ், அரசரைக் கண்டிபடித் தாக்கி எழுதினார்கள். "தேர்தலில் நம்மை எதிர்த்துப் போட்டி போட்டவர்களைச் சும்மா விடக்கூடாது. பழி வாங்கியே தீர வேண்டும்" என்றான் மண்டு. "மந்திரிகள் பேரிலும் ஊழல் பட்டியல் தயாரிப்போம்" என்று கத்தினான் மூடன். உடனே மட்டியும் மடையனும் கீழ்க்கண்டவாறு செய்திகளை எழுதினார்கள். அரசு பணத்தில் அட்டகாசம்! தளபதி தம்புசாமி குடித்து விட்டுக் கலாட்டா! அறிவுகெட்ட அமைச்சர் அப்புசாமி, ஆறு கட்டு சுருட்டு லஞ்சம் வாங்கினார். ஊழலோ ஊழல்! மந்திரி மலர்வண்ணன் மாடி வீடு கட்டிய மர்மம் என்ன? இளவரசர் இந்திரனின் லீலை! இளம் பெண்ணின் கையைப் பிடித்திழுத்து வம்பு! இதே போல் தங்களுக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல் தாக்கி எழுதினார்கள். "நம்மைப் பற்றிக் கொஞ்சம் புகழ்ந்து எழுதிக் கொள்வோமே!" என்றான் முட்டாள். "என்ன எழுதுவது?" எனக் கேட்டான் மூடன். சுருட்டு மன்னர் பரமார்த்தரின் சாதனை! ஒரே நாளில் தொடர்ந்து முப்பது சுருட்டு பிடித்தார்! என்று எழுதினான், முட்டாள். "மண்ணில் புரளுவது எப்படி?" என்ற தலைப்பில் மண்ணில் புரளுவதால் உடல் நலம் ஏற்படும் எனப் பேட்டி கொடுத்தான் மட்டி! "தொப்பை வளர்ப்பது எப்படி?" என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை "அறிவியல்" பகுதியில் எழுதினார் பரமார்த்தர். "பரமார்த்தருக்குச் சிலை! மக்கள் போராட்டம்! "தத்துவத் தந்தை" பரமார்த்த குருவுக்கும், அவரது சீடர்களுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று கோரி, மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தச் சிலையை அரண்மனைக்கு எதிரேதான் வைக்க வேண்டும் என்றும் மக்கள் கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றார்கள்!" இதே போல் ஒவ்வொருவருக்கும் தங்களைப் பற்றிக் கண்டபடி கிறுக்கி வைத்தனர். எல்லாவற்றையும் கொண்டு போய்ப் பரமார்த்தரிடம் கொடுத்ததும், "எல்லாம் நன்றாகத்தான் எழுதியிருப்பீர்கள். விடிந்ததும் விற்றுவிட்டு வாருங்கள்" என்று கூறிவிட்டுப் படுத்து விட்டார். பொழுது விடிந்ததும், சீடர்கள் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு விற்கப் போனார்கள். "தினப் புளுகு வாங்கலையோ, தினப் புளுகு! நாலு பக்கம் நாற்பது காசு!" என்று கத்தினான் முட்டாள். சிலர் ஓடிவந்து ஓலையில் எழுதப்பட்ட பத்திரிகையை வாங்கிப் பார்த்தனர். செய்திகளைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தனர். செய்தி, அரசருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் எட்டியது. நீதி தவறாத மன்னனைப் பற்றியும், அவனது மந்திரிகளைக் குறித்தும் கண்டபடி தவறா எழுதியதற்காகப் பரமார்த்தர் மீதும், சீடர்கள் மீதும் "குற்றப்பத்திரிகை" வாசிக்கப்பட்டது. "பரமார்த்தரோ, "இதெல்லாம் உண்மை என்று யார் சொன்னது? பத்திரிகையின் பெயரைப் பாருங்கள்; "தினப் புளுகு" என்று தானே போட்டிருக்கிறோம்" என்று கூறினார். அதன் பின் குருவும், சீடர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர். ஒருநாள், சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே வந்து நின்றான்.அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அறிவித்தன. அவன் மன்னனிடம், “அரசே……..உங்கள் உடல் தேறவேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் படைத்தேன். அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். அம்மன் பிரசாதத்தைச் சாப்பிட்டால் எந்த நோயும் பறந்து ஓடிவிடும்” என்றான்.அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப் போன நாற்றம் அடித்தது. அங்கிருந்த பிரமுகர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். முகம் சுளித்தார்கள். அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி எடுத்து, அந்த விவசாயிக்கு பரிசளிக்க அளித்து அனுப்பினான். மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், “அரசே, கெட்டுப் போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு?” என்று கேட்டார். மன்னனோ, “அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று விரும்பி கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான். அவனது அன்பு உண்மையானது. போலித்தனம் இல்லாதது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலைகூட அவனது அன்புக்கு ஈடாகாது” என்று கூறினான்.நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.
ஓர் ஊரில் செல்வன் ஒருவன் இருந்தான். வெளியூரில் இருந்து வந்த ஒருவன் அவனிடம் வேலைக் காரனாகச் சேர்ந்தான். கள்ளம் கபடம் இல்லாத அந்த வேலைக்காரன் உண்மையாக உழைத்தான். செல்வன் அவனுக்குக் கூலி எதுவும் தரவில்லை.மூன்றாண்டுகள் கழிந்தன. செல்வனைப் பார்த்து அவன், ஐயா என் செந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறேன். எனக்குச் சேர வேண்டிய கூலியைத் தாருங்கள் என்று கேட்டான். கருமியான அந்தச் செல்வன் அவனை ஏமாற்ற நினைத்தான். தன் பையிலிருந்து மூன்று செப்புக் காசுகளை எடுத்து அவனிடம் தந்தான்.நீ என்னிடம் மூன்று ஆண்டுகள் உழைத்தாய். ஒவ்வோர் ஆண்டிற்கும் ஒரு காசு கூலி, என்றான் செல்வன். வேலைக்காரனுக்குப் பணத்தின் மதிப்பு ஏதும் தெரியாது. நன்றி ஐயா! என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான். காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தான். அவன் எதிரில் ஒரு குள்ளன் வந்தான். அந்தக் குள்ளன் இரண்டடி உயரமே இருந்தான். அவனின் நீண்ட வெள்ளைத் தாடி தரையில் புரண்டது தலையில் பல வண்ணத் தொப்பி அணிந்து இருந்தான். வேடிக்கையான தோற்றத்துடன் காட்சி அளித்தான் அவன். எதிரில் வந்தவனைப் பார்த்துக் குள்ளன், ஐயா! நான் ஏழை, குள்ளனாக இருப்பதால் யாரும் எனக்கு வேலை தருவது இல்லை. பசியாலும் பட்டினியாலும் வாடுகிறேன். என் மீது இரக்கப்பட்டு ஏதேனும் உதவி செய்யுங்கள், என்று கெஞ்சினான்.உன்னைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. நான் மூன்றாண்டுகள் கடுமையாக உழைத்ததற்குக் கிடைத்த கூலி இது. இதை நீ வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இரு. எனக்கு வலிமை இருக்கிறது. மீண்டும் உழைத்து என்னால் பொருள் ஈட்ட முடியும், என்று சொல்லி விட்டுத் தன் பையில் கை விட்டான். மூன்று செப்புக் காசுகளை எடுத்துக் குள்ளனிடம் தந்தான். அதை பெற்றுக் கொண்ட குள்ளன், நீ நல்லவன் உன்னிடம் ஏழைக்கு இரக்கப்படும் பண்பு உள்ளது. மூன்று காசுகளை என்னிடம் தந்து உள்ளாய். என்னால் எதுவும் செய்ய முடியும். உன் மூன்று விருப்பங்களைச் சொல். எப்படிப் பட்டதாக இருந்தாலும் உடனே நிறைவேற்றி வைக்கிறேன், என்றான். சிந்தனையில் ஆழ்ந்த அவன், குறி வைத்தால் குறி தப்பவே கூடாது. அப்படிப்பட்ட வில்லும் அம்புகளும் தேவை. நான் புல்லாங்குழலை இசைத்தால் கேட்பவர் யாராக இருந்தாலும் ஆட வேண்டும் அத்தகைய புல்லாங்குழல் தேவை. நான் எதைக் கேட்டாலும் மற்றவர்கள் அதை மறுக்கக் கூடாது. இதுவே என் மூன்று விருப்பங்கள், என்றான்.அடுத்த நொடியே குள்ளனின் கையில் வில்லும் அம்புகளும் புல்லாங்குழலும் இருந்தன. அவற்றை அவனிடம் தந்தான் குள்ளன். உன் விருப்பங்கள் நிறைவேறும், போய் வா, என்றான். குள்ளனை வணங்கிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன். சிறிது தூரம் சென்றிருப்பான். அங்கே ஒரு திருடன் கையில் பொற்காசுப் பையுடன் நின்று இருந்தான். அருகே இருந்த மரத்தில் ஒரு பறவை கத்திக் கொண்டிருந்தது. இந்தப் பறவை மட்டும் என் கையில் கிடைத்தால் போதும். என் பசிக்கு நல்ல உணவாகும். என்ன செய்வேன்? அதை அடித்து வீழ்த்த வில்லோ அம்புகளோ என்னிடம் இல்லையே, என்று சொல்லிக் கொண்டு இருந்தான் திருடன்.இதைக் கேட்டான் அவன் தன் வில்லில் அம்பு பூட்டிப் பறவைக்குக் குறி வைத்தான். குறி தவறவில்லை. பறவை அருகில் இருந்த புதரில் விழுந்தது. திருடனே! அந்தப் பறவையை எடுத்துக் கொள், என்று கத்தினான் அவன். முள் நிறைந்த புதர் அருகே சென்றான் திருடன். பறவையை எடுப்பதற்காகக் குனிந்தான். உடனே அவன் புல்லாங்குழலை வாயில் வைத்து இசைக்கத் தொடங்கினான். தன்னை அறியாமல் பாட்டிற்கு ஏற்ப ஆடத் தொடங்கினான் திருடன். சிறிது சிறிதாக இசையை அதிகப்படுத்திக் கொண்டே சென்றான் அவன்.இசைக்கு ஏற்ப திருடன் இங்கும் அங்கும் வேகமாக ஆடத் தொடங்கினான். சுற்றி இருந்த முட்கள் அவன் உடைகளைக் கிழித்தன. உடலுக்குள் தைத்து வேதனையை ஏற்படுத்தின.திருடன் வலியைத் தாங்க முடியவில்லை. ஐயா! பாடுவதை நிறுத்துங்கள் என்று கெஞ்சினான். எத்தனை பேருக்கு நீ எவ்வளவு துன்பம் தந்து இருப்பாய்? யாருக்காவது இரக்கம் காட்டி இருக்கிறாயா? கொடியவனான உனக்குத் தக்க தண்டனை இதுதான், என்ற அவன் மேலும் வேகமாக இசைக்கத் தொடங்கினான். முட்கள் மேலும் மேலும் திருடனின் உடலைக் கிழித்தன.ஐயா! இனிமேல் என்னால் தாங்க முடியாது. என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யமாட்டேன். நல்லவனாகி விட்டேன். நான் திருடிச் சேர்த்த இந்த பொற்காசுகளை உங்களுக்குத் தந்து விடுகிறேன். பாடுவதை நிறுத்துங்கள், என்று பரிதாபமாகச் சொன்னான் திருடன்.நீ திருந்தி விட்டதாகச் சொல்கிறாய். பெருந்தன்மையுடன் பொற்காசுகளை எனக்குத் தருவதாகச் சொல்கிறாய். பாட்டை நிறுத்துகிறேன், என்ற அவன் புல்லாங்குழலை வாயிலிருந்து எடுத்தான். உடலெங்கும் குருதி சொட்டச் சொட்ட எழுந்தான் திருடன். சொன்னபடியே அவனிடம் பொற்காசுப் பையைத் தந்தான்.அதைப் பெற்றுக் கொண்ட அவன் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டான். அவன் கண்ணுக்கு மறைந்ததும் திருடன், டேய்! அயோக்கியப் பயலே! என்னிடம் உன் வேலையைக் காட்டுகிறாயா? நீ விரைவில் கொடுமையாக இறக்கப் போகிறாய், என்று திட்டினான். குறுக்கு வழியாகப் பக்கத்தில் இருந்த நகரத்தை அடைந்தான்.நீதிபதியிடம் சென்ற திருடன், ஐயா! நான் உழைத்துத் தேடிய பொற்காசுகளைக் காட்டில் ஒரு திருடன் பறித்துக் கொண்டான். நீங்கள்தான் மீட்டுத் தர வேண்டும், என்றான். அந்தத் திருடன் எப்படி இருப்பான்? என்று கேட்டார் நீதிபதி.எப்படியும் இந்த நகரத்திற்கு அவன் வருவான். தோளில் வில், கையில் புல்லாங்குழல் வைத்திருப்பான். எளிதில் கண்டுபிடித்து விடலாம், என்றான் திருடன். வீரர்களை அழைத்தார் நீதிபதி. இவன் குறிப்பிடும் ஆள் கிடைத்தால் கைது செய்து இழுத்து வாருங்கள், என்று கட்டளை இட்டார்.நடக்கப் போவதை அறியாத அவன் நகரத்திற்குள் நுழைந்தான். வீரர்கள் அவனைக் கைது செய்தனர். நீதிபதியின் முன்னர் அவனை இழுத்து வந்தனர். அவனைப் பார்த்ததும் திருடன், நீதிபதி அவர்களே! இவன் தான் திருடியவன், இவனிடம் என் பொற்காசுப் பை இருக்கலாம், என்று கத்தினான்.வீரர்கள் அவனைச் சோதனை செய்தனர். பொற்காசுப் பை கிடைத்தது. உடனே அவன், ஐயா! நான் திருடன் இல்லை. இவன்தான் திருடன். இவனே விருப்பப்பட்டு இந்தப் பொற்காசுகளை எனக்குத் தந்தான். நான் சொல்வதை நம்புங்கள், என்றான்.முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர்க்கு யாராவது இவ்வளவு பொற்காசுகளைத் தருவார்களா? நீ பொய் சொல்கிறாய். நீ திருடன் தான். இவனைத் தூக்கில் போடுங்கள், என்று கட்டளை இட்டார் நீதிபதி. அங்கிருந்த தூக்கு மேடைக்கு அவனை வீரர்கள் இழுத்துச் சென்றனர். அவன் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்ட ஒரு காவலன் வந்தான்.நீதிபதி அவர்களே! இறப்பதற்கு முன் என் கடைசி ஆசை. இந்தப் புல்லாங்குழலை நான் சிறிது நேரம் இசைக்க வேண்டும்.. அனுமதி தாருங்கள், என்று கேட்டான் அவன். புல்லாங்குழலை அவனிடம் தருமாறு கட்டளை இட்டார் நீதிபதி.அங்கிருந்த திருடன். ஐயோ! வேண்டாம். புல்லாங்குழலை அவனிடம் தராதீர்கள். எல்லோருக்கும் ஆபத்து என்று கத்தினான். சாகப் போகிறவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும். அவன் புல்லாங்குழலை இசைப்பதால் என்ன கெடுதி வந்துவிடப் போகிறது இசைக்கட்டும் என்றார் நீதிபதி.அப்படியானால் என்னை இந்தத் தூணோடு சேர்த்துக் கட்டி விடுங்கள். பிறகு அனுமதி கொடுங்கள், என்றான் திருடன். உடனே திருடன் தூணில் கட்டப்பட்டான். புல்லாங்குழலை அவன் இசைக்கத் தொடங்கினான். இசைக்கு ஏற்ப எல்லோரும் ஆடத் தொடங்கினார்கள். காவலன் கையில் இருந்த தூக்குக் கயிறு நழுவிக் கீழே விழுந்தது. அவன் இசைப்பதின் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றது. எல்லோரும் வேகமாக ஆடினார்கள். தூணில் கட்டப்பட்டு இருந்த திருடனும் கை கால்களை ஆட்டினான். பாடுவதை நிறுத்து. உன்னை விடுதலை செய்கிறேன், என்று ஆடிக் கொண்டே கெஞ்சினார், நீதிபதி. பாடுவதை நிறுத்தினான் அவன். எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.திருடனின் அருகே சென்ற அவன், உண்மையைச் சொல்.. பொற்காசுகளை நான் உன்னிடம் இருந்து திருடினேனா? அல்லது நீயாக எனக்குத் தந்தாயா? மீண்டும் இசைக்கத் தொடங்குவேன், என்றான். கட்டப்பட்டு இருந்ததால் மூச்சுத் திணறிய திருடன், நானாகத்தான் தந்தேன். நான்தான் திருடன். வீணாக இவன் மீது பொய்க் குற்றம் சுமத்தினேன், என்றான்.உண்மையை அறிந்த நீதிபதி அந்தத் திருடனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தார். எல்லோரையும் வணங்கிய அவன் அங்கிருந்து தன் ஊருக்குப் புறப்பட்டான்.
அந்த ஊர் சந்தை மிகவும் பிரபலமானது. அங்கே பெரும்பாலும் கழுதை - குதிரை போன்ற கால்நடைகளின் வியாபாரம் மிகவும் நன்றாக நடக்கும். முல்லா சந்தை கூடும் ஒவ்வொரு சமயத்திலும் ஒரு நல்ல கழுதையைக் கொண்டு வருவார். அதை மிகவும் மலிவான விலைக்கு விற்றுவிட்டு வீடு திரும்புவார். அதே சந்தைக்கு ஒரு பணக்காரன் ஏராளமான கழுதைகளை ஒட்டிக் கொண்டு வருவான். விற்பனை செய்துவிட்டுத் திரும்புவான். ஆனால் முல்லா அளவுக்கு அவ்வளவு மலிவாக கழுதைகளை விற்க முடிவதில்லை. ஒருநாள் சந்தை வேலை முடிந்ததும் முல்லாவும் செல்வந்தரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது செல்வந்தர் முல்லாவை நோக்கி, " முல்லா! என் கழுதைகளை எனது அடிமைகள் கவனித்துக் கொள்கிறார்கள். கழுதைக்குத் தேவையான உணவை என் அடிமைகளே தங்கள் சொந்தப் பொறுப்பில் எப்படியாவது கொண்டு வந்து விடுகிறார்கள். கழுதை வளர்ப்பில் எனக்குக் கொஞ்சங் கூட பணச் செலவில்லை. அப்படியிருந்தும் நான் மலிவான விலைக்கு விற்பதில்லை. நீரோ உமது கழுதைகளை மட்டும் எவ்வாறு குறைந்த விலைக்கு விற்கிறீர்?" என்று கேட்டார். முல்லா புன்னகை செய்தபடியே, " அது ஒன்றும் பெரிய விஷயமல்ல, நீர் உமது கழுதைகளை வளர்ப்பதற்கு உழைப்பையும் அவற்றின் உணவையும் திருடுகிறீர்கள். நானோ கழுதைகளையே திருடி விடுகிறேன். இதுதான் உமக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் " என்றார்.
ஒரு காட்டில் ஓர் ஆலமரம் இருந்தது. அதன் கிளைகளில் ஒரு வாத்துக் கூட்டம் தங்கி இருந்தது. அந்த ஆலமரத்தின் அடியில் புதிதாக ஒரு கொடி முளைத்தது. அந்தக் கொடி இலேசாகப் படரத் தொடங்கியது. அதைக் கண்ட ஒரு கிழட்டு வாத்து மற்ற வாத்துகளைப் பார்த்து, இந்தக் கொடி, மரத்தைப் பற்றிக் கொண்டு சுற்றிப் படருமானால் நமக்கு ஆபத்து ஏற்படும். யாராவது இதைப் பிடித் துக் கொண்டு மரத்தின் மேல் ஏறி வந்து, நம்மைப் பிடித்துக் கொன்றுவிடக் கூடும். இப்பொழுதே நாம் இந்தக் கொடியை வேரோடு பிடுங்கி எறிந்துவிட வேண்டும்” என்று சொன்னது. ஆனால் மற்ற வாத்துக்கள் அந்தக் கிழட்டு வாத்தின் பேச்சை மதிக்கவில்லை. இது என்ன வேலையற்ற வேலை’ என்று அலட்சியமாகப் பேசி விட்டு அதைப் பற்றிக் கவலைப் படாமலேயே இருந்து விட்டன. அந்தக் கொடியோ நாளுக்கு நாள் வளர்ந்து பெரிதாக நீண்டு மரத்தைச் சுற்றிப் படர்ந்தது. “ஒரு நாள் எல்லா வாத்துக்களும் இரை தேடப் போயிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேடன் அந்த வாத்துக்களைப் பிடிக்க நினைத்தான். மரத்தைச் சுற்றிப் படர்ந்திருந்த கொடியைப் பிடித்துக் கொண்டு மிக எளிதாக அதன் மேல் ஏறினான். ஏறிக் கண்ணி வைத்து விட்டு இறங்கிச் சென்று விட்டான். இரை உண்டும், விளையாடியும், திரும்பிய வாத்துக்கள் எதிர்பாராமல் அந்தக் கண்ணியில் சிக்கிக் கொண்டன. கிழட்டு வாத்து மற்ற வாத்துக்களைப் பார்த்து நான் சொன்னதைக் கேட்காததால் இவ்வாறு அகப்பட்டுக் கொள்ள நேர்ந்தது. இனி எல்லோரும் சாக வேண்டியதுதான்’ என்று சொன்னது. மற்ற வாத்துக்க ளெல்லாம் அந்தக் கிழட்டு வாத்தை நோக்கி, ஐயா, பெரியவரே ஆபத்துக்கு நீங்கள் தான் அடைக்கலம். இனி என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். எப்படியும் நம் உயிர் தப்பினால் போதும் என்று கூறின. அறிவும் நல்லெண்ணமும் கொண்ட அந்தக் கிழட்டு வாத்துக்குத் தன் இனத்தினர் அழிந்து போகக் கூடாது என்று தோன்றியது. அத்தோடு மற்ற வாத்துக்களைப் பார்க்க இரக்கமாகவும் இருந் தது. சரி, நான் சொல்வதைக் கேளுங்கள், வேடன் வரும்போது எல்லாரும் செத்த பிணம் மாதிரிச் சாய்ந்து விடுங்கள். செத்த வாத்துக்கள்தானே என்று அவன் எச்சரிக்கையற்று இருக்கும் போது தப்பி விடலாம் என்று வழி கூறியது. விடிகாலையில் வேடன் வந்தான். வேடன் தலையைச் சிறிது தொலைவில் கண்டதுமே எல்லா வாத்துக்களும் செத்ததுபோல் சாய்ந்து விட்டன. மரத்தின் மேல் ஏறிப்பார்த்த வேடன் உண்மையில் அவை இறந்து போய்விட்டன என்றே எண்ணி னான். உயிருள்ள வாத்துக்களாயிருந்தால் அவன் அவை ஒவ்வொன்றின் கால்களையும் கயிற்றால் கட்டிப் போட்டிருப்பான். ஆனால், அவை செத்த வாத்துக்கள் தானே என்று கால்களைக் கட்டாமலே, கண்ணியிலிருந்து எடுத்துத் தரையில் போட்டான். ஒவ்வொன்றாக மரத்தின் மேலேயிருந்து தரையில் வீழ்ந்ததும் அவை வலியைப் பொறுத்துக் கொண்டு செத்த மாதிரியே கிடந்தன. எல்லா வாத் துக்களையும் அவன் கண்ணியிலிருந்து எடுத்துக் கீழே போட்டு முடித்தவுடன், கீழே இறங்கினான். அவன் பாதி வழி இறங்கும்போது, கிழட்டு வாத்து குறிப்புக் காட்டியது. உடனே எல்லா வாத்துக்களும் படபட வென்று அடித்துக் கொண்டு பறந்து மரத்தின் மேல் ஏறிக் கொண்டன. வேடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றான். அனுபவமும், நல்லறிவும், நல்லெண்ணமும் உள்ள பெரியோர் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் எப்போதும் நன்மையுண்டு.
முல்லாவுக்கு சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று திடீரென ஆசை வந்து விட்டது. சங்கீதம் கற்றுக் கொடுக்கும் ஒரு பாட்டு வாத்தியாரிடம் சென்றார். " ஐயா எனக்குச் சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையாக இருக்கிறது. எனக்குச் சங்கீதம் கற்றக் கொடுப்பீர்களா?" என முல்லா அவரிடம் கேட்டார். " சங்கீதம் கற்றுக் கொடுப்பது தானே என் தொழில் நிச்சயம் தங்களுக்குக் சங்கீதம் கற்றுக் கொடுக்கிறேன் " என்றார் பாட்டு வாத்தியார். " நான் என்ன கட்டணம் தரவேண்டும்?" என்று முல்லா கேட்டார். " முதல் மாதம் 100 பொற்காசுகள் தரவேண்டும் அடுத்த மாதம் அறுபது பொற்காசு கொடுத்தால் போதும், மூன்றாவது மாதம் ஐம்பது பொற்காசுகள் கொடுங்கள். இவ்வாறு கட்டணம் குறைந்து கொண்டே போகும் " என்றார் பாட்டு வாத்தியார். " சரி வருகிறேன் " என்று கூறிவிட்டுப் புறப்பட்டார் முல்லா. " ஏன் புறப்பட்டு விட்டீர்கள்? சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லையா?" என பாட்டு வாத்தியார் கேட்டார். " ஒரு பத்து மாதம் கழித்து வரலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் மாதா குறையும் உமது கட்டண முறையில் பத்த மாதம் கழித்து நீர் இலவசமாகவே எனக்குக் கல்வி கற்றுத் தரவேண்டியிருக்கும். அதனால் பத்து மாதம் கழித்தே வருகிறேன் " என்று கூறிவிட்டு முல்லா நடந்தார்.
ஒருநாள் அக்பர் தனது அரசவையில் கூடியிருந்தவர்களிடம், “எனது அரசாட்சியில் மக்கள் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார் உடனே சபையிலிருந்த அனைவரும் “ஆம் அரசே… உங்கள் பொன்னான ஆட்சியில் அனைவரும் நேர்மையைக் கடைபிடிக்கின்றனர். இதை யாரும் மறுக்கவே முடியாது.” என்றனர். ஆனால் பீர்பால் மட்டும் அமைதியாக இருப்பதைக் கண்ட அக்பர், “ஏன் மவுனமாக இருக்கிறாய் பீர்பால்…மக்கள் நேர்மையாக இருப்பதைப் பற்றி உன் கருத்து என்ன?” என்று கேட்டார். உடனே பீர்பால், “இதற்கு நான் பதிலளிக்க வேண்டுமென்றால், நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும் அரசே…மக்கள் அனைவருக்கும் நீங்கள் விருந்து வைக்க வேண்டும். விருந்துக்கு வரும்போது ஒரு குடத்தில் பால் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்,” என அக்பரிடம் வேண்டுகோள் வைத்தார். பீர்பால் கேட்பதில் ஓர் உள்ளர்த்தம் இருப்பதை உணர்ந்து கொண்ட அக்பர், உடனே விருந்து பற்றி பொதுமக்களிடம் தெரிவிக்கும்படி உத்தரவிட்டார். தண்டோரா போட்டபடியே அனைத்து வீதிகளுக்கும் சென்ற அரசவை அறிவிப்பாளர், “நமது பேரரசர் அனைவருக்கும் விருந்து வைக்கிறார். விருந்துக்கு வருவோர் கண்டிப்பாக ஒரு குடத்தில் பால் கொண்டு வர வேண்டும். இது அரசு உத்தரவு, ” என்று உரத்த குரலில் அறிவித்தார். இதைக் கேட்டு குழப்பமுற்ற மக்களில் பலர், “அரசர் விருந்தளிப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குய விஷயம் தான். ஆனால் குடத்தில் எதற்காக பால் கொண்டு செல்ல வேண்டும், ” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். அங்கிருந்த பெண்கள், “சரி ஒரு குடம் பால் தானே…கொண்டு போய் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று குழப்பத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர். அரசர் அறிவித்த விருந்து நடைபெறும் நாள் வந்தது. அக்பர், பீர்பால் உள்பட அரசவையில் முக்கியப் பதவிகளில் இருப்போர் அனைவரும் கூடியிருந்தனர். பீர்பால் ஏற்பாட்டின் படி, திடலின் பிரதான வாசலில் மிகப் பெரிய பாத்திரம் மூடி போட்டு வைக்கப்பட்டிருந்தது. மூடியில் பெரிய ஓட்டை போடப்பட்டிருந்தது. பொதுமக்கள் அனைவரும் உத்தரவின் படி தாங்கள் கொண்டுவந்த பாலை, மூடியிலிருந்த ஓட்டை வழியாக பாத்திரத்தில் கொட்டி விட்டு வெறும் குடத்துடன் திடலுக்குள் நுழைந்தனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அக்பர், “நீ சொன்னபடி செய்தாகிவிட்டது பீர்பால். இவ்வளவு பாலையும் என்ன செய்யப் போகிறோம்?” என்று கேட்டார். உடனே பீர்பால் காவலர்களைப் பார்த்து, “பாத்திரத்தை மன்னருக்கு அருகில் கொண்டு வாருங்கள்” என உத்தரவிட்டார். பாத்திரம் அருகில் கொண்டுவரப்பட்டதும், அதன் மூடியை அகற்றச் சொன்னார் பீர்பால். மூடி அகற்றப்பட்டதும் பாத்திரத்தைப் பார்த்த மன்னர், அதில் வெறும் தண்ணீர் மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். “பீர்பால்…என்ன இது, பால் இருக்க வேண்டிய பாத்திரத்தில் வெறும் தண்ணீர் உள்ளதே?” என அதிர்ச்சி மாறாமல் கேட்டார். ஆனால் இதை முன்பே எதிர்பார்த்தது போல நிதானமாக பேசிய பீர்பால், “மக்களின் நேர்மை பற்றி என்னிடம் நீங்கள் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில் அரசே! மற்றவர்கள் பால் கொண்டு வரட்டும், நாம் தண்ணீர் கொண்டு போய் பாத்திரத்தில் கொட்டினால் யார் கண்டுபிடிக்க முடியும் என்று ஒவ்வொருவரும் நினைத்துள்ளனர். எனவே தான் பாத்திரம் முழுதும் தண்ணீர் உள்ளது. கூட இருப்பவர்களின் பேச்சைக் கேட்டு எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது அரசே..” என்று சிரித்தபடியே கூறினார். பீர்பாலின் அறிவுக்கூர்மையை மெச்சிய அக்பர், அவரை ஆரத் தழுவிக்கொண்டார்.
ஒரு ஏரியில் நிறைய மீன்களும் பாம்புகளும் வாழ்ந்து வந்தன. முதலில் நட்பு பாரட்டி இந்த இரண்டு இனங்களும் வாழ்ந்து வந்தன. பருவமழை பொய்த்து ஏரி வற்ற ஆரம்பித்ததும் இடத்துக்குச் சண்டை போட்டு ஏரியைப் பிரித்துக் கொண்டு வாழ்ந்தன. ஒரு இனம் வாழும் இடத்திற்கு மற்றொரு இனம் போகக் கூடாது. மீறினால் எதிரியின் கையில் சரியான உதை கிடைக்கும் இதில் ஒரு விலாங்கு (eel) மட்டும் தந்திரமாக வேஷம் போட்டு ஏரி முழுவதும் சுற்றி வந்து கொண்டிருந்தது. பாம்புகள் இடத்திற்குப் போகும் போது விலாங்கு தன் நீண்ட உடலையும் பாம்பு போன்ற தலையையும் வைத்து தான் ஒரு பாம்பு என்று காட்டிக் கொள்ளும். மீன்களின் இடத்திற்குப் போகும் போது உடலைச் சுருட்டி மீன் போன்ற துடுப்புகளையும் வாலையும் காட்டி தான் ஒரு மீன் என்று காட்டிக் கொள்ளும். இப்படி ஏமாற்றியே பொழுதை ஓட்டிக் கொண்டு இரண்டு இடங்களிலும் உணவு பெற்று ஏரி முழுவதும் சுற்றித் திரிந்து வந்தது விலாங்கு. வெயில் காலம் அதிகமானது. ஏரி மேலும் வற்றியது. பாம்புக் கூட்டமும் மீன் கூட்டமும் தங்கள் இடங்களை நெருக்கியும் குறுக்கியும் அமைத்துக் கொண்டே வந்தன. ஒரு நாள் இரண்டு கூட்டங்களும் ஒன்றன் இருப்பிடத்தை இன்னொன்று பார்த்துக் கொள்ளும் தூரத்தில் அமைக்கும் நிலை வந்தது. அப்போது மீனாக விலாங்கு வேஷம் போட்டால் பாம்புகள் பார்த்து தாக்கின. பாம்பாக வேஷம் போட்டால் மீன்கள் கடித்துக் குதறின. "நான் பாம்பும் அல்ல மீனும் அல்ல" விலாங்கு கதறீயது. நம்புவாரில்லை. விலாங்கு "முதலிலேயே உண்மையைச் சொல்லியிருக்கலாமோ" என்று நினைத்துக் கொண்டு செத்தே போனது.
காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்­ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி "ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே" என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது. நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. "பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!" எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன. "ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்" என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக "நொண்டி ராஜா" என அழைத்தன.இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், "நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்", என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.இதைக்கண்டு வருந்திய அவர்கள், "இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. "எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது" என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது."நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். "நடப்பது எல்லாம் நன்மைக்கே" என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது" என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, "சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்" என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, "அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை
ஏழை விறகுவெட்டி ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஏழு மகன்கள் இருந்தனர். அவன் எவ்வளவோ கடுமையாக உழைத்தும் அவர்கள் பல நாட்கள் பட்டினி கிடந்தார்கள். ஒரு நாள் இரவு அவனுடைய மகன்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். மனைவி அவனிடம், "நாம் எவ்வளவு காலம் துன்பப்படுவது? வயிறார உண்டு எத்தனை நாட்கள் ஆகிறது? நம் மகன்களைக் காட்டில் விட்டுவிட்டு வந்து விடுங்கள். இருப்பதைக் கொண்டு நாம் மகிழ்ச்சியாக வாழலாம்" என்றாள். 'நீ சொன்னபடியே செய்கிறேன். நாளை அவர்களுக்கு உணவு சமைத்து வை' என்றான் அவன். கடைசி மகனான குள்ளன் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். விடிகாலையில் எல்லோருக்கும் முன் எழுந்தான் அவன். ஆற்றங்கரைக்குச் சென்று அங்கிருந்த சிறுசிறு கூழாங்கற்களை எடுத்தான். சட்டைப் பை நிறைய அவற்றைப் போட்டுக் கொண்டான். வீடு திரும்பினான் அவன். தாயும் தந்தையும் அண்ணன்களும் அவனுக்காகக் காத்திருந்தனர். " ஏன் இவ்வளவு நேரம்? அம்மாவிடம் உன் பங்கு அடையை வாங்கிக் கொள். காட்டில் சாப்பிடலாம். இன்று நாம் எல்லோரும் விறகு வெட்டச் செல்கிறோம்" என்றான் விறகுவெட்டி. எல்லோரும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்கள். கடைசியாகச் சொன்றான் குள்ளன். தன் பையிலிருந்த கூழாங்கல்லை வழி எங்கும் போட்டுக் கொண்டே வந்தான். நீண்ட தூரம் நடந்து காட்டின் நடுப்பகுதிக்கு வந்தார்கள். 'இனி என்ன முயன்றாலும் தன் மகன்களால் வீட்டை அடைய முடியாது. அவர்களை ஏமாற்றி விட்டுப் புறப்பட வேண்டும்' என்று நினைத்தான் அவன். " நீங்கள் விளையாடிக் கொண்டிருங்கள். நான் சிறிது தூரம் சென்று நல்ல மரமாகப் பார்த்து வெட்டுகிறேன். இருட்டியதும் வீட்டிற்குப் புறப்படலாம்" என்றான் அவன். அவர்களும் மகிழ்ச்சியாக விளையாடத் தொடங்கினார்கள். அருகில் இருந்த மரத்தில் ஒரு கட்டையைத் தொங்க விட்டான் அவன். காற்று அடிக்கும் போதெல்லாம் மரத்தில் அது மோதியது. விறகு வெட்டுவது போல ஓசை கேட்டது. மகன்களுக்கத் தெரியாமல் வீடு வந்து சேர்ந்தான் அவன். அவர்கள் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இருட்டத் தொடங்கியது. " தந்தையை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்வோம்" என்றான் மூத்தவன். எல்லோரும் விறகு வெட்டும் ஓசை கேட்ட இடத்திற்கு வந்தனர். " ஐயோ! அப்பாவைக் காணோமே! இந்தக் காட்டிலிருந்து எப்படி வீட்டுக்குச் செல்வது? கொடிய விலங்குகள் நம்மைக் கொன்று விடுமே! என்ன செய்வது?" என்று அலறினான் இரண்டாமவன். " கவலைப்படாதீர்கள். இன்னும் சிறிது நேரத்தில் நிலவு வெளிச்சம் தெரியும். அதன் பிறகு நான் வழி காட்டுகிறேன். நாம் அனைவரும் வீட்டை அடையலாம்" என்று ஆறுதல் சொன்னான் குள்ளன். நிலவு வெளிச்சம் பட்டப் பகல் போலக் காய்ந்தது. வழி எங்கும் போட்டு வந்த கூழாங்கல்லை அடையாளமாகக் கொண்டு நடந்தான் குள்ளன். எல்லோரும் பின்தொடர்ந்தார்கள். வீட்டில் தன் மனைவியிடம், நம் குழந்தைகள் காட்டில் எப்படித் தவிப்பார்களோ?" என்றான் அவன். " எனக்கு மட்டும் வருத்தம் இல்லையா? நம் கண் எதிரில் ஏன் அவர்கள் துன்பப்பட வேண்டும்? அதனால் தான் அவர்களைக் காட்டில் விட்டுவிட்டு வரச் சொன்னேன். அவர்கள் எங்காவது நலமாக இருக்கட்டும் நான் உணவு சமைக்கிறேன். இருவரும் சாப்பிடலாம்" என்றாள் அவள். நள்ளிரவு நேரம், இருவரும் சாப்பிட அமர்ந்தனர். கதவு தட்டும் ஓசை கேட்டது. " இந்த நேரத்தில் யார்? கதவைத் திற" என்றான் அவன். கதவைத் திறந்தாள் அவள். தன் மகன்களைக் கண்ட அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சமைத்து வைத்திருந்த உணவை அவர்களுக்குப் பரிமாறினாள். சாப்பாடு முடிந்தது. நடந்து வந்த களைப்பால் அவர்கள் தூங்கத் தொடங்கினார்கள். விறகுவெட்டிக்கும் அவன் மனைவிக்கும் சாப்பிட உணவில்லை. " நம் மகன்கள் வந்து விட்டார்களே. இப்பொழுது என்ன செய்வது?" என்று கேட்டான் அவன். " நிலவு வெளிச்சத்தில் வழி கண்டுபிடித்து வந்து விட்டார்கள். அமாவாசையன்று மீண்டும் அவர்களை அழைத்துச் செல்லுங்கள். இன்னும் அதிக தூரம் சென்று விட்டுவிட்டு வாருங்கள். அவர்களால் திரும்ப முடியாது" என்றாள் அவள். அமாவாசை வந்தது. விடிகாலையில் தன் மகன்களை எழுப்பினாள் அவள். " காட்டிற்கு விறகு வெட்டச் செல்லும் அப்பாவுடன் நீங்களும் செல்லுங்கள். மதிய உணவிற்காக ஆளுக்கு இரண்டு அடை சுட்டு வைத்து இருக்கிறேன்" என்றாள் அவள். குள்ளனுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது புரிந்தது. கூழாங்கல்லைப் பொறுக்கி வர நேரமில்லை. என்ன செய்வது' என்று குழம்பினான் அவன். "நேரமாகி விட்டது. புறப்படுங்கள்" என்று அவசரப் படுத்தினான் விறகுவெட்டி. அவர்களுடன் கடைசியாகச் சென்றான் குள்ளன். தன் கையிலிருந்த அடையைச் சிறுசிறு துண்டுகள் ஆக்கினான். வழி எங்கும் அதைப் போட்டுக் கொண்டே வந்தான். அவன் போட்டு வந்த அடைகளைக் குருவிகளும் எறும்புகளும் சாப்பிட்டு விட்டன. விறகுவெட்டி அவர்களை வழக்கம் போல விளையாடச் சொன்னான். கட்டையைத் தொங்க விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தான். இருட்டத் தொடங்கியது. எல்லோரும் தந்தையைக் காணாது திகைத்தனர். " நான் வழி காட்டுகிறேன். கவலைப்படாதீர்கள்" என்றான் குள்ளன். வழி தெரியாமல் அவன் அங்கும் இங்கும் அலைந்தான். பக்கத்தில் இருந்த பெரிய மரத்தின் மேல் ஏறினான். தொலைவில் விளக்கு வெளிச்சம் தெரிவதைப் பார்த்தான். கீழே இறங்கிய அவன், " அண்ணன்களே! சிறிது தொலைவில் வெளிச்சம் தெரிகிறது. கண்டிப்பாக அங்கே வீடு இருக்க வேண்டும். நாம் அங்கே சென்று இன்றிரவு தங்குவோம்" என்றான். எல்லோரும் வெளிச்சம் வந்த இடத்தை நோக்கி நடந்தார்கள். அவர்கள் கண்களுக்குப் பெரிய வீடு தெரிந்தது. அது ஒரு அரக்கனின் வீடு. அரக்கனும் அவனுடைய ஏழு மகன்களும் வெளியே சென்றிருந்தார்கள். அரக்கனின் தாய் மட்டும் அப்பொழுது வீட்டில் இருந்தாள். குள்ளன் கதவைத் தட்டினான். அரக்கி கதவைத் திறந்தாள். ஏழு சிறுவர்களைப் பார்த்ததும் அவள் நாக்கில் எச்சில் ஊறியது. " பாட்டி ! இந்தக் காட்டில் நாங்கள் வழி தவறி விட்டோம்" இன்றிரவு மட்டும் இங்கே தங்கிச் செல்கிறோம்" என்றான் குள்ளன். " இங்கே நீங்கள் மகிழ்ச்சியாகக் தங்கலாம், இன்னும் சிறிது நேரத்தில் என் மகனும் ஏழு பேரனும் வந்து விடுவார்கள். உங்களைப் பார்த்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நீங்கள் களைப்பாக இருக்கிறீர்கள். அந்த அறை என் பேரன்கள் தூங்கும் அறை. அங்கே சென்று நிம்மதியாகத் தூங்குங்கள்" என்று இனிமையாகப் பேசினாள் கிழவி. அவர்களும் அந்த அறையில் சென்று படுத்தார்கள். சிறிது நேரத்தில் அரக்கனும் ஏழு மகன்களும் அங்கே வந்தனர், ஏழு பேரன்களின் தலையிலும் கிரீடத்தை அணிவித்தாள் அவள். " நீங்கள் சென்று அவர்கள் பக்கத்தில் படுத்துத் தூங்குங்கள்" என்றாள். அவர்களும் சென்று சிறுவர் பக்கத்தில் படுத்தனர். தன் மகனைப் பார்த்துக் கிழவி, " இன்று நமக்கு நல்ல வேட்டை ஏழு சிறுவர்கள் வழி தவறி இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றி நம் பேரன்கள் தங்கும் அறையில் தூங்க வைத்திருக்கிறேன். பெரிய அண்டாவில் கறிக் குழம்பு வைக்கிறேன். குழம்பு கொதி வந்ததும் நீ அந்த ஏழு பேரையும் தூக்கி வந்து அதில் போடு. அவர்கள் நன்றாக வெந்ததும் நாம் வயிறார உண்போம். மீதி உள்ளதைப் பொழுது விடிந்ததும் பேரன்கள் சாப்பிடட்டும்" என்றாள். " அம்மா! எனக்குப் பசி உயிர் போகிறது. சீக்கிரம் அண்டாவை அடுப்பில் வை. அந்த அறையில் என் மகன்களும் படுத்திருக்கிறார்களே? இருட்டில் எப்படி அந்தச் சிறுவர்களை மட்டும் தூக்கி வருவது? விழித்துக் கொண்டால் தப்பி விடுவார்களே?" என்று கேட்டான் அரக்கன். " நீ எளிதாக அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் அதற்காகத்தான் என் பேரன்களின் தலையில் மட்டும் கிரீடம் அணிந்து உள்ளேன்" என்றாள் அவள். குள்ளனுக்குத் திடீரென்று விழிப்பு வந்தது. கிழவியின் ஏழு பேரன்களும் தலையில் கிரீடத்துடன் படுத்திருப்பது அவனுக்குத் தெரிந்தது. 'ஏன் இவர்கள் கிரீடத்துடன் தூங்க வேண்டும். ஏதோ சூழ்ச்சி நடக்கிறது' என்பதைப் புரிந்து கொண்டான் அவன். அவர்கள் தலையிலிருந்த கிரீடத்தை எடுத்தான், தன் அண்ணன்களின் தலையில் அவற்றை அணிவித்தான். தன் தலையிலும் கிரீடத்தை அணிந்து கொண்டான். என்ன நடக்கிறது என்பதை விழித்திருந்து பார்த்தான். சிறிது நேரத்தில் அரக்கன் உள்ளே நுழைந்தான். கிரீடம் அணிந்திராத சிறுவர்களை ஒவ்வொருவராகத் தூக்கிச் சென்றான். கொதிக்கும் குழம்பில் அவர்களைப் போட்டான். நடந்ததைப் பார்த்த குள்ளன் திகைத்தான். தன் அண்ணன்களை மெதுவாக எழுப்பிய அவன், " அரக்கனின் வீட்டில் சிக்கிக் கொண்டோம். உடனே தப்பிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நம்மைக் கொன்று விடுவார்கள்" என்றான். இதைக் கேட்டு எல்லோரும் பயந்தனர். அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சமைத்த கறியை அரக்கனும் கிழவியும் சுவைத்துச் சாப்பிட்டார்கள். பிறகு இருவரும் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினார்கள். பொழுது விடிந்தது. அரக்கனை எழுப்பினாள் கிழவி. " என் பேரன்களை அழைத்துவா. அவர்களும் மகிழ்ச்சியாகச் சாப்பிடட்டும்" என்றாள். அறைக்குள் நுழைந்த அவன், " அம்மா! இங்கு யாருமே இல்லையே" என்று அலறினான். அங்கு வந்த அவளுக்கு உண்மை புரிந்தது. " ஐயோ அந்தச் சிறுவர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள். நம் குழந்தைகளைக் கொன்று நாமே தின்று இருக்கிறோம்" என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள். " கொதிக்கும் குழும்பில் என் குழந்தைகளையா போட்டேன்? அவர்களையா சாப்பிட்டேன்? என்ன கொடுமை இது? இனி நான் என்ன செய்வேன்?" என்று சுவரில் மோதிக் கொண்டு அழுதான் அவன். இருவரும் நீண்ட நேரம் அழுதார்கள். ஒருவாறு மனம் தேறிய அரக்கன், " என் குழந்தைகளைக் கொன்றவர்கள் அந்தச் சிறுவர்கள் தான். என்னிடம் இருந்து அவர்கள் தப்ப முடியாது. எங்கு இருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பேன். கொன்று தின்று பழி தீர்ப்பேன்" என்று கோபத்தில் பற்களை நறநறவென்று கடித்தான். " என் மந்திரச் செருப்பைக் கொண்டு வா" என்று கத்தினான் அவன். கிழவியும் செருப்பைக் கொண்டு வந்தாள். அதைப் போட்டுக் கொண்டு புறப்பட்டான் அவன். " அரக்கன் தேடி வருவான். நம்மைப் பிடித்தால் கொன்று விடுவான். வேகமாக ஓடுவோம்" என்றான் குள்ளன். எல்லோரும் நீண்ட தூரம் வந்தனர். " என்னால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை" என்றான் மூத்தவன். " அரக்கன் இனி நம்மைத் துரத்த முடியாது. எதற்கும் பாதுகாப்பாக இங்கிருக்கும் குகைக்குள் பதுங்கிக் கொள்வோம். யாராலும் கண்டுபிடிக்க முடியாது" என்றான் குள்ளன். எல்லோரும் பதுங்கிக் கொண்டனர். அரக்கனின் காலடி ஓசை அவர்களுக்கு கேட்டது. எல்லோரும் நடுங்கினார்கள். அங்கு வந்த அரக்கன் எல்லாத் திசைகளிலும் பார்த்தான். அவர்கள் பதுங்கி இருப்பது அவன் கண்களுக்குத் தெரியவில்லை. " ஏ! மந்திரச் செருப்பே! இங்குதான் அவர்கள் இருப்பார்கள் என்று என்னை அழைத்து வந்தாயே! இங்கு அவர்களைக் காணோமே? நீயும் என்னை ஏமாற்றுகிறாயா?" என்று சொல்லிவிட்டு அங்கேயே படுத்தான். களைப்படைந்த அவன் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினான். இதைப் பார்த்த குள்ளன், " அரக்கன் தூங்குகிறான். அவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க மாட்டான். நீங்கள் சத்தம் போடாமல் இங்கேயே இருங்கள். மநதிரச் செருப்பை அணிந்து நான் அரக்கன் வீட்டிற்குச் செல்கிறேன். அங்கிருந்து ஏராளமான பொருள் கொண்டு வருகிறேன். பிறகு நாம் அனைவரும் நம் வீட்டிற்குச் செல்வோம்" என்றான். எல்லோரும், " எங்களைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு நீ என்ன நினைக்கிறாயோ அப்படியே செய்" என்றார்கள். வெளியே வந்தான் குள்ளன். அரக்கனின் காலில் இருந்த செருப்பைக் கழற்றினான். அவற்றைத் தன் காலில் அணிந்து கொண்டான். "ஏ! மந்திரச் செருப்பே! நான் அரக்கனின் வீட்டை அடைய வேண்டும்" என்று சொல்லிவிட்டு நடந்தான். மந்திரச் செருப்பு அவனை அரக்கனின் வீட்டின் முன் நிறுத்தியது. " பாட்டி! கதவைத் திற. உன் மகனுக்கு ஆபத்து" என்று கத்தினான் அவன். கதவைத் திறந்த கிழவி, " என் மகனுக்கு என்ன?" என்று கேட்டாள். " உன் மகன் கொடிய திருடர்களிடம் சிக்கிக் கொண்டான். அவர்கள் அவனைக் கட்டி வைத்துத் துன்புறுத்துகிறார்கள் நிறைய பொருள் கொடுத்தால் உன் மகன் உயிர் பிழைப்பான். இல்லையேல் அவர்கள் அவனைக் கொன்று விடுவார்கள். மந்திரச் செருப்பை அடையாளத்திற்கு என்னிடம் தந்தான். " இதைக் காட்டினால் என் தாய் நிறைய பொருள் தருவார். வாங்கிக் கொண்டு ஓடி வா. அப்பொழுது தான் நான் உயிர் பிழைப்பேன்" என்று என்னை அனுப்பினார்" என்று பரபரப்புடன் சொன்னான் அவன். " ஐயோ! மகனே! உனக்கு ஆபத்தா? உன்னைவிட எனக்குப் பொருளா பெரிது?" என்று அலறினாள் அவள். பெரிய சாக்குப் பையில் பொற்காசுகளை நிரப்பி அவனிடம் தந்தாள். அந்தப் பையை வாங்கிய அவன், " இனி கவலைப்பட வேண்டாம். உங்கள் மகன் கண்டிப்பாக வந்து சேருவார்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான். மந்திரச் செருப்பின் உதவியால் அண்ணன்கள் இருந்த இடத்தை அடைந்தான் அவன். அரக்கன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தான். " இனி இந்த அரசனால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. மந்திரச் செருப்பை இழந்து விட்டான். அவன் தேடி வைத்த செல்வத்தையும் கொண்டு வந்து விட்டேன். எல்லோரும் என்னை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்றான் குள்ளன். அண்ணன்கள் எல்லோரும் குள்ளனை நன்றாகப் பிடித்துக் கொண்டார்கள். " மந்திரச் செருப்பே! நாங்கள் எங்கள் வீட்டை அடைய வேண்டும்" என்றான் அவன். சிறிது நேரத்தில் எல்லோரும் வீட்டை அடைந்தார்கள். அவர்கள் தந்தையும் தாயும், " மகன்களே! காட்டில் என்ன பாடுபடுகிறீர்களோ? வறுமையினால் தான் இந்தக் கொடுமையைச் செய்து விட்டோம்" என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள். கதவு தட்டும் ஓசை கேட்டு அவர்கள் கதவைத் திறந்தார்கள். ஏழு மகன்களும் நிற்பதைக் கண்டு அவர்களைக் கட்டித் தழுவிக் கொண்டார்கள். " அம்மா! இனி நமக்கு வறுமையே இல்லை. பல தலைமுறைக்குத் தேவையான பொற் காசுகளுடன் வந்து இருக்கிறோம்" என்றான் குள்ளன். சாக்கைப் பிரித்தான் விறகுவெட்டி. அதற்குள் ஏராளமான பொற்காசுகள் மின்னின. எதிர்பாராமல் கிடைத்த இந்த நல்வாழ்வை எண்ணி எல்லோரும் மகிழ்ந்தார்கள். தூக்கம் கலைந்து எழுந்தான் அரக்கன். தன் காலில் மந்திரச் செருப்பு இல்லாததைக் கண்டு திடுக்கிட்டான். எப்படியோ துன்பப்பட்டு தன் வீட்டை அடைந்தான் அவன். வாசலிலேயே காத்திருந்த அவன் தாய், " மகனே! உன்னை விட்டு விட்டார்களா? நாம் சேர்த்து வைத்த பொற்காசுகளை அப்படியே கொடுத்து அனுப்பினேன்" என்றாள். " என்னம்மா சொல்கிறாய்? நாம் சேர்த்து வைத்த பொற்காசுகள் போய்விட்டனவா? என்ன நடந்தது?" என்று அதிர்ச்சியுடன் கேட்டான் அவன். நடந்ததை எல்லாம் சொன்னாள் அவள். " அம்மா! அந்தச் சிறுவர்கள் நம்மை நன்றாக ஏமாற்றி விட்டார்கள். நாமே நம் அருமைக் குழந்தைகளைக் கொன்று விட்டோம். என் மந்திரச் செருப்பை இழந்து விட்டேன். சேர்த்து வைத்த பொற்காசுகளும் போய்விட்டன. என்ன செய்வது?" என்று அழுதுகொண்டே கேட்டான் அவன். "மகனே! ஒரே ஒருநாள் அவர்கள் இங்கே இருந்தார்கள். நமக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டு விட்டது? இனி அவர்கள் வழிக்கே போகாமல் இருப்பது நமக்கு நல்லது" என்று அறிவுரை சொன்னாள் அவள். " நீ சொன்னபடியே நடக்கிறேன்" என்றான் அவன். பிறகென்ன, விறகுவெட்டி தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.
''அப்பா...'' பெரிதாகக் கத்திக் கொண்டே ரவி வீட்டுக்கு வந்த போது வீடு நிசப்தமாக இருந்தது. வழக்கம் போல் அப்பா வாசலுக்கு வந்து வரவேற்கவில்லை. ரவிக்கு ஏமாற்றமாக இருந்தது. தெருத் திண்ணையில் ஏறி, வலப்பக்க அறைச்சன்னல் மேல் கால் வைத்து லேசாய்த் தள்ளியதில் அது திறந்தது. உள்ளே கைவிட்டு முக்கோண மாடத்திற்கு எம்பிய போது கால் நழுவியது. ''அப்பா...'' மீண்டும் கத்தியவாறு ஜன்னல் கம்பியைக் கெட்டியாகப் பிடித்தான்... விழாமல் தப்பித்தான். அதற்குள் உள்ளே சப்தம் கேட்டது. ''ரவி...கண்ணு... இதோ வந்துட்டேன்...'' என்று அப்பாவின் குரல்தான்... ரவிக்கு நிம்மதியாக இருந்தது. கதவு திறந்தவுடன் தோளில் இருந்த புத்தகப் பையை அப்படியே திண்ணையில் எறிந்து விட்டு உள்ளே ஓடினான். அப்பாவின் மடியில் தாவி ஏறினான். சக்கர நாற்காலியில் இருந்த கண்ணப்பன் சமாளிக்கத் தடுமாறினார். ''பார்த்து பார்த்து... மெல்ல ரவி... அப்பாவுக்கு வலிக்குமில்லை?'' நாற்காலி உருண்டு பின்னோக்கி நகர்ந்தது. முற்றத்துத் தூண் மேல் இடித்து நின்றது. ''ரவி... பை எங்க?'' கேட்ட குரலுக்கு ரவி வாசலைக் கை காட்டினான். ''அப்பா... இன்னிக்கு எங்க ஸ்கூல் பின்னால இருக்கற வேப்ப மரத்தில ஏறினோம்... செந்தில் கீழ விழுந்துட்டான், மருந்தெல்லாம் போட்டாங்க'' என்று கைகளை விரித்துச் சொன்ன போது கண்ணப்பனுக்குக் கவலையாக இருந்தது. முரட்டுப் பிள்ளையாக இருக்கிறானே! ''ரவி... பாரு... புஸ்தகப் பையை இப்படி எல்லாம் வெளியிலேயே போட்டுட்டு வரக் கூடாதுன்னு சொல்லியிருக்கேனில்லை... அம்மா பார்த்தா அவ்வளவுதான்... தொலைஞ்சோம்... போ... முதல்ல எடுத்துட்டு வந்து ஆணியில மாட்டி வைச்சிட்டு கைகால் கழுவிட்டு வா... ரெண்டு பேரும் காப்பி குடிக்கலாம்... சரியா?'' என்று சொல்ல, ரவி கொஞ்ச நேரம் யோசித்தான். ''அப்பா... சீக்கிரம் குடிச்சிட்டு இன்னிக்கும் கிரிக்கெட் விளையாடலாமாப்பா? அம்மா வர்றதுக்குள்ள?'' குரல் கெஞ்சியது. கண்ணப்பன் மனம் நெகிழ்ந்தது... ''விளையாடலாண்டா கண்ணா... ஆனா நான் சொன்னபடி கேட்கணும்... நல்ல பிள்ளையா இருந்தாதான் எல்லாம், என்ன?'' ''சரிப்பா'' என்றபடி மடியிலிருந்து இறங்கி திண்ணைக்கு ஓடினான். விலுக்கென்று உதைத்து அவன் இறங்கியதில் கண்ணப்பனின் கட்டுப்போட்ட காலில் சுரீரென்று வலி... பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டார். வெயில் தாழத் தொடங்கியிருந்தது. நாலரை மணிக்கு வெயில் பளிச்சென்றிருந்தாலும் இன்னும் அரை நேரத்தில் சட்டென்று விழுந்து விடும். காலையிலிருந்து வீட்டில் கவிழ்ந்திருந்த நிசப்தம் இப்போது விடைபெற்றுக் கொண்டாலும் உள்ளறைச் சுவர்களில் இன்னும் அந்த மௌனம் பயமுறுத்திக் கொண்டிருந்தது. மல்லிகா பஸ் மாற்றி வீடு வந்து சேர இன்னும் குறைந்தது ஒரு மணி நேரமாகும். ஆறு மணியல்லாமல் வீடு வர அவளால் முடிவதில்லை. இதில் ஓவர்டைம் என்றால் இன்னும் நேரமாகும்... பஸ் நிறுத்தத்தில் வெளிச்சம் இருந்தாலும் நடந்து வருகிற பாதை இருட்டுதான். நேரமாகி வருகிற மனைவியைப் போய் அழைத்து வர இயலாத நிலை எத்தனைக் கொடுமை! அமுதா பள்ளி முடிந்ததும் தட்டச்சு வகுப்பிற்குப் போய்விடுவாள். பஸ் நிலையத்துக்கு அருகில்தான்... சில சமயம் அம்மாவும் மகளும் சேர்ந்து வருவார்கள். அவர்கள் வரும் வரை ரவியை சமாளிக்க வேண்டும். ரொம்ப முரடனாக இருக்கிறான். நீண்ட நாள் கழித்துப் பிறக்கிற குழந்தைகள் இப்படித்தான் துறு துறுவென்று இருக்கும் போல... மல்லிகா வரும் போதே அலுத்துக் களைத்து வருவாள். கோபமும் எரிச்சலும் சட்சட்டென்று தெறிக்கும். அவளைக் குறை சொல்வதில் நியாயமில்லை, இருந்திருந்தாற் போல் கணவன் உடல் நிலை சீர்கெட்டு, இதய அறுவை சிகிச்சை, சர்க்கரையில் அஜாக்கிரதையாக இருந்து ஒரு கால் துண்டாடப்பட்டு வீட்டோடு சக்கர நாற்காலியில் கிடப்பதில், வெளியே போய் அறியாதவள் மேல் திடீரென்று வீட்டுப் பொறுப்பு முழுவதும் விழுந்தால்... ஒற்றை ஆளாக அவள்தான் என்ன செய்வாள்? நடுத்தரக் குடும்பத்துக்கு இத்தனை சோதனை தாங்குமா? கண்ணப்பன் வேலை செய்த கம்பெனி ஆதரவு கொடுத்ததில் குடும்பம் அந்த மட்டுக்கும் இவ்வளவாவது நிற்கிறது. மல்லிகாவின் எப்போதோ படித்த எஸ்.எஸ்.எல்.சி.க்கு வந்த மவுசு... தூசி தட்டின சான்றிதழ் போதுமென்று கம்பெனி கொடுத்த குமாஸ்தா உத்யோகம் பெரும் வரம். தள்ளியிருக்கிற கோயமுத்தூர் ஜிஹெச்சில் ஆபரேஷன் முடிந்து வீடு திரும்பிய பிறகு ஆயிரத்தெட்டு எச்சரிக்கை. சர்க்கரை விஷயத்தில் மிகுந்த கட்டுப்பாடு, நேர நேரத்துக்கு மருந்து மாத்திரைகள், எப்போதும் ஓய்வு, ''சிரமப்படவே கூடாது, அடிபடக்கூடாது...'' ஆனால் அது எப்படி முடியும்? ஓடியாடி வேலை செய்த கால்களால் சும்மாயிருக்க முடியுமா? கால்கள் இல்லை, கால்தான்... இன்னும் அந்தப் புண் ஆறவில்லை. மனைவி வெளியே போய் வேலை பார்க்கும்போது வீட்டு வேலையாவது செய்து வைத்தால் அவளுக்கு எத்தனை உபயோகமாக இருக்கும்! சக்கர நாற்காலியை உருட்டி உருட்டி, சின்னச் சின்ன வேலைகளைச் செய்து முடிப்பார். வீட்டை அரைகுறையாகக் கூட்டி, முற்றத்தில் காய்கிற துணிகளை உட்கார்ந்தபடியே கம்பி நீட்டி சேகரித்து, மடித்து அலமாரியில் வைத்து, காலையில் போட்டு வைத்து விட்டுப் போன பாத்திரங்களைத் துலக்கி அடுக்கி... சமையலறைக்குப் போவதில்தான் சிரமம். கொஞ்சம் உயரமான நிலைப்படியைத் தாண்டுவதற்குள் உயிர் போய் உயிர் வந்துவிடும். மல்லிகா ''நீங்க ஒண்ணுமே செய்ய வேண்டாம்... பேசாம ஓய்வு எடுங்க... எதையாவது செய்யப் போய் மறுபடியும் உங்களுக்கு ஒண்ணு ஆச்சுன்னா முதல்ல நான் இருக்க மாட்டேன்'' என்பாள்... அச்சம்... நியாயமான அச்சம்... பெயரளவுக்காவது புருஷன் இருந்தால் போதும். நடமாடக்கூட வேண்டாம். உயிரும் சதையுமாய் அசைந்து கொண்டிருந்தால் போதும், எத்தனைக் கஷ்டமும் படத்தயார். ஆனால் மொத்தமாக கணவனே இல்லாது போனால் வரக் கூடிய இருட்டுக்கு அவள் தயாராயில்லை. அமுதா விவரம் தெரிந்தவள். வீடு வந்ததும் முதலில் அப்பாவுக்குத் தேவையானதைச் செய்து விட்டுப் பிறகுதான் உடை மாற்றுதல் முதற்கொண்டு மற்றதெல்லாம். ஆனால் துறு துறுவென்றிருக்கிற ஆறு வயதுப் பிள்ளையை எப்படிக் கட்டுப்படுத்துவது? சதா விளையாட வேண்டும். மரமேற வேண்டும், திண்ணையில் ஏறி ஜன்னல் மேல் கால் வைத்து தொப்பென்று தெருவில் குதிக்க வேண்டும். மல்லிகாவின் முதல் அச்சம் ரவிதான். ஓய்வெடுக்க வேண்டிய கணவரைப் பாடாய்ப்படுத்துகிறானே என்று... சதா ''அப்பா... திருடன் போலீஸ் விளையாடலாம்பா, அப்பா மாடிக்குப் போலாம்பா, அப்பா அத்திப் பழம் அடிக்கலாம்பா...'' இவனிடமிருந்து எப்படிக் காப்பாற்றுவது? காலையில் கையோடு பள்ளிக்கு அழைத்துப் போய் விடலாம், மதியம் வீட்டுக்கு வர முடியாதபடி கையில் டிபன் பொட்டலம்... ஆனால் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு ஓடி வருகிற பிள்ளையை என்ன செய்ய முடியும்? அடக்கிப் பார்த்தாள். ஆர்ப்பரிக்கிற அலை, போவது போல போக்குக் காட்டி விட்டு மீண்டும் பெரிதாகத் திரும்பி வருவது போல்... திட்டையும் அடியையும் வாங்கிக் கொண்டு மீண்டும் அதையேதான் செய்வான். ''நாசமாப் போறவனே, கடங்காரா'' என்று ஒரு நாளைக்கு நூறு முறை வசவு வாங்குவான். கண்ணப்பனிடம் கெஞ்சினாள். ''நீங்களாவது ஜாக்கிரதையா இருங்களேன்... செல்லம் கொடுக்காதீங்க... பக்கத்தில் விடாதீங்க... ரெண்டு அதட்டல் போட்டு தூரத்தில் வையுங்க... உங்க கால்ல விழுகறேன்...'' சொன்னதல்லாமல் அவர் காலில் விழுந்து அழுதாள். மகளும் அழுதாள். அம்மாவும் அக்காவும் அழுவதைப் பார்த்து ரவியும் அழுதான். ''உன்னால்தாண்டா குட்டிப் பிசாசே இத்தனைக் கஷ்டமும்'' என்று அக்கா புலம்புவது கேட்டாலும் ரவிக்கு புரியவில்லை. கண்ணப்பன் எத்தனை ஜாக்கிரதையாக இருந்தாலும் குழந்தையை நிஜமாக அதட்ட முடியவில்லை. மேலே வந்து விழுகிறவனை ''தூரப்போ'' என்று தள்ள முடியவில்லை. மற்ற நேரங்களில் கடுமையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் மல்லிகா வீட்டில் இல்லாத அந்த மாலை நேரத்து இரண்டு மணி நேரமும் ரவிக்கு எந்த அணையும் போட முடியவில்லை. பழைய காலத்து வீடு. பெரிய வீடு. கண்ணப்பனின் அப்பா தந்து விட்டுப்போன ஒரே சொத்து. முற்றமும், நாலு பக்கம் தனித்தனி அறைகளும், இரண்டாவது கட்டும், கொல்லைப்புறமும், முற்றத்து உள்ளிலிருந்து மேலே வளைந்து வளைந்து போகும் மாடிப்படியும், சிறிய மாடியறையும் கொல்லென்று கிடக்கும். இப்படியொரு வீட்டில் ஓடிப் பிடித்து விளையாடக்கூடாது என்று அந்தச் சிறு பிள்ளைக்குக் கட்டளை போடுவது எத்தனைக் கொடுமை! திருடன் போலீஸ் விளையாடப் போய் சக்கர நாற்காலி திட்டில் முட்டிக் கீழே விழுந்து காலில் அடிபட்டு இரத்தம் வர ஆரம்பித்து... மல்லிகா ''ஜாக்கிரதை ஜாக்கிரதை'' என்று எதற்கு அத்தனை அஞ்சினாளோ அது நடந்தே விட்டது. இரத்தம் உறையாமல் பெருகுகிற தன்மை... கீழே விழுந்து, அக்கம்பக்கம் யாரையும் கூப்பிட முடியாமல் அப்படியே கிடந்து, இரத்தம் ஏகத்திற்கு சேதம் ஆகி, அலுவலகம் முடிந்து வீட்டுக்குள் நுழைந்த மல்லிகா நிலைமையைக் கண்டு அலறி, அதிர்ச்சியில் நின்றதில் மறுபடியும் நேர விரயமாகி... அன்றைக்கு ஏதோ நல்ல காலம்... பக்கத்து வீட்டுக்கு உறவுக்காரர்கள் யாரோ காரில் வந்திருந்தார்கள். உடனே அள்ளிப் போட்டுக் கொண்டு போய் துடியலூரில் ஒரு நர்சிங் ஹேமில் முதலுதவி செய்து, ஜி.ஹெச்சில் அனுமதிக்கப்பட்டு... கண்ணப்பன் உயிர் பிழைத்தது அதிசயம் தான்... வீடு வந்த பிறகு கையில் கிடைத்த ஸ்கேலால் ரவியை விளாசித்தள்ளி விட்டாள் மல்லிகா. கண்ணப்பன் பல நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, அவர் இருக்கும் அறைப் பக்கம் கால் போனால் காலை ஒடித்து விறகாக அடுப்பில் வைத்து விடுவேன் என்று மிரட்டி வைத்தாள். அதற்கெல்லாம் அஞ்சி கொஞ்சம் அடங்கியிருந்த ரவி, அவர் உடல் கொஞ்சம் தேறியதும் பழையபடி உற்சாகத்தில் துள்ள ஆரம்பித்து விட்டான். மல்லிகா பட்ட சிரமங்களைப் பார்த்து வேதனைப் பட்டுப்பட்டு கண்ணப்பனுக்கு மனம் காய்த்துப் போய் விட்டது. ஏனோ அர்த்தமற்ற இந்த வாழ்க்கை சீக்கிரம் முடிந்து விடும் என்று தோன்றவும் தொடங்கி விட்டது. அதற்குள் ரவியைக் கட்டுப்படுத்துவானேன் என்று முன்னெப்போதுமில்லாத வாஞ்சை... போதாதா ரவிக்கு? கொஞ்ச நாட்களாக, பள்ளியில் கிரிக்கெட் விளையாட்டு பழகிக் கொண்டு வந்து தினம் வீட்டில் அதை விளையாட வேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தான். கண்ணப்பன் மல்லிகாவுக்குத் தெரியாமல் பக்கத்து வீட்டில் சொல்லி ஒரு பிளாஸ்டிக் மட்டையும் பந்தும் வாங்கி வரச் செய்திருந்தார். அதைக் காப்பாற்றத்தான் பெரிய யோசனையாக செய்ய வேண்டியிருந்தது. ரவியின் விளையாட்டு சாமான்கள் பூராவும் தூக்கி நிஜமாகவே அடுப்பில் போட்டுப் பொசுக்கி விட்டிருந்தாள் மல்லிகா. ''எதையாவது விளையாடறேன்னு அப்பா மேல பட்டுதோ தொலைச்சுருவேன் கடங்காரா...'' வீட்டில் மல்லிகா கண்ணுக்குப் படாமல் இந்த மட்டையையும் பந்தையும் எங்கே ஒளித்து வைப்பது? ரவிதான் அற்புதமான ஓரிடைத்தைக் கண்டு பிடித்தான். இருட்டான மாடிப்படி வளைவில் மேலறைக்குத் திரும்புமுன் இடது பக்கம் ஒரு சிறு மரப்பலகை பெயர்ந்திருந்தது. ஒரு பக்கம் நன்றாக சுவரோடு ஒட்டிக் கொண்டிருந்ததால் மறு பக்கம் திறந்து மூடும்படி அமைந்து விட்டது. திறந்தால் ஓரடி உயரத்திற்கு ஓர் இடம். இருட்டுக்குள் இருட்டாக ஒரு பெட்டி போல் இருந்தது. கிரிக்கெட் மட்டையும் பந்தும் அங்கே ஒளிந்தன. மாலை வந்ததும் அதை எடுத்து வந்து அப்பாவிடம் கொடுத்து ஆசை தீர விளையாடுவதும் அம்மா வருமுன்பு சர்வஜாக்கிரதையாக மாடி வளைவில் ஒளித்து வைப்பதுமாக இருந்தான். வைப்பதுமல்லாமல் அப்பாவிடம் வந்து கண்களை மட்டும் ரகசியமாக உருட்டி ''ஒளிச்சு வைச்சிட்டேன்'' என்று தலையை ஆட்டுவான். ஞாபகமாக ''நாளைக்கு மறுபடியும் விளையாடலாம்பா... நீ இன்னிக்கு காஜி குடுக்கவேயில்லை'' என்பான். இத்தனூண்டு பிள்ளைக்கு எத்தனை விவரம்! கண்ணப்பன் அமுதாவின் பரீட்சை அட்டையை ஒரு கையில் கேடயமாக வைத்துக் கொண்டு அடி ஏதும் மேலே படாமல் மட்டை பிடித்து சமாளித்து வந்தார். முதலில் மட்டை அவர் பிடித்தால், ஆட்டம் முடிகிற போது ரவி பிடிக்க வேண்டும். ரவி மட்டை பிடிக்கு முன்பு மல்லிகா வரும் சப்தம் கேட்டால் ஆட்டம் அத்தோடு முடிந்து விடும். ஆனால் ரகசியமாக ராத்திரி தூங்கும் வரை, ''அப்பா எனக்கு நீ காஜி குடுக்கவேயில்லை'' என்று சொல்லிக் கொண்டே இருப்பான். தூக்கத்தில் கைகளைத் தூக்கி மட்டை வீசுவான். ''காஜி, காஜி'" என்று முனகுவான். ரவி பள்ளியிலிருந்து கற்றுக் கொண்டு வந்த எண்ணற்ற சங்கேத வார்த்தைகளில் காஜியும் ஒன்று. கிரிக்கெட் மொழி. முதலில் மட்டை பிடிப்பவர், ஆட்டம் முடியும்போது பந்து வீசுபவராக இருக்க வேண்டும். நேரமில்லாமல் அல்லது அவுட்டாகாமல், முதலில் பந்து வீசியவருக்கு மட்டை சந்தர்ப்பத்தை மிச்சம் வைத்தால் அது ''காஜி'". ஒவ்வொரு நாளும் இந்த ஆட்டத்துக்காகவே பள்ளி விட்டதும் தலை தெறிக்க ஓடி வருவான். மாடிக்கு ஓடி மட்டையைத் தூக்கிக் கொண்டு வருவான். ''அப்பாவ் வந்துட்டேன்...'' கத்தியபடி வந்தவன் கை காலைத் துடைத்துக் கொண்டு, வேகவேகமாக காபி குடித்து விட்டு, மட்டையையும் பந்தையும் எடுத்துக்கொண்டு வந்தான். விளையாட்டு தொடங்கியது. அரை மணிக்குப் பிறகு கண்ணப்பனுக்கு முடியவில்லை. மூச்சு வாங்கியது. வேர்க்கத் தொடங்கிது. ''விபரீதம்'' என்று உள்ளம் எச்சரித்தது. மெதுவாக ஆட்டத்தை நிறுத்தினார். ரவி அடம்பிடிப்பான் என்று தெரிந்து, ''அம்மா சீக்கிரம் வர்றா போலிருக்கு, சீக்கிரமா ஓடிப் போய் மட்டையை வைச்சிட்டு வந்திரு'' என்று அவசரப்படுத்தவே, ரவி தலைதெறிக்கப் படியேறி ரகசிய இடத்தில் வைத்து விட்டு சாது போல் இறங்கி வந்து அப்பா அருகே நின்று கொண்டான். ஆனால் அம்மாவைக் காணோம். ஏமாற்றம்! ''என்னப்பா அம்மா வரவேயில்லை? நீ அவுட்டானதும் நான்தான் பேட்டிங் பண்ணணும், அதுக்குள்ள ஏன் நிறுத்தின?'' ''கண்ணு, அம்மா வர்ற மாதிரி சத்தம் கேட்டதா அதனாலதான்... திடீர்னு வந்துட்டா என்ன பண்றது? அப்புறம் தெரியாம விளையாடறதும் நிண்ணு போயிடும்... மட்டையெல்லாம் அடுப்புக்குப் போயிடும். உனக்கு அடி விழும் இல்லை? அதனாலதான் ஜாக்கிரதையா இருக்கணும்ணு அப்படிச் சொன்னேன்.'' கண்ணப்பன் சமாதானப்படுத்தியதில் கொஞ்சம் ஆறுதலடைந்தான். இருந்தாலும் அடுத்த நிமிஷமே ''அப்பா ஐஸ் நம்பர் விளையாடலாம்பா'' என்று ஆரம்பித்தான். போச்சுடா, மல்லிகா வரும் வரை இவனை எப்படி சமாளிப்பது? பேசிகீசித்தான் பிடித்து வைக்க வேண்டும். ''வேண்டாம் கண்ணு... நாம ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிகிட்ட இருக்கலாம். இன்னிக்கு ஸ்கூல்ல என்ன சொல்லிக் கொடுத்தாங்க?'' ''கழித்தல் கணக்கு சொல்லிக் கொடுத்தாங்க. எங்க கணக்கு டீச்சர் ரெஜிஸ்தர்ல இங்க்கை கொட்டினதுக்காக பெருமாளை அடிச்சாங்க. கடங்காரா, இனிமே இங்க் மேல கையை வைப்பியான்னு திட்டினாங்க... அப்பா, கடன்காரன்னா என்னப்ப?'' ''கடன்காரன்னா... நாம யார் கிட்டயாவது ஏதாவது வாங்கியிருந்தோம்னா உடனே திருப்பிக் கொடுத்திடணும். அப்படிக் கொடுக்கலேண்ணா அவங்க வந்து திருப்பிக் கேட்பாங்க. கொடுக்காம விட்டோம்னா நாம கடங்காரங்க ஆயிடுவோம்...'' ''அன்னிக்கு மீசை மாமா வந்து உங்ககிட்ட கடனைத் திருப்பித்தான்னு கேட்டாரே, அந்தக் கடனா?'' எல்லாவற்றையும் இந்தப் பொடியன் கவனித்திருக்கிறான். வீட்டு மேல் வாங்கிய கடன். வட்டி ஒழங்காய்க் கொடுத்தும் அசலைத் திருப்பிக் கேட்கிறார் செட்டியார். ''ஆமாப்பா... அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அவர்கிட்டதான் கடன் வாங்கியிருக்கோம்? திருப்பிக் கொடுக்கணுமில்லை? அதைத்தான் கேட்கிறார்.'' ''ஏம்பா திருப்பிக் கொடுக்கலை?'' ஆரம்பித்து விட்டது. குழந்தைகளின் கேள்விகள். எண்ணற்ற கேள்விகள். ஒன்று சொன்னால் அதிலிருந்து இன்னொரு புதுக் கேள்வி... நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத கேள்விகளெல்லாம் எப்படித்தான் இந்தப் பிஞ்சுத் தலைகளிலிருந்து உதயமாகிறதோ? ''நம்ம கிட்ட இப்ப இல்ல... அதனால கொடுக்கல.'' ''கொடுக்காமயே போன்னு துரத்திலாமாப்பா?'' ''ஐயையோ... அப்படி எல்லாம் செய்யக் கூடாது. வாங்கின கடனை ஒழுங்கா திருப்பிக் கொடுக்கிறவங்கதான் ரொம்ப நல்லவங்க. நம்மகிட்ட இருந்தால் நாமே திருப்பிக் கொண்டு போய் கொடுத்திடணும். கடனை அவங்க கேட்கிற மாதிரி வச்சுக்கக்கூடாது.'' ''நீ நல்லவனாப்பா?'' கண்ணப்பனுக்குக் கண்கள் பொங்கின. யார் நல்லவன் யார் கெட்டவன்? எல்லாம் நல்லபடியாக இருக்கிற போது நல்லவனாக இருக்க முடிகிறது. கொஞ்சம் தாழுகிற போது எல்லாமே மாறிப் போய் விடுகிறது. கனவிலும் நினைத்துப் பார்த்திராத வார்த்தைகள் எதிர்பாராதவர்களிடமிருந்து வருகிற போது... ஒரு வேளை கெட்டவனாகி விட்டோமோ? வாழ்க்கை கெட்டுப் போனவன் கெட்டவனா? ''நா எல்லாம் ரொம்ப நல்லவங்கப்பா... கண்டிப்பா கடனை திருப்பிக் கொடுத்திருவோம். நீ கவலைப்படாதே, என்ன கண்ணு?'' ''இல்லப்பா... கெட்டவங்கன்னா சாமி வந்து ராத்திரி கண்ணைக் குத்துமா... எங்க டீச்சர் சொன்னாங்க. அப்பா, நான் நல்லவனாப்பா?'' குழந்தையின் கேள்வியில் ஒரு கெஞ்சல் இருந்தது. உடனே பதில் தெரியாவிட்டால் கடவுள் எதிரே வேலை வைத்துக் கொண்டு கண்ணைக் குத்தக் தயாராக இருக்கிற பயத்தில் கண்கள் விரிந்திருந்தன. ''இப்பதான சொன்னேன்? நாம எல்லாம் நல்லவங்க... நீ நல்லவன், அம்மா நல்லவ, அமுதா நல்லவ...'' ''அப்புறம் ஏம்ப்பா அம்மா சும்மா என்னை கடங்காரான்னு திட்டறாங்க? நான் கடன் ஏதும் அம்மா கிட்ட வாங்கவேயில்லப்பா.'' இதைச் சொல்லும் போது அழுகை. ''அதுக்கில்லை கண்ணு... அம்மா சும்மா கோபத்தில சொல்றது அது...'' ''ஆனா நான் கடன் வாங்கவே இல்லைப்பா... நிஜமா...'' ''கடன்னா பணம்தானா? நாளைக்கு நீ பெரியவனாகி அம்மாவுக்கு வீடு, கார் எல்லாம் வாங்கிக் கொடுக்கணுமில்லை, அதுக்காகத்தான் இப்பவே சும்மா சொல்லி வச்சுக்கறா...'' அடுத்த கேள்விக்கு அவன் வாயைத் திறப்பதற்குள் வாசலில் செருப்பு சத்தம் கேட்டது. ரவியின் வாயும் அடைபட்டது. கண்ணப்பன் அவனை மடியிலிந்து இறக்கிவிட்டு, வாய்மேல் கை வைத்து, ''ஒழுங்கா இருக்கணும். என்கிட்ட வரக்கூடாது. போய் கதவைத் திறந்து விட்டுட்டு அம்மாவோட பையை வாங்கிட்டு வா...'' என்று இரகசியம் போலச் சொன்னார். ரவி இறங்கி ஓடினான். வீடு அமைதியாக இருப்பதை ஒரு சந்தேகத்தோடு பார்த்தபடியே உள்ளே வந்தாள் மல்லிகா. நேரே கண்ணப்பனிடம் போனாள். ''ரவி ஏதாவது படுத்தினானா? உங்களுக்கு உடம்பு எப்படியிருக்கு? நல்லா இருக்கீங்க இல்லை?'' என்று கேள்விகளை அடுக்கினாள். ''ம்... ஒண்ணுமில்லை... அசதியா இருக்கிற மாதிரி இருக்கு... நல்லாத்தான் இருந்தேன்... மாத்திரையெல்லாம் சரியா சாப்பிட்டேன்... ஆனா இப்ப லேசா சிரமமா இருக்கு'' என்றார். அன்றிரவு அவரால் தூங்க முடியாமல் காலில் விண்விண்ணென்று வலி. பல்லைக் கடித்துக் கொண்டு புரண்டு படுத்தார். பக்கத்தில் ரவி தூக்கத்திலேயே ''அப்பா காஜி கொடுப்பா...'' என்று முனகினான். மல்லிகா எழுந்து வலி குறைக்க மாத்திரை தந்து விட்டு, ரவி முனகுவதைப் பார்த்து ''என்ன, என்னவோ உளர்றானே'' என்றாள். அதற்கு, ''அவன் ஸ்கூல்ல கிரிக்கெட் விளையாடிட்டு வந்திருக்கான். அதைத்தான் சொல்றான்'' என்றார். அடுத்த மூன்று நாட்களும் அமுதா பள்ளிக்குப் போகவில்லை. அப்பாவுடனே இருந்தாள். மல்லிகா ஒரு நாள் விடுப்பு எடுத்து உடன் இருந்தாள். விளையாட்டு என்று சொல்லிக் கொண்டு ரவியால் அப்பாவின் கிட்டக்கூட நெருங்க முடியவில்லை. ஒரு வாரத்தில் கண்ணப்பனை மருத்துவமனையில் சேர்க்கும்படியாயிற்று. பத்தாம் நாள் கதை முடிந்தது. உடலை வீட்டுக்குக்கூட கொண்டு வராமல் மருத்துவமனையிலிருந்தே தகனத்துக்குக் கொண்டு செல்லும்படியாயிற்று. வீடு முழுக்கக் கூட்டம், உறவுக்காரர்கள் மயம், அழுகை... ஏனென்று ரவிக்குப் புரியவில்லை. எல்லோரும் இவனையல்லவா இழுத்து வைத்துக் கொண்டு அழுதார்கள்! அப்பா ஏன் வீட்டிற்கு வரவில்லை என்று தெரியவில்லை. எப்போது மருத்துவமனைக்குப் போனாலும் கொஞ்ச நாள் கழித்து கட்டுடனோ, சக்கர நாற்காலியுடனோ திரும்பி வந்துவிடுவார். இந்த முறை இன்னும் வரவில்லை. கேட்டால் ''அப்பா செத்துப் போயிட்டார். இனிமே வர மாட்டார்'' என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். ரவியால் அதை நம்பமுடியவில்லை. அதெப்படி அப்பா வராமல் இருப்பார்? கண்டிப்பாக வருவார். எப்போதும் அடிக்கிற அம்மாவிடம் என்னை விட்டு விட்டுப் போகவே மாட்டார். வாங்கிய கடனெல்லாம் அடைக்க வேண்டி வீட்டை செட்டியாருக்கே விற்று விட்டு, வேறு சிறு வீட்டிற்குப் போவதென்று முடிவானதும் ரவி வீட்டை விட்டு வெளியே வர முடியாதென்று அடம்பிடித்தான் ''அப்பா இந்த வீட்டுக்குத்தான் திரும்பி வருவார்... அவருக்கு வேற வீடு தெரியாது'' என்று கத்தியழுதான். கூட சேர்ந்து மற்றவர்கள் அழுதாலும் வேறு வீட்டிற்குக் கட்டாயமாகக் கொண்டுபோய் விடுவார்கள் என்று ரவிக்குத் தெரிந்தே இருந்தது. ''தூங்கும் போது தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்.'' அவனுடைய கவலையெல்லாம் அப்பா திரும்பி வந்தால் அந்த வேற வீடு எங்கேயிருக்கிறது என்று யார் காட்டுவார்கள்? நான்கு தெரு தள்ளி இவன் பள்ளிக்கு அருகே இருந்த சிறு வீட்டிற்கு சுத்தம் செய்ய அமுதா போன போது இவனும் கூடப் போனான். சட்டென்று ஒரு யோசனை வந்தது. இந்தப் புது வீட்டு அடையாளத்தை எழுதி அந்தப் பழைய வீட்டில் வைத்து விட்டால் என்ன? அப்பா வந்தால் பார்த்துத் தெரிந்து கொள்வார். பள்ளியில் இருந்த போது கணக்கு நோட்டிலிருந்து பேப்பர் கிழித்த புழுக்கைப் பென்சிலை சுவரில் தேய்த்து எழுத்துக் கூட்டி, ''ஸ்கூல் கிட்ட பச்சை வீடு'' என்று நினைத்துக் கொண்டு அடித்து அடித்து எழுதி சட்டைப் பையில் வைத்துக் கொண்டான். வீட்டில் எங்கும் உடனே வைக்க முடியாதபடி வீட்டு சாமான்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூட்டை கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. செட்டியாருக்குக் கைகூப்பி சாவியைக் கொடுத்து விட்டு, சாமான்கள் எல்லாம் ஏறிப் போன மாட்டு வண்டியில் கடைசி ட்ரிப்பில் ஏறிக்கொண்ட மல்லிகாவும் அமுதாவும் ரவியை ஏறச் சொன்னபோது பெரியதாக அழுது பார்த்தான்... ''நான் வர மாட்டேன்... அப்பா வருவாரு...'' ''ஏற்கெனவே நொந்து போயிருக்கேன். நீ வேற ஏண்டா படுத்தற நாயே'' என்று இரண்டு அறை முதுகில் வைத்து வண்டியில் ஏற்றிக் கொண்டாள் மல்லிகா. வண்டி தெருத் திரும்பும் போது, யாரும் எதிர்பாராத சமயம், டக்கென்று கீழே குதித்து வீட்டை நோக்கி ஓடினான் ரவி. செட்டியார் தெரு இறங்கிப் பக்கத்து வீட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தார். உள்ளே ஓடியவன் தலைதெறிக்க மாடிப்படி ஏறினான்... ''அப்பா வந்தா இங்கதான் வருவார். அவருக்கு நல்லாத் தெரியும் இந்த இடம்... வேற யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க... வர மாட்டாராமே... அதெப்படி? அப்பா நல்லவர்னு சொன்னாரே... கடன் வாங்கினா நாமே திருப்பிக் கொடுத்திடணும்னு சொன்னாரே... எனக்க காஜி கடன் வச்சிட்டுப் போயிருக்காரு... திருப்பிக் கொடுக்க வருவாரு... நான் இந்த வீட்டில இல்லாவிட்டாலும் இங்க வந்து பார்த்துட்டு நேரா வேற வீட்டுக்கு வருவாரு...'' என்று எண்ணங்கள் குதித்தோடி வந்தன. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் மட்டுமே தெரிந்த அந்த ரகசிய இடத்தில் ரகசிய விலாசக் கடிதம் ஒளித்து வைக்கப்பட்டது. ஏற்கெனவே பந்தும் மட்டையும் பின்னாலேயே ஓடி வந்த அமுதா இவன் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு போய் வண்டியில் ஏற்றினாள். ''எங்கடா போன? ஏண்டா என் உயிரை வாங்கற கடங்காரா? என்று மல்லிகா அழுது கொண்டே தப்தப்பென்று நான்கு அறை வைத்தாள் முதுகில். ஓவென்ற அழுகைக்கிடையே, ''நான் கடங்காரனில்லை, அப்பாதான் கடங்காரன்'' என்று பெரிதாக அவன் அலறியதற்குப் பிரதிபலனாக மேலும் இரண்டு மொத்து விழுந்தது.
ஒருநாள் சக்கரவர்த்தி அக்பர் தர்பாரில் கூடியிருந்தவர்களை நோக்கி, "நமது நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைகள் ஒழுங்காக நடை பெறுகின்றனவா?" என்று கேட்டார். "மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன, பிரபு! நமது நீதிபதி ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் நியாயமாக நீதி வழங்குகிறார்!" என்று ஒரு அதிகாரி நீதிபதியைப் புகழ்ந்தார். பிறகு தர்பாரில் இருந்த அனைவரும் அதை ஆமோதிக்க, நீதிபதிக்கு உச்சி குளிர்ந்து விட்டது. ஆனால் பீர்பல் மட்டும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், "பீர்பல்! நீ மட்டும் ஏன் மௌனமாக இருக்கிறாய்? மற்றவர்கள் கூறியது முற்றிலும் தவறு என்று நினைக்கிறாயா?" என்று கேட்டார். "முற்றிலும் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் நமது வழக்கு விசாரணைகளும், நீதி வழங்குதலும் திருப்திகரமாக உள்ளது என்று நான் சொல்ல மாட்டேன்" என்றார் பீர்பல். அக்பர் அவரை மேலும் விளக்கம் கேட்க நினைக்கையில், வாயிற்காவலன் உள்ளே நுழைந்து, "பிரபு! ஒரு கிழவரும், இளைஞரும் நியாயம் கேட்டு வந்திருக்கிறார்கள்" என்றான். "அவர்களை வரச்சொல்!" என்றார் அக்பர். உடனே, தர்பாரில் ஒரு கிழவரும், ஓர் இளைஞனும் உள்ளே நுழைந்து சக்கரவர்த்தியை வணங்கினர். "என்ன விஷயம்? உங்களில் யாருக்கு என்ன குறை?" என்று கேட்டார் அக்பர். "பிரபு! என் பெயர் அப்துல் ரஹ்மான்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கிழவர் தொடர்ந்து, "நான் ஒரு சட்ட நிபுணன்! மாணவர்களுக்கு சட்டத்தின் நுணுக்கங்களையும், வழக்கு விசாரணைகளைப்பற்றியும் கற்பிக்கிறேன். இதோ நிற்கிறானே பிரமோத் பிஹாரி! இவன் என் மாணவனாக இருந்தவன்! இவன் மீது நான் குற்றம் சாட்ட வந்துள்ளேன்" என்றார். அந்த இளைஞன் செய்த குற்றம் குறித்து அக்பர் கேட்டார். "பிரபு! இவன் என்னிடம் மாணவனாக சேர விரும்பிய போது, நான் மாதம் மூன்று பொற்காசு வீதம் குரு தட்சிணை தர வேண்டுமென்றும், ஓராண்டு காலம் சட்டம் படிக்க வேண்டும் என்றும் கூறினேன். ஆனால் இவன் தான் பரம ஏழை என்றும், தட்சிணை கொடுக்க இயலாது என்றும் கூறினான். படிப்பு முடிந்ததும் வழக்கறிஞனாகி முதல் வழக்கில் வெற்றி பெற்றவுடன், முப்பத்தாறு பொற்காசுகள் சேர்த்து தருவதாகவும் வாக்களித்தான். அதை நம்பி இவனுக்கு ஓராண்டு காலம் கற்பித்தேன். இவன் மிகவும் கெட்டிக்கார மாணவன் என்பதால் ஓராண்டிலேயே மிகச் சிறப்பாக சட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு விட்டான். நானும் இவன் வழக்கறிஞனாகி, முதல் வழக்கிலேயே வெற்றி பெறுவான் என்றும், தட்சிணையை மொத்தமாகக் கொடுப்பான் என்றும் நம்பினேன்" என்று சொல்லி நிறுத்தினார் கிழவர். "இப்போது பணம் தராமல் ஏமாற்றுகிறானா?" என்று அக்பர் கேட்டார். "இல்லை பிரபு! இவன் திடீரென வழக்கறிஞனாகப் பணி புரியும் யோசனையை கை விட்டு விட்டான். அந்தத் தொழிலில் ஈடுபடப் போவதில்லையாம்!" என்றார். உடனே அக்பர் அந்த இளைஞனை நோக்கி, "எதற்காக உன்னுடைய உத்தேசத்தை நீ மாற்றிக் கொண்டாய்?" என்று கேட்டார். "பிரபு! நான் சட்டம் பயின்று முடித்ததும் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுவதாகத்தான் இருந்தேன். ஆனால் என் சித்தப்பா திடீரென இறந்து போனார். அவர் தன்னுடைய உயிலில் அவருடைய அனைத்து சொத்துகளுக்கும் என்னை வாரிசாக்கி விட்டார். இப்போது நான் லட்சாதிபதி. அதனால் எந்த வேலையும் செய்யத் தேவையில்லை," என்றான். "அப்படியானால் இவருடைய தட்சிணை என்ன ஆவது?" என்று கேட்டார் அக்பர். "நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன். எனக்கு என்று வழக்கறிஞனாக ஆக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போதுதான் தட்சிணையும் தர முடியும்" என்றான். பிரமோத் பிஹாரி கூறுவது சரியே என்று நினைத்தார் அக்பர். உடனே அவர் நீதிபதியை நோக்கித் தீர்ப்பு வழங்கக் கூறினார். நீதிபதி அவர்கள் இருவரையும் நோக்கி, "இரு தரப்பினரின் வாதத்தையும் கூர்ந்து கவனித்தேன். என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கில் பிரமோத் பிஹாரியின் பக்கமே நியாயம் இருக்கிறது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன் என்று இந்த தர்பாரில் அவன் உறுதி அளித்துள்ளான். அவன் சொல்லை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு என்று வழக்கறிஞராக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அன்று அந்தத் தொழிலில் ஈடுபட்டு குருவின் தட்சிணையைத் திருப்பித் தரலாம். அதுவரை குரு காத்திருக்க வேண்டும். இதுவே என் தீர்ப்பு!" என்றார். அக்பர் உட்பட தர்பாரில் அனைவரும் இந்தத் தீர்ப்பைப் பாராட்டினர். இதை எதிர்பார்க்காத கிழவர் ஏமாற்றத்தினாலும், வருத்தத்தினாலும் உடல் குறுகிப் போனார். ஆனால் பீர்பல் மட்டும் தீர்ப்பைப் பாராட்டாமல் மிகவும் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு பீர்பலிடம் கூறினார். அதைக்கேட்டதுமே கிழவரின் முகம் மலர்ந்தது. மிகவும் புத்திசாலியான பீர்பல் சரியான தீர்ப்பு வழங்குவார் என்று அவர் உறுதியாக நம்பினார். பீர்பல் இளைஞனை நோக்கி, "நீ கொடுத்த வாக்கில் உறுதியாக இருக்கிறாய் அல்லவா?" என்றார். "அதில் என்ன சந்தேகம்? கண்டிப்பாக அப்போது அதில் கிடைக்கும் வருமானத்திலிருந்து என் குருநாதருக்கு சேர வேண்டிய தட்சிணையைக் கட்டாயம் தந்து விடுவேன்" என்றான் இளைஞன். பிறகு கிழவரை நோக்கி, "பிஹாரியின் நிபந்தனையை நீங்கள் ஆரம்பத்திலேயே ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா?" என்று கேட்டார் பீர்பல் "ஆம் ஐயா!" என்றார் கிழவர். "அப்படியானால் சட்டப்படி இளைஞனின் தரப்பில்தான் நியாயம் உள்ளது. அவன் வழக்கில் வெற்றி பெற்று தட்சிணை தரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதுதான்" என்றார் பீர்பல். பீல்பலையும், அக்பரையும் வணங்கிவிட்டு அவர் தள்ளாடித் தள்ளாடி வெளியேற, இளைஞன் பிஹாரி வெற்றிப் பெருமிதத்துடன் வெளியேறினான். திடீரென பீர்பல் பிஹாரியை அழைத்து, "பிஹாரி! இதுதான் சக்கரவர்த்தியின் நீதிமன்றத்தில் உன்னுடைய முதல் வழக்கு! உன்னுடைய வழக்கை விசாரிக்க வேறு வழக்கறிஞரை நியமிக்காமல் நீயே உன் தரப்பு நியாயத்தை வெகு அழகாக எடுத்துக் கூறினாய்" என்றார் பீர்பல். பிஹாரி மகிழ்ச்சியுடன், "நன்றி ஐயா!" என்றான். பீர்பல் தொடர்ந்து, "அதாவது உன்னுடைய முதல் வழக்கில் நீயே வழக்கறிஞராக இருந்து வாதாடி அதில் வெற்றி பெற்று விட்டாய். இல்லையா?" என்று பீர்பல் கேட்டார். "ஆம் ஐயா!" என்றான் பிஹாரி மகிழ்ச்சியுடன். "அப்படியானால் நீ வழக்கறிஞராக இருந்து வெற்றி பெற்ற முதல் வழக்கு இது! நீ வாக்களித்தபடியே, குருதட்சிணையை உன் குருவிற்கு இப்போதே இங்கேயே கொடுத்து விடு!" என்றார். ஒருகணம் திகைத்துப் போன அனைவரும், மறுகணமே கைதட்டி ஆர்ப்பரித்தனர். கிழவர் பீர்பலுக்கு மனமார நன்றிகூற, அக்பர் பீர்பலை மிகுந்த மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டார்.
முல்லாவின் கழுதை ஒரு தடவை காணாமல் போய் விட்டது. கழுதை இல்லாமல் அவருடைய அன்றாட வேலைகள் தடைபட்டன. அப்போது அவர் பொருளாதார நிலையில் சிரமப்பட்டுக் கொண்டிருந்ததால் காணாமல் போன கழுதைக்குப் பதிலாக வேறு ஒரு கழுதையை வாங்க அவரால் இயலவில்லை. கழுதை போய் விட்ட கவலையால் முல்லா மிகவும் சோர்ந்து விட்டார் மிகவும் வருத்தத்துடன் வீட்டிலேயே தமதுபொழுதைக் கழிக்கலானார். செய்தியறிந்து முல்லாவின் நெருக்கமான நண்பர்கள் அவர் வீட்டுக்கு வந்து அவருக்கு ஆறுதல் கூற முற்பட்டனர். " முல்லா, கேவலம் ஒரு கழுதை காணாமல் போய் விட்டதற்காக நீங்கள் இவ்வளவு வருத்தப்படலாமா? உங்களுடைய முதல் மனைவி இறந்து போன சமயத்தில் கூட நீங்கள் இவ்வளவு மன வருத்தப்படவில்லையே?" என்று அவரைத் தேற்றினார். " அருமை நண்பர்களே என் முதல் மனைவி இறந்த விஷயத்தைப் பற்றிச் சொன்னீர்கள். என் முதல் மனைவி இறந்த போது நீங்களெல்லாம் என்னைச் சூழ்ந்து அமர்ந்து கொண்டு முல்லா வருத்தப்பாடதீர்கள். உங்கள் மனைவி இறந்தது தெய்வச் செயல் நடந்தது நடந்து விட்டது நாங்கள் முயற்சி செய்து உங்களுக்குத் தகுதியான ஒரு நல்ல பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறோம், என்று கூறினீர்கள்! நீங்கள் தந்த வாக்குறுதிப்படி ஒரு பெண்ணையும் பார்த்து உங்கள் செலவிலேயே திருமணம் செய்து வைத்தீர்கள். அந்த மாதிரி கழுதை காணாமல் போனதற்கு ஆறுதல் கூற வந்த நீங்கள் கவலைப்படாதே! எங்கள் செலவில் வேறு ஒரு கழுதை வாங்கித் தந்து விடுகிறோம் என்று சொல்லவில்லையே" என்று சொன்னார் முல்லா. நண்பர்களுக்கு சிரிப்பு வந்து விட்டது. " முல்லா, நீர் பெரிய கைகாரர் கவலைப்படும் போது கூட காரியத்திலே கண்ணாக இருக்கிறீரே கவலைப்படாதீர். உங்களுக்கு ஒரு கழுதையை வாங்கிக் கொடுத்து விடுகிறோம் " என்று நண்பர்கள் கூறினர். மிகவும் நன்றி! என்று சிரித்த முகத்துடன் கூறினார் முல்லா.
ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டான். அவளுக்கு இளம் வயது, ஒரே ஒரு குழந்தை இருந்தது. அவள் தனது கணவனுடன் சிதையில் குதித்து உடன்கட்டை ஏற விரும்பினாள். ஆனால் இந்த சின்ன குழந்தை அதை தடுத்து நிறுத்தி விட்டது. அவள் அந்த குழந்தைக்காக வாழ்ந்தாக வேண்டும். ஆனால் பின் இந்த சின்ன குழந்தையும் இறந்துவிட்டது. இப்போது பாதிப்பு அதிகமாகி விட்டது. அவள் கிட்டத்தட்ட பைத்தியமாகி விட்டாள். “என்னுடைய குழந்தையை திரும்பவும் உயிர்ப்பித்து தரக் கூடிய மருத்துவர் யாரேனும் இங்கு உண்டா” நான் அவனுக்காகவே வாழ்ந்தேன். ஆனால் இப்போது எனக்கு எனது முழு வாழ்வும் இருளாகி விட்டது.” என்று கேட்டு அலைந்து திரிந்தாள். இந்தியாவில் நீ மறுமணம் செய்து கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக அந்த காலத்தில் அது சாத்தியமே இல்லாத ஒன்று. ஒரு பெண் மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆணின் ஆளுமை வெறி அத்தகையது. ‘ நான் இறந்து விட்டாலும்கூட………. நீ சிரமபட்டாலும் சரி, ஆனால் நீ வேறு யாரையும் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது.’ அப்படிப்பட்ட பொறாமை…. இதுதான் ‘இந்தியாவின் பாரம்பரியம்’ என்று அழைக்கப்படுகிறது. அப்போது புத்தர் அந்த நகரத்தின் வழியே வந்தார். அதனால் மக்கள் அவளிடம், “எங்களுக்கு எந்த மருத்துவரையும் தெரியாது. ஆனால் புத்தர் வருகிறார். இது ஒரு சிறந்த தருணம். நீ உனது குழந்தையை தூக்கிக் கொண்டு புத்தரிடம் செல். நீ இந்த குழந்தைக்காவே உயிர் வாழ்ந்தாய் என்பதைக் கூறி இப்போது இது இறந்துவிட்டது என் மேல் கருணை காட்டுங்கள். இவனை உயிர்பித்து தாருங்கள் நீங்கள் ஞானமடைந்தவர் என்று கேள்.” என்றனர். ஆகவே அவள் புத்தரிடம் சென்றாள். இறந்த குழந்தையின் உடலை புத்தரின் காலடியில் கிடத்தி, “இவனை உயிர்பித்து தாருங்கள். உங்களுக்கு வாழ்வின் அனைத்து மர்மங்களும் தெரியும். நீங்கள் பிரபஞ்சத்தின் உச்சியை தொட்டு விட்டீர்கள். இந்த ஏழை பெண்ணுக்காக ஒரு சிறிய அற்புதத்தை நீங்கள் செய்யக் கூடாதா?” என்று வேண்டினாள். புத்தர், “நான் செய்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை!” என்றார். அவள், “அது எதுவானாலும் நான் செய்கிறேன்” என்றாள். புத்தர், “அப்படியென்றால் சரி.! நிபந்தனை இதுதான். இந்த நகரத்தைச் சுற்றி வந்து யார் வீட்டில் இது வரை சாவு எதுவும் நடக்கவில்லையோ அந்த வீட்டிலிருந்து கொஞ்சம் கடுகு விதைகள் வாங்கி வா.” என்றார். அந்த கிராமத்தில் கடுகு பயிர் அறுவடை செய்து வந்தனர். எனவே புத்தர் அவளிடம், “இந்த நகரத்தை சுற்றி வந்து…………. என்றார். அந்த பெண்ணால் இதை புரிந்து கொள்ள முடிய வில்லை. அவள் ஒரு வீட்டிற்கு சென்று கேட்டாள். அவர்கள், “கொஞ்சம் கடுகென்ன? புத்தரால் உனது குழந்தைக்கு உயிர் தர முடியுமென்றால் ஒரு மாட்டு வண்டி நிறைய கடுகு வேண்டுமானாலும் தருகிறோம். ஆனால் எங்களது குடும்பத்தில் ஒருவர் அல்ல, ஏகப்பட்ட பேர் இறந்து போயிருக்கின்றனர். காலங்காலமாக நாங்கள் இங்கிருக்கிறோம். தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு பாட்டி, தாத்தாவின் அப்பா, தாத்தாவின் அம்மா, தாத்தா, பாட்டி என எல்லோரும் இறந்து விட்டிருக்கின்றனர். நாங்கள் பலர் இந்த குடும்பத்தில் சாவதை பார்த்திருக்கிறோம். ஆதலால் இந்த கடுகினால் பயன் இல்லை. ‘எந்த குடும்பத்தில் இது வரை சாவு விழ வில்லையோ’ என்பதுதானே புத்தரின் நிபந்தனை.” என்றனர். அது ஒரு சிறிய கிராமம். அவள் ஒவ்வொரு வீட்டிற்க்கும் சென்று கேட்டாள். அந்த கிராமத்தில் உள்ள எல்லோரும் கடுகு தர தயாராக இருந்தனர். “எவ்வளவு கடுகு வேண்டும் உனக்கு?” ஆனால் அந்த நிபந்தனை அதுதான் சாத்தியமற்றதாக இருந்தது. எங்களுடைய குடும்பத்தில் பலர் இறந்திருக்கின்றனர்.” மாலையில் அவள் புத்தரின் நடவடிக்கை பற்றி உணர்ந்தாள். மேலும் அவளுக்கு உண்மையையும் புரிந்தது. பிறக்கும் யாவரும் இறந்தே தீருவர் என்பது அவளுக்கு புரிந்தது. குழந்தையை திரும்ப உயிர்பித்து என்ன பயன் அவனும் ஒருநாள் இறந்தே தீருவான். அதற்கு பதிலாக எது இறப்பதும் பிறப்பதும் இல்லையோ அந்த அழிவற்றதை நானே தேட வேண்டியதுதானே. என்பதை உணர்ந்தாள். மாலையில் அவள் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். புத்தர், “எங்கே கடுகு?” என்று கேட்டார். அவள் சிரித்தாள். காலையில் அவள் அழுதவண்ணம் வந்தாள், இப்போது சிரித்தாள். அவள், “நீங்கள் தந்திரம் செய்து விட்டீர்கள், பிறக்கும் யாரும் இறக்கத்தான் வேண்டும். இந்த கிராமத்தில் மட்டுமல்ல, இந்த உலகத்திலேயே யாரும் இறக்காத குடும்பமே கிடையாது. அதனால் நான் எனது மகனை உயிர்பித்துத் தர கேட்கப் போவதில்லை, என்ன பயன்? – சில தினங்களுக்குப் பிறகு, அல்லது சில நாட்களுக்குப் பிறகு, அல்லது சில வருடங்களுக்குப் பிறகு அவன் திரும்பவும் இறந்துவிடுவான். வாழும் அத்தனை வருடங்களும் அவன் துயரத்திலும் துன்பத்திலும் எல்லா விதமான வேதனைகளிலும் இருப்பான். அவனை திரும்பவும் வாழ்வுக்கு கொண்டு வராத உங்களது கருணை மிகவும் பெரியது. குழந்தையை மறந்து விடுங்கள். எனக்கு தீட்சை கொடுங்கள். பிறப்பும் இறப்பும் நிகழாத அழிவற்ற, அந்த உலகத்திற்கு நான் செல்ல எனக்கு தியானமென்னும் வழி காட்டுங்கள்,” என்றாள். புத்தர், “நீ மிகவும் புத்திசாலியான பெண். நீ அதை உடனே புரிந்து கொண்டு விட்டாய்.” என்றார். நான் இதைத்தான் அதிசயம் என்றழைப்பேன், ஜீஸஸ் லசாரஸை உயிர்பித்ததை நான் அதிசயம் என்று கூற மாட்டேன். அது பார்ப்பதற்கு அதிசயம் போல தோன்றலாம், ஆனால் தோன்றுவதெல்லாம் உண்மை அல்ல. நான் புத்தரின் நடவடிக்கையைத் தான் அதிசயம் என்று கூறுவேன். எல்லோரும் இறந்து போகத் தான் போகிறார்கள். அதில் எந்த வித்தியாசமும் இல்லை. பிறப்பிலிருந்தும் இறப்பிலிருந்தும் ஒருவர் வெளியே வர வேண்டும். புத்தர் அந்த பெண்ணிற்கு தீட்சை கொடுத்தார். அவள் புத்தரின் ஞானமடைந்த சீடர்களில் ஒருவராக விளங்கினாள். அவளது தேடுதல் அத்தகையது….. அவளுக்கு என்னுடைய கணவன் இறந்து விட்டான், என்னுடைய குழந்தை இறந்து விட்டது, இப்போது என்னுடைய முறை, எந்த கணமும் நான் இறப்புக்கு பலியாகி விடலாம். நேரமில்லை, எந்த நேரம் மரணம் வரும் என்று எனக்குத் தெரியாது. எனவே நான் முழுமையாக இந்த தேடுதலில் ஈடுபடவேண்டும், புத்தர் என்னிடம், ‘உள்ளே செல். உன்னுடைய இருப்பின் மையத்திற்குச் செல், நீ பிறப்பையும் இறப்பையும் தாண்டி செல்வாய்.’ என்று கூறியுள்ள படியால் நான் தேடி சென்றடைய வேண்டும் என்பதை அவள் அறிந்திருந்தாள். இதைதான் நான் ஆணித்தரமான தேடுதல் என்றழைக்கிறேன். எல்லா பிரச்சனைகளையும் வேரறுத்து விடுவது.
ஒரு கோடை காலம், பகல் நேரம். கொழுத்தும் வெயில் மக்களையும், பறவைகளையும் வருத்தியது. தாகம் எல்லோருக்கும் ஏற்பட்டது பறவைகள் தங்கள் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இன்றி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தன. அவற்றில் ஒரு புத்திசாலி காகமும் இருந்தது. அது தண்ணீருக்காக அலையும் போது. ஒரு வீட்டின் வெளியே வாய் குறுகிய குடுவை பாத்திரம் ஒன்றைக் கண்டது. அங்கே சென்று பார்த்தபோது அப்பாதிரத்தில் கொஞ்சத் தண்ணிர் இருந்ததைக் கண்டு மகிழ்வுற்றது. உடனே குடுவையின் விளிம்பில் அமர்ந்து, தன் அலகால் தண்ணீரைக் குடிக்கப் பார்த்தது. ஆனால் அதன் அலகிற்கு தண்ணீர் மட்டத்தை எட்ட முடியவில்லை. அதனால் பாத்திரத்தில் இருந்த நீரை காகத்தால் குடிக்க முடியவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என காகம் மனம் வருந்தியது. இதைவிட்டால் வேறு இடத்தில் தண்ணீர் கிடக்கவும் மாட்டாது என எண்ணி அதனை எப்படியாவது குடிக்க வேண்டுமென சுற்றுமுற்றும் பார்த்து யோசனை செய்தது. பக்கத்தில் சிறு சிறு கூழாங்கற்கள் கொட்டிக் கிடந்தன.உடனே அதற்கு ஒரு யுக்தித் தோன்றியது. ஒவ்வொரு கூழாங்கற்களாக எடுத்து. அதை அந்தக் குடுவையில் போட்டது. கூழாங்கற்கள் விழ,விழ..தண்ணீரின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் குடுவையின் வாயருகே தண்ணீர் வந்து விட்டது. உடன், அந்தக் காகம் தண்ணீரில் தன் அலகை வைத்து. தாகம் தீர தண்ணீர் அருந்தி மகிழ்ந்தது. எந்தப் பிரச்னையாயினும் அதற்கு ஒரு தீர்வு உண்டு. நமது புத்தியை பயன்படுத்தி,யோசித்து..தீர்வு கண்டால் பிரச்னை தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும்.
நான்கு நண்பர்கள் கூட்டாக பஞ்சு வியாபாரம் செய்து வந்தனர். அவர்களது பஞ்சுக்கடையில் ஏராளமான எலிகள் சேர்ந்து பஞ்சுப் பொதிகளை நாசமாக்கி விட்டன. எலிகளை ஒழிப்பதற்காகப் பூனை ஒன்றை வளர்க்கலாம் என்று நால்வரில் ஒருவன் அபிப்பிராயம் சொன்னான். மற்ற மூவரும் அவன் கருத்தை ஆதரித்தனர். நால்வருமாகச் சேர்ந்து ஒரு பூனையை வளர்க்க ஆரம்பித்தனர். பூனை வந்ததிலிருந்து எலிகளின் உபத்திரவம் குறைந்தது. இதன் காரணமாக நால்வருக்கும் பூனையின் மேல் மிகுந்த அன்பு ஏற்பட்டு விட்டது. பூனைக்குச் சகலவித உபசாரங்களும் செய்ய ஆரம்பித்தனர். அத்துடன் நில்லாமல் அதன் கால்களுக்குத் தண்டை கொலுசு முதலியன்வைகளை அணிவித்து அழகுபடுத்த நினைத்தார்கள். இதை நடைமுறைக்கு கொண்டு வரும்போது பல சிக்கல்கள் வந்தன. எனவே வியாபாரிகள் நால்வரும் பூனையின் நான்கு கால்களை ஆளுக்கு ஒன்றாகப் பங்கிட்டுக் கொண்டனர். அவரவர்க்குச் சொந்தமான கால்களில் தங்களுக்கு விருப்பமான அணிகலன்களைப் பூட்டி மகிழ்ந்தனர். ஒரு நாள் பூனை நொண்டிக் கொண்டே வந்தது. இதைப் பார்த்த வியாபாரிகளில் ஒருவன் தன் நண்பனிடம், "நண்பா, உனக்குச் சொந்தமான காலில் அடிபட்டு விட்டது. ஜாக்கிரதையாக மருந்து போட்டு குணப்படுத்து" என்றான். அந்தக் காலுக்கு உரியவனும் பூனையின் காயத்தைத் துடைத்து எண்ணெய்த் துணியால் அதைச் சுற்றி வைத்தான்.
புலவரை வென்ற தெனாலிராமன் ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார்.அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராதது கண்ட வித்யாசாகர் ஆணவமுற்றார். தன் அவையில் சிறந்தவர்கள் இல்லையோ என இராயருக்கோ வருத்தம்.அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து "பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான் தயார். இன்று போய் நாளை வாருங்கள்" என்றான். இதை கேட்டதும் மன்னருக்கும், மற்ற புலவர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.மறுநாள் இராமனை ஆஸ்தான பண்டிதரை போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தான். வாதம் ஆரம்பமாகியது. வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். அது என்னவாக இருக்கமுடியும்? என்று அவரால் ஊகிக்கமுடியவில்லை. எனவே "ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே! அது என்ன?" என்று கேட்டார்.இராமன் அவரை அலட்சியமாகப் பார்த்து, கம்பீரமாக "இது திலாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல். இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்!" என்றான்.வித்யாசாகருக்கு குழப்பம் மேலிட்டது. அவர் இது வரை எத்தனையோ நூல்களை படித்திருக்கிறார். கேட்டிருக்கிறார். ஆனால் இராமன் கூறியது போல் ஒரு நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் ஏற்பட்டது. அதனால் நயமாக "வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.அன்றிரவு வித்யாசாகர் பல்வாறு சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. ஆகவே அந்த இரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார்.மறுநாள் அனைவரும் வந்து கூடினர். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. விசாரித்த பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்திதான் கிடைத்தது. வெகு சுலபமாக அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர்.மன்னர் இராமனிடம் "இராமா! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்த என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு!" என்றார்.இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை. அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அதை கண்டதும் எல்லாரும் வியப்புற்றனர்.இராமன், "அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. இதன உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார்" என்று கூறிச்சிரித்தான். அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார்.
சென்னை மத்திய ரயில் நிலையத்தில் கூட்டம் அலை மோதியது. தமிழ்நாடு எக்ஸ்பிரசில் இருந்து ஒரு ராணுவ வீரர் இறங்கினார். பெட்டி படுக்கையோடு இறங்கி வேறு பிளாட்பாரத்திற்கு சென்றார். ஓராண்டுக்குப்பின் தாய் மண்ணை மிதித்த மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது. பார்த்திபன் - ஒரு ஆஸ்துமா நோயாளி. பதினைந்து ஆண்டுகளாக தரைப்படை போர் வீரனாக காஷ்மீர் எல்லையிலும், சிக்கிம் எல்லையிலும் பணியாற்றியவன், கடுமையான குளிராலும், மூச்சுத் திணரலாலும், அவதிப்பட்ட பார்த்திபனை, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கொச்சிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளான். மருத்துவ அடிப்படையில் அவன் "சி" வகுப்பு ஆஸ்துமா நோயாளி. எர்ணாகுளம் செல்லும் ரயிலில் ஏற வேறு பிளாட்பாரத்தில் வந்து உட்கார்ந்தான். தமிழ் நாளிதழ் வாங்கி ஆர்வமுடன் படித்தான். பார்த்திபனுக்கு சொந்த ஊர் பரமகுடி. அங்கு அவனது வயதான தாய், தந்தை, மனைவி, மகன், மகள் இருக்கிறார்கள். ஒரு காணி நிலம் உண்டு. சாப்பாட்டுக்கு நெல் கிடைக்கும். மாதா மாதம் இவன் அனுப்பும் பணத்தை எதிர்பார்க்கும் குடும்பம். மகன் ஐ.டி.ஐயிலும் மகள் எட்டாம் வகுப்பிலும் படிக்கிறார்கள். எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் வந்தது. உரிய இடத்தைத் தேடி அமர்ந்தான். சிற்றுண்டி வாங்கி வைத்துக்கொண்டான். கொச்சி பயிற்சி நிலையத்தில் ஸ்டோர்மேன் வேலையோ டெஸ்பார்ச் வேலையோ கொடுப்பார்கள் என்று சிக்கிமில் கர்னல் சொல்லி அனுப்பினார். தாய்மொழி தமிழாக இருந்தாலும் இந்தியில் சரளமாக பேசுவான். இன்னும் ஐந்து ஆண்டுகள். எப்படியாவது தள்ளிவிட்டால் பென்ஷன் கிடைக்கும். இந்த மாறுதல் கோரியதால் இன்னும் ஓர் ஆண்டுக்கு லீவில் போக முடியாது. வரும் ஆண்டிலாவது அப்பாவுக்கு கண் ஆபரேஷன் செய்யனும். கண் சரியா தெரியலேப்பான்னு போன லீவிலேயே சொன்னார். அம்மா யாரிடமும் சொல்லாமல் இலவச கண் சிகிச்சை முகாம் வந்தபோது கண்ணை உறித்து... கண்ணாடி பொறுத்திக்கொண்டு வந்துவிட்டார். கண் நன்றாகத் தெரிகிறதாம். அப்பா அங்கு போக பயப்படுகிறார்... என்று எண்ணியபடி சென்றான். காலை புலர... இரயில் கொச்சியில் நின்றது. கொச்சி இராணுவ அலுவலகம் சென்று ரிப்போர்ட் செய்தான். பார்த்திபன் புதிதாக வந்தவர்களின் ஸ்டாப் அணிவகுப்பில் கலந்து கொண்டான். புதியவர்களிடம் கமேண்டிங் ஆபிசர் அன்பாகப் பேசினார். பார்த்திபனுக்கு ஆறுதலாக இருந்தது. அவரிடம் பார்த்திபன். "ஐயா... நான் ஆஸ்துமா நோயாளிங்க..." என்றான். அதற்கென்ன? என்றார் அலுவலர். "பளுவான வேலை ஏதும் செய்யக்கூடாது", "ஓ... அப்படியா... அதற்கு வேலையை ராஜினாமா செய்துட்டு வீட்டுக்குப் போயிடு... இல்லன்னா... அன்பிட்ன்னு நீக்கிட வேண்டியதுதான்...", "ஏழை குடும்பங்க... என் சம்பளத்தை நம்பி ஐந்து பேர்கள் ஊரில் இருக்கிறார்கள்... ஐயா... கருணை காட்டுங்க..." என்று சொல்லியபடி சிக்கிமில் கொடுத்த மருத்துவ சான்றிதழைக் கொடுத்தான். அதை அலட்சியமாக வாங்கிப் பார்த்துவிட்டு, "சரி... சரி... பளு இல்லாத வேலையா தர்றேன் போதுமா?" என்றார் அங்கிருந்த சுபேதார் மேஜர். இவர்கள் உரையாடலை கவனித்த கர்னல் ஆபீசர், மேஜர், "இவனை என் ஆர்டர்லியாக போட்டு நாளை காலை எட்டு மணிக்கு என் பங்களாகவுக்கு அனுப்பி வை" என்று சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறி காற்றாய் பறந்தார். பார்த்திபன் திடுக்கிட்டான். "ஆர்டர்லி" வேலையா? இது நாள் வரை அவன் ஆர்டர்லி வேலை பார்த்ததில்லை. தன்மானமுள்ள எந்த படைவீரனும் விரும்பாத வேலை ஆர்டர்லி வேலை. தன்மானமுள்ள எவனும் செய்ய அருவருக்கும் வேலை அது. எத்தனையோ துயரங்களும், துன்பங்களும் இருந்தும் கூட தன்மானமில்லாத வேலையை அவன் செய்ய நேர்ந்ததில்லை. ஐயா... இந்த வேலை... வேண்டாங்க... என்று சொல்ல அவன் உதடுகள் துடித்தன. கர்னல் அவர்களின் தோற்றம் அவனைக் கேட்க இயலாமற் செய்துவிட்டது. அவன் பணியில் சேர்ந்த அன்றே... கர்னல் மிகவும் கண்டிப்பானவர்... ஈவு இரக்கமற்றவர்... என்று கேள்விப்பட்டிருக்கிறான். முதல் நாளே அவரிடம் கெட்ட பெயர் எடுக்கக்கூடாது என்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான். முறையான முறையில் தன் வேண்டுகோளை விண்ணப்பமாக கர்னல் அவர்களுக்கு அனுப்பலாம் என்று அவன் முடிவு செய்தான். அன்று மாலை ரோல்காலின் போது பார்த்திபன் தன் கோரிக்கை மனுவுடன் சுபேதார் மேஜரைத் காணச் சென்றான். மேஜர் தன் புருவத்தை உயர்த்தி, "என்ன" என்றார். "ஐயா இந்த ஆர்டர்லி வேலை வேண்டாங்க...", "ஓகோ வேறு என்ன வேலை வேண்டும்? உம். உதவி கேப்டன் லீவில் இருக்கிறார்.... அவர் வேலையை உனக்குத் தரட்டுமா?" என்று கோபமாகவும் கிண்டலாகவும் கேட்டார். அமைதியாக நின்றிருந்தான் பார்த்திபன். "உம் ... சொல்... எனக்கு தலைக்குமேல் வேலை இருக்கிறது." இதைக் கேட்ட சுபேதர் மேஜர், கோபமாக எழுந்து நின்று, "போடா... என் முன் நிற்காதே.... நாளை காலையில் கர்னல் ஐயா பங்களாவிற்குப் போய் ரிப்போர்ட் செய்... உம்... போ..." பார்த்திபன் வேறு வழி இல்லாமல் வருத்தமுடன் திரும்பினான். அவன் இதுவரை ஆர்டர்லி வேலை செய்ததில்லை. ஆனால் வேலை செய்தவர்கள் எவ்வளவு துன்பப்பட்டார்கள் என்பதை சிக்கிமில் கேள்விப்பட்டிருக்கிறான். அவனுடைய துயரங்களை செவிமடுத்துக் கேட்க இவ்வுலகில் எவருமில்லை. கடுமையான குளிராக இருந்தாலும் சிக்கிமிலேயே தொடர்ந்து வேலை செய்திருக்கலாம். இங்கு வந்து மாட்டிக்கொண்டோமே என்று பார்த்திபன் கண்கள் பனித்தன. இராணுவம் என்பது ஒரு பெரிய உலகம். மனிதர்களும் மிருகங்களும், புழுக்களும் வாழ்கின்ற ஓர் உலகம். சிப்பாய் அந்த உலகத்தின் வெறும் ஒரு புழு தான். ஒரு சிப்பாய் வேறு என்னதான் செய்ய முடியும்? கட்டளைக்குப் பணியத்தானே வேண்டும். பார்த்திபனுக்குப் பரிந்து பேச யார் உள்ளார்கள்? "உனக்கிடும் கட்டளைப்படி நட - அவை சரியா? தவறா?" என்று யோசிக்க வேண்டியதில்லை... என்றும் சிக்கிமில் வங்காள கர்னல் கூறியது அவனுக்கு நினைவுக்கு வந்தது. தன் அறைக்கு வந்தான். தான் சிக்கிமில் இருந்து கொச்சிக்கு மாறுதல் அடைந்ததையும், பிள்ளைகள் படிப்பு பற்றியும் அப்பா, அம்மா நலன் பற்றியும் மனைவிக்கு கடிதம் எழுதினான். தன் துன்பங்களை எழுத அவனுக்கு மனம் துணியவில்லை. அமைதியின்றி அன்று இரவு கழிந்தது. மறுநாள் காலை தனக்கு இடப்பட்ட கட்டளையின்படி சிப்பாய் பார்த்திபன் தன் சீருடை அணிந்து கர்னல் பங்களாவிற்குச் சென்றான். அழகான பங்களா. எதிரில் தோட்டம். பின்பக்கம் வேலைக்காரர்களுக்கான சிறு கொட்டகை தென்பட்டன. கார்ஷெட். சாம்பல் நிறமான பெரிய நாய் ஒன்று சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. இவனைப் பார்த்ததும் எழுந்து குலைத்தது. அங்கிருந்த ஒரு அலுவலர் "என்ன வேண்டும்...?", "யார் நீ?" என்று கேட்டார். தன் நியமனக் கடிதத்தை அவரிடம் நீட்டினான். அதன் பிறகு தன்னை கர்னல் வீட்டு ஆர்டலியாக ரிப்போர்ட் செய்து கொண்டான். பின்னால் தோட்டம் இருக்கிறது. போய் தண்ணீர் பாய்ச்சு. அங்கே ரப்பர் குழாய் இருக்கிறது... போ... என்று பணித்தார். அங்கிருந்த பூச்செடிகளுக்கும், காய்கறி, கீரைச் செடிகளுக்கும் சில மூலிகைச் செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான். ஒரு மணி நேரம் கழித்து கர்னல் மனைவி கூப்பிடுவதாக ஒரு வேலைக்காரன் வந்து சொன்னான். உடனே அங்கு சென்றான். "நீ தான் புது ஆர்டர்லியா?" என்று கேட்டாள் கர்னல் மனைவி. "ஆமாம் மேடம்", "உன் பெயர் என்ன", "பார்த்திபன்", "ஓ ... மதறாஸ்காரனா... சரி... கடைக்குப் போய் ஆட்டு இறைச்சி அரைக்கிலோ, வஞ்சிர மீன் அரைக்கிலோ வாங்கிக் கொண்டு சீக்கிரம் வா... அப்படியே சுத்தம் செய்துகொண்டு வா..." என்று கூறிவிட்டு ரூபாயும் கூடையையும் கொடுத்தாள். அவள் தோற்றம் ஒரு முரட்டுப் பெண்ணை நினைவுப்படுத்தியது. அங்கிருந்த சைக்கிளை எடுத்துப்போகுமாறு அங்கிருந்த அலுவலர் சொல்லவே சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றான். கூட்டம் அதிகமாக இருந்ததால் காலதாமதமாகியது. இறைச்சியும் மீனும் வாங்கி பக்குவமாக வெட்டி, ஆய்ந்து எடுத்துவர நேரமாகிவிட்டது. வீட்டில் அழைப்பு மணியை அழுத்தினான். வெளியே வந்த கர்னல் மனைவி, "முட்டாள்... இதற்கு இவ்வளவு நேரமா? முன்பு இருந்த கிழவனே தேவலை... நீ கடைக்குப்போய் ஒரு மணி நேரம் ஆகிறது... எப்போ சமைச்சு எப்போ சாப்பிடறது... முழியைப் பாரு..." என்று பார்த்திபனை திட்டிவிட்டு கூடையையும், மீதி சில்லரையையும் அவனிடமிருந்து வாங்கிக்கொண்டு திரும்பியவள், "ஏய்... இங்கே வா... பின்பக்ககேட்டைத் திறந்து அங்குள்ள துணிகளைத் துவைத்து மாடியில் காய வை.... துணிக்கு கிளிப்போடு... உம்... போ... ஏன் நிற்கிறாய்...". பார்த்திபன் பின்பக்கம் அமைதியாகச் சென்றான்... அங்கு கர்னலின் இரண்டு பெண் குழந்தைகளின் பள்ளி சீருடைகளும், கர்னல் பேண்ட், சண்டைகளும், கர்னல் மனைவி சேலைகள் இரண்டும் சோப்புத்தூள் நீரில் போடப்பட்டிருந்தது. எல்லாத் துணிகளையும் துவைத்து, நீலமிட்டு மாடியில் காயவைத்துவிட்டு, துவைத்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்தான். அப்போது ஒரு பணியாள் வந்து, "தோட்டத்தில் பூண்டு, வேண்டாத புல்கள் நீக்கச் சொன்னார்கள்" என்று சொல்லிவிட்டு மண் வெட்டியைக் கொடுத்துவிட்டுச் சென்றான். அப்போது ஜீப்பில் இருந்து கர்னல் இறங்கினார். வேண்டாத புல் பூண்டுகளையும், சில செடிகளையும் பார்த்திபன் நீக்கிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த கர்னல், "டேய் முண்டம் அறிவிருக்கிறதா? உனக்கு சிறியாநங்கைச் செடியையும், கரிசலாங்கண்ணிச் செடியையும் ஏண்டா இப்படி சீவி போட்டே... ராஸ்கேல்..." என்று கோபமாகத் திட்டினார். செய்வதறியாமல் திகைத்தான் பார்த்திபன். "போடா... அந்த பக்கம் போடா... அங்கிருக்கிற பூண்டுகளைக் கொத்திப் போடு... மூலிகைச் செடிகளையெல்லாம் வெட்டிப் போட்டுட்டேயடா... அம்மா பார்த்தாங்கன்னா உன்னை திட்டுவாங்க... போ... போ..." என்றார் கர்னல். அவனுக்குத் தாங்க முடியாத துயரம் உண்டாயிற்று. துயரப்படுவதால் என்ன பயன்? எல்லாமே சகிக்க வேண்டியதுதான் என்று எண்ணியபடி பூண்டுகளை வெட்டிக் கொண்டிருந்தான். மறுநாள் காலை பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் பூட்சுகளையும், கர்னல் பூட்சுகளையும் கர்னல் மனைவியில் செருப்புகளையும் சுத்தம் செய்து பாலீஷ் போடும் வேலை. கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. துக்கம் நெஞ்சை அடைத்தது. வேலையை செய்து முடித்தான். பெருமூச்சு வெளிப்பட்டது. மூன்று மாதங்கள் கடந்தன. குளிக்கும் அறையையும், கக்கூசையும் சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்தான். இடுப்பு எலும்பு விண் விண் என்று வலித்தது. "ஏய்... பார்த்திபன்..." என்று கர்னல் மனைவியின் குரல் கேட்டு திரும்பினான். "அந்தத் துணிகளைத் துவைத்துப்போடு..." என்றாள். அங்கிருந்த துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் அருகில் கர்னல் மனைவியின் உள்ளாடை ஒன்று வந்து வீழ்ந்தது. பார்த்திபன் திரும்பிப் பார்த்தான். கர்னல் மனைவி நின்று கொண்டிருந்தாள். "என்ன பார்க்கிறாய்... அந்த பாவாடையையும் தோய்த்து காய வை..." என்றாள். பார்த்திபனுக்கு உடல் சிலித்தது... உடல் கூனிக் குறுகியது. "என்னால் இதைத் துவைக்க முடியாது..." என்றான் பார்த்திபன். "கழுதை... எருமை மாடே... அதைத் துவைத்தால் உன் கை தேய்ந்து போய்விடுமா?", "முடியாது உன் உள்ளாடையெல்லாம் என்னால் தோய்க்க முடியாது?" அவன் எழுந்து போகும்போது... சற்று கரை வழுக்கியது... "நீ தேய்த்த லட்சணத்தைப் பார்... ரொம்ப திமிர் உனக்கு" அங்கே ஒரு கணமும் நிற்காமல் தன் யூனிட் லைனிற்கு வந்தான். அங்கு சுபேதார் மேஜர் ஒரு வார இதழை புரட்டிக் கொண்டிருந்தார். என்ன?! என்று கேட்பது போல் நிமிர்ந்து பார்த்தார். "ஐயா என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் கர்னல் வீட்டு ஆர்டர்லி வேலையை என்னால் செய்ய முடியாது ஐயா..." என்று மிகவும் பணிவுடன் கூறினான். "என்னடா பார்த்திபன்... என்ன நடந்தது சொல்.", "அய்யா, கர்னல் ஐயா துணிகள், குழந்தைகள் துணிகள், கர்னல் மனைவி சேலைகள் கூட அலசிப் போட்டேன். பூட்ஸ் செருப்புகளுக்கு பாலிஷ்கூட போட்டேன். தோட்ட வேலையும் செய்தேன். ஆனால் ஐயா கர்னல் மனைவியோட உள்பாவாடையை என்னால் தோய்க்க முடியாது. நீங்கள் எல்லோரும் சேர்ந்து தூக்கிப் போட்டாலும் சரி" என்றான் பார்த்திபன். தன்மானக் குமுறலின் வெடிப்பாக வெடித்தது. செய்வதறியாமல் மேஜர் அமர்ந்திருந்தார். "சரி... சரி... உணர்ச்சி வசப்படாதே... நீ உன் பராக்சுக்குப் போ மாலையில் வா... யோசித்துச் சொல்கிறேன்." என்றார் மேஜர். இனி கர்னல் வீட்டிற்குப் போவதில்லை என்ற முடிவுடன் தன் பராக்சுக்குச் சென்று கட்டிலில் படுத்து வாய்விட்டு அழுதான். சிலர் அவனை வந்து தேற்றினார்கள். உடம்பு அனலாய் கொதித்தது. இரண்டு நாட்கள் விடுப்புக்கு விண்ணப்பித்தான். கேம்ப் போயிருந்த கர்னல் வீடு திரும்பியதும் கர்னல் மனைவி, ஆர்டர்லி தன்னை அவமானப்படுத்திவிட்டதாக புலம்பினான். சமயம் வரும்போது அவனை பழிவாங்க வேண்டும் என்றாள் அவள். மறுகணமே கர்னல் சுபேதார் மேஜரைக் கூப்பிட்டு, "பார்த்திபனை நாளையிலிருந்து ஆர்டர்லி வேலைக்கு இங்கு அனுப்ப வேண்டாம்" என்றார் கர்னல்.. இரண்டு நாட்கள் கழித்து சுபேதார் முன் ரிப்போர்ட் செய்தான். "உன்னை மெயின்கேட் வாயிற்காப்போனாக நியமிக்கப்பட்டு உள்ளது. போய் வேலையைப் பார்..." என்றார். "வேலை எளிதான வேலை. இராணுவ ஜீப், லாரி, கார் வந்தால் திறந்துவிட வேண்டும். பிறகு மூடிவிட வேண்டும். மற்ற காரோ, ஜீப்போ, லாரியோ வந்தார் திறக்கக் கூடாது. ஆனால் தினமும் பெரிய பெரிய அதிகாரிகள் போவதும், வருவதுமான வழி அது... ", "தூய்மையான சீருடையுடன் ஆர்.பி. என்ற பாட்ஜைக் கட்டிக்கொண்டு அந்த வழியாக வந்து போகிற ஆபிசர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும். அதுவும் கர்னல் போன்ற அதிகாரிகள் வந்தால் மிடுக்கா சல்யூட் அடிக்க வேண்டும். கவனக்குறைவாக இருக்கக் கூடாது. சிறு சுழல் கேட் வழியாக வெளியார் புகுவதையும் அனுமதிக்கக்கூடாது. மிகவும் பொறுப்பான வேலை. இரவு பகல் மாறி மாறி பணியாற்ற வேண்டும்..." என்று சுபேதார் நீண்ட அறிவுரை கூறினார். பணியில் சேர்ந்த அன்று மதியம் கர்னல் அவ்வழியே சென்றார். பார்த்திபன் மிடுக்காக நின்று சல்யூட் அடித்தான். அவர் தனக்குள் சிரித்துக்கொண்டே போய்விட்டார். வீட்டுக்குச் சென்ற கர்னலை அவர் மனைவி "அந்த மடையனுக்குத் தண்டனை கொடுத்து விட்டீர்களா?" என்றாள். "அவன் இப்பொழுது உள்ள டூயூட்டி தவற இடமுண்டு... அப்போது தான் பிடிக்க வேண்டும்... சரியான நேரம் வரட்டும்... அவன் வயிற்றில் அடிக்க வேண்டும்..." என்றார் கர்னல். பார்த்திபன் தன் பணியினை ஒழுங்காகச் செய்ததால் யாரிடமும் எந்த ஏச்சும் பேச்சும் வாங்கவில்லை. ஒரு மாதம் முடிந்தது. வீட்டிற்கு டி.டி. எடுத்து அனுப்பிவிட்டு அறைக்கு வந்தான். மகள் வான்மதி பெரியவளாகிவிட்டதையும், பசுமாடு கன்று ஈன்றுள்ளதையும் மனைவி எழுதி இருந்தாள். காலையிலிருந்தே தலைவலியாக இருந்தது படுத்து எழுந்து மாலை 6 மணிக்கு டுயூட்டியில் சேர்ந்தான் பார்த்திபன். அப்போது கர்னல் மனைவி, தன் பெண்களுடன் ஜீப்பில் வந்ததை பார்த்திபன் கவனிக்கவில்லை. ஓட்டுனர் இரண்டு முறை ஒலி எழுப்பிய பிறகு கேட் திறக்கப்படவில்லை. மூன்றாம் முறையாக ஒலி எழுப்பிய பிறகு அவசர அவசரமாக ஓடி வந்து திறந்தான். மகள் வயது வந்த செய்தியும் பணம் அனுப்பியது சடங்கு செய்ய போதுமா? என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்த பார்த்திபன் முதலில் கவனிக்கவில்லை. ஜீப் கேட்டைத் தாண்டிச் சென்றபோது ஏதோ முணுமுணுத்தபடி கர்னல் மனைவி சென்றாள். இதை கர்னலிடம் அவள் சொல்லி விடுவாளோ என்று பார்த்திபன் பயந்தான். அவன் எண்ணியபடியே கர்னல் மனைவி இரவு கர்னல் வந்ததும் நடந்ததைக் கூறினாள். "அவன் என்னை வேண்டுமென்றே மதிக்கவில்லை. அலட்சியமாக இருந்தான்" . என்று தாம் தீம் என்று குதித்தாள். "விடியட்டும் கேட்கிறேன்" என்று சாதாரணமாகச் சொன்னார் கர்னல். ஆனால் கர்னல் மனைவி தன் உணர்வை தன் கணவர் புரிந்து கொள்ளவில்லை என்று மிகவும் கோபப்பட்டாள். அன்றிரவே படுக்கைப் புரட்சி செய்தாள். கர்னலுக்கு பார்த்திபன் மேல் கோபம் வந்தது. எவ்வளவோ எச்சரிக்கையாக இருந்தும் இப்படி கர்னல் மனைவி வரும்போது கேட் திறக்காமல் இருந்து விட்டோமே! என்று வருந்தியபடி இருந்தான். மூன்று நாட்கள் கழிந்தது. பகல் ஒரு மணியளவில் கர்னல் உணவிற்காக வீட்டிற்குப் போகும் நேரம் என்பதால் பார்த்திபன் எச்சரிக்கையாய் நின்றிருந்தான். அப்போது எங்கேயோ இரண்டு முறை துப்பாக்கிச்சுடும் ஒலி கேட்டது. திரும்பிப்பார்த்தான். அந்த சிறு இடைவெளியில் கர்னல் கார் வந்து விட்டது. ஓடிப்போய் கதவைத் திறந்தான். ஆனால் கர்னலுக்கு சல்யூட் அடிக்க மறந்துவிட்டான். மெயின் கேட்டைத் தாண்டி வந்த ஜீப் மீண்டும் பின்புறமாகவே வந்து நின்றது. உடனே பார்த்திபன் தட்டுத் தடுமாறி மிடுக்காக சல்யூட் அடித்தான். "ஜீப்பை உன் பக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தினால்தான் நீ எனக்கு சல்யூட் அடிப்பாயோ" என்று கர்ஜித்தார் கர்னல். பார்த்திபன் நாக்கு செயலிழந்து நின்றது. ஒலி வெளியே வரவில்லை உடலில் சிறு நடுக்கம் ஏற்பட்டது. "முதலில் நான் போன போது நீ என்ன பிணமாக நின்று கொண்டிருந்தாய்..." உம் என்றார் கர்னல். "மன்னிக்க வேண்டும் சார்... துப்பாக்கி சத்தம் கேட்டது. அதான்". "ஓகோ... அப்படியா?... காஷ்மீர், சிக்கிம் பார்டரில் இருந்து வந்தவன் துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் தடுமு‘றிவிட்டே.. உன்னையெல்லாம் வார் நடக்கிற இடத்துக்கு அனுப்பினால் என்னடா செய்வாய்... பிளடி ராஸ்கேல்... ஸ்டுபிட்..." என்றார் கோபமான. கேட் அருகே கர்னல் ஜீப் நிற்பதைக் கண்டு சுபேதார் மேஜர் திடுக்கிட்டு ஓடிவந்தான். "என்ன மேஜர்! இந்த ரெஜிமெட்டின் ஒழுங்கு முறை லட்சணத்தைப் பார்த்தாயா? ஒரு கர்னலுக்கு ஒரு சாதாரண சிப்பாய் சல்யூட் கூட அடிப்பதில்லை" என்றார் கர்னல். பார்த்திபன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். "அடிமுட்டாளே... உளராதே!" என்று மேஜர் பார்த்திபனை அடிக்க கை ஓங்கினான். பார்த்திபன் கர்னலை நேருக்குநேர் முறைப்பாகப் பார்த்தான். "என்னடா முறைக்கிறாய்... மேஜர் நாளை காலை இவனை என் முன்னால் மார்ச் செய்யவை..." என்று கூறிவிட்டு கர்னல் ஜீப்பில் வேகமாகச் சென்றுவிட்டார். கர்னல் ஜீப் சென்றபிறகு மேஜர் பார்த்திபனை கண்டபடி திட்டினான். தன் விதியை எண்ணி பார்த்திபனை மௌனமானான். கண்களில் கண்ணீர் பெறுகியது. மறுநாள் ஜெனரல் மார்ச் நடைபெற்றது. கர்னல் உரை, அன்று பார்த்திபனை சுற்றியே வந்தது. "ஒரு சிப்பாய் எங்கோ வெடிக்கும் துப்பாக்கி சத்தத்திற்கு தன் கவனத்தை சிதறவிடுகிறான். இப்படி யாரோ ஒரு தீவிரவாதி இவன் இப்படி கவனமில்லாமல் இருக்கும்போது நுழைந்துவிட்டால் நிலைமை என்ன ஆகும்." தன்னைத்தான் இப்படி மறைமுகமாக குறிப்பிட்டு சொல்கிறார் என்று சாதாரணமாக எண்ணினான். அன்று மாலை பார்த்திபன் பணியில் ஒழுங்கீனமாக இருந்ததால் பதினைந்து நாட்களுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு ஆணை வழங்கப்பெற்றது. இராணுவத்தில் பதினைந்து நாட்கள் கடுங்காவல் தண்டனை என்றால் பதினைந்து நாட்களுக்கு ஊதியம் கிடையாது. கடுமையான வேலை வாங்கப்படும். அந்த வேலையில் மலம் அள்ளும் தோட்டி வேலையும் அடங்கும். பார்த்திபனுக்கு இரத்தம் கொதித்தது. எரிமலைபோல் பொங்கி வழிந்தது. கர்னலையும் அவன் மனைவியையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திவிட்டுத் தானும் மாய்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆத்திரம் கொண்டான். மிகவும் சாதாரணக் குற்றத்திற்காக இப்படி வயிற்றில் அடித்துவிட்டானே என்று மனம் குமுறியது. ஆனால் கண்முன் வயதான பெற்றோரும் மனைவி மக்களும் நிழலாட கண்களில் கண்ணீர் பெறுகியது. மறுநாளே பார்த்திபன் இராணுவச் சிறையில் அடைக்கப்பட்டான். அவனுக்கு மலம் அள்ளும் வேலை பணிக்கப்பட்டது. நரக வேதனையை அனுபவித்தான். இந்த மாதம் பாதி சம்பளமே கிடைக்கும் என்று எண்ணியபடி சிறையில் படுத்திருந்தான். கர்னல் தன் அன்பு மனைவியிடம் "பார்த்திபனுக்கு கடுமையான தண்டனை கொடுத்துவிட்டேன்... பதினைந்து நாட்களுக்கு சம்பளம் பிடித்தம். வேலை என்ன தெரியுமா? மலம் அள்ளும் வேலை. நம் வீட்டுக்கு வருவான்" என்று எக்காளமாய் சிரித்தான் கர்னல். கர்னல் மனைவி மிகவும் மகிழ்ந்தாள். உடனே கணவனிடம் "இதை மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும்... சினிமாவுக்குப் போகலாம்... சாப்பாடு வெளியில்... போகலாமா?" என்றாள் கர்னல் மனைவி. "பாட்டல் இருக்கா...", "ஓ... இருக்கே..." இருவருமே நன்றாகக் குடித்துவிட்டு எர்ணாக்குளம் கிளம்பினார்கள். ஜீப்பை கர்னல் ஓட்டிக்கொண்டு வந்தான். அவன் அருகில் கர்னல் மனைவி. குழந்தைகள் வீட்டிலேயே கார்டூன்பார்க்க நின்றுவிட்டார்கள். விடியற்காலை எங்கும் பரபரப்பாகக் காணப்பட்டது. பார்த்திபன் அலுவலக கக்கூசைக் கழுவிக் கொண்டிருந்தான். ஒரு சிப்பாய் ஓடிவந்து. "பார்த்திபா... விஷயம் தெரியுமா? கர்னலும், கர்னல் மனைவியும் ஜீப்பில் போகும்போது இரும்பு பாலத்தில் எதிரில் வந்த லாரி மேல் மோதி பலத்த காயங்களுடன் இராணுவ மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளார்களாம்... காலையில் தான் தெரியுமாம்..." பார்த்திபனுக்கு ஒன்றுமே புரியவில்லை. "என்னப்பா சொல்கிறாய்... நம்ம கர்னலா" என்றார் பார்த்திபன். "ஆமாம் பார்த்திபா... போன வருஷம் என்னையும் இப்படித்தான் பழிவாங்கினான். இந்த ஆண்டு நீ. பாவத்துக்குத் தண்டனை கிடைத்து விட்டது..." மற்றொரு சிப்பாய் வந்தான். "தெரியுமா ... கர்னலின் வலது கை துண்டித்து எடுத்துவிட்டார்களாம்... கர்னல் மனைவிக்கு இன்னும் சுய நினைவு வரலையாம். அவனால் பழிவாங்கப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா? பார்த்திபா நம்ம ரெஜிமென்ட் பூரா இதே பேச்சுதான் பாவத்தின் தண்டனையை இறைவன் உடனே கொடுத்துவிட்டானே" என்றான். பார்த்திபன் அப்படியே உறைந்துபோனான்.
தன்னுடைய தர்பாருக்கு விசாரணைக்காக வரும் வழக்குகளில் பலவற்றை அக்பர் பீர்பாலிடம் ஒப்படைப்பதுண்டு. ஒருநாள், அக்பரின் அனுமதியுடன் தர்பாருக்கு வந்த மதுசூதன் என்ற வியாபாரி அவரை வணங்கியபின், “பிரபு! என் பெயர் மதுசூதன்! நான் ஒரு நெய் வியாபாரி! ஒரு மாதத்திற்கு முன் அஸ்லாம்கான் எனும் என் நண்பன் என்னிடம் வந்து 20 முகராக்கள் கடன் கேட்டான். பதினைந்து நாள் களுக்குள் திருப்பித் தருவதாகச் சொன்னவன் இதுவரை அதைத் திருப்பித் தரவேயில்லை” என்றார். “நீ கொடுத்த கடனுக்கு அவனிடம் இருந்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறாயா?” என்று அக்பர் கேட்டார். “அஸ்லாம்கானை எனக்கு இருபது வருடங்களாகத் தெரியும். அதனால் கடன் பத்திரத்தில் கையெழுத்து வாங்கவில்லை. ஆனால் நான் சொல்வது உண்மை!” என்றார். உடனே பீர்பாலின் பக்கம் திரும்பிய அக்பர், “பீர்பால்! இந்த வழக்கை நீ கவனிக்கிறாயா?” என்று கேட்டார். அதற்குச் சம்மதித்த பீர்பால் மாலையில் மதுசூதனைத் தன் வீட்டில் சந்திக்கச் சொன்னார். மாலையில் மதுசூதன் வீட்டிற்கு வந்ததும், அவரை நடந்தவற்றை மீண்டும் விளக்கச் சொன்னார். அவர் சொன்னதெல்லாம் கேட்டபிறகு, “ஆக, நீங்கள் அஸ்லாமுக்குக் கடன் கொடுத்ததற்கு அத்தாட்சி எதுவும் இல்லை. சாட்சிகளும் இல்லை” என்றார் பீர்பால். அதற்கு மதுசூதன், “ஆமாம்!” என்றார். அவருக்கு தைரியமளித்து அனுப்பியபின், பீர்பால் அஸ்லாம் கானைத் தன்னை சந்திக்கும்படி தகவல் அனுப்பினார். சற்று நேரத்தில் நல்ல உடை அணிந்த வாட்டசாட்டமான ஓர் ஆள் பீர்பாலைத் தேடி வந்தார். “நான் தான் அஸ்லாம்கான்! என்னை வரச் சொன்னீர்களாமே!” என்றார். “உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். உங்கள் மீது ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார். அதைப்பற்றி உங்களை விசாரிக்க வேண்டும்” என்றார் பீர்பால். “என் மீது புகாரா? நான் மிகவும் நாணயமானவன்! என் மீது புகார் வர சிறிதும் வாய்ப்பு இல்லையே!” என்றான் அஸ்லாம். மதுசூதன் அவர் மீது தொடுத்து உள்ள வழக்கைப்பற்றி பீர்பால் விவரித்ததும், “நான் ஏன் அவரிடம் இருந்து கடன் வாங்க வேண்டும்? எனக்கு ஏராளமாக சொத்து இருக்கிறது. நெய் வியாபாரத்தில் நல்ல லாபமும் சம்பாதிக்கிறேன். மதுசூதன் என் மீது வீணாகப் பழி சுமத்துகிறான்” என்றான் அஸ்லாம். “இருக்கலாம்! ஆனால் வழக்கு என்று வந்து விட்டபின் அதை நன்கு விசாரிக்க வேண்டியிருக்கிறது” என்றார் பீர்பால். “அல்லா எனக்கு ஏராளமான செல்வத்தை வழங்கி இருக்கிறார். எனக்கு யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அஸ்லாம் அடித்துக் கூறினார். உடனே பேச்சை மாற்றிய பீர்பால், “அஸ்லாம்! உங்களால் எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா?” என்றார். “சொல்லுங்கள்” என்று அஸ்லாம் கூற, “கிராமத்திலுள்ள என் நண்பனிடம் எனக்கு ஒரு டின் நெய் அனுப்பச் சொன்னேன். அவன் இரண்டு டின் அனுப்பி விட்டான். ஒரு டின் நெய்யை எங்காவது விற்று விட்டால் நல்லது” என்றார் பீர்பால். “அதை என்னிடம் கொடுங்கள். அதை விற்றுப் பணத்தை உங்களுக்கு அனுப்புகிறேன்” என்றான் அஸ்லாம். “நன்றி! நாளைக்கே உங்கள் கடைக்கு ஒரு டின் அனுப்பி வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு பீர்பால் அவரை அனுப்பி வைத்தார். மறுநாள், மதுசூதன் வீட்டுக்குச் சென்ற பீர்பால், அஸ்லாம்கானிடம் கூறியதுபோல் கூறிவிட்டு நெய்யை விற்றுத்தரமுடியுமா என்று கேட்டார். மதுசூதனும் அதற்கு ஓப்புக் கொண்டதும், இரண்டு பேர் கடைக்கும் இரண்டு நெய் டின்கள் அனுப்பப்பட்டன. மறுநாள் பீர்பால் தன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கையில், மதுசூதன் மூச்சிரைக்க ஓடிவந்தார். “பீர்பால்! நீங்கள் அனுப்பியிருந்த டின்னில் ஒரு பொற்காசு இருந்தது. அதைக் கொடுக்க வந்தேன். நெய் விற்ற பணம் இதோ!” என்று அவர் மொத்தத்தையும் பீர்பாலிடம் தந்தார். “அட! நான் அனுப்பிய டின்னில் பொற்காசு இருந்ததா? நான் மிகவும் அதிருஷ்டசாலி! நன்றி, மதுசூதன்” என்றார் பீர்பால். “அதிருக்கட்டும். என்னுடைய வழக்கு என்ன ஆயிற்று?” என்று மதுசூதன் கேட்க, “அதுவா! நான் விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறேன். நாளைக்கு முடிவு தெரியும்” என்றார் பீர்பால். அடுத்த நாள் பீர்பால் வீட்டுக்கு வந்த அஸ்லாம் “உங்களுடைய நெய் விற்ற பணம் இதோ!” என்று பணத்தை அளித்தார். அவருக்கு நன்றி தெரிவித்தப்பின் அவரை உட்காரச் சொல்லிவிட்டு பீர்பால் தன் வேலைக்காரனை அழைத்து அவன் செவிகளில் ரகசியமாக ஏதோ கூறினார். அவர் என்ன கூறினார் என்று அஸ்லாமின் செவிகளில் விழவில்லை. அதைப்பற்றி அவன் பொருட்படுத்தவும் இல்லை. பீர்பால் தன் வேலைக்காரனிடம் ரகசியமாகக் கூறியது இதுதான்! “நேராக நீ அஸ்லாமின் வீட்டுக்குப் போ! அவருடைய மகனைக் கூப்பிடு! அவனுடைய தந்தை பீர்பாலின் வீட்டிலிருப்பதாக கூறு! பிறகு நெய் டின்னில் இருந்த ஒரு பொற்காசை எடுத்துவர மறந்து விட்டதாகவும், அதை உடனடியாக எடுத்து வரவும் அவன் தந்தை கூறியதாகச் சொல்!” என்றார். வேலைக்காரனை அஸ்லாமின் வீட்டுக்கு ரகசியமாக அனுப்பியபின், பீர்பால் தன் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அஸ்லாமிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு வேண்டும் என்றே காலத்தைக் கடத்தினார். சற்று நேரத்தில் அஸ்லாமின் மகனுடன் பீர்பாலின் வேலைக்காரன் திரும்பினான். அந்தச் சிறுவன் அஸ்லாமை நோக்கி ஓடிவந்து, “அப்பா! நீங்கள் எடுத்துவரச் சொன்ன பொற்காசு இதோ! இது நமக்கு நேற்று நெய் டின்னில் கிடைத்தது” என்று உண்மையை உளறிவிட, அஸ்லாம் கோபத்துடன் “அதிகப்பிரசங்கி! உன்னை யார் இங்கே வரச்சொன்னது? நெய் டின்னில் பொற்காசா? நீ என்ன மடத்தனமாய் உளறுகிறாய்?” என்று உண்மையை மறைக்க அரும்பாடு பட்டார். “அவனை ஏன் மிரட்டுகிறீர்கள் அஸ்லாம்? பையன் உண்மையைத் தான் கூறுகிறான். நீங்கள்தான் மூடி மறைக்கிறீர்கள். இந்தப் பொற்காசை நான்தான் நெய் டின்னில் வைத்தேன். உங்களை சோதிப்பதற்காகத்தான் அதைச் செய்தேன். இனியும் பொய் பேச முயன்றால், உங்கள் தலை போய்விடும்” என்று பீர்பால் மிரட்ட, அஸ்லாம் உண்மையை ஒப்புக் கொண்டு பொற்காசை பீர்பாலிடம் திருப்பித் தந்தார். “சரிதான்! நீங்கள் மதுசூதனிடம் கடன் வாங்கிய 20 முகராக்களையும் இதேபோல் என்னிடம் திருப்பித் தந்துவிடுங்கள்” என்றார் பீர்பால். “நான் மதுசூதனிடம் கடன் வாங்கவே இல்லை” என்று அஸ்லாம் பழைய பல்லவியைப் பாட, இதைக் கேட்டதும் பீர்பால் “அஸ்லாம்! இனியும் பொய் பேசினால், உங்களுக்கு தூக்கு தண்டனை நிச்சயம்!” என்று அஸ்லாம் கானை பயமுறுத்த, அவன் உண்மையை ஒப்புக்கொண்டு கடனைத் திருப்பிக் கொடுப்பதாகக் கூறி பீர்பாலிடம் மன்னிப்புக் கேட்டு, வாங்கிய கடனை மொத்தமாக திருப்பி அளித்தான். பீர்பாலின் புத்திசாலித்தனத்தை, அக்பர் வெகுவாகப் பாராட்டினார்.
நாளுக்குநாள் மெலிந்து கொண்டே போகும் தினசரிக்காலண்டராய் இளைத்துப் போன தேகம். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலவையை ஆசைத்தீரச் சேர்த்து கடைவாயில் அதப்பும் தாம்பூலம். வாய் அசைபோட அசைபோட தாம்பூல எச்சிலில் குளித்த கருஞ்சிவப்பு உதடுகள். மழைகாணாமல் விருவோடிக் கிடக்கும் கரிசல் நிலமாய் எண்ணெய் தடவாத பரட்டைத் தலையுடன் விறகு பொருக்கப் புறப்பட்டாள் வீராயி. மணி பதினொன்றிருக்கும். இரண்டு ஜென்மமாய் பூமியில் வாழ்ந்து தோசைத் தடிமனாய்த் தேய்ந்து போன இரப்பர் செருப்பை மாட்டிக் கொண்டு வீராயி நடந்த நடையில் ஒரு வெறித்தனம் இருந்தது. வேகமான நடைக்கு ஒத்துவராததால் முழங்கால் தெரிய சேலையை தூக்கிச் சொருகிக் கொண்டாள். அரிவாளையும் கயிரையும் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு ஊரைத் தாண்டி, ஊத்தோடை தாண்டி, வேடியப்பன் கோயில் தாண்டி இருபது நிமிச நடைக்குப் பிறகு கொத்துக் கொத்து முள்ளோடு குலுங்கி நிற்கும் கருவேலங் காடு புகுந்து, திசையெல்லாம் தன் கண்ணொளியை வீசினாள். கண்ணில் பட்டு, கையில் கிடைத்த மஞ்சனத்தி, கருவேலஞ்சுள்ளிகளை கணிசம் பார்க்காமல் பொருக்கிக் குவித்தாள். கயிரை இரண்டு கொடியாக விரித்து, விறகுக் குச்சிகளை அற்புதமாய் ஒழுங்குபட அடுக்கி, நீளமான கட்டுக்கட்டி நிமிர்ந்த போது, இனம் புரியாத திருப்தி ஒன்று தன் நெஞ்சில் குடிபுகுந்ததாய் உணர்வு ஏற்பட்டது வீராயிக்கு. விறகுக் கட்டைத் தூக்கிவிட ஆள்தேடி சுற்றி பார்வையை வீசினாள். தூரத்தில் கூலியாட்கள் சிலர் களைபறித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை கூப்பிடவும் பயம். "ஒரு வேளை தோட்டக்காரன் பார்த்துவிட்டால் கண்டபடி திட்டுவானே" என்ன செய்வது?" என்று சிறியதொரு சிந்தனைப் போராட்டம் நடத்தினாள். எப்படியாவது தூக்குவதென்று முடிவு செய்தவளாய் காலை அகல விரித்து, ஒருக்களித்து நின்று, உயிரையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி ஒரு நரம்புக்குள் செலுத்துவதாய் தன் தேகத்திற்கு வலிமையேற்றினாள். பெருங்காற்றை உள்ளிழுத்து நுரையீரல் நிரப்பிக் கொண்டாள். விறகுக் கட்டை செங்குத்தாய் நிறுத்தி கட்டின் பாதியில் குனிந்து தன் தலை பொருத்தி, இருகப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்தாள். தலைக்கேறியது விறகுக் கட்டு. சுட்டெரிக்கும் நெருப்புக் கோடாரியை கையில் வைத்துக் கொண்டு மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது மத்தியான வெயில். வரண்ட தாகம் தொண்டையைச் சுரண்டிக் கொண்டிருந்தது. தலைமேல் இருந்த பாரம் பிடரித்தலையை நெரித்துக் கொண்டிருந்தது. விரைந்து வீடு செல்லும் வேட்கை கால்களுக்குச் சிறகு முளைக்க வைத்தது. ஓடுவதைப் போல நடந்தாள்; வீராயி எடுத்து வைத்த ஒவ்வொரு எட்டும் பூமியை புல்லரிக்கும்படி செய்து புழுதியைக் கிளப்பியது. எடுத்த காலைப் பதிக்கும் முன் இன்னொரு காலை எடுத்து வேகமாக நடைபோட்டாள். திடீரென செருப்பையும் மீறி குதிங்காலில் நறுக்கென்று இறங்கியது கொடூர முள்ளொன்று. கண்ணுக்கு மட்டும் இருட்டியதாய் ஒரு கருப்பு நிறம் தோன்றி மறைந்தது. உச்சியில் யாரோ ஓங்கி அடித்து விட்டது போன்ற பிரம்மை. தேகத்தில் மின்சாரம் தீண்டியதாய் மிரட்சி, காலில் குத்திய ஒரு முள் உடம்பெல்லாம் குத்தியதாய் சொல்லமுடியாத வலி. "அய்...யய்யோ அம்மா" - என சக்தியை ஒன்ற கூட்டி ... குரல்வளை... திடப்படுத்தி... வீராயி கதறி அலறிய போது, அந்தக் காடெல்லாம் எதிரொலித்தது. "என்ன இந்த வாழ்க்கை" என வீராயி சலிப்படைந்து முணுமுணுத்த வார்த்தைகள் அந்த எதிரொலியில் கரைந்துகொண்டிருந்தது.
வெகு காலத்திற்கு முன் ஓர் ஊரில் ஏழைக் கிழவி ஒருத்தி இருந்தாள். சமைப்பதற்காக ஒரு பாத்திரம் நிறைய மொச்சை வாங்கினாள் அவள். அப்பொழுது மொச்சைக்குக் கருப்புப் பகுதி கிடையாது. முழுமையும் வெண்மை கலந்த பழுப்பு நிறமாக இருக்கும். மொச்சைகளை ஒரு பாத்திரத்தில் போட்டாள் அவள். அந்தப் பாத்திரத்தை அடுப்பின் மேல் வைத்தாள். அடுப்பில் நெருப்பு மூட்டினாள். எரிப்பதற்காக வைக்கோலை அடுப்பிற்குள் நுழைத்தாள். பாத்திரம் சூடேறத் தொடங்கியது. தப்பிக்க நினைத்த ஒரு மொச்சை பாத்திரத்தில் இருந்து துள்ளிக் கீழே குதித்தது. தீயில் எரியாமல் ஒரு வைக்கோல் எப்படியோ வெளியே வந்தது. நெருப்புத் துண்டு ஒன்றும் தப்பித்து வெளியே வந்தது. மூன்றும் அருகருகே இருந்தன. "எப்படியோ தப்பித்தேன். இல்லாவிட்டால் கூட்டத்தோடு நானும் இறந்திருப்பேன்" என்றது மொச்சை. "என் நிலையும் உன்னைப் போலத்தான். கிழவியை ஏமாற்றி விட்டு வெளியே வந்தேன். இல்லாவிட்டால் இந்நேரம் எரிந்து இருப்பேன்" என்றது வைக்கோல். "என்னைப் போல இருபது பேரை அந்தக் கிழவி அடுப்பிற்குள் போட்டாள். எல்லோரும் இந்நேரம் புகையால் சூழப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பார்கள். நல்ல வேளை. நான் தப்பித்தேன்" என்றது நெருப்புத் துண்டு. "உங்கள் இருவரையும் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. இப்பொழுது நாம் என்ன செய்வது?" என்று கேட்டது மொச்சை. "நாம் மூவரும் எப்படியோ சாவிலிருந்து தப்பித்தோம். இனிமேல் நாம் நல்ல நண்பர்களாக இருப்போம். பல ஊர்களுக்குச் செல்வோம். இனிய அனுபவங்களைப் பெறுவோம்" என்றது வைக்கோல். நெருப்புத் துண்டும் மொச்சையும் இதை ஏற்றுக் கொண்டன. அருகருகே இருந்தபடி மூன்றும் சிரித்துப் பேசிக் கொண்டே நடந்தன. சிறிது தூரம் சென்றன. அவற்றின் எதிரில் ஒரு ஆறு குறுக்கிட்டது. அதில் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது. மூன்றும் அந்த ஆற்றின் கரையில் நின்றன. "இந்த ஆற்றை எப்படிக் கடப்பது?" என்று கேட்டது மொச்சை. "ஆற்றின் நீர் வேகமாக ஓடுகிறது. எனக்குப் பயமாக இருக்கிறது" என்றது நெருப்புத் துண்டு. இதைக் கேட்ட வைக்கோல், "கவலைப்படாதீர்கள். நான் மிக நீளமாக இருக்கிறேன். இக்கரையில் இருந்து அக்கரை வரை ஆற்றின் மேல் நான் படுத்துக் கொள்கிறேன். நீங்கள் இருவரும் என் மேல் நடந்து அக்கரையை அடைந்து விடுங்கள். பிறகு நானும் அக்கரை வந்து விடுகிறேன்" என்றது. இரண்டும் அதன் திட்டத்தை ஏற்றுக் கொண்டன. வைக்கோல் நீண்டது. இருகரைகளையும் பிடித்துக் கொண்டு ஆற்றின் மேல் பாலம் போல் நின்றது. நெருப்புத் துண்டு மெதுவாக வைக்கோலின் மேல் நடந்தது. ஆற்றின் நடுப்பகுதிக்கு வந்த அது கீழே பார்த்தது. தண்ணீர் சலசலவென்று ஓடுவதைக் கண்டு அஞ்சியது அது. பயத்தால் தயங்கியபடி சிறிது நேரம் அங்கேயே நின்றது. அவ்வளவுதான்! நெருப்புத் துண்டின் வெம்மை தாங்காமல் வைக்கோல் எரிந்து இரண்டு துண்டுகள் ஆயிற்று. நெருப்புத் துண்டு ஆற்று நீருக்குள் விழுந்தது. "உஸ்" என்ற சத்தத்துடன் புகை எழுப்பி நீருக்குள் மூழ்கியது அது. இரண்டு துண்டுகளான வைக்கோலும் ஆற்று நீருக்குள் விழுந்தது. ஆற்று நீர் அதை அடித்துக் கொண்டு சென்றது. கரையில் இருந்து இந்த வேடிக்கையைப் பார்த்து மொச்சையால் சிரிப்பை அடிக்க முடியவில்லை. "ஆ! ஆ!" என்று வயிறு குலுங்கச் சிரித்தது அது. உடனே அதன் வயிறு வெடித்து விட்டது. உள்ளிருந்த குடல் வெளியே தெரிந்தது. வலி தாங்க முடியாமல் வேதனையால் துடித்தது அது. அந்த வழியாக ஒரு தையல்காரன் வந்தான். மொச்சையின் மீது இரக்கப்பட்டான். தன் கையிலிருந்த ஊசி நூலால் அதன் வயிற்றைத் தைத்தான். கறுப்பு நூலால் அவன் தைத்ததால் இன்றும் மொச்சையிக் வயிற்றில் நீண்ட கறுப்புத் தையல் காணப்படுகிறது.
சண்முகனின் முகத்திற்கு நேரே வந்து விழுந்தது நிலவின் ஒளி. அழகாய், நின்று நிதானித்து சிரிக்கும் வெள்ளை தேவதையாய் தெரிந்தது நிலவு அவனுக்கு. நிலவுக்கு மேலே உள்ள மேகக் கூட்டங்கள் தலையில் விறகுக் கட்டுகள் சுமந்து செல்லும் லட்சுமியை நினைவுபடுத்தின. வழக்கம் போலவே நிலவுக்கும் அவளுக்குமான ஒப்பிடுதலை ஆரம்பித்தான். பலத்த காற்றின் காரணமாக வீட்டு மேற்கூரையின் துளை பெரிதானதில் இப்போது நிலவு முழுவதுமாய் தெரிந்தது. அந்த நிலவின் கிரணத்தை கண்களில் வாங்கிக் கொண்டே மெல்லமாய் உறங்கிப்போனான். "சண்முகா, சண்முகா" எந்திரிடா! குவாரிக்கு போகணுமில்ல. நேரமாச்சு எந்திரி! அம்மாவின் குரல் கேட்டு விறைத்தன காது மடல்கள். இன்று கொண்டு வரும் கூலியில்தான் அம்மாவை வைத்தியரிடம் கூட்டிப் போகணும் என்ற நினைப்புடனே காலைக் கடன்களை முடித்துவிட்டு குவாரிக்கு கிளம்பினான். வழியெங்கும் லட்சுமியின் நினைவுகள். இன்றும் அவள் விறகொடிக்க வருவாளா? நான் கல்லுடைக்கும் குவாரிக்கு அருகிலேயே அவள் விறகொடிக்கும் கருவேலங்காடு. நான் உடைக்கும் கற்களின் சப்தத்திலும் அவள் தூக்கிச் செல்லும் விறகின் அசைவிலும் கொஞ்சம் கொஞ்சமாய் பரிமாறப்பட்டது எங்கள் காதல். கற்களின் சப்தமே தேசிய கீதமாகவும் விறகின் அசைவே ஏகாந்த நடனமாகவும் மாற்றம் செய்யப்பட்டது எங்கள் காதல் சாம்ராஜ்யத்தில். "அன்று கொடுத்த நாற்பது ரூபாய் கூலியுடன் அம்மாவை அழைத்துக் கொண்டு வைத்தியரிடம் சென்றேன். "எப்பா சண்முகா! ஒங்கம்மாவுக்கு வந்திருக்கிறது ராச நோய்". பொத்துனாப்ல வச்சிருந்து வைத்தியம் பார்க்கணும்." குளிர் காத்து அண்டப்படாது" என்று சொல்லியனுப்பினார் வைத்தியர். இருந்த பணமும் வைத்தியருக்கு போய்விட, வைத்தியச் செலவுக்கு இனி என்ன செய்ய? தலைக்குமேல் ஆகாயம் சுழல்வது போலிருந்தது. வருத்தத்துடன் வீட்டிற்கு சென்றான். அம்மாவின் தம்பியும் அவர் மகளும் வந்திருந்தனர். அம்மாவின் வைத்தியச் செலவை அவர் ஏற்பதாகச் சொன்னார். வீட்டு மேற்கூரையும் அடைப்பதாக உடன்பாடாயிற்று, நான் அவர் வீட்டு மாப்பிள்ளையாக உடன் பட்டால் மட்டுமே! மறுநாள் குளிர்காற்று நுழையாமலிருக்க புதிதாய் வேயப்பட்டது மேற்கூரை. கூரையினுள் நுழைந்த நிலவின் ஒளி என்னுள் நுழைந்த லட்சுமியின் நினைவுகள் போலவே கொஞ்சம் கொஞ்சமாய் அடைக்கப்பட்டது. இனி குவாரியில் அமைதியாய் அழுது கொண்டிருக்கும் காதலுக்கு சாட்சியாய் நான் உடைத்தெறிந்த கற்கள். வழக்கம்போலவே விவரம் புரியாமல் உலாவரும் லட்சுமியின் விறகுக் கட்டுகள் சுமந்து நடைபோடும் பாதங்கள்!
ஒரு சமயம் பரமார்த்த குருவும் – சீடர்கள் ஐவரும் வெளியூர் செல்லத் திட்டமிட்டனர். ஆனால் குருவிற்கு வயதாகி விட்டதால் அவரால் நடப்பதற்குச் சிரமமாக இருக்கும் என்று எண்ணிய சீடர்கள் அவர் பயணம் செய்வதற்கு மட்டும் ஒரு பொதியை காளை மாட்டை வாடகைக்கு அமர்த்தினர். மாட்டுக்காரன் கேட்ட தினக் கூலியாக மாட்டு வாடகை ஐந்து காசுகள் தருவதாக ஒப்புக் கொண்டு அதன்படி பரமார்த்த குருவை மாட்டின் மேல் அமர வைத்து சீடர்கள் பயணத்தைத் பரமார்த்த குருகதைதொடர்ந்தனர். அப்போது கோடைக் காலமாதலால் வெயில் வெகு கடுமையாக இருந்தது. அவர்களின் பயணத்தின் போது வழியில் ஒரு மணற்பரப்பான மரங்கள் எதுவும் இல்லாத வெட்ட வெளியைக் கடக்க வேண்டியிருந்தது. வெட்ட வெளியாக இருந்தமையால் வெயிலும் தாங்க முடியாத வெப்பமாக இருந்தது. வெப்பத்தின் கடுமையை தாங்க முடியாத பரமார்த்த குருவுக்கு நாக்கு வரண்டு தாகம் அதிகமாகி கண்கள் பஞ்சடைந்து மயக்கமடைந்து கீழே விழுகின்ற நிலையை அடைந்தார். அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சீடர்கள், குருவை கீழே விழாதவாறு தாங்கிப் பிடித்து கீழே மணல் சுடாதபடி துணிகளை பரப்பி மாட்டின் நிழலிலேயே படுக்க வைத்தனர். குருவின் மயக்கத்தை தெளிவிக்க சிறிது தண்ணீரை முகத்தில் தெளித்து, தண்ணீரைக் குடிக்கச் செய்தனர். சிறிது நேரத்தில் குருவுக்கு மயக்கம் தெளிந்ததும் பழையபடி மாட்டின் மேல் உட்கார வைத்துப் பயணத்தை தொடர்ந்தனர். வெட்டவெளியைக் கடந்ததும் ஒரு இடத்தில் தங்கி உணவருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். அதன் பின்னர் பயணத்தை மேற்கொண்டு ஓர் ஊரை சென்றடைந்தனர். அவர்கள் அவ்வூரை சென்றடைய இரவு நேரம் ஆகிவிட்டமையால், அவ்வூரிலேயே தங்கி மறுநாள் காலை பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்தனர். இதனை அறிந்த அவ்வூர் மக்கள், பண்ணையாரிடம் பரமார்த்த குருவும் – சீடர்களும் வந்திருக்கும் செய்தியை அறிவித்தனர். பண்ணையார், தங்கியுள்ள அவர்களுக்கு சாப்பாடும், தங்குவதற்கு இடமும் ஏற்பாடு செய்து கொடுத்தார். சாப்பாடு முடிந்த பின்பு – சீடர்கள், மாட்டின் சொந்தக் காரனுக்கு அன்றைய மாட்டு வாடகையாக ஐந்து காசுகளைக் கொடுத்தனர். மாட்டுக்காரன் அவர்கள் கொடுத்த ஐந்து காசுகளை வாங்க மறுத்தான். மாட்டின் மேல் சவாரி செய்வதற்காக ஐந்து காசுகளும், மாட்டின் நிழலின் குரு ஓய்வெடுத்தற்காக மூன்று காசுகளும் சேர்த்து எட்டு காசுகள் வாடகையாகத் தந்தால் தான் வாங்குவேன் என்றான் மாட்டுக்குச் சொந்தகாரன். இது என்ன அநியாயமாக இருக்கிறதே, மாட்டைத் தான் வாடகைக்கு எடுத்தோம். அதெப்படி மாட்டின் நிழலுக்கு வாடகைக் கொடுக்க முடியும். ஆதலின் மாட்டின் வாடகையை மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள் என்றனர். இவர்களுடைய காரசார விவாதத்திறிகுப் பிறகு இந்த விஷயம் அந்த ஊர் பண்ணையாரிடம் சென்றது. பண்ணையார் மாட்டுகாரனை அழைத்து, ஐயா, தாங்கள் பேசியபடியே ஒருநாள் வாடகை ஐந்து காசுகள் அதன்படி பெற்றுக் கொள்வதுத தான் நியாயம் என்றார். அதற்கு மாட்டுக்காரன். ஐயா நான் ஐந்து காசு பேசியது மாட்டின் மேல் சவாரி செய்வதற்கு மாட்டும்தான். ஆனால் மாட்டின் நிழலில் தங்குவதற்காக அல்ல. ஆகையால், மாட்டின் வாடகை ஐந்து காசுகளும், நிழலுக்காக மூன்று காசுகளும் சேர்த்து எட்டு காசுகள் தரவேண்டும் என்று மீண்டும் பிடிவாதம் செய்தான். இது மிகவும் அநியாயமாக இருக்கிறது? என்றார் பண்ணையார். இது ஒன்றும் அநியாயம் இல்லை. நியாயமாகத் தான் கேட்கிறேன் என்றான் மாட்டுக்காரன். இதனால் ஊர் மக்கள் எல்லோரும் கூடிவிட்டனர். தீர்வே இல்லாமல் இந்தப் பிரச்சனை நீண்டு செல்வதால், மாட்டுக்காரனையும், குருவையும் சீடர்களையும் நோக்கி, நான் ஒரு தீர்ப்பு சொல்கிறேன். அதற்கு நீங்கள் எல்லாம் கட்டுப்படுவீர்களா? என்றார் பண்ணையார். அதற்கு மாட்டுக்காரனும், குருவும், சீடர்களும் கட்டுப்படுவதாக ஒட்டு மொத்தமாக கூறினார்கள். இதற்கு இதுதான் மிகச் சிறந்த தீர்ப்பாகும் என்று மனதில் நினைத்து கொண்டு பண்ணையார் மாட்டின் சொந்தக்காரனை தன் அருகில் அழைத்து, மாட்டின் மீது குரு ஏறி வந்தற்காக வாடகை ஐந்து காசுகளும், மாட்டின் நிழலின் தங்கியதற்காக மூன்று காசுகளின் நிழலையும் பெற்றுக்கொள் என்றார். மாட்டுக்காரன் ஒன்றும் புரியாமல் விழித்தான் எவ்வளவு யோசனை செய்தும் இதன் முடிவு தெரியவில்லை. இப்போது இரவு நேரம். காலையில் தான் நிழலுக்கான பணத்தைப் பார்க்க முடியும் என்று கூறி மறுநாள் காலை சூரியன் உதயமானதும் மாட்டுக்காரனை அருகில் அழைத்து மாட்டின் நிழலுக்கான மூன்று காசுகளை வெயிலில் பிடித்தார்
"வாங்கம்மா... பூ வாங்கிட்டுட்டுப் போங்க முழம் 2 ரூபாய் தான் பூ... பூ... " " அம்மா... தாயே ... குழந்தை சாப்பிட்டு இரண்டு நாளாகுது ஏதாவது தர்மம் பண்ணுங்கம்மா..." "ஆரஞ்சு ... பைனாப்பிள் ... கிரேப்... ஆரஞ்சு" இந்த வசனங்களெல்லாம் பத்மாவிற்குப் பழக்கப் பட்டவை தான் இருந்தாலும் அனைத்தையும் காதில் வாங்கிய படி அவர்களைக் கடந்து போனாள். எட்டு மணி இளம் வெய்யில் அவள் முகத்தையும் தேகத்தையும் செல்லமாய் வருடிப் பார்த்தது. வெள்ளிப் பிள்ளையார் கோவிலைக் கடந்த பொழுது கற்பூர ஆராதனை நடப்பது தெரிந்து விரக்தியாய் ஒரு முறுவல் கொண்டாள். ஆம் இதுவே பள்ளிக்குத் தனியாய் இச்சாலையில் நடக்க ஆரம்பித்த காலம் முதல் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரையில் எத்தனை முறை இக்கோவிலைக் கடந்து இருப்பாள் ஒவ்வொரு முறை கோவிலைக் கடக்கும் பொழுதும் இறைவனை தரிசித்து விட்டுதான் செல்வாள். இன்று... சிந்தித்துப்பார்க்கும் நேரமில்லை காரணம் இவள் செல்ல வேண்டிய பேருந்து சிறிது தொலைவில் அளவுக்கு சற்று அதிகமான கூட்டத்தை பெருக்கிக் கொண்டு வந்தது. ஓடிச் சென்று ஏறினாள். இயந்திரத் தனமாக மூன்று மணி நேரம் ஓடியதே தெரியவில்லை. " கல்யாணி... கல்யாணி... " பக்கத்தில் உள்ள தையல் மிஷினில் துணி தைத்துக் கொண்டிருந்த கல்யாணியை தோழி வசந்தா கூப்பிடும் சத்தம் கேட்டு பத்மாவும் இயல்பு நிலைக்குத் திரும்பி மணி பார்த்தாள் 11 அடிக்க ஐந்து நிமிடம் இருந்தது. வசந்தாவைப் பார்த்து ஒரு சினேகப் புன்னகையை வீசினாள். வசந்தா பதிலுக்கு புன்னகைத்தாலும் முகத்தில் சிறு கவலை மண்டியிருந்தது தெரிந்தது. "என்ன வசந்தா... ஏன் இப்படி பேயரஞ்ச மாதிரி இருக்க?" கல்யாணி கேட்டாள். ' ம்... பேய்தான் ஆனால் என்னை அறையவில்லை உன்னை அறைய வந்திருக்கு" - வசந்தா. " என்னடி உளர்ற " " அங்க பார் உன் ஆத்து குடிமகன் உன்னை நாடி ஓடி வந்திருக்கார்" வசந்தா கிண்டலாக சொன்னாலும் தோழியின் நிலை பற்றி உண்மையான கவலை இருந்தது. இப்பொழுது கல்யாணியின் முகத்தில் கலவரம் படர்ந்தது. இந்நிகழ்ச்சிகள் பத்மாவிற்குப் புதிதல்ல கல்யாணியின் கணவர் வருகை அவளுக்கு இன்று 1 ம் தேதி என்பது ஞாபகத்திற்கு வந்தது. மாதம் முதல் தேதி அவள் கணவர் வருவதும் இவள் சம்பளத்தை ஜேப்படி செய்து குடிக்கச் செல்வதும், மறுத்தால் அனைவர் முன்னிலையில் இவளை தகாத வார்த்தைகளால் திட்டி அடிப்பதும், யாராவது தடுக்கச் சென்றால் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டுவதும் அதற்குப் பயந்து கல்யாணி அவன் கேட்கும் பணத்தைக் கொடுத்து விடுவதும் மாதாந்திர நிகழ்ச்சிகள். பத்மா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய போது நீண்ட அழைப்பு மணி அடித்து ஓய்ந்தது. அனைவரும் மேனேஜர் அறைக்கு சென்று தங்கள் ஊதியத்தைப் பெற்று வரும் போது வசந்தா பத்மாவிடம் கேட்டாள். "என்னடி மாமியார் வீட்டுக்கா.. வாயேன் சேர்ந்து போகலாம்". பதில் சொல்லாமல் தொடர்ந்தாள். பேருந்து பயணம் பத்து நிமிடத்தில் முடிந்தது. வசந்தா விடை பெற்றுச் சென்றால். அதோ - அந்த நான்காவது வீடு. இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை தான் பார்த்து இரசித்த வீடு. ஆசையாய் வளர்ந்த தோட்டங்கள் வரைந்த கோலங்கள் மூன்று வருடங்களுக்கு முன்பு இவ்வீட்டில் மருமகளாக நுழைந்து இந்நந்தவனத்துச் சூழலே நம் உலகம் என்று முடிவு செய்து அவ்வாறே பல கலர்கனவுகளுடன் வளைய வந்ததெல்லாம் ஒரு வாரத்தில் வடிந்து போனது. காரணம்... ராஜா! பெயருக்கேற்ற குணமில்லை. கல்லூரியில் பெரிய படிப்பு முடித்தாலும் ஏற்பட்ட காதல் தோல்வியால் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தவனுக்கு வடிகாலாக வந்தாள் பத்மா. பெண்களின் மேல் அவனுக்கு ஏற்பட்ட வெறுப்பு இவள்மேல் வடிந்தது. அவளை சித்திரவதை செய்தான். ஆனாலும் அப்பாவிகளான அவன் பெற்றோருக்காகவும் அவர்களின் கண்ணீருக்காகவும் அவனை சமாளித்தால். அந்த நரக வாழ்க்கை கூட பத்மாவிற்கு வாழக் கொடுத்து வைக்காமல் அவன் ஒருநாள் வேறொரு பெண்ணுடன் ஊரை விட்டு ஓடிவிட்டான். இரண்டு மாதம் கழித்து அவன் சாலை விபத்தில் இறந்ததாக செய்தி வந்தது. சில நாட்கள் துக்கத்தில் கழித்தாலும் தேற்றிக் கொண்டாள். வீட்டில் இவள் ஒரே பெண் என்பதால் அவள் பெற்றோர் இவளை தன்னுடன் அழைத்துக் கொண்டனர். இருந்தாலும், அந்த வயதான பெற்றோரை நிராதரவாக விட மனமில்லை. எனவே தையல் பயிற்சி மேற்கொண்டு ஆறு மாதத்தில் டெக்ஸ்டைல் கம்பெனி ஒன்றில் பணியில் அமர்ந்து ஐந்தாயிரம் வருமானம் வருகிறது. மாமியார் அவளை வரவேற்றாள். சிறிதுநேர உபசரணங்களுக்குப் பின் அவர்கள் கையில் இரண்டாயிரம் ரூபாய் தந்தாள். நடுங்கும் கைகளால் அதைப் பெற்றுக் கொண்டாள் மாமியார். அம்மாடி இதெல்லாம் உனக்கு திருப்தி அளிக்கலாம் ஆனால் எங்களுக்கு மனம் வலிக்கிறது. உன் வாழ்க்கை தரைமட்டமாக காரணமான பாவிகள் நாங்கள். நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்கக் கூடாது. அம்மா உலகத்தில் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. இரண்டு தாய் தந்தையர் கிடைத்திருக்கிறீர்கள். என் வாழ்வில் திருமணம் என்ற ஒன்று பூத்து முடிந்த சோலை இன்று காய்த்து குலுங்கி கனிய ஆரம்பிக்கும் வேளையில் மரத்தை வெட்டி வேறிடத்தில் செடியாய் மறுபடியும் வளரச் சொன்னால் என்னால் முடியாதம்மா என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி விடைபெற்று தன் பெற்றோரை நோக்கிச் சென்றாள். இந்த உறவுப் பாலம் நிலைக்கும் என்றும் இடியக் கூடியதல்ல, என்று நினைந்து பொங்கி வர முயற்சிக்கும் கண்களை மகிழ்வுடன் துடைத்தாள். வழி தெளிவாகத் தெரிந்தது வாழ்க்கையும் தான்.
ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்று வந்தாள். பாட்டி வடைகளைச் சுட்டு ஒரு தட்டில் எல்லோருக்கும் தெரியும்படி பரப்பி வைத்திருந்தாள். இதனை ஒரு காகம் கண்டது. காகத்திற்கும் வடை மேல் ஆசை வந்தது. பாட்டி வடைசுடும் கவனத்தில் இருந்தபோது அந்தக் காகம் சந்தற்பத்தை பயன் படுத்தி ஒரு வடையை தூக்கிச் சென்று ஒரு மரத்தின் மீது உட்காந்தது. இதனைக் ஒரு நரி கண்டது. நரி எப்படியும் அந்த வடையை தந்திரமாக காகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள நினைத்தது. நரி உடனே அந்த மரத்தடிக்குச் சென்று காகத்தைப் பாத்து, நீ என்ன அழகாக இருக்கிறாய். உன் சொண்டு தனி அழகு. உனது குரலும் மிகவும் இனிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். உனது இனிமையான குரலில் ஒரு பாட்டு கேட்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னது. மிகவும் அழகான பறவை என்று தன்னை நரி கூறியதால் காகமும் நரியை சந்தோசப் படுத்த எண்ணியது. உடனே காகம் தன் வாயில் வடை இருப்பதை மறந்து தனது இனிமையான குரலில் :"கா", "கா", "கா" என்று கத்தியது. அப்போது காகத்தின் வாயில் இருந்த வடை கீழே விழுந்து விட்டது. அதனைக் கண்ட நரி தன் தந்திரத்தில் காகம் ஏமாந்து விட்டது என நினைத்துக் கொண்டு வடையை கவ்வி எடுத்துக் கொண்டு பற்றை மறைவில் இருந்து உண்டது. மற்றவர்களின் தந்திர வார்தையை நம்பி காகம் ஏமந்தது.
எப்பொழுதும் போலத் தான் அன்றைய பொழுதும் விடிந்தது தொழிலதிபர் ராஜசேகரன் இல்லத்திற்கு. வழக்கம் போல முதலில் தேநீர் முகத்தில் தான் முழித்தார் ராஜசேகரன். ஆனால் மனைவி வைஷ்ணவி இன்று போட்ட டீ இன்று மிகவும் நன்றாக தெரிந்தது இராஜசேகரனுக்கு. இராஜசேகரன் பிறப்பால் ஓர் பெரிய தொழில் அதிபர் தான் என்று பார்ப்பவர்கள் எல்லாம் நினைப்பார்கள். ஆனால் அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அப்பா கிடையாது. அம்மா மட்டுமே. அவளும் இராஜசேகரனுக்கு பதினைந்து வயது இருக்கும் போதுஇறந்து போனார். தங்கள் குடும்பத்திற்கு என இருந்த ஒரே நிலத்தையும் விற்று அதில் கிடைத்த லட்சம் ரூபாய் முதலீட்டை கொண்டு ஓர் சிறிய ரைஸ் மண்டி வைத்தார். இன்று அந்த தொழிலில் பெரிய மனிதராகி கார்... பங்களா அப்பப்பா. பணத்தின் அருமை தெரிந்த ஒருத்தியே தனக்கு மனைவியாய் வர வேண்டும் என்ற இராஜசேகரனின் ஆசைபடியே, இராஜசேகரின் வீட்டிற்கு விளக்கேற்றியவள் தான் வைஷ்ணவி. அவர்களுக்கு பிறந்த மூத்த மகன் தான் ரமேஷ். அவன் செல்வந்தர் மகன் என்பதால் நல்ல செலவழிப்பான். இது தான் ராஜசேகரனுக்கும் ரமேஷ்க்கும் இடையே அடிக்கடி பிரச்சனை எழும்பக் காரணம் ஆகும். இரண்டு பேருக்குமிடையே ஏற்படும் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கே நேரம் சரியாய் போய்விடும் வைஷ்ணவிக்கு. இராஜசேகரன் ஒரு பைசாவை கூட செலவு செய்வது என்றால் மிகவும் யோசிக்க கூடியவர். அவரது தும்மலும் கூட பத்து பைசா வரயே செல்லும். ஆனால் இராஜசேகரன் கருமியல்ல. பணத்தின் அருமை புரிந்தவர். இந்த நிலையில் தான் ஒரு சிக்கல். இதுவரைக்கும் அவரது ரைஸ் மண்டியிலிருந்து கிடைத்த லாபம் நிர்வாகச் செலவு போக ஓர் அளவிற்கே உட்பட்டு இருந்தது. ஆனால் இப்பொழுது விளைச்சல் குறையவும் லாபம் அதிகமாயிற்று. அதனால் தான் வருமானவரி கட்ட வேண்டிய சிக்கல் வந்தது. வைஷ்ணவியும் ஏற்கனவே இதை ஞாபகப்படுதிக் கொண்டு இருக்கிறாள். ஆனால் இராஜசேகரன் இந்த விஷயத்தில் தாமதம் காட்டி வந்தான். இன்றைய செய்தித்தாளை பேப்பர்காரன் வாசலில் அவனுக்கே உரிய தோரணையில் வாசலில் விட்டெரிந்து விட்டு "அம்மா பேப்பர்" என்று ராகமும் பாடினான். வழக்கம் போல வைஷ்ணவி தான் வந்து பேப்பரை எடுத்தாள். செய்தித்தாளின் முன் பக்கத்தில் கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டு இருந்த செய்தி வைஷ்ணவி கண்ணில் பட்டது. 'என்னங்க' ஒரே உச்ச சாயலில் கூப்பிட்டாள் வைஷ்ணவி. "என்ன வைஷ்ணவி! காலம் காத்தால" என்றார் இராசசேகரன். "இத பாருங்க! இந்த நியூஸ் பேப்பர்ல என்ன போட்டிருக்குன்னு பாருங்க" "என்ன போட்டிருக்கு! கொடு பார்ப்போம் வருமான வரி கட்டாதவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை தொழிலதிபர் மீது வருமானவரி சோதனை" "அதற்கு என்ன செய்ய சொல்லுற" என்றார் இராசசேகரன் ஒன்றும் தெரியாதவர் போல " என்ன செய்யவா" பத்ரகாளி ஆனால் வைஷ்ணவி. "ஆமாங்க! நான் சொல்லறது கிண்டலாய் தாங்க இருக்கும் உங்களுக்கு. வருமான வரி கட்டாமல் ஏய்ப்பது நமது நாட்டிற்கு நாம் தெரிந்தே செய்கிற துரோகம்ங்க" என்று ஒரு பாடமே நடத்தினாள் வைஷ்ணவி. "வருமான வரி கட்டணும்ணா. நமக்கு வருகிற லாபத்திற்கு எவ்வளவு கட்டணும். காசோட அருமை தெரிஞ்சா தானே உனக்கு" பதிலுக்கு இராஜசேகர். "இப்ப காசு கட்ட பயந்தா. பிறகு சிறைக்கு போன பின்னாடி பணம் நெறைய செலவழிக்கணும். அது மட்டுமா ,மன உளைச்சல் வேறு" இது வைஷ்ணவி. "பாத்துகிட்டே இரும்மா இவரு கம்பிதான் எண்ணப் போறாரு. இராஜசேகரனு பேரு வைச்சதும் போதும் இவருக்கு வரவர வில்லன் கெட்டப் வந்து விட்டது" இளமைக்கே உரிய துள்ளலுடன் ரமேசும் சேர்ந்து கொண்டான். "ம்... இந்த வீட்ல என்னை நிம்மதியாவே இருக்கவே விடுறாங்க இல்ல" சலித்து கொண்டார் இராஜசேகரன். வழக்கம் போல இராகம் பாட ஆரம்பித்தாள் வைஷ்ணவி " எம் பேச்சை இந்த வீட்ல யாருதான் கேட்கறாங்க. புருஷன் அப்படி, புள்ள இப்படி" இடைஇடையே அவளது பாட்டிற்கு ஏற்ப தாளம் போட்டன வைஷ்ணவி வீட்டு சமையலறை பாத்திரங்கள். வீட்டில் யாரும் பேசவில்லை. இராஜசேகரனுக்கு ஒரே தஞ்சம் தொலைக்காட்சிப் பெட்டி அவருக்கு பிடித்த நடிகர் கமலேஸ் குமார் வருமானவரி கட்ட வேண்டும் என்பதை பற்றி தொலைகாட்சியில் பேசினார். மதியம் இராஜசேகரன் வீட்டிற்கு வந்தார். "வைஷ்ணவி இந்த பைலை பத்தரமாக வை; இதுல வருமான வரி கட்டியதற்கான விபரமெல்லா இருக்கு சரியா" என்றார் இராஜசேகர். "வருமானவரியா? கட்டி விட்டீர்களா? எப்படி" தொடர்ந்தாள் வைஷ்ணவி. "நடிகர் கமலேஷ் குமார் சொன்ன பிறகு தான் வருமான வரி கட்ட வேணுங்கிறது நியாமுன்னு தெரிஞ்சது" "நாங்க சொன்னத கேக்கல. கமலேஷ் குமார் சொன்னா கேட்கிறார். இனிமே எதையாவது இவர செய்ய வைக்க வேணுமுன்னா, கமலேஷ் குமாரத்தான் கூப்பிடனும்" நொந்து போனாள் வைஷ்ணவி. மறுநாள், செய்தித்தாளில் வந்த செய்தி இராசசேகரனை அதிர செய்தது. செய்தி இதுதான். "நடிகர் கமலேஷ் குமார் வருமானவரி ஏய்ப்பு. அவரது வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை." நடிகன் என்னும் பொய் வேஷத்தை நம்பிய இராஜசேகரன் மனம் குறுகிப் போனது.
மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர், பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார். ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார். வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார் ‘உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க’ என்றார். ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊரு மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர். அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்ய முடியவில்லை வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப் பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார். அப்படி காட்டு வழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்ற தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார். அப்போது ஊருக்குள் சென்ற போது அங்கு இருந்த கடையில் விசாரித்தபோது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார். உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்தப் பணப்பையை வாங்கிக் கொண்டார், அதேநேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்துவிட்டது, பணமும்சரியாக இருந்தது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும். சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன். கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து ‘நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்’ என்று கத்தினான். பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே இவரிடம் சன்மானம் வாங்குவதைவிட பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார். சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும, பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள். ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான். ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துகொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் ‘சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது. ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம். ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்.’ மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.
அந்த ஊர் சந்தை மிகவும் பிரபலமானது. அங்கே பெரும்பாலும் கழுதை - குதிரை போன்ற கால்நடைகளின் வியாபாரம் மிகவும் நன்றாக நடக்கும். முல்லா சந்தை கூடும் ஒவ்வொரு சமயத்திலும் ஒரு நல்ல கழுதையைக் கொண்டு வருவார். அதை மிகவும் மலிவான விலைக்கு விற்றுவிட்டு வீடு திரும்புவார். அதே சந்தைக்கு ஒரு பணக்காரன் ஏராளமான கழுதைகளை ஒட்டிக் கொண்டு வருவான். விற்பனை செய்துவிட்டுத் திரும்புவான். ஆனால் முல்லா அளவுக்கு அவ்வளவு மலிவாக கழுதைகளை விற்க முடிவதில்லை. ஒருநாள் சந்தை வேலை முடிந்ததும் முல்லாவும் செல்வந்தரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது செல்வந்தர் முல்லாவை நோக்கி, " முல்லா! என் கழுதைகளை எனது அடிமைகள் கவனித்துக் கொள்கிறார்கள். கழுதைக்குத் தேவையான உணவை என் அடிமைகளே தங்கள் சொந்தப் பொறுப்பில் எப்படியாவது கொண்டு வந்து விடுகிறார்கள். கழுதை வளர்ப்பில் எனக்குக் கொஞ்சங் கூட பணச் செலவில்லை. அப்படியிருந்தும் நான் மலிவான விலைக்கு விற்பதில்லை. நீரோ உமது கழுதைகளை மட்டும் எவ்வாறு குறைந்த விலைக்கு விற்கிறீர்?" என்று கேட்டார். முல்லா புன்னகை செய்தபடியே, " அது ஒன்றும் பெரிய விஷயமல்ல, நீர் உமது கழுதைகளை வளர்ப்பதற்கு உழைப்பையும் அவற்றின் உணவையும் திருடுகிறீர்கள். நானோ கழுதைகளையே திருடி விடுகிறேன். இதுதான் உமக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் " என்றார்.
ஓர் ஊரில் உழவன் ஒருவன் இருந்தான். அவன் பெரிய மீசையுடன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தான். உழுவதற்காக அவன் வைத்திருந்த கலப்பை உடைந்து விட்டது. புதிய கலப்பை செய்வதற்கு மரம் வெட்டுவதற்காகப் பக்கத்திலிருந்த காட்டுக்குள் நுழைந்தான் அவன். அங்கிருந்த பெரிய மரம் ஒன்றைத் தேர்ந்து எடுத்தான். "நல்ல வைரம் பாய்ந்த மரம். இதில் கலப்பை செய்தால் நீண்ட காலம் உழைக்கும்" என்று சொல்லிக் கொண்டே கோடரியால் உதை வெட்டத் தொடங்கினான். அந்த மரத்தில் நிறைய பேய்கள் குடி இருந்தன. அந்த மரத்தை வெட்டுவதைக் கண்டு அவை பயந்து நடுங்கின. மரத்தை விட்டுக் கீழே இறங்கிய எல்லாப் பேய்களும் அவன் காலில் விழுந்தன. பேய்களைக் கண்ட அவனுக்கு அச்சத்தால் மூச்சே நின்று விடும் போல இருந்தது. என்ன நடக்கப் போகிறதோ என்று நடுங்கியபடியே இருந்தான். கிழப்பேய் ஒன்று, "ஐயா! இந்த மரத்தில் நாங்கள் பரம்பரையாக வாழ்ந்து வருகிறோம். எதற்காக இதை வெட்டுகிறீர்கள்? எங்களுக்கு வாழ்வு கொடுங்கள்" என்று கெஞ்சியது. இதைக் கேட்டதும் அவனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது. தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்டான். பேய்களைப் பார்த்து அதிகாரக் குரலில், "நிலத்தில் எள் விதைக்க வேண்டும் புதிய கலப்பை செய்வதற்காக இந்த மரத்தை வெட்டுகிறேன். நீங்கள் என் காலில் விழுந்ததால் பிழைத்தீர்கள். இல்லையேல் உங்களை எல்லாம் ஒழித்து இருப்பேன். என் வீட்டுத் தோட்டத்தில் பத்துப் பேய்களைக் கட்டி வைத்து இருக்கிறேன்" என்று கதை அளந்தான் அவன். "ஐயா! மரத்தை வெட்டாதீர்கள். நாங்கள் வேறு எங்கே போவோம்? எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள்" என்று எல்லாப் பேய்களும் அவன் காலைப் பிடித்துக் கொண்டு அழுதன. "கலப்பை இல்லாமல் நான் என்ன செய்வேன்? என்னிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதீர்கள். மரத்தை வெட்டியே தீருவேன்" என்றான் அவன். கிழப்பேய் அவனைப் பார்த்து, "ஐயா! உங்கள் நிலத்தில் ஓராண்டிற்கு எவ்வளவு எள் விளைகிறது?" என்று கேட்டது. "ஐம்பது மூட்டை எள்?" என்றான் அவன். "ஆண்டிற்கு நூறு மூட்டை எள் நாங்கள் தருகிறோம். இந்த மரத்தை வெட்டாதீர்கள்" என்று கெஞ்சியது அது. உங்கள் மீது இரக்கப்பட்டு இந்த மரத்தை வெட்டாமல் விடுகிறேன். ஒவ்வோர் ஆண்டும் அறுவடை நேரத்தில் நூறு மூட்டை எள் வந்தாக வேண்டும். வரத் தவறினால் இந்த மரத்தை வெட்டுவதோடு நிற்க மாட்டேன். உங்களையும் அழித்து விடுவேன்" என்றான் அவன். "எங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. நாங்கள் சொன்ன சொல் தவற மாட்டோம்" என்றது அந்தப் பேய். மகிழ்ச்சியுடன் அவனும் வீடு வந்து சேர்ந்தான். அறுவடைக் காலம் வந்தது. பல இடங்களில் விளைந்த எள்ளைப் பேய்கள் திருடின. எப்படியோ நூறு மூட்டை எள்ளைச் சேர்த்து அவனிடம் கொண்டு வந்தன. பேய்களைப் பார்த்து அவன், "சொன்னபடியே எள் கொண்டு வந்து இருக்கிறீர்கள். என்னை ஏமாற்ற முயன்றால் நான் பொல்லாதவனாகி விடுவேன். ஆண்டு தோறும் இப்படியே வர வேண்டும்" என்று மிரட்டி அவற்றை அனுப்பி வைத்தான். நடுங்கியபடியே பேய்கள் அங்கிருந்து சென்றன. சில நாட்கள் கழிந்தன. புதுப்பேய் என்ற பெயருடைய பேய் தன் உறவினர்களைப் பார்க்க அங்கு வந்தது. எல்லாப் பேய்களும் இளைத்துத் துரும்பாக இருப்பதைக் கண்டது அது. "சென்ற ஆண்டு உங்களைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தீர்கள். இன்றோ மெலிந்து சோகத்துடன் காட்சி அளிக்கிறீர்கள். என்ன நடந்தது? சொல்லுங்கள்" என்று கேட்டது அது. நடந்தது அனைத்தையும் சொன்னது ஒரு பேய். "நூறு மூட்டை எள்ளைத் தேடி அலைவதிலேயே எங்கள் காலம் கழிகிறது" என்று எல்லாப் பேய்களும் வருத்தத்துடன் சொல்லின. புதுப்பேயால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "நீங்கள் இவ்வளவு முட்டாள்களா? நாம் பேய்கள் அல்லவா? நமக்குத்தான் மனிதர்கள் பயப்பட வேண்டும். நாம் அவர்களுக்குப் பயப்படலாமா?" என்று கேட்டது. "அவன் சாதாரண மனிதன் அல்ல. எத்தனையோ பெரிய பேய்களை வீட்டில் கட்டி வைத்து இருக்கிறான். எதற்கும் அஞ்சாத முரடன். அதனால்தான் நூறு மூட்டை எள் தர ஒப்புக் கொண்டோம்" என்றது ஒரு பேய். "போயும் போயும் ஒரு மனிதனுக்கா அஞ்சுகிறீர்கள்? வெட்கம்! வெட்கம்! இன்றே அவனைக் கொன்றுவிட்டுத் திரும்புகிறேன்" என்று புறப்பட்டது புதுப்பேய். "வேண்டாம். நாங்கள் சொல்வதைக் கேள். நீ அவனிடம் மாட்டிக் கொண்டு துன்பப்படப் போகிறாய்" என்று எச்சரித்தன மற்ற பேய்கள். உழவனின் வீட்டிற்குச் சென்றது புதுப்பேய். வாய்ப்பை எதிர்பார்த்து மாட்டுத் தொழுவத்தில் பதுங்கி இருந்தது அது. வெளியூரில் இருந்து வாங்கி வந்த பல மாடுகள் அங்கே கட்டப்பட்டு இருந்தன. புதுப்பேய் என்ற ஊரில் வாங்கிய மாடும் அவற்றுள் ஒன்று. அது முரட்டு மாடாக இருந்தது. புதிய மாடுகளுக்கு அடையாளம் தெரிவதற்காக சூடு வைக்க நினைத்தான் அவன். தன் வேலைக்காரனைப் பார்த்து, "டேய்! அந்தப் புதுப்பேயை இழுத்து வந்து கட்டு. பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டால் பெரிய சூடு போட வேண்டும். வெளியூர் என்பதால் நம்மைப் பற்றித் தெரியாமல் ஆட்டம் போடுகிறது. சூடு போட்டவுடன் அதுவும் இங்குள்ளவை போல ஆகிவிடும். ஒழுங்காகப் பணிந்து நடக்கும்" என்று உரத்த குரலில் கத்தினான் அவன். பதுங்கி இருந்த புதுப்பேய் இதை கேட்டு நடுங்கியது. "ஐயோ! எல்லாப் பேய்களும் தடுத்தனவே! என் ஆணவத்தால் அவற்றை மீறி வந்தேனே! பெரிய மீசையுடன் இருக்கும் இவனைப் பார்த்தாலே பயமாக இருக்கிறதே. சிறிதும் இரக்கம் இல்லாதவன் போலத் தோன்றுகிறான். நாம் நன்றாக மாட்டிக் கொண்டோம். தப்பிக்க வழியே இல்லை. நமக்குப் பெரிய சூடு போடத்தான் போகிறான். என்ன செய்வது?" என்று குழம்பியது அது. மாட்டைக் கட்டுவதற்காக உழவன் பெரிய கயிற்றுடன் வந்தான். அவன் கால்களில் விழுந்த புதுப்பேய், "ஐயா! என்னை மன்னித்து விடுங்கள். தெரியாமல் நான் இங்கே வந்து விட்டேன். எனக்குச் சூடு போட்டு விடாதீர்கள்" என்று கெஞ்சியது. தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்ட அவன், "என் எதிரில் வர உனக்கு என்ன துணிச்சல்? உன்னை என்ன செய்கிறேன் பார்?" என்று கோபத்துடுன் கத்தினான். இவனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது அது, "எல்லாப் பேய்களும் என்னை உங்களிடம் அனுப்பி வைத்தன" என்று பொய் சொன்னது. "எதற்காக அனுப்பினார்கள்? உண்மையைச் சொல். இல்லையேல் உன்னைத் தொலைத்து விடுவேன்" என்று இடிக்குரலில் முழங்கினான் அவன். "பேய்கள் உங்களுக்கு ஆண்டுதோறும் நூறு மூட்டை எள் தருகின்றன. நீங்கள் அவற்றை எண்ணெய் ஆக்குவதற்காக ஏன் துன்பப்பட வேண்டும்?" எள்ளுக்குப் பதில் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதாக அவை முடிவு எடுத்தன. உங்களுக்கு எள் வேண்டுமா? எண்ணெய் வேண்டுமா? இதைத் தெரிந்து வருவதற்காக என்னை அனுப்பி வைத்தன. உங்களுக்கு என்ன வேண்டும்? சொல்லுங்கள்" என்று நடுங்கியபடியே கேட்டது அது. "இனிமேல் எனக்கு எள் வேண்டாம். எண்ணெயாகவே தாருங்கள். ஏதேனும் தவறு நடக்குமானால் உங்கள் அனைவரையும் தொலைத்து விடுவேன். ஓடு." என்று விரட்டினான் அவன். எப்படியோ தப்பித்தோம் என்று ஒரே ஓட்டமாக ஓடியது அது. மூச்சு வாங்கக் காட்டை அடைந்தது. அதன் நிலையைப் பார்த்த மற்ற பேய்களும் என்ன நடந்திருக்கும் என்பது புரிந்தது. "என்ன புதுப்பேயே? வீரம் பேசிவிட்டுச் சென்றாயே? அவனைக் கொன்று விட்டாயா?" என்று கேலியாகக் கேட்டது ஒரு பேய். "உங்கள் பேச்சைக் கேட்காதது தப்புதான். முரடனான அவனிடம் நான் நன்றாகச் சிக்கிக் கொண்டேன். எனக்குப் பெரிய சூடு வைத்து இருப்பான். அதை இப்பொழுது நினைத்தாலும் என் உள்ளம் நடுங்குகிறது" என் அறிவு வேலை செய்தது. எப்படியோ அவனிடம் இருந்து தப்பி விட்டேன்? என்றது புதுப்பேய். "அவன் பெரிய ஆளாயிற்றே! அவனிடம் என்ன சொல்லித் தப்பினாய்?" என்று கேட்டது ஒரு கிழப் பேய். "நூறு மூட்டை எள்ளாகத் தருவதா? அல்லது நூறு பீப்பாய் எண்ணெயாகத் தருவதா? என்று கேட்டு வர நீங்கள் அனுப்பியதாகச் சொன்னேன். அவனும் இனிமேல் நூறு பீப்பாய் எண்ணெயே தருமாறு கட்டளை இட்டான்" என்று நடந்ததைச் சொன்னது புதுப்பேய். "என்ன காரியம் செய்துவிட்டாய். நூறு மூட்டை எள்ளைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருந்தோம் இனிமேல் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதாகச் சொல்லி விட்டு வந்திருக்கிறாய். அவ்வளவு எண்ணெயைச் சேர்ப்பதற்காக நாங்கள் தூக்கம் இல்லாமல் துன்பப்பட வேண்டும். நாங்கள் தடுத்தும் நீ கேட்கவில்லையே. இனி என்ன செய்வது" என்று வருத்தத்துடன் புலம்பின அங்கிருந்த பேய்கள். எல்லாப் பேய்களும் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டன. ஆண்டுதோறும் உழவனுக்கு நூறு பீப்பாய் எண்ணெயைத் தந்து வந்தன. "தன் அறிவுக்கூர்மை தன்னைக் காப்பாற்றியது. உழைக்காமலேயே வளமாக வாழும் வாய்ப்பும் வந்தது" என்று மகிழ்ந்தான் அவன்.
குடிவந்த போது சிவசங்கரன் மாமா தன்னை ஓர் ஓவியர் என்று தான் அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த வீடு எட்டுவருடமாகப் பூட்டிக் கிடந்தது. அதைக் கட்டியவர் சிங்கப்பூர்க்காரான டேனியல் வைத்தியர். அவ்வருடமே அவரது மகளும், மனைவியும் கார் விபத்தில் இறந்தார்கள். வைத்தியருக்கு ஆரம்பத்தில் ஒன்றும் தெரியவில்லை. அழுகையும் படுக்கையுமாக இருந்தார். ஊரார் போய் துக்கம் கேட்டார்கள். மூன்று மாதத்தில் எழுந்து நடமாடி ஆறுமாதத்தில் வழக்கம் போல புதுமாப்பிள்ளைக் கோலம் பூணுவார் என்றுதான் எதிர்பார்த்தார்கள். சில கல்யாணத்தரகர்கள் கூட போய் துக்கம் விசாரித்து வந்தார்கள். ஆனால் இரண்டுமாதம் கழித்து வைத்தியரின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. உடைகளைக் கோணலாக அணிந்து கொண்டு தனக்குத்தானே பேசி சிரித்துக் கொண்டு நடமாட ஆரம்பித்தார். ஒருமாதத்தில் எல்லாம் உறுதியாகி விட்டது. பிடித்துக் கொண்டுபோய் ஊளன்பாறை பைத்திய ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு போன எவரும் திரும்ப வருவதில்லை. வைத்தியரின் தம்பி சாமுவேல் உள்ளூரில் பலசரக்குக் கடை வைத்திருந்தார். அவர் ஒரு நாள் புதுவீட்டில் பால்காய்ச்சி பாதிரியாரைக் கூப்பிட்டு ஜெபம் வைத்துக் குடியேறினார். அவர்தான் டேனியல் வைத்தியருக்கு செய்வினை வைத்தது என்று ஊரில் பேச்சிருந்தது. ஆறு மாதத்திற்குள் சாமுவேல் வீட்டைவிட்டு மாறி குலசேகரத்திற்குக் குடிபோனார். அவரது மகள் டெய்சிபாய்க்கு ஏதோ ஆகிவிட்டது என்றார்கள். சும்மா கெட்ட கனவுகள் தான் என்று அவர் சொன்னாலும் மறைக்க முடியவில்லை. டெய்சிபாய்க்கும் மனநிலை பிசகிவிட்டது. அவளைக் கேரளா பக்கமாக ஏதோ குருசடிக்குத்தான் கொண்டு போனார்கள். அதன் பிறகு அந்த வீட்டில் யாரும் குடியேறத் துணியவில்லை. இரவில் வேட்டியை நன்றாக ஏற்றிக் கட்டி தலையில் தலைப்பாகையும் தோளில் குற்றாலம் துண்டுமாக வைத்தியர் வீட்டைச் சுற்றி வருவதை அப்பு நாடார் கண்டதாகச் சொன்னார். துருப்பிடித்த பூட்டுத் தொங்கும் வீட்டுக்குள் இரவில் சில சமயம் விளக்குகள் எரிவதும் ஆட்கள் நடமாடுவதும் தெரிவதாக அம்மிணிப் பாட்டி சொன்னாள். பாட்டியின் வீட்டுக்கு இருநூறடி தொலைவில்தான் வைத்தியரின் வீடு. பெரிய தோட்டத்திலும் எவரும் நடமாடாமலாகி காடு அடர்ந்தது. வீடு அங்காங்கே காரை உதிர்ந்து ஜன்னல் பலகைகளில் பூசணம் பூத்துப் பாழடைந்தது. அந்த வீட்டுக்குத்தான் சிவசங்கரன். மாமா திடீரென்று குடிவந்தார். அவர் வீட்டை கிரயம் செய்தது யாருக்கும் தெரியாது. ஒரு நாள் காலையில் மூன்று மாட்டு வண்டுகளில் வீட்டுச் சாமான்கள் வந்திறங்கின. வீட்டை வண்டிக்காரர்களே கூட்டிப் பெருக்கினார்கள். ஒருவன் முற்றத்தில் அடர்ந்திருந்த புற்களையும் தொட்டால் வாடிச் செடிகளையும் மண் வெட்டியால் செதுக்கினான். செடிகள், கதவுகளிலும், சன்னல் கம்பிகளிலும் படர்ந்திருந்தன. நான் வேலியருகே நின்று வேடிக்கை பார்த்தேன். வழுக்கைத் தலையும் சோடாப்புட்டிக் கண்ணாடியும் அணிந்த குள்ளமான மனிதர் சுறுசுறுப்பாகச் சுற்றி வந்து சாமான்களை இறக்கிக்கொண்டிருந்தார். என்னுடன் அச்சுதன் பணிக்கரும் வந்து நின்று கொண்டார். "வெளியேயிருந்து வந்தவனுகளாக்கும் இல்லாட்டி இப்பிடித் துணிஞ்சு கேறிக்கிடமாட்டானுக" என்றார் பணிக்கர். நான் "அந்த வழுக்கைத்தலை ஆளு ஆராக்கும்?" என்றேன். "அவன்தான் ஓணரு. படம் வரையுத ஆளுண்ணாக்கும் பேச்சு.", "ஆரு கண்டா? சாவதுக்காக்கும் வந்திருக்கான். நீ பாரு மக்கா, இண்ணு இருட்டி நாளை வெளுக்கும்பம் அவன் சங்கதிகள் மனசிலாக்குவான் பாவம்....." நான் வெகுநேரம் கழித்து வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னேன். அதற்குள் நாணிப் பாட்டி ஊர் முழுக்க எல்லாவற்றையும் சொல்லிவிட்டிருந்தாள். வந்தவர் பெயர் சிவசங்கரன். திருவனந்தபுரத்தில் படம் வரைந்து கொண்டிருந்தவர். மனைவி செத்துப் போய்விட்டாள். பிள்ளைகள் இல்லை. "தனிக்கட்டை. துணிஞ்ச கட்டை. இல்லேன்னா இப்பிடிவருவானா. பாவம்..." என்றாள் பாட்டி. ஆனால் ஒன்றும் நிகழவில்லை. நான் மறுநாள் காலையிலேயே விபரீதச் சேதிக்காக அடித்துப் புரண்டு போய் பூவரச வேலியில் நின்று பார்த்தபோது சிவசங்கரன் மாமா பிரஷ் வைத்துப் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். எங்களூரில் அப்போது டாக்டர் ஒருவர்தான் அப்படிப் பல் தேய்ப்பார். அவர் சோப்பு போட்டுப் பல் தேய்ப்பதாக நான் நீண்ட நாள் நம்பி வந்தேன். பிறகுதான் அது ஒரு பசை மருந்து என்று தெரிந்துகொண்டேன். என் எதிர்கால லட்சியங்களில் ஒன்றாக அப்படி பல்தேய்ப்பது இருந்தது. நான் பார்ப்பதைக் கவனித்தும் மாமா கையசைத்து என்னைக் கூப்பிட்டார். மறுகணம் நான் திரும்பி ஒரு கையில் அவிழும் காற்சட்டையை பற்றியபடி ஓடி மூச்சுத்தெறிக்க என் வீட்டுக்குள் பாய்ந்து சமையலறைக்குள் நுழைந்தேன். "என்னடா" என்றாள் அம்மா. நான் ஒன்றும் சொல்லவில்லை. "அந்தத் தெருநாய்ட்ட விளையாடாதேன்னு ஆயிரம் மட்டம் சொன்னேம்பிலே?" என்றாள் அம்மா. முதுகில் ஒரு பொய்யடி வைத்தாள். எனக்கு அது சிவசங்கரன் மாமாதானா என்று சந்தேகம் வந்தது. பேய்கள் அப்படி வேடம் மாறி வந்து நிற்கலாமே. கை வீசி என்னை ஏன் அது கூப்பிட வேண்டும். யோசித்துப் பார்த்தபோது, அதன் கால்கள் தரையிலேயே படவில்லை என்றும் தோன்றியது. இரண்டு நாள் இரவு பகலும் அதைப்பற்றி யோசிக்காமலிருக்க முயற்சி செய்து உலவினேன். மூன்றாம் நாள் பயம் குறைந்து ஆவல் ஏறியது. மாலையில் மெல்ல நடந்து போய் வைத்தியர் வீட்டை பார்த்து நின்றேன். வீட்டு முன் யாருமில்லை. உள்ளே போகலாமா வேண்டாமா என்று நான் வெகுநேரமாக யோசித்துக் கொண்டிருக்கும்போது பின்பக்கம் மாமா வந்து நின்றார் நான் மூச்சு அவிந்து பேச்சிழந்து நின்றேன். அவர் கையிலிருந்த பையை கீழே வைத்து வேட்டியை நன்றாகத் தூக்கிக் கட்டினார். "உள்ளே வா. ஏன் இங்க நின்று பாக்கே?" என்றார். நான் "இல்லை" என்றேன். பின்னால் நகர்ந்தேன். "என்ன பயப்படுதே? ஆம்பிளை தானே? இந்த வயசில இப்பிடி பயப்பட்டா எப்பிடி? வா" என்ற படி உள்ளே போனார். ஆண்பிள்ளையா என்ற கேள்வி என்னை உசுப்பியது. மேலும் அவர் சிரிப்பும் நம்பிக்கை தரத்கூடியதாக இருந்தது. மாமா வீட்டின் புதிய பித்தளைப் பூட்டை திறந்து உள்ளே போய் பையை வைத்தார். எனக்கு அந்த வீட்டுக்குள் வெளிச்சம் அலையடிப்பது போல இருந்தது. "கொஞ்சம் பலசரக்கு காய்கறி வாங்கிட்டு வந்தேன். சமையல் சொந்தமாத்தான். என்ன பாக்கே?", "வெளிச்சமா இருக்கு.", "வெள்ளையடிச்சேன்" என்றார் சுவர்களின் பால் வண்ணம் அப்போதுதான் என் கவனத்திற்கு வந்தது. இது வேற மாதிரி வெள்ளையா இருக்கு.", "இது சுண்ணாம்பில்ல, பெயின்ட்.", "நீங்களே அடிச்சீங்களா?", "ஆமா சும்மா இல்லை, இது மேல படம் வரையப் போறேன்.", "சுவரிலயா?" நான் கோயில்களில் அப்படிப்பட்ட படம் பாத்திருக்கிறேன். "சாமி படமா?", "இது வேறமாதிரி படம்." அவர் எனக்குப் பாலில்லாத டீ தந்தார். நான் குடித்துவிட்டு வீட்டைச் சுற்றிப் பார்த்தேன். மிகப் பெரிய வீடு. எங்கள் வீடே பெரிது. இது அதைவிட ஏழெட்டு மடங்கு பெரிது. நிறையக் கூடங்கள், அவற்றிலிருந்து திறக்கும் வாசல்கள். வழி தவறி பல அறைகளில் அலைந்த மீண்டும் கொல்லைக்கே வந்தேன். மாமா வேறு அரையிலிருந்து கூப்பிட்டார். அவருடன் மீண்டும் முகப்புக்கு வந்தேன். "உங்களுக்கு வீட்டில் யாருமே இல்லையே. எதுக்கு இவ்வளவு பெரிய வீடு" என்றேன். "படம் வரையத்தான்" என்றார் மாமா. நான் அந்த வீட்டுக்குள் போன விஷயத்தை அம்மாவிடம் கூறவில்லை. அடுத்த நாள் எங்கள் வீட்டில் எல்லோரும் சுசீந்திரம் தேர் பார்க்கப் போனோம். கன்னியாகுமரிக்கும் போய்விட்டு நாராயணன் சித்தப்பா வீட்டில் தங்கி நான்கு நாள் கழித்து நள்ளிரவில் திரும்பி வந்தோம். மறு நாள் காலையில் எழுந்து கருப்பட்டிக் காப்பி குடித்ததுமே நான் கால்சட்டையை கையில் பிடித்துகொண்டு மாமா வீட்டுக்கு ஓடிப்போனேன். கதவு சாத்தியிருந்தது. "மாமா" என்றேன் "வா வா" என்றார் அவர் உள்ளேயிருந்து. நான் கூடத்துக்குள் நுழைந்ததும் பிரமிப்பும் குழப்பமுமாக நின்றேன். கூடம் முற்றிலும் மாற்றிக் கட்டப் பட்டிருந்தது. இரண்டு புதிய வாசல்கள் திறந்தன. ஒன்று சற்றே இருட்டின ஒர் அறை நோக்கித் திறந்தது. உள்ளே மங்கலான மின் விளக்கு மட்டும் எரிய, உள்ளே யாருமே இல்லை. மேஜை நாற்காலிகள் மீது சில புத்தகங்கள் ஒரு காலி டம்ளர். இன்னொரு கதவு முழுக்கத் திறந்து கிடந்தது. உள்ளே அதற்கடுத்த அறைக்கான வாசல். அப்பால் வெயில் சரிந்து விழுந்த கொல்லைப் புறத்தில் சில வாழையிலைகளும் ஒரு தென்னை ஓலையும் நான் மாமா என்று கூவியபடி அந்த வாசலில் நுழைய முயன்று முகத்திலறைபட்டு நின்றேன். ஒரு கணம் என் மூளை குழம்பிய பிறகே அது சுவரில் வரையப்பட்ட ஓவியம் என்று தெரிந்தது. இன்னொரு வாசலை தொட்டுப் பார்த்தேன். அதுவும் ஓவியம். எனக்கு அறிமுகமான பழைய வாசலையும் மெதுவாக ஐயத்துடன் தொட்டுப் பார்த்தேன். அதுவும் ஓவியமே என்று தெரிந்தபோது என் மனம் முழுக்கப் பயம் பிடித்தது. திரும்பிவிட எண்ணிக் கதவை நோக்கிச் சென்றேன். வெயில் பரவிய தோற்றத்துடன் அவ்வாசலும் ஓவியம் போலத்தான் இருந்தது. அதை நோக்கிச் செல்ல எனக்குத் தைரியம் வரவில்லை. நான்கு பக்கமும் வாசல்கள். நான்கும் ஓவியவாசல்கள். பீதியுடன் நான் அழ ஆரம்பித்தபோது இருண்ட அறையின் சன்னல் பெயர்ந்து விலகி அங்கு ஒர கதவு திறந்து மாமா வந்தார். "பயந்திட்டியா?" என்றார். நான் உடனே விசும்பி அழுதேன். அவர் என்னைத் தோளைத் தொட்டு அணைத்துக் கொண்டார். "வா" என்று அழைத்துச் சென்றார். உள்ளே பல அறைகளில் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. முடிவடையாத ஓவியகள் எதிலுமே வழக்கமான ஓவியங்கள் போல மனிதர்கள் விலங்குகள் ஏதும் இல்லை. எல்லாமே கதவுகள், சன்னல்கள், அறைத்திறப்புகள். மாமா எனக்குப் பால் விடாத டீ கொடுத்தார். நான் அதைக் குடித்தபடி "எதுக்கு இப்படி வரையறீங்க?" என்றேன். "சும்மாதான்" என்றார் கண்களைச் சிமிட்டியபடி "பேய்கள் நம்மளைப் பிடிக்க வந்தா வழி தெரியாம குழம்பிப் போய்டும் பாரு அதான்." நான் வயிறு குபீரிட எழுந்து பிட்டேன் மாமா என் கையைப் பிடித்தார். "எங்க ஓடறே?", "இங்கப் பேய் இருக்கா?", "சும்மா சொன்னேன். பேயும் பிசாசும் ஒரு மண்ணும் இல்லை. நீ படித்த பிள்ளைதானே? சிந்திச்சுப் பாக்க வேண்டாமா?", "அப்ப ஏன் இப்பிடி வரையணும்?", "சும்மா ஒரு ஜாலிக்காகத்தான். எனக்குச் சின்ன வீடுகளே பிடிக்காது. எப்பபுமே பெரிய வீட்டில தான் இருப்பேன். வீட்டுக்குள்ளேயே காலார நல்லா நடக்கணும் ஓடணும் எவ்வளவு பெரிய வீட்டுக்கு எங்க போறது? எவ்வளவு பெரிய விடுன்னாலும் அதுக்கு ஒரு அளவு இருக்கே, இது அந்த மாதிரி இல்லை. இஷ்டத்துக்கு விரிச்சுக்கிட்டே போலாம். இப்ப இந்த வீட்டுக்குள்ள எத்தனை ரூம் இருக்குன்னு எனக்கே எண்ணிச் சொல்ல முடியாது. நேத்தைக்கு ராத்திரி கரெண்டு போயிடுச்சு. லாந்தரை எடுத்துக்கிட்டு சமையலறைக்குப் போனேன். வழி தவறிவிட்டது. அலைஞ்சு ஒரு வழியா போய்ச் சேர ஒரு மணி நேரம் ஆச்சு தெரியுமா?" எனக்கு நம்பவும் முடியவில்லை, நம்பாமலிருக்கவும் முடியவில்லை. அந்த வீட்டுக்குள் பார்ப்பவை இப்போது பயத்தையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது. அதைப்பற்றி அம்மாவிடம் சொல்லாமலிருக்க முடியவில்லை. அரைகுறையாக ஏதோ சொல்லப் போக அம்மா குத்திக் குடைந்து எல்லாவற்றையும் கேட்டாள். அவள் முகத்தில் பீதி வெளுத்துப் படர்ந்து "இனிமே நீ அங்கே போகப்பிடாது. போனா கைய கால முறிச்சிடுவேன்" என்று சொல்லிவிட்டாள். அவள் அப்படி ஒப்புக்கு எதும் சொல்வதில்லையாதலால் நான் அரண்டுபோனேன். நாலைந்து நாள் மாமா வீடுப்பக்கமே தலை காட்டவில்லை. ஐந்தாம் நாள் அப்பக்கமா ஓரக்கண்ணால் பார்த்தபடி போய் "மாமா!மாமா!" என்று கூப்பிட்டேன். "உள்ளே வா" என்று மாமாவின் குரல்கேட்டது. வாசலைத் திறந்து கூடத்தில சமைத்து பிரமித்து நின்றேன். திறந்து கிடந்த ஆறு கதவுகள் வழியாகவும் ஏராளமான கதவுகள் திறந்த நீண்ட பாதைதான் தெரிந்தது மனம் படபடக்க ஒரு கணம் நின்று விட்டுத் திரும்பி ஓடி வந்துவிட்டேன். மாமாவைப் பற்றிய செய்தி அதற்குள் ஊருக்குள் பலவாறாகப் பரவி விட்டது. அவர் ஒரு சூனியக்காரர் என்று நாணிப்பாட்டி சொன்னாள். அவருடைய வீட்டுக்குள் பலவிதமான ரகசிய வாசல்களும் பாதைகளும் திறந்திருப்பதாகவும் அதன் வழியாக டேனியல் வைத்தியரும் அவருடைய மகனும் மனைவியும் எல்லாம் சுற்றி அலைவதாகவும் சில சமயம் அவர்களுக்கும் சிவசங்கரன் மாமாவுக்கும் பெரிய சண்டை நடப்பதாகவும் சொன்னாள். தொடர்ந்து கேட்ட கதைகளால் கிலியடைந்து நான் மாமா வீட்டுப் பக்கமாகப் போவதையே தவிர்த்தேன். திருவனந்தபுரத்தில் ஓட்டலில் வேலைசெய்யும் சிவதாணு ஊருக்குப் புதிய செய்தியுடன் வந்தான் மாமாவிம் மனைவி இறக்கவில்லை. ஒரு ஆசாரியுடன் கோழிக் கோட்டுக்கு ஓடிப் போய்விட்டாள். அதன் பிறகு மாமா சிலகாலம் மனநிலை பிசகிச் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். நெடுமங்காட்டுப் பக்கம் ஒரு வீட்டில் கொஞ்ச நாள் இருந்தார். ஊரார் கூடி அவரை அடித்துத் துரத்தி அந்த வீட்டுக்கும் தீ வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு பத்து வருடம் ஆளை யாரும் காணவில்லை வடக்கே சாமியாராகி அலைவதாகச் சொல்லப்பட்டது. போன வருடம் திரும்பி வந்து அவரது மனைவியைக் கோழிக்கோட்டில் சந்தித்து கட்டையால் தாக்கியிருக்கிறார். அவளுக்கும் ஆசாரியால் பிறந்த குழந்தைக்கும் அடி விழுந்திருக்கிறது அங்கிருந்து தப்பி ஓடி திருவனந்தபுரம் வந்து பூர்விக வீட்டை விற்றுவிட்டு தலைமறைவாகி விட்டார். கோழிக்கோடு போலிஸ் தேடி வந்தபோதுதான் எல்லாருக்கும் விஷயம் தெரியும். சிவதாணுவின் ஓட்டலுக்கு நேர் பின்னாலதான் அவரது வீடு. "இப்பம் விளிச்சு ஒரு ஃபோனடிச்சா போரும் பிடிச்சு அமுக்கி எடுத்துப்போடுவா. அப்படிப்பட்ட பிடிகிட்டாப் புள்ளியாக்கும்" என்றான் சிவதாணு. நான் மறுநாள் மாமாவின் வீட்டுமுன் பூவரச மரத்தடியில் நின்று வீட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெண்ணிறச் சுவர்களும் சிமென்ட் கூரையும் கொண்ட உயரம் குறைவான வீடு. வெளியேயிருந்து பார்க்கும் போது மிகவும் சாதாரணமாக மற்ற எல்லா வீடுகளையும் போலத்தான் இருக்கிறது. ஆனால் அதற்குள் எத்தனை ஊடு வாசல்கள். வராண்டாக்கள், கதவுகள், ஊடுவழிகள், ரகசியப் பொந்துகள். உள்ளே போகும் ஒருவர் மீண்டும் வரவே முடியாதபடி மாட்டிக் கொள்ள முடியும். நாட்கணக்கில் மாசக் கணக்கில் வருடக்கணக்கில் எனக்கு மூச்சுத் திணறியது. சிறுநீர் வந்து முட்டி ஒரே ஓட்டமாகத் திரும்பி ஓடி வந்துவிட்டேன். அன்றிரவும் பிறகும் என் கனவில் நான் விசித்திரமான வாசல்களைத் திறந்து திறந்து சுற்றியலைந்து வழி தவறி, பயந்து, சிறுநீர் கழித்து விழித்து கொண்டேன். மாமாவை வெளியே எவருமே பார்க்கவில்லை என்பதையும் எவரும் கவனிக்கவில்லை. ஒரு மாதம் வரை ஆனபோதுதான் அவர் அங்கே இல்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. சாமான்கள் வாங்குவதற்காவது அவர் வந்தாக வேண்டுமே. பஞ்சாயத்து மெம்பர் சாமிதாஸ் நாடார் என் அப்பாவை வந்து பார்த்து இருவரும் தனியாக வெகு நேரம் பேசிக் கொண்டார்கள். மறு நாள் மீன் சந்தையில் ஊர்ப் பெரியவர்கள் கூடி மாமாவைப் பற்றிப் பேசியதாக அப்பு அண்ணா சொன்னார். முக்கியமான ஏழெட்டுபேர் கூடி மாமாவின் வீட்டுக்குப் போய் பலமுறைக் கூப்பிட்டுப் பார்த்தனர். பதில் இல்லை. ஞானகுணத்தை உள்ளே அனுப்பிப் பார்க்கச் செய்தனர். உள்ளே யாருமில்லை என்று அவர் சொன்னார். வெளியே வீட்டைப் பூட்டி சாவியை மெம்பர் சாமிதாஸ் வைத்துக் கொண்டார். ஆனால் வீட்டுக்குள் இரவில் வெளிச்சம் தெரிவதாக நாணிப் பாட்டி சொன்னாள். "அவரைஅந்த வைத்தியருக்குப் பேய் பிடிச்சு முழுங்கிப் போட்டு அதாக்கும்" என்றான் அப்புக்குட்டான். எனக்குப் பலநாட்கள் இடைவிடாது மூத்திரம் முட்டுவது போன்ற பதற்ற நிலையும் நிலை கொள்ளாமையும் இருந்தது. பிறகு மெல்ல எல்லாரும் மாமாவை மறந்தது போலத் தோன்றியது. சேலக்கரை வீட்டு ருக்மிணித் தங்கச்சியின் மகள் அம்பிகாமணித் த ங்கச்சி அயலூர்க்காரன் ஒருவனுடன் ஊரைவிட்டு ஓடிப்போன தகவல் வந்து ஊரை பரபரப்பாக்கியது. அதன் பிறகு கோயில் திருவாதிரை விழாவில் பாறாசாலை பத்மத்தின் நடன நிகழ்ச்சி. நான் வெகுநாள் யோசித்து தீர்மானித்து மாமாவின் வீட்டை அடைந்தேன். வீடு மேலும் பாழடைந்து மேலும் தனிமையும் மர்மமும் கொண்டு நின்றது. முற்றத்தை முட்செடிகள் பூவரச மரத்தடியில் நின்று வீட்டையே பார்த்தேன். மெதுவாகத் தைரியம் சேகரித்து வீட்டை நெருங்கி கதவருகே போய் "மாமா மாமா சிவசங்கரன் மாமா" என்று பலமுறை கூப்பிட்டேன். பதில் இல்லை பூட்டை இடித்துப் பார்த்தேன். கெட்டியான பூட்டு சற்று துரும்பேற ஆரம்பித்திருந்தது. கதவை தள்ளி பார்த்த போது ஒன்று தோன்றியது வீட்டில் வேறு வாசல்கள் இருக்கக்கூடும் கொல்லைப் பக்கம் போய்ப் பார்த்தேன். உள்பக்கம் மூடியிருக்கிறதா என்று தள்ளினேன். கையில் சுவர் தட்டுப்பட்டது. இன்னொரு கொல்லைப்பக்கம் கதவு இலேசாகச் சாற்றப்பட்டிருந்தது. ஓவியம் போலத்தான் இருந்தது. ஆனால் கைவைத்ததும் திறந்து கொண்டது. உள்ளே நான்கு வாசல்கள் திறந்தன. ஒவ்வொன்றாக மூடினேன். மூன்றாம் வாசல்கள் திறந்தது. மீண்டும் வாசல்கள். வாசல்கள் வழியாகத் திறக்கும் வராண்டாக்கள். பாதி மூடிய கதவுகளுக்கு அப்பால் ஒளி சரிந்திறங்கிய சன்னல்கள் கொண்ட அறைகள் செவ்வக வடிவமானவை. சதுரவடிவமானவை. எல்லா அறைகளிலும் பலவகையான வாசல்கள் திறந்து பல திசைகளுக்கு விரிந்த அறைவாசல் திறப்புகளைக்காட்டின. திசை தடுமாறி விட்டிருப்பதை உணர்ந்தேன். "மாமா மாமா" என்று கூப்பிட்டேன். என் குரல் வேறு எங்கோ எதிரொலித்தது. சற்று நேரம் வரை எப்படியும் மீண்டு விடலாம் என்ற ஆழமான நம்பிக்கையும் அதிலிருந்து உருவான உற்சாகம் மிக்க ஆவலும் என்னிடம் இருந்தன. கால்கள் களைத்து சோர்ந்து உடல் எங்கும் வியர்வை வழிய ஆரம்பித்த போது உற்சாகம் வடிந்தது. இதே வாசல் என்று உறுதியாக நம்பித் திறந்த பல வாசல்கள் பொய் தெரியத்தெரிய பயம் மேலோங்கியது "மாமா!மாமா!" என்று நான் கூவியபோது என் குரல் நடுங்கியதையும் பிறகு தழுதழுத்ததையும் நானே கேட்டேன். யாரோ நடமாடும் காலடி ஓசை கேட்டது. அது என் காலடி ஒசை தானா என்று சோதிக்கச் சட்டென்று நின்று கேட்டேன் இல்லை வேறு யாரோ. வேறு யாரோ மிக நிதானமாக நடந்து செல்லும் ஓசை யாரது?" என்றேன் பதில் இல்லை "மாமா!" மீண்டும் நடந்தேன். இம்முறை என் நடை மெல்ல மெல்ல ஓட்டமாக மாறியது. ஒரு கட்டத்தில் துரத்தப்படுபவன் போல வாயால் மூச்சு விட்டபடி ஓடிக்கொண்டிருந்தேன். களைத்து திரும்பி தலையை கைகளால் பற்றிக்கொண்டு குனிந்து தரையில் அமர்ந்தேன். மூச்சும் தாகமும் தொண்டையை அறுத்தன. எச்சில் கூட்டி விழுங்கி விட்டு எழுந்தபோது எதிரே திறந்த வாசல்களுக்கு அப்பால் ஒரு மனிதர் வேட்டியை வயிற்றுமீது எற்றிக் கட்டி தலையில் தலைப்பாகையும் தோளில் சிவப்புக் குற்றாலம் துண்டுமாக மெல்ல நடந்து செல்வது தெரிந்தது. மித மிஞ்சிய பயத்துடன் உறைந்து நின்று அவரைப் பார்த்தேன். "வைத்தியர்" என்று என் மனம் சொன்னதுமே எல்லா உறுப்புகளும் பரபரப்படைந்தன ஓடி அவ்வாசலை முட்டியபோது அது நிலைக்கண்ணாடி என்று தெரிந்தது. அப்படியானால் அது பிரதிபலிக்கும் வாசல் எது? நேர் எதிரில் இருந்தது ஓர் ஓவியவாசல்தான். வாசல்கள் முட்டு முட்டி இறுதியில் திறந்த அது வேறு ஒரு வராண்டாவிற்குக் கொண்டு சென்றது. அங்கிருந்து இன்னொரு அறைக்கு மீண்டும் அதே வராண்டா. மீண்டும் அறைகள். மீண்டும் நான் வந்தது முதலில் இருந்த அதே அறைக்குத்தான், வேறு திசையிலிருந்து. ஒரு முறை நின்று மூச்சுவாங்கிய போதுதான் நான் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பதை உணர்ந்தேன். அழுதபடியே அறைகள் அறைகளாக ஓடினேன். ஓர் அறைக்குள் ஒரு அம்மாவும் பெண்ணும் இருப்பது சன்னல் இடைவெளி வழியாகத் தெரிந்தது. அம்மா கட்டிலில் படுத்திருக்க பெண் பைபிள் படித்துக் கொண்டிருந்தாள். ஆனால் நான் அறைக்குள் நுழைந்ததும் காட்சிக் கோணம் மாறிவிட்டது. யாருமில்லை. மீண்டும் ஓட்டம். வெகுதொலைவில் மீண்டும் வைத்தியரைக் கண்டேன். அவ்வறைக்குள் நுழைய முயன்று அது ஓர் ஓவியம் என்று கண்டேன். கடைசியில் ஒரு பெரிய கூடத்தில் அப்படியே குப்புற விழுந்து விட்டேன். நான் சில கணங்களில் செத்துவிடுவேன். என்று தோன்றியது. கண்களை மூடிக்கொண்ட போது முதுகு கோடிக்கண்களினாலான ஒரு பரப்பாக மாறிக் காட்சிகள் தெரிய ஆரம்பித்தன. யாரோ நெருங்கி வருகிறார்கள். கூடத்திற்குள் வந்து என்னைப் பார்க்கிறார்கள். சிலகணம் பார்த்தபடி நின்று பிறகு திரும்பி வேறு ஒரு அறைக்குள் நுழைத்தார்கள். நான் பாய்ந்து எழுந்து கூடத்தைப் பார்த்தேன். நான்கு பக்கமும் திறந்த அறைகளில் முடிவற்ற வரிசை. ஓர் அறைக்குள் நுழைய முயன்றேன். அது கண்ணாடிப்பிம்பம். உடனே அதுவரை அறுபட்டிருந்த கண்ணீர் பீறிட்டு வந்தது "அம்மா" என்று அழுதேன். அம்மா அம்மா என்று கூவியபடி கதவுகளை முட்டி ஒன்றில் நுழைந்து இன்னொன்றில் ஊடுருவிச் சென்று மீண்டும் களைத்து நின்றேன். அப்பால் திறந்த பிரகாசமான அறை ஒன்றில் மாமாவைக் கண்டேன். மேஜை மீது பேப்பர் வைத்து வரைந்து கொண்டிருந்தார். மேஜை மீது ஒரு மூன்று வயது பெண் குழந்தை உட்கார்ந்து சாயங்களால் விளையாடிக் கொண்டிருந்தது. மறு பக்கம் ஒரு பெண் ஏதோ படித்தாள். அது அவர் மனைவி என்று தெரிந்தது. நான் மாமா என்று கூப்பிட்டேன் மாமா மாமா என்று கத்தினேன் மாமா அருகே இன்னொருவன் அமர்ந்து டீயை ஸ்பூனால் கலக்கினான். அல்லது ஸ்பூனால் எதையோ அதிலிருந்து எடுத்தான். நான் அவர்களை ஒரு கணம் தான் கண்டேன். குரலெழுப்பியபடி சற்று முன்னகர்ந்த போது கோணம் மாறிவிட்டது அவர்களைத் தெரியவில்லை. மீண்டும் கதவுகளைத் தட்டித் தட்டி திறந்து திறந்து ஓடிக்களைத்து நின்றேன். அப்போது அச்சம் முற்றிலும் விலகிவிட்டது. பிரமிப்பு மட்டும்தான். அவர்கள் என்னை வேறு எங்கிருந்தோ பார்க்கிறார்கள் என்று உணர்ந்தேன். அவர்களைப் போலத்தான் நானும். இனி இவ் வீட்டில் நுழைபவர்கள் என்னையும் ஓவியமாகக் காண்பார்கள். மறுகணம் பீடித்த பேரச்சம் என்னைத் தூக்கி வீசியதுபோல பாய வைத்தது. நான் வெளிவந்த கூடம் பலமுறை அதற்குள் வந்தது தான். சுவரில் ஒரு பெரிய பிம்பம் மாட்டப்பட்டிருந்தது. அது ஒரு புங்கமரம் அதற்க அப்பால் தெரு. வீடுகளில் விளிம்புகள். எனக்கு அறிமுகமான இடம். நான் ஓவியம் நோக்கிப் பாய்ந்தேன். ஆனால் அது ஒரு திறப்பு. தோட்டத்தில் அந்தப் புங்கமரத்தில் வந்து மோதி விழுந்தேன். எழுந்து திரும்பிப் பார்க்காமல் ஒடினேன். மாமா அந்த வீட்டுக்குள் தான் இருக்கிறார் என்று நான் சொன்னதை பல வருடங்கள் எல்லோருமே கிண்டல் செய்தனர். பிறகு அந்த வீடு இடிந்து விழுந்தது. நான் படிப்பிற்காக ஊரைவிட்டு வந்தேன். மேலும் பல வருடங்கள் கழித்து ஒரு நாள் அக்காட்சிகள் உக்கிரமான கனவாக வந்தன. விழித்துக்கொண்ட பின்பு நான் முதலில் அவ்வீட்டுக்குள் அனுபவித்ததும் கனவே என்று பட்டது. அல்லது கனவில் கண்டவை நனவுடன் கலந்து நினைவில் பதிந்து விட்டன. அன்று மாமாவுடன் அவ்வறையில் இருந்தவன் அந்த ஆசாரிதான் என்று ஒரு நினைவுக் கணத்தில் என் மனம் அறிந்தது. மற்றது அவர் மன€வியும் அந்தக் குழந்தையும் தான். உலகத்தை அறிந்துவிட்டிருந்தமையால் எனக்கு அதில் ஆச்சரியம் ஏற்படவில்லை. ஆனால் உடனே அந்த வீட்டில் நான் சுற்றிசுற்றி அலைந்ததை மேலும் பல மடங்கு பீதியுடன் அனுபவித்தேன்.
ஒரு வியாபாரி, அவர் கொஞ்சம் கொஞ்சமாக வியாபாத்தில் பணம் சேர்த்துப் பதினாயிரம் வராகன்கள் சேர்த்து விட்டர். இந்தச் சமயத்தில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. படுத்த படுக்கையாக விழுந்து விட்டார். அவருக்கு ஒரே மகன். அவன் சிறிய பையனாக இருந்தான். அந்த வியாபாரிக்கு வேறு உறவினர் எவரும் கிடையாது. 'தாம் இனிப் பிழைக்கமாட்டோமே?" என அஞ்சினார். தாம் இறந்து விட்டால் தன் மகனை எவராவது ஏமாற்றி தாம் அரும்பாடு பட்டுச் சேர்த்த பொருளை அபகரித்துச் சென்று விடுவார்களோ! என்று பயந்தார். தமக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவரைக் கூப்பிட்டனுப்பினார். அவரிடம் தாம் அரும்பாடு பட்டுச் சேர்த்து வைத்த பத்தாயிரம் வராகன்களையும் ஒப்படைத்தார். "நண்பனே, என் மகன் வளர்ந்து பெரியவனானதும் உனக்கு விருப்பமானதை அவனுக்குக் கொடு" என்று கூறினார். சிறிது நாட்களில் அந்த வியாபாரியும் இறந்து விட்டார்.
“கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. தன்னுடைய தூதுவர்களை அனுப்பமல் ஏன் அவரே நேரடியாக வரவேண்டும்?”இது பேரரசர் அக்பர் பீர்பாலை பார்த்து கேட்ட சந்தேகம் பீர்பால் கூறினார் “இதற்கு உடனே விடை கூற முடியாது, சற்று அவகாசம் வேண்டும்” சில நாட்கள் கழித்து அக்பர் குடும்பத்தாரோடு கங்கையில் படகில் செல்ல வேண்டியிருந்தது. ஆழமான பகுதியில் செல்லும் போது அக்பரின் பேரனை தூக்கி பீர்பால் கங்கை நதியில் போட்டு விட்டார். அக்பருக்கு ஆத்திரம் வந்தாலும், உடனே ஆற்றில் குதித்து தனது பேரனைக் காப்பாற்றினார்.பீர்பாலை பார்த்து “முட்டாளே! ஏன் இக்காரியத்தைச் செய்தாய்?” என கோபமாகக் கேட்டார். அதற்கு பீர்பால், பேரரசே! உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். குழந்தை தண்ணீரில் விழுந்த பொழுது, படைத்தளபதியை, என்னை மற்றும் வீரர்களை நோக்கி ‘குழந்தையைக் காப்பாற்று’ என்று ஆணையிடாமல் நீங்கள் குதித்தது ஏன்? என்று கேட்டார்.அதற்கு அக்பர் “குழந்தையைக் காப்பாற்றுவது என் கடமையா? அல்லது ஆணையிட்டுக் கொண்டிருப்பது பெருமையா?” எனப் பதிலுக்கு கேட்டார்.பீர்பால் அமைதியாக கூறினார், “சக்ரவர்த்தி அவர்களே! நீங்கள் என்னிடத்தில் கடவுள் தானே பக்தர்களைக் காக்க உலகிற்கு வருவது ஏன்? வேலையாட்கள் இல்லையா? என்று கேட்டீர்கள். எத்தனை பேர் இருந்தாலும், நீங்களே குழந்தையைக் காக்க நினைத்தது போல, ஆபத்தில் இறைவன் தானே வந்து மக்களைக் காப்பான்.” என்றார்
ஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார். அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜPவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான். அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு. வீட்டுக்குள் தாயும் மகனும் எதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர். ” இங்கே என்ன நடக்கிறது?” என்று முல்லா வினவினார். ” முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன் அடித்து மிரட்டிப் பார்த்தேன் ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் ” என்றாள் தாய் வேதனையோடு. ” குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா?” என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார். பையன் கேட்பதாக இல்லை. ” நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை” என்று அடம்பிடித்தான். முல்லா சுற்றும்முற்றும் பார்தார் தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது. அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார். அதைக்கண்டு தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர். ” அம்மா முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே?” என்று திகைப்போடு கேட்டான் பையன். ” பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா” என்றார் முல்லா. இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பாட்டான். அவன் சென்றபிறகு முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார்.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அதைத் தோளில் சுமந்தவாறு மாயனத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் அவனிடம், “உன்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்று என்னால் இப்போது சொல்ல முடியவில்லை. ஏனென்றால் நீயும் ராமநாதனைப் போலிருந்தால் மிகவும் கஷ்டப்பட்டு அடைந்ததை கை நழுவ விட்டு விடுவாய். அந்த ராமநாதன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள அரும்பாடுபட்டான். ஆனால் அது நிறைவேறிய பிறகு அதை அனுபவிக்காமல் தியாகம் செய்துவிட்டான். அந்த ராமநாதனின் கதையைக் கேள்!” என்று கதை சொல்லாயிற்று. மாயனூர் என்ற கிராமத்தில் ராமநாதன் என்ற இளைஞன் இருந்தான். ஒரு நாள் கிராமத்திற்கு வருகை தந்த சாமியார் ஒருவர் அவன் கை ரேகைகளைப் பார்த்துவிட்டு, “அதிருஷ்டம் உன்னைத் தானே தேடிவரும்” என்று சொன்னார். அதில் இருந்து ராமநாதன் வேலை செய்வதை விட்டு விட்டு தான் பணக்காரன் ஆவது பற்றியே எப்போதும் மனக்கோட்டைக் கட்ட ஆரம்பித்தான். ஒருநாள் அவனைத்தேடி வந்த வாலிபன் ஒருவன் “நான் சொல்லும் இடத்தில் நீ ஐந்து வருஷம் வேலை செய்தால், உனக்கு நிறைய செல்வம் கிடைக்கும். சம்மதமா?” என்று கேட்டதும், ராமநாதனுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் இருந்தது. ஆயினும் அவன் முழு விவரங்களை அறிய விரும்பியதால், ஆனந்தன் விளக்கிக் கூறினான். ஸ்ரீபுரத்தைச் சேர்ந்த ஆனந்தன் அதே கிராமத்திலிருந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டான். ஆனால் அவளுடைய தகப்பன் அவளை மணக்க விரும்புபவர்களிடம், ஆயிரம் பொன் வரதட்சணை கேட்டான். ஆனந்தனிடம் அத்தனை பணம் இல்லை. அப்போது அந்தக் கிராமத்து வியாபாரியான சரவணன் ஆனந்தனை அழைத்துத் தன் வீட்டில் குறைந்தது ஐந்து வருஷம் வேலை செய்ய வேண்டும் என்றும், அப்படிச் செய்தால் ஆயிரம் பொன் தருவதாகவும் கூறினான். உடனே ஆனந்தனும் அவனிடம் வேலை செய்ய ஒப்புக் கொண்டான். ஆனால் வேலைக்குச் சேர்ந்த சில நாள்களிலேயே விசித்திரமான நோயின் காரணமாக அவன் விகாரமாக மாறினான். இதனால் அவன் விரும்பிய பெண்ணும் அவனை நிராகரித்து விட்டாள். ஆகையால் ஆனந்தன் சன்னியாசியாக முடிவு செய்தான். அந்த முடிவை சரவணன் ஏற்கவில்லை. இருப்பினும் ஆனந்தன் தான் தீர்த்த யாத்திரை சென்று வருவதாகவும், அதன்பின் தன் பணியைத் தொடர்வதாகவும் ஊறுதி அளித்துவிட்டுச் சென்றான். பிருஹதாரண்யத்தில் ஆனந்தன் பிரகாண்டர் என்ற ரிஷியை சந்தித்தான். அவரிடம் தன்னைப் பற்றிக் கூறி தனக்கு சந்நியாசியாக விருப்பம் என்றும், அவரைத் தனக்கு தீட்சை அளிக்குமாறும் வேண்டினான். அதற்கு பிரகாண்டர், “உனக்கு ஏற்பட்டுள்ள விரக்தி தற்காலிகமானது. அதனால் நான் உனக்கு தனமந்திரம் ஒன்று சொல்லித்தருகிறேன். அதை இடைவிடாமல் ஜெபித்தால் உனக்குப் புதையல் கிடைக்கும். புதையல் கிடைத்த பின்னும் அதை அனுபவிக்க ஆசை ஏற்படவில்லை எனில், நீ சந்நியாசியாகத் தகுதியானவன். ஆனால் ஒரு வருடத்திற்குள் உன் தவப்பலனை உணர்ச்சிவசப்பட்டு வீணாக்கினால், நீ சந்நியாசி ஆகமுடியாது” என்று கூறி அவனுக்கு தன மந்திரத்தை உபதேசித்தார். ஆனந்தன் தனியாக தனக்கென ஓர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு, இடைவிடாமல் தனமந்திரத்தை ஜெபித்தான். சில நாள்களிலேயே, அவனுடைய மனக்கண்ணில் ஒரு அரசமரத்தடியில் உள்ள புதையல் புலனாகியது. ஆனாலும் இறைவனை தியானம் செய்ய ஆரம்பித்தான். அப்படியிருக்கையில் ஒரு நாள் அவனைத் தேடி நீலாம்பரி என்ற இளம்பெண் ஆசிரமத்துக்கு வந்தாள். ஆனந்தனிடம் அடைக்கலம் கேட்ட அவள் தன் பிரச்சினையை விளக்கினாள். அவள் ஏழையாக இருந்தாலும், சிறுவயது முதல் செல்வத்திலும், சுகபோகங்களிலும் அபார ஈடுபாடு இருந்தது. அவளை சோமு என்ற வாலிபன் வரதட்சணை ஏதுமின்றி திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அவன் ஏழை என்பதால் அவனை மணம் செய்ய நிராகரித்துவிட்டாள். ஆனால் அவள் தந்தை அதற்கு சம்மதித்து விட்டார். அதனால் வீட்டை விட்டு ஓடி வந்த அவள் ஆனந்தனிடம் தனக்கு புகலிடம் தருமாறு வேண்டினாள். அதற்கு சம்மதித்த ஆனந்தன், “நீலாம்பரி! ஒரு வருடம்வரை புதையலைப் பாதுகாத்தவாறு எனக்கு உதவி செய்து கொண்டு இருந்தால், உனக்கு அந்தப் பணம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினான். அவளும் அதற்குச் சம்மதித்தாள். ஒருநாள் அவளை மணதார விரும்பிய சோமு அவளைத் தேடி ஆசிரமத்திற்கே வந்து விட்டான். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் அவளை நச்சரித்தான். அதற்கு அவள், “ஆனந்தனை நீ கொன்று விட்டால். அந்தப் புதையலை நாம் எடுத்துக் கொண்டு திருமணம் புரிந்து மகிழ்ச்சியுடன் இருப்போம்” என்றாள். நீலாம்பரி பேசியதை ஆற்றில் நீராடச் சென்று திரும்பிய ஆனந்தன் கேட்டு திடுக்கிட்டான். உடனே அவள் முன் வந்து, “பணத்திற்காக உனக்குப் புகலிடம் தந்த என்னையே நீ கொல்ல எண்ணினாய்! அதனால் நீ ராட்சஸியாக மாறுவாய்” என்று சாபம் கொடுக்க, நீலாம்பரி ராட்சஸியாக மாறிவிட்டாள். அப்போது அங்கே வந்த பிரகாண்ட ரிஷி ஆனந்தனைப் பார்த்து, “நீலாம்பரிக்கு சாபம் கொடுத்ததனால் உன் தவ வலிமையை நீ இழந்து விட்டாய்!” என்றார். “சுவாமி! மனித குலத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டேன். என்னை உடனே சந்நியாசியாக மாற்றுங்கள்” என்று ஆனந்தன் வேண்டினான். “சரவணனுக்கு நீ கொடுத்த வாக்கு என்னாவது? உனக்குப் பதிலாக வேறு யாரையாவது அவனிடம் வேலைக்கு அமர்த்து! உன்னால் சாபமிடப்பட்ட நீலாம்பரிக்கு சாப விமோசனம் அளி! அதன்பிறகு சந்நியாசத்தைப் பற்றி யோசிக்கலாம்” என்றார் ரிஷி. “நீங்கள் எனக்குச் சற்று உதவி செய்யக்கூடாதா?” என்று ஆனந்தன் வேண்ட, அவர் “பணத்தின் மீதுள்ள ஆசையினால்தானே நீலாம்பரி உன்னைக் கொலை செய்யவும் துணிந்தாள். அதே பணத்தை துச்சமாகக் கருதி எவன் ஒருவன் தியாகம் செய்கிறானோ, அவன் மூலம் நீலாம்பரிக்கு விமோசனம் அடைய, உன்னுடைய கடமையும் முழுமையடையும்” என்றார். மேற்கூறிய தன் வரலாற்றை விளக்கியபின், ராமநாதனை சரவணனிடம் அழைத்துச் செல்லவே தான் வந்ததாக ஆனந்தன் கூறினான். இதைக் கேட்டதும் ராமநாதன் மிகுந்த உற்சாகத்துடன் சரவணனிடம் வேலைக்கு அமர்ந்தான். பிறகுதான் அவனுக்கு அந்த வீட்டில் வேலை செய்வது எத்தனை கடினம் என்று புரிந்தது. ஒருநாள், எஜமானி “இந்த கிராமத்தில் சந்திரா என்ற சமையற்காரி ஒருத்தி இருக்கிறாள். அவள் மிகப் பிரமாதமாக சமைப்பாள். அவளை எப்படியாவது இங்கு சமையல் செய்ய அழைத்து வா! முடியவில்லை எனில் உன்னை வேலை விட்டு நீக்கி விடுவேன்” என்று பயமுறுத்தினாள். ஆனால் சந்திரா மறுத்துவிட்டாள். ராமநாதன் விடாமல், “ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு ஆயிரம் பொன் கிடைக்கும். அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். தயவு செய்து எனக்கு உதவி செய்!” என்று கெஞ்சினான். அவனைக் கண்டு இரக்கமுற்ற சந்திரா, “எனக்கு உன்னுடைய பணம் தேவையில்லை. உன்னுடைய நிலைமை பரிதாபமாக இருப்பதால் உனக்கு உதவி செய்ய ஒத்துக் கொள்கிறேன்” என்று கூறினாள். அவனுடன் சரவணன் வீட்டுக்கு வந்து சமையல் வேலை மட்டுமன்றி, மற்ற எல்லா வீட்டு வேலைகளிலும் ராமநாதனின் தோளாடு தோள் நின்று உதவி செய்தாள். நாளடைவில் பணத்தைப் பற்றிய அவன் கருத்து மாறியது. அவன் தன் வாழ்வில் சந்திராவை வாழ்க்கைத் துணைவியாக அடைந்தால் அதுவே பெரிய பொக்கிஷம் கிடைப்பது போல் என்று எண்ண ஆரம்பித்தான். ஐந்து ஆண்டுகள் சென்றபிறகு அவன் ஆனந்தனை அடைந்து, “உன் பொருட்டு, நான் அந்த வீட்டில் ஐந்து ஆண்டுகள் வேலை செய்து முடித்து விட்டேன். ஆனால் எனக்கு அந்த ஆயிரம் பொன் தேவையில்லை. அதை நீயே வைத்துக்கொள்! என் வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வம் சந்திரா ஒருத்தியே என்று உணருகிறேன்!” என்று ராமநாதன் கூறியதும், ஆனந்தன் ஆச்சரியப்பட்டான். அந்த சமயம் அங்கு வந்த பிரகாண்ட ரிஷி, ராமநாதனை மனதார வாழ்த்தினார். நீலாம்பரியும் அக்கணத்திலேயே சாப விமோசனம் பெற்று சுய உருவத்தைப் பெற்றாள். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்ரமனிடம், “மன்னா! பணம் வேண்டும் என்று ராமநாதன் ஐந்து வருடம் சரவணன் வீட்டில் மிகக் கடுமையாக உழைத்த பின், கடைசியில் ஆயிரம் பொன்னை வேண்டாம் என்று தியாகம் செய்தது ஏன்? ஆனந்தன் ஒன்றுமே செய்யாமல் நீலாம்பரிக்கு சாபவிமோசனம் எப்படிக் கிடைத்தது? கடைசியில் பிரகாண்ட ரிஷி ராமநாதனை மனதார வாழ்த்துமளவிற்கு அவன் அப்படியென்ன செய்துவிட்டான்? என்னுடைய சந்தேகங்களுக்கு விளக்கம் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது. அதற்கு விக்கிரமன், “ராமநாதனுக்குப் பணத்தின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது உண்மைதான்! ஆனால் சந்திராவை சந்தித்தது முதல் அவன் மனத்தில் மாறுதல் ஏற்படத் தொடங்கியது. தான் அளிப்பதாகக் கூறிய பணத்தை நிராகரித்து விட்டு, தன் மீதுள்ள இரக்கம் காரணமாக தனக்கு உதவி செய்ய வந்த சந்திராவைக் கண்டது முதல் அவனுக்குப் பணத்தின் மீது மோகம் குறைந்தது. அதனால் தனக்கு வரவேண்டிய ஆயிரம் பொன்னையும் தியாகம் செய்தான். ராமநாதன் செய்த தியாகத்தினால் நீலாம்பரிக்கு சாபவிமோசனம் கிட்டியது. மகத்தான தியாகம் செய்த ராமநாதனை பிரகாண்ட ரிஷி வாழ்த்தாமல் வேறு என்ன செய்வார்?” என்றான். விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே வேதாளம் தான் புகுந்திருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.
"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. நல்ல மனுசாளுக்கு ஒரு சொல்லு. ஸ்டேன்ட் அப் ஆன் தி பென்ச்.." என்றார் ஆறாம் வகுப்பு ஆசிரியர் தணிகாசலம். பாஸ்கர் முணுமுணுத்துக் கொண்டே பெஞ்சின் மீது ஏறி நின்றான். பாஸ்கருக்கு இது ஒன்றும் புதிது இல்லை. எப்படியும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இப்படி ஏறி நிற்பான். பாஸ்கர் கொஞ்சம் முரட்டு சுபாவம். மூக்கு நுனியில் கோபம் எப்போதும் உட்கார்ந்திருக்கும். ஒரு நாளைக்கு ஒரு பையனிடமாவது வம்பு வளப்பான். இப்போது பாஸ்கரின் கோபம் ராஜூவின் மீது இருந்தது. ராஜூ கிளாஸ் லீடர். அவன்தான் இவனைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் வகுப்பில் இல்லாத நேரத்தில் அடித்த கொட்டத்திற்கு எப்படி தண்டனை கொடுப்பார்?. பள்ளிக் கூடம் விடட்டும் என்று காத்திருந்தான் பாஸ்கர். வீட்டுக்கு பெல் அடித்தது. மாணவர்கள் திபுதிபுவென்று வகுப்பிலிருந்து வெளியேறினர். பாஸ்கர் மட்டும் ராஜூவின் பின்னாலேயே போனான். ராஜூ பள்ளிக்கூடக் கேட்டைத் தாண்டியதும் அவனைத் தோளைப் பிடித்து இழுத்தான். "டேய் வாத்தியார் கிட்ட என்னைப்பத்தி என்னா சொன்னே..?" என்று கோபமாய் கேட்டான். "நான் ஒண்ணுமே.......... உன்னப்பத்தி சொல்லலடா...." என்றான் அமைதியாக ராஜூ. அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் சட்டையைப் பிடித்து இழுத்தான். ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான். ராஜூ நிலை குலைந்து கீழே விழுந்தான். ராஜூவின் கிழிந்த சட்டை பாதிக்குமேல் பாஸ்கரின் கையில் இருந்தது. அந்த சட்டைக் கந்தலை அவன்மீது தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் அவனைத் தாக்க ஆயத்தமானான். பாஸ்கர் எதிர்பார்த்ததைப் போல் இவனைத் திருப்பி அடிக்க முயற்சிக்கவில்லை. ராஜூவின் எண்ணம் எல்லாம் கிழிந்து போன தனது ஒரே சட்டையைப் பற்றியே இருந்தது. நாளைக்கு எப்படி இவன் பள்ளிக்கு வருவான்...? எந்த சட்டையைப் போட்டுக் கொண்டு வருவான்? ராஜூ செத்துப்போன தனது அப்பாவையும், கட்டிட வேலைக்குப் போய் சம்பாதித்து தன்னை படிக்க வைக்கும் தனது அம்மாவையும் நினைத்தான். மிச்ச கொஞ்சமாய் கிழிந்துபோன சட்டையை கழட்டி எறிந்தான். சிதறிக் கிடந்த புத்தகங்களை சேகரித்தான். எழுந்து நடந்தான். ராஜூ வெற்று உடம்போடு புத்தகமும் கையுமாய் நடந்து கொண்டிருந்தது பாஸ்கருக்கு என்னவோ போல் இருந்தது. பாஸ்கர் வீட்டிற்குத் திரும்பினான். அன்று முழுக்க அவனுக்கு மனசு என்னவோ போல் இருந்தது. ஒருவாரம் கழிந்தது. ராஜூ பள்ளிக்கு வரவே இல்லை. ராஜூவின் வீடு ஊர்க்கோடியில் இருந்தது. ஒரு சின்ன குடிசை. அதில் அவனும், அவன் அம்மாவும் இருந்தனர். பாஸ்கரின் வீட்டு மாட்டுத் தொழுவம் கூட ராஜூவின் வீட்டை விட பத்து மடங்கு பெரியதாக இருக்கும். அன்று மாலை பள்ளியிலிருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தான் பாஸ்கர். சட்டென்று ஒரு இடத்தில் காரை நிறுத்தச் சொன்னான். காரை விட்டு இறங்கினான். ரோட்டு ஓரத்தில் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கு ராஜூ தலையில் செங்கல் சுமந்தபடி சென்று கொண்டிருந்தான். பாஸ்கர் மெல்ல வேலை நடக்கும் இடத்திற்குச் சென்றான். "என்னடா ராஜா பள்ளிக்கூடம் போகலையா....? வேலைக்கு வந்திட்டே..." அந்தப் பக்கமாக வந்த ஒருவர். "போட்டுக்கறதுக்கு சட்டை இல்லை. புதுசா எடுக்கணும். பணம் வேணும்." என்றான் ராஜூ. "ஓஹோ புது சட்டைய போட்டுக்கிட்டு அப்பொறமா பள்ளிக்கூடம் போகப் போறீயா?" என்று சிரித்தபடி போனார் அவர். "இருந்த ஒரே சட்டையையும் நான் கிழித்து விட்டேன். அவன் எப்படி பள்ளிக்கு வருவான்?" என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான் பாஸ்கர். முட்டாள்தனமான கோபம். அவனுக்கே அவன் மீது வெறுப்பாய் இருந்தது. பாஸ்கர் தனது வீட்டிற்குத் திரும்பி வந்தான். அப்பா தனது பிறந்த நாளுக்காக வாங்கி வைத்திருந்த சட்டையை எடுத்துக் கொண்டு ராஜூவின் வீட்டிற்குச் சென்றான். "உள்ள வாடா" என்று அன்புடன் அவனை வரவேற்றான் ராஜூ இவன் தயங்கியபடி உள்ளே போனான். அவனுக்கு டீ போட்டுக் கொடுத்தான். "என் மீது உனக்கு கோபம் இல்லையா" என்றான் பாஸ்கர். "வீட்டிற்கு வந்தவர்களிடம் யாராவது கோபப்படுவார்களா?" என்றான் ராஜூ. "கோபத்தில் நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு" என்று சொல்லி தனது பிறந்தநாள் சட்டையை அவனிடம் கொடுத்தான். "எனக்கு புதுச்சட்டை ரெடியாகிவிட்டது. உன் அன்புக்கு நன்றி" என்றான் ராஜூ. பாஸ்கர் எவ்வளவோ வற்புறுத்தியும் ராஜூ அதை வாங்கிக் கொள்ளவில்லை. அடுத்தநாள் புதுச்சட்டையுடன் வகுப்பிற்குள் நுழையும் ராஜூவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பாஸ்கர்.
என் இருப்பிடத்திலிருந்து ஏதேதோ பாதைகள் கடந்து, நான் செல்லவேண்டிய இடத்தை அடைய பலவிதமான வாகங்களும், கூட நடையுமாக எதனூடாகச் செல்லும்போதும் ஏதாவது ஒரு இடத்தில் பதிக்கப்படும் தார் கற்களையோ அல்லது அப்போதுதான் பதித்த தார் அடைந்த சாலைகளையோ கண்டிப்பாக இப்போது கடந்து போகிறேன். சித்தியை நான் கண்டதே காவி உடையும் முக்காடிட்ட ரவிக்கையற்ற உருவத்துடன்தான். எனக்கு மடாதிபதி எப்போதும் சித்திதான். மற்றவர்கள் சொல்லுவார்கள் சித்தி மிக அழகி என்று. எனக்கு எப்போதும் அப்படித் தோன்றியதே இல்லை. கழுத்து மூடி இழுத்துச் சொருகப்பட்ட ஒரே வண்ணப் புடவையில் எந்த ஓரத்து வழியாகவும் அழகு வெளி வழிந்ததில்லை. மூடியதினுள்ளான அழகு காண என் அறிவுக்கு எட்டவில்லை. உடை, மடம், பூஜை, தன்னலமற்றிருத்தல், இரவுப் பலகாரம், யாரோடும் எதிர்படாதிருத்தல், பெரிய வீட்டில் கூட நடமாட்டம் ஒரு சில அடிகளுக்குள் என்ற சிறு பட்டியல்தான் சித்தியிடம். பசி சொல்லிக் கேட்டதில்லை. அன்றைய நானின் ஊடாக இன்றைய நானும் எங்கெங்கு கலந்து வருமோ? எங்கும் நிறைந்துவிடுமோ? மடிப்புடவையின் நிறம் வறுமைக்கானது, மரக்கலர் துக்கத்திற்கானது. துக்கம் வறுமையினால். வறுமை எதனால்? எப்போதும் வாசம் மிகுந்த தின்பண்டக்ஙள சித்தி மடியிலும், துணியிலும், அருகிலும் நிறைந்திருக்கும். இரவு படுத்திருக்கும்போதோ குளித்துத் துணி மாற்றும்போதோ சற்றே வளர்ந்த கருமையான தலைமுடி பார்வைக்குப் படும், தார் வண்ணத்தில். சட்டென்று இயல்பாக இழுத்து மூடும் சித்தியின் கை சற்றே பதட்டத்துடன். துணியிலிருந்து வெளி வழிந்து முகம் அடையும் முன்னரே அவை மழிக்கப்பட்டு இருக்கும். விடியற்கருக்கலில், வீட்டின் பின்புறம் இருட்டும், முடியும் களையப்பட்டு யாராவது ஒருவர் தலைக்கு நீர் விட்டு, வேறு துணி கொடுத்து வீட்டிற்குள் கூட்டி வருவர். பருவ கால மாற்றம் பாதிக்கப்படாத தொடர் செயல் இது. விஷ ஜந்துக்களுக்கும், செடி, முடிக்கும் தடை நிறைந்த அப்பாதையில் அன்று சித்தி பயணப்பட்டு வருவாள். புடவைக் கலரில் தலையும் மின்னும். நிறைய ராஜகுமாரன்கள் வருவார்கள். குமரிகளைக் கொத்திக் கொண்டு செல்வார்கள். குறுக்கே நிற்கும் குண்டோதரக் கல் திறந்து தங்கம் தரும், கிளி பெண் குழந்தை வளர்க்கும், ராட்சசன் நகம் வளர்ப்பான், சின்னப் பெண் கொடுமைப் படுத்தப்படுவாள், பகவான் க்ருபையால் கஷ்டம் நீங்கும், காலுடைந்த குதிரையில் பல தேசங்களையும் கடக்கும் மனிதன் கடக்கடக் கடக் என்ற சப்தத்துடன் தேசம் கடப்பான், உதடு பெருத்த ஆணை விருப்பம் இன்றி மணம் செய்துகொண்ட பெண் பல விதத்திலும் சித்திரவதைக்கு ஆளாவாள், புருஷனை உதடா! உதடா! என்று வெறுப்பேத்துவாள், கடைசியில் செத்து மண்ணாவாள். இப்படி பலப் பல இரவுகள் பகல்கள். தேவைக்கு ஏற்ப இரவோ பகலோ நீளும் அல்லது சுருங்கும், அகலமாகும், பயமுறுத்தும் கண் கசிய வைக்கும். சித்தி மணம் என் மீதும் படியும். "என் இருப்பிடத்திலிருந்து ஏதேதோ பாதைகள் கடந்தடைய வேண்டியவை விதவித வாகனங்கள் கால் நடையாகவும் ஏதோ ஒரு இடத்தில் இட்டுப் புதைத்த தார் சாலை புதைந்து கொண்டிருக்கும் புழுதி இருபுறமும் மலை என எழும்பி..." தார் கொதித்துக் கொண்டிருக்கும். தெருவோரம் மஞ்சள் நெருப்பு சப்தமிட சாக்குச் சுற்றிய காலுடன் தார் எடுத்துக் கோலமிடுவார்கள். தாருடன் கலந்து கல் கொட்டி இழுப்பார்கள். தாருடனும், ரோட்ரோலருடனும் நானும் காய்ந்துவிட்டு அதிசயத்தை அனைவரிடமும் பகிர வேண்டி ஓட்டமும் நடையுமாக வீடு திரும்பினேன். வழி நெடுக கருங்கற்கள் உப்பி உப்பி ரோடோரம் படுத்திருந்தது. ரோட்டுக்குள் பரப்பக் காத்து இருந்தது. சித்தி படுத்து விட்டார்; சில நாட்களாயிற்று. தரை பரவி நிமிர்ந்தபடி படுத்துக் கிடக்கும் அவரின் முழு உடலும் வயிறாக உப்பி ஊதி மேடிட்டிருந்தது. நார்மடி, தலையில் தனிந்திருக்கிறது. கருப்புத் தார் பொங்கி வழிகிறது சித்தியின் தலையிலிருந்து, படுக்கையைச் சுற்றி யார் யாரோ வந்து அனேகர் பார்க்கின்றனர். குரலும் வார்த்தையும் மங்காமல், ஏதேனும் தின்ன வாங்கித் தரும்படி எல்லோரிடமும் முறையிடுகிறார் சித்தி. அவரவர் வசதிக்கேற்ப சின்னதாகவோ பெரியதாகவோ உள் நுழைகிறது தின்பண்டங்கள். வெங்காயமும் வேண்டும் பூண்டும் உடன் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார் சித்தி. வம்பு பேசும் ஊர் என பயந்தாலும் ஏதோ ஒரு சமயம் உள் நுழையும் அவைகளும். நான் உள் நுழைவதில்லை அழைத்தாலும். வீடொழிக்கும் போது வேண்டாததை அடைத்து வைக்கும் சாக்கென சித்தி வயிறு பெருக்கிறது. எல்லாவற்றையும் உள் தள்ளிப் புதைக்கும் சித்தி, அருகில் யாரும் வந்து பங்கு கேட்டு விடுவார்களோ என்று அள்ளி அள்ளி அடைத்துக் கொள்ளும் சித்தி, பசியாகவே உருமாறிவிட்டாரோ? படுத்தபடி எல்லா பண்டங்களும் வாய் வழி நுழைந்து வயிறு அடைந்து கல்லாகி விடுகிறது. கற்களால் கட்டப்பட்ட வட்டம் அல்லது கருங்கற்குவியல் என வயிறு இடம் மாறி இடம் மாறி இளைப்பாறுகிறது. சாலை ஓரத்தில் கருங்கற்கள் வெளியில் வீட்டின் எதிரில், தார் கொதித்துக் கொதிக்கும் மணம். சித்தியின் வயிற்றுக் கற்கள், தலைமுடி, தார், கருப்பு முடிகள், கற்கள், வயிறு, முடி, சித்தி ராஜகுமாரன், நான், சித்தி வாசனை, தின்பண்டம், சித்தியின் துர் நாற்றம், நான்.... தரையின் சிறுசிறு சிமெண்ட் சதுரங்கள் என் முன் பரந்து பெரிதாகி... சித்தியின் வயிறு என குமிழ் குமிழாய் எழும்பி மேடிட்டு, மேடிட்டு அறை முழுதும். மதியம் அப்படியே உறங்கிப் போனேன். எழும்போது தார் வாசனையும், தலைவலியுமாய் நான். முதல் பகல் தூக்கம், முதல் தார் வாசனை, முதல் தலைவலி. என் இருப்பிடத்திலிருந்து எதேதோ பாதைகளைக் கடந்து நான் அடையவேண்டிய இடத்தை அடைய பல விதமான வாகனங்களும், கூட நடையுமாக. எதனூடாகச் செல்லும் போதும், ஏதோ ஒரு இடத்தில் பதிக்கப்படும் தார் கற்களையோ அல்லது அப்போது தான் தார் அடைத்த சாலைகளையோ கண்டிப்பாக இப்போது நான் கடந்து போகிறேன். தார் மணமும், தலைவலியும், வயிறுமாக.
சோழ நாட்டின் தலைநகரம் காவிரிப் பூம்பட்டினம். அரசவை கூடியுள்ளது. அரியணையில் அரசர் பெருவளத்தான் பெருமிதத்துடன் அமர்ந்து உள்ளார். அமைச்சர்களும் படைத் தலைவனும் அவையினரும் இருக்கைகளில் அமர்ந்து உள்ளனர். "அமைச்சரே! சேர நாட்டின் மீது போர் தொடுக்க முடிவு செய்தோம். முறைப்படி நம் தூதரை அந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தோம். எங்கு எப்பொழுது இரு நாட்டுப் படைகளும் போரிடுவது? இது குறித்து சேர நாட்டு அரசரே முடிவு செய்ய வேண்டும் என்றோம். இதுவரை அந்த அரசரிடம் இருந்து எந்தச் செய்தியும் இல்லை." "வெற்றி வேந்தே! சேர அரசரும் போருக்கு அஞ்சுபவர் அல்லர். எங்கு போர் செய்வது? ஏற்ற இடத்தைத் தேர்ந்து எடுப்பதில் தாமதம் என்று நினைக்கிறேன். விரைவில் செய்தி வரும்" என்றார் அமைச்சர். அப்பொழுது வீரன் ஒருவன் அரசவைக்குள் வந்தான். அரசரைப் பணிவாக வணங்கினான். "காவிரி நாட வாழி! வெற்றி வேந்தே வாழி! நீதிநெறி தவறாத வேந்தே வாழி" என்று வணங்கினான். "வீரனே! என்ன செய்தி?" "அரசே! சேர நாட்டுத் தூதர் வந்திருக்கிறார். உங்கள் அனுமதிக்காக வாயிலில் காத்திருக்கிறார்." "தூதனை உடனே இங்கு அழைத்து வா." "கட்டளை அரசே" என்று வணங்கிவிட்டு வீரன் சென்றான். தூதன் உள்ளே நுழைந்தான். அரசரைப் பணிவா வணங்கினான். "அரசே! வாழி! எங்கள் பேரரசர் சேரமான் நெடுஞ்சேரலாதன் செய்தி அனுப்பி உள்ளார்." "தூதனே! உன் வருகையைத் தான் எதிர்பார்த்து இருந்தோம். அந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல். எங்களுக்குத் திறை செலுத்த உங்கள் அரசர் ஒப்புக் கொண்டாரா? அல்லது சோழர் பெரும்படையைச் சந்திக்க உள்ளாரா? எதைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்?" "அரசே! எங்கள் அரசர் பெருமான் வீரர்களுக்கு எல்லாம் வீரர். பகை அரசர்கள் நடுங்கும் பேராற்றல் வாய்ந்தவர். எம் நாட்டு மக்களும் வீர மறவர்கள். போர் வேண்டி எங்கள் நாட்டிற்கு ஓலை வந்தது இல்லை. உங்கள் ஓலையைக் கண்டு எங்கள் அரசர் மகிழ்ச்சி அடைந்தார். வீரர்களோ நல்விருந்து கிடைத்தது என்று ஆரவாரம் செய்தார்கள். போர் என்று முடிவு செய்து விட்டார் எங்கள் அரசர். போரிடுவதற்கு ஏற்ற இடத்தையும் தெரிவு செய்து விட்டார். வெண்ணிப் பறந்தலை என்ற இடம் தான் அது. வரும் முழுமதி நாளன்று இரு படைகளும் அங்கே சந்திக்கலாம். இதுதான் எங்கள் அரசர் அனுப்பிய செய்தி" என்றான் தூதன். சோழ அரசரை வணங்கி விட்டுப் புறப்பட்டான். "அமைச்சரே! கடல் போன்ற பெரும்படை நம்மிடம் உள்ளது. போர்ப் பயிற்சி மிக்க எண்ணற்ற வீரர்கள் உள்ளனர். நம்மை வெல்லும் ஆற்றல் யாருக்கு உள்ளது? நம் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசனாக சேரன் இருந்து இருக்கலாம். வீணாக நம்முடன் போரிட்டு அழியப் போகிறான்." "அரசே! சேர அரசரின் தன்மானம் நமக்குக் கீழ்ப்படிய மறுக்கிறது. வரும் முழுமதி நாள் நம் நாட்டிற்கு வெற்றி நாள். உங்கள் வீரச் சிறப்பை உலகமே அறியும் நன்னாள்" என்றார் அமைச்சர். "நன்று சொன்னீர்! அமைச்சரே! படைத்தலைவரே! நம் பெரும்படை நாளையே வெண்ணிப் பறந்தலை நோக்கிப் புறப்படட்டும். சேரர் படையின் வருகைக்காக நாம் அங்கே காத்திருப்போம். வீரம் பேசிய அந்தச் சேரனைப் போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திக்கிறேன். என் வேலுக்கு அவன் பதில் சொல்லட்டும்." "கட்டளையை உடனே நிறைவேற்றுகிறேன்" என்றார் படைத்தலைவர். அரசரை வணங்கி விட்டுச் சென்றார். சோழர் படை வெண்ணிப் பறந்தலையை அடைந்தது. "படைத் தலைவரே! இந்த இடம் தான் வெண்ணிப் பறந்தலையா? கண்ணுக்கு எட்டிய தொலைவு மணற் பரப்பு தான் உள்ளது. செடிகளோ கொடிகளோ மரங்களோ எதுவும் இல்லை. நல்ல இடத்தைத்தான் சேர அரசர் தேர்ந்து எடுத்து உள்ளார்" என்றார் சோழ அரசர். "ஆம் அரசே" என்றார் படைத்தலைவர். முழுமதி நாள் வந்தது. காலை நேரம். இரு நாட்டுப் படைகளும் எதிரெதிரே அணிவகுத்து நின்றன. சோழர் பெரும்படை முன் சேரர் படை சிறுத்துக் காட்சி அளித்தது. கரிகாற் பெருவளத்தான் சோழர் படைக்குத் தலைமை தாங்கித் தேரில் அமர்ந்தார். அதே போலச் சேரமான் நெடுஞ்சேரலாதனும் தன் தேரில் அமர்ந்தார். இரு நாட்டு முரசங்களும் ஒரே நேரத்தில் முழங்கின. போர் தொடங்கியது. வீரர்கள் வீர முழக்கம் செய்தனர். ஒருவரோடு ஒருவர் கடுமையாகப் போரிட்டனர். யானைகளின் பிளிறல் ஒரு பக்கம் கேட்டது. குதிரைகளின் கனைப்பொலி இன்னொரு பக்கம் கேட்டது. வாளோடு வாள் மோதும் ஓசை பல இடங்களில் கேட்டது. எங்கும் ஆரவாரம் இருந்தது. கரிகாற் பெருவளத்தானும் நெடுஞ்சேரலாதனும் போர்க் களத்தில் நேருக்கு நேர் சந்தித்தனர். சினத்தால் இருவர் கண்களும் தீ உமிழ்ந்தன. இருவரும் போர் செய்யத் தொடங்கினர். வெற்றி தோல்வி அறியவே முடியவில்லை. இருவரும் இணையாகப் போர் செய்து கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அது நடந்து முடிந்தது. சோழ அரசர் தன் வேலைச் சேர அரசரின் மார்பில் பாய்ச்சினார். சேர அரசரின் மார்பை ஊடுருவிப் பாய்ந்தது அந்த வேல். அப்படியே மண்ணில் சாய்ந்தார் சேர அரசர். அவர் உடலிலிருந்து வழிந்த குருதி நிலத்தைச் செம்மை ஆக்கியது. "ஆ! நம் அரசர் வீழ்ந்து விட்டார்" என்ற சேர வீரர்களின் அவலக் குரல் எங்கும் கேட்டது. "நாம் வெற்றி அடைந்து விட்டோம். நம் வீரத்திற்குப் பெருமை சேர்ந்து விட்டது. வீரத்துடன் போரிட்டான் சேர அரசன். என்ன பயன். என்னிடம் தோற்று வீழ்ந்தான். வெற்றி அடைந்த நம் படை போரிடுவதை நிறுத்தட்டும். ஆரவாரத்துடன் நாடு திரும்பட்டும்" என்று கட்டளை இட்டார் சோழ அரசர். வேல் பாய்ந்ததால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் சேர அரசர். வீரர்கள் அவரைப் பாசறைக்குக் கொண்டு சென்றனர். அரசரைச் சோதித்த மருத்துவர் "அரசரின் மார்பில் பாய்ந்த வேல் முதுகைத் துளைத்து உள்ளது. ஏராளமான குருதி வெளியேறி விட்டது. வேலைப் பிடுங்கி விட்டேன். மேலும் குருதி வெளியேறா வண்ணம் மருந்திட்டு உள்ளேன். உடனே நம் அரசரை அரண்மனைக்குத் தூக்கிச் செல்லுங்கள். ஆற்றல் வாய்ந்த மூலிகைகள் பல அங்கு உள்ளன. அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. நாடித்து துடிப்பு அடங்கிக் கொண்டே வருகிறது. விரைந்து செயல்படுங்கள்." மயங்கிக் கிடந்த சேர அரசரைப் பல்லக்கில் வைத்தார்கள் வீரர்கள். பல்லக்கு விரைந்து கருவூரை அடைந்தது. சோழ நாடெங்கும் விழாக் கோலம் பூண்டது. வீதியெங்கும் தோரணங்கள் கட்டப்பட்டன. வெற்றியுடன் திரும்பும் அரசரையும் வீரர்களையும் வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர் மக்கள். எங்கும் வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. வெண்ணிப் பறந்தலைப் போர் நிகழ்ந்து சில திங்கள் கழிந்தன. வழக்கம் போல அரசவை கூடி இருந்தது. அரியணையில் கரிகாற் பெருவளத்தான் அமர்ந்து இருந்தார். அவையினர் அவரவர் இருக்கையில் இருந்தனர். வீரன் ஒருவன் உள்ளே வந்து அரசரை வணங்கினான். "வெற்றி வேந்தே வாழி! பெரும்புலவர் வெண்ணிக் குயத்தியார் வந்து கொண்டிருக்கிறார்" என்றான். "ஆ! பெரும்புலவர் வெண்ணியக் குயத்தியாரா? இங்கு வருகிறாரா? அவர் வருகையால் நம் நாடே பெருமை பெற்றது" என்று அரியணையில் இருந்து இறங்கினார் அரசர். புலவர் வெண்ணியக் குயத்தியார் உள்ளே நுழைந்தார். அவரை வரவேற்ற அரசர் "வாருங்கள்! வெண்ணிக் குயத்தியாரே! வாருங்கள்" என்ற மலர்ந்த முகத்துடன் வரவேற்றார். அவையினர் எல்லோரும் எழுந்து "புலவர் வெண்ணிக் குயத்தியார் வாழ்க" என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள். உயர்ந்த இருக்கை ஒன்றைக் காட்டிய அரசர் "புலவரே! இதில் அமருங்கள்" என்று வேண்டினார். தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு மகிழ்ந்தார் புலவர். அந்த இருக்கையில் அமர்ந்தார். அரசரும் அரியணையில் அமர்ந்தார். புலவர் எழுந்து நின்று "நானிலம் காக்கும் அரசே வாழி! செங்கோல் தவறாத அரசே வாழி! பகை நடுங்கும் வெற்றி வேந்தே வாழி! தமிழின் மீது நீர் கொண்டிருக்கும் பேரன்பை உலகமே போற்றுகிறது. உம்மைப் போல் புலவர்களை மதிக்கும் அரசர் யார் இருக்கிறார்கள்? உம்மோடு உரையாடி மகிழவே இங்கு வந்தேன். என் சில நாட்கள் இங்கே தங்குவதாகத் திட்டம்" என்றார். "தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் புலவர் பெருந்தகையே! கிடைத்தற்கு அரிய பெரும் பேறாகக் கருதுகிறோம். உங்கள் வருகையால் இந்தச் சோழ நாடே சிறப்புப் பெற்றது. நீங்கள் இங்கேயே நிலையாகத் தங்கினால் பெரிதும் மகிழ்வோம்" என்றார் அரசர். "வெற்றி வேந்தே! எங்கள் அறிவுச் செல்வம் ஒரு நாட்டிற்கு உரியது அல்ல. உலகிற்குப் பயன்பட வேண்டும். பல நாடுகளையும் சுற்றி விட்டுச் சேர நாடு சென்றேன். அங்கே சில நாட்கள் தங்கினேன். அங்கிருந்து இங்கு வந்தேன்" என்றார் அவர். "சேர நாட்டிலிருந்தா வருகிறீர்கள்? எனக்கும் சேர அரசனுக்கும் நிகழ்ந்த போரைப் பற்றிக் கேட்டு இருப்பீர்கள். அதைப் போன்று கடுமையான போர் எங்கும் நிகழ்ந்தது இல்லை. அந்தப் போரில் அடைந்த வெற்றி எனக்குப் பெரும்புகழைத் தந்தது. அதைப் போற்றிப் புகழாத புலவர்களே இல்லை. அந்தப் போரைப் பற்றி நீங்களும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார் அரசர். "அரசே! போர் முடிந்து விட்டது. சேர நாட்டு நிகழ்ச்சிகள் எதுவும் உமக்குத் தெரியாதா?" "புலவரே! சேரரின் படையைப் போர்க்களத்தில் சந்தித்தேன். என் வேலால் தாக்கப்பட்ட ரே அரசன் நிலத்தில் வீழ்ந்தார். வெற்றிக்காகப் போர் செய்தேன். என் எண்ணம் நிறைவேறியது. தோல்வி அடைந்த அவர்களால் பல ஆண்டுகள் போரிட முடியாது. அதனால் அங்கு என்ன நிகழ்ந்தது என்பதை நான் பொருட்படுத்தவில்லை." "அரசே! உங்கள் வேலால் தாக்கப்பட்டார் அரசர் நெடுஞ்சேரலாதன். அவர் உயிர் பிழைத்து விட்டார். அந்தச் செய்தியாவது உங்களுக்குத் தெரியுமா?" "புலவரே" என்னால் நம்ப இயலவில்லையே. என் வேல் நெடுஞ்சேரலாதனின் மார்பைத் துளைத்து ஆழமாகப் பாய்ந்தது. அப்படியே நிலத்தில் அவர் வீழ்ந்தார். அவர் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லையே." "அரசே! சேர நாட்டு மூலிகைகளின் ஆற்றல் அளவிட முடியாதது. அவை இறந்தவரின் உயிரையே மீட்கும். அப்படி இருக்கையில் படுகாயம் அடைந்த அரசரின் உயிரையா மீட்காது?" "மூலிகைகளால் சேர அரசர் உயிர் பிழைக்கட்டும். என்னிடம் தோற்ற பழி அவரை விட்டு நீங்காதே. அதற்கு அவர் போர்க்களத்திலேயே இறந்து இருக்கலாம். உயிர் பிழைத்துப் பழி சுமக்கின்ற கொடுமை யாருக்கு வேண்டும்?" "அரசே! சேர அரசர் உயிர் பிழைத்ததால் புகழில் உயர்ந்து விட்டார். புலவர்கள், சான்றோர்கள் எல்லோரும் சேர அரசரையே புகழ்ந்து பேசுகிறார்கள். நீங்கள் போரில் அடைந்த வெற்றிப் புகழும் மங்கி விட்டது." "புலவரே! போரில் பெருவீரம் காட்டி வென்றவன் நான். என்னிடம் தோற்று உயிர் பிழைத்தவன் சேர அரசன். அவனை இந்த உலகம் புகழ்கிறதா? கேட்பதற்கு வேடிக்கையாக உள்ளதே?" "அரசே! உங்கள் வேல் சேர அரசரின் மார்பில் ஆழமாகப் பாய்ந்தது. முதுகைத் துளைத்து வெளியே வந்தது." "என் வீரத்திற்கும் வலிமைக்கும் அந்த வேலே சான்று ஆகிறதே." "அரசே! உங்கள் வேலால் நிலத்தில் வீழ்ந்தார் சேர அரசர். வீரர்கள் அவரைக் கருவூருக்கு எடுத்துச் சென்றார்கள். மருத்துவர்கள் அரிய பச்சிலைகள் கட்டினார்கள். ஒரே திங்களில் அவர் மீண்டும் பழைய வலிமையைப் பெற்றார். மார்பிலும் முதுகிலும் வேல் குத்திய வடு இருப்பை அறிந்து துடித்தார்." "இதில் துடிப்பதற்கு என்ன இருக்கிறது? புலவரே" "அரசே! விழுப்புண் பட்ட வடு மார்பில் இருந்தால் பெருமை. நேருக்கு நேர் நின்று போர் செய்தவர். எதிரியின் படைக் கலங்களை மார்பில் தாங்கியவர் என்று புகழ்வார்கள். முதுகில் வடு இருந்தால் புறமுதுகு காட்டி ஓடி வந்தது ஆகாதா? அது வீரர்களுக்கு மாறாப் பழி தரும் செயல் அல்லவா?" "ஆம் புலவரே! புறமுதுகிட்டு ஓடுவது மிக இழிவான செயல். அப்படிப்பட்டவனை ஈன்ற தாய் வேண்டாள். மனைவி விரும்பாள். உற்றாரும் மற்றோரும் வெறுப்பார்கள். இதில் சேர அரசர் துடிப்பதற்கு என்ன இருக்கிறது? என் வேலை அவர் மார்பில் தாங்கியதை எல்லோரும் அறிவார்களே. அதே வடுதானே முதுகில் உள்ளது." "அரசே! சேர அரசர் மானம் மிக்கவர். முதுகில் வடு உள்ளது. உண்மை அறியாதவர்கள் என்ன நினைப்பார்கள்? புறமுதுகு காட்டியதால் ஏற்பட்ட வடு என்று தானே நினைப்பார்கள். என்ன செய்வது என்று கலங்கினார். அந்தப் பழி நீங்க வடக்கிருந்து உயிர் துறக்கும் முடிவிற்கு வந்தார்." "என்ன! செய்யாத பழிக்காக வடக்கிருக்க நினைத்தாரா? இதைப் புலவர்களும் சான்றோர்களும் தடுக்க வில்லையா?" அரசே! சேர அரசரின் செயலை எல்லோரும் தடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அவரோ எம் சேரர் குடி மானம் மிக்க குடி. என் முன்னோன் ஒருவன் பகைவரால் சிறையிடப்பட்டான் காலந்தாழ்த்து வந்த நீரைப் பருகாமல் உயிரை விட்டான். அப்படிப்பட்ட உயர்ந்த மரபில் வந்தவன் நான். என்னைப் புறப்புண் கண்டவன் என்றால் குடிக்கே இழுக்கு நேருமே. என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நான் வடக்கிருந்து உயிரைத் துறப்பது உறுதி என்றார். "பிறகு என்ன நடந்தது புலவரே?" "வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. அரசர் வடக்கிருப்பதற்கு உரிய இடத்தைத் தேர்ந்து எடுத்தார்கள். அங்கேயே வடக்கிருந்து உயிர் துறந்தார் அவர்." "ஆ! என்ன சேர அரசரின் மானச் சிறப்பு! செயற்கருஞ் செயலை அல்லவா அவர் செய்து விட்டார். செய்யாத பழிக்காக இதுவரை யார் உயிரைத் துறந்து இருக்கிறார்கள்? அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்". "அரசே! போரில் பெரு வீரம் காட்டி வெற்றி பெற்றவர் நீங்கள். உங்களிடம் தோற்ற சேர அரசரோ புறப்புண்ணுக்கு நாணினார். வடக்கிருந்து உயிர் துறந்தார். உங்கள் புகழை விட அவர் புகழையே சிறப்பித்துப் பாடுகிறார்கள் புலவர்கள்." "புலவரே! என் வீரத்தினும் சேர அரசரின் மானம் உயர்ந்து நிற்கிறது. வென்ற நான் தோற்றவனாகி விட்டேன். தோற்றும் அவர் புகழில் என்னை வென்று விட்டார். வாழ்க அவர் புகழ்" என்று உணர்ச்சி பொங்கச் சொன்னார் கரிகாற் பெருவளத்தான். 1. "நனியிரு முந்நீர் நாவா யோட்டி வளிதொழி லாண்ட வுரவோன் மருக களியியல் யானைக் கரிகால் வளவ செனறமர்க் கடந்தனின் னாற்றற் றோன்ற வென்றோய் நின்னினு நல்ல னன்றே கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புக ழுலக மெய்திப் புறப்புண் ணாகி வடக்கிருந் தோனே" (புறநானூற்றுப் பாடல் 66, வெண்ணிக் குயத்தியார் பாடியது)
சக்ரவர்த்தி அக்பருக்கு பீர்பாலை மிகவும் பிடித்திருந்தது. அதைக்கண்டு தர்பாரில் பலருக்கு பீர்பால் மீது பொறாமை ஏற்பட்டது. அவர்களில் அரண்மனை வைத்தியரான ஹகீம் ஜாலிம்கானும் ஒருவர்! அவரும், பீர்பால் மீது பொறாமை கொண்ட மற்றவர்களும், பீர்பாலை சிக்கலில் ஆழ்த்த நல்லதொரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்தனர். ஒரு நாள் அக்பருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அரண்மனை வைத்தியர் ஜாலிம்கான் அவசரமாக வரவழைக்கப்பட்டார். அவர் பரபரப்புடன் அரண்மனையில் நுழைந்து கொண்டிருக்கையில் பீர்பால் மீது பொறாமை கொண்டிருந்த சிலர் அவரை வழி மறித்தனர். “வழியை விடுங்கள்! சக்ரவர்த்திக்கு உடல் சரியில்லை. நான் அவரை உடனே பார்க்க வேண்டும்” என்றார் ஜாலிம்கான். “நீங்கள் சக்ரவர்த்தியைப் பார்க்கப் போகிறீர்கள் என்பதால் தான் உங்களிடம் அவசரமாக வந்துஇருக்கிறோம்” என்ற அவர்கள், “பீர்பாலைக் காலை வாரிவிட ஒரு அருமையான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது” என்றனர். “பீர்பாலை படுகுழியில் தள்ள நான் எது வேண்டுமானாலும் செய்யத்தயார்! உடனே சொல்லுங்கள்!” என்றார் ஜாலிம்கான். வயதான ஒருவர் ஜாலிம்கானின் காதில் தங்களுடைய ரகசியத் திட்டத்தைக் கூறினார். அதைக்கேட்டதும் ஜாலிம்கான் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார். தனக்கு யோசனை கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த பின், அக்பருக்கு சிகிச்சையளிக்கச் சென்றார். அக்பர் தனது படுக்கை அறையில் தலை வரை கம்பளியினால் போர்த்திக் கொண்டு முனகிக் கொண்டிருந்தார். ‘ஜாலிம்கான் அக்பரை கவனமாக சோதித்தார். அவருக்கு ஏற்பட்டு இருப்பது சாதாரண காய்ச்சல்தான் என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் வெகு நேரம் அக்பரை சோதித்துப் பார்த்தபின், மிகவும் கவலைப்படுவது போல் சற்று நேரம் பாசாங்கு செய்தார். அதன் பிறகு அவர் அக்பரிடம், “பிரபு! உங்களுக்கு வந்திருப்பது விஷக்காய்ச்சல்! அதற்கு மருந்து என்னிடம் இருக்கிறது. ஆனால் காளை மாட்டின் பாலுடன் சேர்த்து சாப்பிட்டால்தான் விரைவில் குணம் அடைவீர்கள் அதனால் தான் கவலைப்படுகிறேன்” என்றார் “காளை மாட்டின் பாலா?” என்று வியப்புடன் கேட்டார் அக்பர். “பால் தரும் காளை மாடுகளும் இருக்கின்றன பிரபு! ஆனால் அவற்றைக் கண்டு பிடிப்பது மிகவும் கஷ்டம்” என்றார் ஜாலிம்கான். “யார் அதைக் கண்டு பிடிப்பது?” என்று அக்பர் கவலையுடன் கேட்க, “ஏன் பிரபு? நமது பீர்பால் மிகவும் புத்திசாலி! அவரால் முடியாத காரியமே எதுவும் இல்லை”என்றார் ஜாலிம்கான். “பீர்பாலால் பால் தரும் காளை மாட்டை எப்படி கண்டுபிடிக்க முடியும்?” என்று அக்பர் சந்தேகத்துடன் ஜாலிம்கானிடம் கேட்டார். “அத்தகைய காளை மாட்டை இந்த உலகில் யாராவது ஒருத்தரால் கண்டு பிடிக்க முடியும் எனில் அது பீர்பால் மட்டுமே!” என்று கூறிய வைத்தியர், “பிரபு! நீங்கள் ஒரு வாரம் ஓய்வெடுங்கள். இந்த மருந்தை ஒரு நாளைக்கு நான்கு முறை காளை மாட்டுப் பாலில் கலக்கிச் சாப்பிடுங்கள். நீங்கள் குணமாகிவிடுவீர்கள்” என்று சொல்லிவிட்டு மருந்தைக் கொடுத்து விட்டு சென்றார் ஜாலிம்கான். உடனே, பீர்பால் அக்பர் முன் வரவழைக்கப்பட்டார். “எப்படிஇருக்கிறீர்கள், பிரபு?” என்று பீர்பால் கேட்க, “நீதான் பார்க்கிறாயே பீர்பால்! எனக்குக் கடுமையான காய்ச்சல்! வைத்தியர் மருந்து தந்திருக்கிறார். ஆனால் அதைக் காளை மாட்டுப் பாலில் குழைத்து சாப்பிட வேண்டுமாம்,” என்றார் அக்பர். “காளை மாட்டின் பாலா?” என்று வியப்புடன் கேட்ட பீர்பால், “காளை மாடு பால்தரும் என்று எந்த மடையன் சொன்னான்?” என்று கேட்டார். “ஏன்? வைத்தியர் ஜாலிம்கான் சொன்னார்! அதுவும் உன் ஒருவனால்தான் காளை மாட்டின் பால் கொண்டுவரமுடியும் என்பதையும் உறுதியாகச் சொன்னார்” என்றார் அக்பர். “அப்படியென்று ஜாலிம்கான் சொன்னாரா?” என்று பீர்பால் கேட்டார். “ஆம்!” என்றார் அக்பர். தன்னை சிக்கலில் ஆழ்த்தி அவமானப்பட வைக்க ஜாலிம்கான் செய்த சூழ்ச்சி என்று பீர்பாலுக்கு உடனே தெரிந்து விட்டது. பீர்பால் வீட்டுக்குப் போகும் வழியெல்லாம் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டு சென்றார். விரைவிலேயே அவர் மனத்தில் ஓர் அருமையான யோசனை தோன்றியது. உடனே, வீட்டுக்குச் சென்ற பீர்பால் புத்திசாலியான தன் மகளை அழைத்து அரண்மனையில் நடந்ததைக் கூறி, சிக்கலிலிருந்துத் தப்பிக்கத் தான் யோசனை செய்துள்ள திட்டத்தையும் கூறினார். அதைக் கேட்ட அவரது மகள் “கட்டாயம் செய்கிறேன் அப்பா!” என்றவள் “அந்த ஜாலிம்கானுக்கு உங்கள் மீது பொறாமையா?” என்று கேட்க, “அவருக்கு மட்டுமல்ல, இன்னும் பலருக்குப் பொறாமை! இருக்கட்டும்! நீ நான் சொன்னபடி இன்றிரவே செய்!” என்றார் பிர்பால். நடு இரவும் வந்தது. பீர்பாலின் மகள் ஒரு வேலைக்காரியை உடன் அழைத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றாள். அக்பருடைய அரண்மனைக்கருகே உள்ள படித்துறையைத் தேர்ந்தெடுத்த அவள், தன்னுடன் கொண்டு வந்திருந்த துணிகளை ஆற்றில் அலசித் துவைக்கத் தொடங்கினாள். அக்பரின் படுக்கை அறைக்கு மிக சமீபத்தில் அந்தப் படித்துறை இருந்ததால், பீர்பாலின் மகள் ஓங்கி ஓங்கித் துணிகளை படியில் அடித்த சத்தம் நடுநிசி வேளையில் மிகவும் உரக்கக் கேட்டது. அது போதாதென்று, வேலைக்காரியுடன் சத்தமாக சிரித்துக்கொண்டே பேசினாள். அந்த சத்தத்தில் அக்பரின் தூக்கம் கலைந்து போயிற்று. நடு இரவில் யார் இப்படி சத்தம் போடுவது என்று கோபமுற்ற அக்பர் உடனே ஒரு காவற்காரனை அனுப்பினார். காவற்காரனும் யார் அவ்வாறு சத்தம் போடுவது என்றறிய அரண்மனையை விட்டு வெளியே வந்தான். ஆற்றங்கரையில், நடு இரவில், ஓர் இளம்பெண் வேலைக்காரியுடன் சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததையும், துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டுஇருந்ததையும் பார்த்து கோபமுற்றான். அவன் அவளைத் திட்டிக் கொண்டே நெருங்கி, “முட்டாளே, நீ என்ன பைத்தியமா? இரவு நேரத்தில் யாராவது துணி துவைப்பார்களா?” என்று தன் ஈட்டியை ஆட்டிக் கொண்டே கேட்டான். “ஏன்? இரவு நேரத்தில் ஆற்றில் தண்ணீர் இருக்காதா? பகலில்தான் இருக்குமா? இரவில் ஏன் துவைக்கக் கூடாது?” என்று பீர்பாலின் மகள் வாதம் செய்தாள். “உனக்கு அறிவில்லையா? பக்கத்தில் சக்ரவத்தியின் மாளிகை இருக்கிறது. பாவம், உன்னால் அவர் தூக்கம் கலைந்து விட்டது. நீ உடனே இங்கிருந்து போய்விடு” என்றான் காவலன். ‘அப்புறம் துணிகளை யார் துவைப்பது? நீ செய்வாயா?” என்றாள் அவள். காவலன் கோபத்துடன், “அதிகப்பிரசங்கி! யார் நீ?” என்று கத்தினான். உடனே, அவள் சிரித்துக் கொண்டே “நான் ஒரு பெண்!” என்றாள். “திமிர் பிடித்தவளே! நீ யாருடைய பெண்?” என்றான் காவலன். “நான் என் அப்பாவுடைய பெண்!” என்று இடக்காக அவள் பதில் சொல்ல, காவலன் பொறுமையிழந்தான். “உன்னை சக்ரவத்தியிடம் இழுத்துப் போகிறேன். இதேபோல் அங்க பதிலளித்தால், அவர் உனக்கு சவுக்கடி கொடுப்பார்” என்று காவலன் அவளை இழுத்துக் கொண்டு அக்பரிடம் சென்றான். அக்பரின் முன் நிறுத்தப்பட்ட பீர்பாலின் மகளின் முகத்தில் பயம் துளிக்கூட இல்லை. புன்சிரிப்புடன் தைரியமாக அவள் நிற்க, காவலன் அவள் இரவில் துணி துவைப்பதைப் பற்றி அக்பரிடம் கூறினான். அக்பர் கோபத்துடன் “என்னம்மா? இரவில்தான் துணி துவைக்க நேரம் கிடைத்ததா? என்றார். “ஆமாம் பிரபு! பகலில் நேரம் கிடைக்கவில்லை. இன்று மாலைதான் என் அப்பாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஒரு குழந்தை பிறந்தது. இருவருக்கும் வேண்டிய பணிவிடைகள் செய்துவிட்டு, துணிகளை துவைக்க இப்போது வந்தேன்” என்றாள் அவள். “என்ன உளறுகிறாய்?” என்றார் அக்பர் கோபத்துடன். “நான் உளறவில்லை பிரபு! உண்மையைத்தான் சொல்கிறேன். இன்று மாலைதான் என் அப்பாவுக்குக் குழந்தை பிறந்தது” என்றாள் அவள். “முட்டாளே! மறுபடியும் பைத்தியம் போல் உளறாதே! உன் அம்மாவுக்குக் குழந்தை பிறந்தது என்று சரியாகச் சொல்!” என்று சீறினார் அக்பர். “இல்லை பிரபு! என் அப்பாவுக்குத்தான் குழந்தை பிறந்தது” என்று தான் சொன்னதையே திரும்பித் திரும்பிச் சொன்னாள் அவள். “உனக்கு என்ன பைத்தியமா? உன் அப்பாவுக்கு எப்படி குழந்தை பிறக்கும்?” என்று எரிமலை போல் அக்பர் வெடித்தார். “இதில் கோபப்பட என்ன இருக்கிறது பிரபு? காளை மாடு பால் கொடுக்க முடியும் என்றால், ஓர் ஆணினால் குழந்தையைப் பெற முடியாதா?” என்று அவள் கேட்டவுடன், அக்பருக்கு ‘சுரீர்’ என்று உறைத்தது. உடனே, அவருக்கு விளங்கிவிட்டது. அவர் கோபம் எல்லாம் குறைந்து விட்டது. “பெண்ணே! நீ பீர்பாலின் மகளா?” என்று அக்பர் கேட்டார். “ஆம், பிரபு!” என்றாள். “பீர்பாலைத் தவிர வேறு யாருக்கு இப்படியெல்லாம் யோசனை தோன்றும்… பெண்ணே! பீர்பாலை வீணாக காளை மாட்டின் பாலைத் தேடி அலையவேண்டாம் என்று சொல்! அதை நீயே கொடுத்து விட்டதாக சொல்!” என்ற அக்பர் பொற்காசுகள் நிரம்பிய பை ஒன்றை அவளுக்குப் பரிசாகக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட அவள் அவரை வணங்கி விட்டு வீடு சென்றாள். அவள் சென்றபின் அக்பர் தனக்குத்தானே நினைத்தக் கொண்டார். “சே! இந்த ஜாலிம்கான் பீர்பாலை சிக்க வைக்க வேண்டும் என்றே காளை மாட்டின் பால் கொண்டு வரச் செல்லி என்னையும் முட்டாள் ஆக்கி விட்டான்” ஒரு பொண்ணின் முன்னால் மூக்கு உடைபட்டது தான் மிச்சம்” என்று எண்ணிய அக்பருக்கு அவன் மீது கோபம் கோபமாய் வந்தது. மறுநாள் ஜாலிம்கான் வாழ்நாளில் கேட்டிராத வார்த்தைகளால் அக்பரிடம் திட்டு வாங்கினார்.
ஒரு குளத்தில் மூன்று மீன்கள் இருந்தன. அவற்றின் பெயர் வருமுன்காப்போன், வருங்கால் காப்போன், வந்தபின்காப்போன் என்பனவாகும். அவை மூன்றும் ஒரு கவலையும் இல்லாமல் பல நாட்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தன். ஒரு நாள், வலைஞர்கள் வந்து நாளை இந்தக் குளத்தில் மீன் பிடிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்டவுடன் வருமுன்காப்போன் என்ற மீன், மற்ற மீன்களைப் பார்த்து, இப்பொழுதே நாம் மற்றோர் இடத்திற்குப் போய்விட வேண்டும்’ என்று சொல்வியது. அதற்கு வருங்கால்காப்போன் என்ற மீன் என்ன அவசரம்? அந்தச் சமயத்திற்குப் பார்த்துக் கொள்ளலாம். சமயத்திற்குத் தகுந்தாற் போல் தந்திரம் செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கூறியது. வருமுன்காப்போன் என்ற மீன், இந்தக் கருத்தை ஒப்புக் கொள்ளாமல் அப்பொழுதே அந்தக் குளத்தைவிட்டு மற்றொரு குளத்திற்குப் போய் விட்டது. வருங்கால்காப்போன், வந்தபின்காப்போன் முதலிய மீன்களெல்லாம் அந்தக் குளத்திலேயே இருந்தன. பேசிச் சென்றபடி மறுநாள் வலைஞர்கள் மீன் பிடிக்க வந்தார்கள். எல்லா மீன்களையும் வலை வீசிப் பிடித்தார்கள். அப்போது வலையில் அகப் பட்டுக் கொண்ட வருங்கால்காப்போன் செத்த மீன் போல், விரைத்துக் கிடந்தது. அதைக் கண்டு ஒரு செம்படவன் கரையில் தூக்கி எறிந்தான். அது யாரும் காணாமல் தண்ணிருக்குள் புகுந்து மறைந்து கொண்டது. வந்தபின் காப்போனும், மற்ற மீன்களும் வழி தெரியாமல் அகப்பட்டுக் கொண்டு செம்படவர்கள் கையிலே சிக்கி மடிந்து போயின. முன்னாலேயே எதையும் நினைத்துப் பார்த்து முடிவு செய்பவன் உறுதியாகப் பிழைத்துக் கொள் வான். அவ்வப்போது சிந்தித்து வேலை செய்யும் அறிவுடையவனும் எப்படியாவது பிழைத்துக் கொள்வான். எதையும் எப்போதும் சிந்திக்காதவன் பிழைக்கவே மாட்டான்.
சக்கரவர்த்தி அக்பர் சில பிரமுகர்களுடன் நந்தவனத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பீர்பலும் இருந்தார். நந்தவனத்தில் மலர்ந்திருந்த ரோஜாப்பூக்களைப் பார்த்துப் பரவசமான அக்பர், "ஆகா! பூமியில் ஒரு சொர்க்கம் உண்டு எனில் அது இந்த நந்தவனம்தான்!" என்றார். "ஆம், பிரபு! நீங்கள் கூறுவது சரி!" என்று அனைவரும் ஆமோதிக்க, பீர்பல் மட்டும் மௌனமாக இருந்தார். அதைக் கவனித்த அக்பர், "பீர்பல்! சற்று முன் நான் கூறியதில் உனக்கு உடன்பாடு இல்லையா?" என்று கேட்டார். "பிரபு! இந்த நந்தவனத்திற்கு அழகைத் தருவது இந்த ரோஜா மலர்கள் தான். ஆனால் அழகு எங்கே உள்ளதோ, அங்கே அபாயமும் உண்டு!" என்றார் பீர்பல். "ஓகோ! ரோஜாப்பூக்களில் உள்ள முட்களைக் குறிப்பிடுகிறாயா?" என்று அக்பர் கேட்டார். "இல்லை, பிரபு! நான் அவற்றைச் சொல்லவில்லை!" என்று பீர்பல் சொல்ல, "அப்படியானால், ரோஜாச் செடிகளின் உள்ளே மறைந்திருக்கும் பாம்புகளைக் குறிப்பிடுகிறாயா?" என்று அக்பர் கேட்டார். "மனிதனால்தான் பாம்புகளுக்கு அபாயம்! நம் காலடியோசையைக் கேட்டவுடனேயே அவை பயந்து ஓடி விடுகின்றன!" என்றார் பீர்பல். "பின் நீ எதைத்தான் அபாயம் என்று குறிப்பிடுகிறாய்?" என்று சலிப்புடன் அக்பர் கேட்க, "பிரபு! அபாயம் என்பது அழகை மட்டுமல்ல; வலிமை, செல்வம், புகழ் ஆகிய அனைத்தையும் அபாயம் சூழ்ந்து உள்ளது. தாங்கள் பாரதத்தின் மிக வலிமை பொருந்திய, மிகப் புகழ்பெற்ற, சகல செல்வங்களையும் ஒருங்கே பெற்ற சக்கரவர்த்தி! ஆனால், மேற்கூறிய விஷயங்களினால், அண்டை ராஜ்யத்து மன்னர்கள் தங்கள் மீது பொறாமை கொண்டுள்ளனர். தங்களை வீழ்த்தி வெற்றிவாகை சூட சதித்திட்டம் இட்டவாறு உள்ளனர். அதனால்தான், பூலோக சொர்க்கம் என்று ஒன்று இருப்பதாக நான் எண்ணவில்லை" என்றார். பீர்பலின் சொற்கள் அக்பரை சிந்திக்கத் தூண்டின. மறுநாள் சபையில் அக்பர், "திடீரென்று ஒருவனை அபாயம் சூழ்ந்தால், அவனுடைய தற்காப்புக்காகப் பயன்படும் சிறந்த ஆயுதம் எது?" என்று சபையோர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்டார்."வாள்!" என்றார் ஒருவர். "இல்லை!" என்று மறுத்த பீர்பல், சில சமயங்களில் வாள் பிடித்த கரம் செயலற்றுப் போவதுண்டு!" என்றார். "எதிரி மீது தொலைவிலிருந்தே குறிபார்த்து ஈட்டியை வீசுவதன் மூலம் அபாயத்திலிருந்து தப்பலாம்!" என்றார் மற்றொருவர்."பதற்றத்தில் ஈட்டியின் குறி தவறினால், அது பயன்படாது!" என்றார் பீர்பல். "சரிதான்! வாள், ஈட்டி, என்று எந்த ஆயுதமுமே சரியில்லை என்றால், எதுதான் ஆபத்தில் பயன்படும்?" என்று அக்பர் கேட்க, "சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயற்படும் நமது அறிவே சிறந்த ஆயுதம் ஆகும்!" என்றார் பீர்பல்."வெறும் பிதற்றல்! நீ ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது உன் மூளை எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கிறேன்!" என்று அக்பர் கிண்டல் செய்ய, சபையோர் அவருடன் சேர்ந்து பீர்பலை எள்ளி நகையாடினர். "சமயம் வரும்போது நான் கூறியது உண்மை என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்!" என்றார் பீர்பல்.மறுநாள், அக்பர் சில பிரமுகர்களுடன் நதிக்கரையில் உலவிக் கொண்டிருந்தபோது, பீர்பலும் உடனிருந்தார். அப்போது, ஒரே கூச்சலும், கூக்குரலும் கேட்க, மக்கள் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர். சக்கரவர்த்தியைக் கண்ட அவர்கள் ஓடோடி வந்து, "பிரபு! ஆபத்து! அபாயம்! பட்டத்து யானைக்கு திடீரென மதம் பிடித்து விட்டது.அது இந்தப் பக்கம்தான் ஓடி வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் உடனே ஓடி விடுங்கள்!" என்று கூச்சலிட்டனர். அவர்கள் கூறி முடிப்பதற்குள் தொலைவில் மதயானை ஓடி வருவது தெரிந்தது.உடனே, அக்பர் தன் இடையிலிருந்து வாளை உருவ, கூடியிருந்த அனைவரும் தங்கள் வாட்களை உருவிக் கொண்டனர். ஆனால், மதம் பிடித்த யானையை வாள் கொண்டு சமாளிக்க முடியாது என்று உணர்ந்ததும், அவர்கள் திக்பிரமை பிடித்து சிலைகளாக நின்றனர். தன்னைப் பெரிய ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதை அக்பரும் உணர்ந்தார்.வாளினாலோ, ஈட்டியினாலோ யானையை ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. ஆனால் கோழையைப் போல் பயந்து ஓடவும் அவருடைய தன்மானம் இடம் தரவில்லை. எல்லாரும் செய்வதறியாது செயலற்று நிற்க, பீர்பல் சட்டென்று அங்கிருந்த ஒரு பூனையைப் பிடித்து யானையின் முதுகில் வீசியெறிந்தார். யானையின் முதுகில் விழுந்ததால் மிரண்ட பூனை, தன் நகங்களினால் யானையைப் பிறாண்டியது.வலி பொறுக்க முடியாத யானை, தன் தும்பிக்கையினால் பூனையைப் பிடிக்க முயல, அது தப்பித்துக் கீழேயிறங்கி ஓடியது. யானையின் கோபம் முழுவதும் பூனையின்பால் திரும்ப, அது பூனையைத் துரத்திக் கொண்டே எதிர் திசையில் ஓடியது.தனது பருத்த உடலைத் தூக்கிக் கொண்டு யானையினால் விரைவாக ஓட முடியவில்லை. போக்குக் காட்டிக் கொண்டே ஓடிய பூனை, சாலையோரப் புதர்களின் உள்ளே மறைய, யானை புதர்களுக்குள் புகுந்து அதைத் தேடியது. இவ்வாறு, யானையின் கவனம் திசை திரும்ப, அக்பரும் மற்றவர்களும் யானையிடம் சிக்காமல் தப்பித்தனர்.சற்றுநேரம் சிலையாய் நின்ற அக்பர் தெளிவடைந்தவுடன் பீர்பலைக் கட்டித் தழுவிக் கொண்டார். "பீர்பல்! சபாஷ்! அறிவுதான் சிறந்த ஆயுதம் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டாய்! சூழ்நிலைக்கு ஏற்றவாறு மூளையைப் பயன்படுத்தி சிந்தித்து செயற்படுவதே சாலச் சிறந்தது என்ற உண்மையை எங்களுக்குப் புரிய வைத்து விட்டாய்! நீ சொன்னதே சரி! உன்னைப் போன்ற அறிவாளி அருகிலிருந்தால் எந்த அபாயத்தையும் எதிர் கொள்ளலாம்!" என்று மனதாரப் பாராட்டினார்.
ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன். இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், "அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான். "அதற்கு என்ன செய்யலாம்?" என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள். "வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர். அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் "தொப்"பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன். திருடர்களும், "தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர். பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், "அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்" என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர். சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான். இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், "நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று பேசிக் கொண்டு சென்றனர். அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, "நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!" என்று கூறினான். திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.
ஒரு காட்டில் ஒரு குரங்கு வசித்து வந்தது. அந்த காட்டின் நடுப் பகுதியில் ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம் நின்றது. அதில் இருந்த நாவல் பழங்களைத் தின்று குரங்கு உயிர் வாழ்ந்து வந்தது. அக்காட்டின் ஒரு பகுதில் பெரிய ஆறு ஒன்று ஓடியது. அந்த ஆற்றில் எப்போதுமே நீர் பெருக்கெடுத்து ஓடும். ஆற்றிற்கு மறுபக்கத்தில் இருக்கும் காடு மிகவும் செழிப்பாகக் காணப்பட்டதால் அங்கு போய் பார்க்க வேண்டும் என்று குரங்கிற்கு ஆசை ஏற்பட்டது. ஆனால் குரங்கிற்கு அந்த ஆற்றைக் கடந்து போக பயமாக இருந்தது. ஒருநாள் ஆற்றில் இருந்த முதலை ஒன்று நாவல் பழம் தின்று கொண்டிருந்த குரங்கைப் பார்த்து ‘நாவல் பழம் மிகவும் ருசியாக உள்ளதா?" எனக் கேட்டது. குரங்கும்.."முதலையாரே! உமக்கும் சில நாவல் பழம் பறித்துத் தருகிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்" என்று நாவல் பழங்கள் சிலவற்றை பறித்து ஆற்றில் வாயைப் பிளந்துக் கொண்டிருந்த முதலையின் வாயில் போட்டது. முதலையும் பழத்தை ருசித்து சாப்பிட்டது. அவற்றைச் சாப்பிட்ட முதலை இந்த சுவையான பழங்களை உண்ணும் முதலையின் ஈரன் மிகவும் ருசியாக இருக்கும் என எண்ணியது. அதனால் முதலை குரங்குடன் நண்பனாகப் பழகி அதன் ஈரலை உண்ண திட்டம் போட்டது குரங்காரே நீர் எனக்கு நல்லபழங்களை தந்து என் பசியை தீர்த்தீர் உமக்கு நான் ஏதும் உபகாரம் செய்யலாம் என்று யோசிக்கின்றேன் என்று கூறியது. அத்துடன் ஆற்றின் மற்றக் கரையில் நல்ல பழ மரங்கள் பழுத்து தூங்குகின்றன. நீர் அங்கு சென்றால் அப் பழங்களை நீயும் உண்டு எனக்கும் தரலாம் அல்லவா என்றது. அதற்கு குரங்கு எனக்கும் அக்காட்டைப் பார்க்க வேண்டும் என்று பல நாளாக ஆசை இருக்கு ஆனால் எனக்கு இந்த ஆற்றைக் கடந்து போகதான் பயமாக இருக்கிறது என்றது. அதனைக் கேட்ட முதலை நான் இருக்கும் போது நீ ஏன் பயப்பட வேண்டும். இப்பவே எனது முதுகில் ஏறி இரு நான் உன்னை அக்கரையில் சேர்த்து விடுகின்றேன் என்றது. வஞ்ச எண்ணம் கொண்ட முதலையின் அன்பு வார்த்தையை நம்பிய குரங்கும் முதலையின் முதுகின் மீது தாவி ஏறி உட்காந்தது. தனது ஆசையை நிறைவேற்ற இதுதான் தருணம் என்று எணிய முதலை குரங்கை நடு ஆற்றுக்கு கொண்டு சென்று அங்கே குரங்கின் ஈரலை சாப்பிட இருக்கும் தனது ஆசையைச் குரங்கிற்கு சொன்னது. அப்போது குரங்கு பதட்டமடையாது. அப்படியா! நீ அதை முதலில் சொல்லவில்லையே என்று கூறி நீரில் நனைந்து ஈரல் பழுதாகி விடும் என எண்ணி தான் தனது ஈரலை எடுத்து மரக்கிளையில் வைத்துவிட்டு வந்துவிட்டதாக கூறி; என்னை திரும்ப மரத்தடிக்கு கொண்டு செல் நான் அதை எடுத்து மாட்டிக் கொண்டு வருகிறேன் என்று சமயோசிதமாக கூறியது. முதலையும் யோசிக்காது..குரங்கு உண்மை சொல்வதாக எண்ணிக் கொண்டு அதை திரும்ப மரத்திற்கு அழைத்து வந்தது வேகமாக மரத்தில் ஏறிய குரங்கு.."முட்டாள் முதலையே. ஈரலை உடலிலிருந்து கழட்டி மாட்ட முடியுமா? உன்னை நம்பிய என்னை ஏமாற்றிவிட்டாயே..நியாயமா? என்று கேட்டது. முதலையும் ஏமாந்து திரும்பியது. நாமும் யாரையும் உடன் நம்பக்கூடாது. அவர்கள் நல்லவர்களா..கெட்டவர்களா என நட்பு கொள்ளுமுன் பார்க்க வேண்டும்.
அது ஒரு அழகிய காடு, அந்த காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது. அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, ஆமை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தம்மை கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன. எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் தவளை ஒன்று வந்து கொண்டிருந்தது. தவளையைக் கண்ட தேள், "தவளையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா?" என்று கேட்டது. "நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்!", என்றது தவளை. தேளும் தவளையின் முதுகில் ஏறிக்கொண்டது. தவளை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது, சிறிது தூரம் தான் தவளை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது, நான் பல பேரைக கொட்டியிருக்கிறேன். அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன். ஆனால் நான் ஒரு நாளும், தவளையை கொட்டவில்லை, இந்த தவளையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்? இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று தவளையை கொட்டிப் பார்க்க நினைத்தது. தேள் தவளையின் முதுகில் கொட்டியது. அனால் தவளை பேசாமல் போய்க்கொண்டிருந்தது. தேள் தவளையைப் பார்த்து, "தவளையாரே! உமது உடம்பில் வலியே வருவதில்லையா?" என்று கேட்டது. தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத தவளை, "எனது முதுகு வழவழப்பானது. அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை" என்று சொன்னது தவளை. ஆனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும். இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது தவளை. ஓகோ; அப்படியா? என்று கேட்ட தேள், மெதுவாக தவளையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது. கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் தவளையை கொட்ட ஆரம்பித்தது. தேள் கொட்டவருவதை அறிந்து தவளை தலையை தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டது. தேள் நீரோடையில் விழுந்து விட்டது. தனக்கு உதவி செய்த தவளைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் தண்ணீரில் மூழ்கி இறந்தது. தவளை கரையை நோக்கி நீந்திச் சென்றது. ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின், அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்து விடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும். மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்.
டைரக்டரின் அறையிலிருந்து வெளிப்பட்டு கையெழுத்து வாங்கிய கடிதத்தை நடந்தபடியே வாசித்து தன் இருக்கைக்கு வந்து வசுமதி அமர்ந்த போது இன்டர்காம் அழைத்தது. பிரபாகர் நினைத்த போதே மெலிதாக சிரிப்பு வந்தது. முந்தானையைக் கையால் நீவியபடியே இன்டர்காமை எடுத்து ''யெஸ்''......பிரபா.... சொல்லு'' என்றாள். ''மணி என்ன தெரியுமா? இரண்டரை! சாப்பிடணும்னு ஏதாவது ஐடியா இருக்கா?'' ''நிறைய இருக்கு. ஆனா வசதிப்பட மாட்டேங்குது, என்ன பண்ணலாம்?'' என்றால் அலுங்காமல். ''ப்சு... விளையாடாதே... இன்னிக்கு மூன்றரை மணிக்கு நான் பர்மிஷன்ல போறேன் தெரியுமில்லை? சீக்கிரமா சாப்பிட்டுட்டு கிளம்பலாம்னா...'' வசுமதி இப்போது சீரியசாகி, ''ஒகே. அப்ப ஒண்ணு பண்ணு. நீயும் சந்தரும் சாப்பிடுங்க. ஒரு முக்கியமான விஷயம் கன்வே பண்ண வேண்டியிருக்கு. முடிச்சிட்டு வந்து ஜாய்ன் பண்ணிக்கறேன்'' என்றாள். பேச்சு முடியவில்லை. தொடர்ந்தது. ''ரைட்.... அப்ப நீ கீழே வர்றப்ப பெட்டில தோத்ததுக்கு 100 ரூபாய் எடுத்துகிட்டு வந்திடு'' என்றான் பிரபாகர். ''நூறு ரூபாயா? எந்த பெட்? எப்ப தோத்தேன்?'' என்றால் வசுமதி ரொம்ப அப்பாவியாக. ''நீ கொடுக்க வேண்டியிருந்தா மட்டும் உனக்கு சகலமும் மறந்திடுமே! போன சனிக்கிழமை ''Rembrandtesque''ஐத் தப்பா ஸ்பெல் பண்ணிட்டு, சரிதான்னு சாதிச்சியே அதுக்காகத்தான்'' ''பிரபா.. நூறு ரூபாய் பந்தயம்ங்கிறதெல்லாம் ரொம்ப அநியாயம். இப்ப இருந்து ஐம்பது ரூபாவா வைச்சுக்கலாமா?'' - கொஞ்சலாக. ''அம்மாடி... எத்தனை நூறு ரூபாய் என்கிட்ட இருந்து நீ கறந்திருப்பே? விதிமுறைகளை எல்லாம் மாத்த முடியாது. வேணுன்னா நான் உன்கிட்ட எப்பவாவது தோத்தேன்னா அப்ப இருந்து மாத்திக்கலாம்.'' சரியான உடும்பு என்ற முணுமுணுத்தபடியே இன்டர்காமை வைத்தாள் வசுமதி. பதினைந்து நிமிடங்கள் கழித்து வசுமதி டைனிங் ஹாலை அடைந்த போது சந்தரும் பிரபாகரும் சாப்பாட்டு மேசையில் தட்டும் பாத்திரங்களும் ஏகமாய்ப் பரத்தியபடி சுவாரசியமாய் பாதி சாப்பாட்டை முடித்திருந்தார்கள். வசுமதியைப் பார்த்தவுடன் பிரபாகர் பாத்திரங்களை ஒரு புறமாக ஒதுக்கி அவளுக்கு இடம் கொடுக்க முனைந்த போது, சிரமப்படாதே பிரபா... நான் அந்த டேபிள்லே உட்கார்ந்துக்கறேன்'' என்றவாறே ஒரு நூறு ரூபாய்த் தாளை பிரபாகர் டேபிள் மீது வைத்துவிட்டு, எதிர்ப்புறமிருந்த மற்றொரு மேசையில் அமர்ந்து கேரியரைத் திறந்தாள். ''காலையில வர்றப்ப என்னவோ சொல்ல ஆரம்பிச்சயே, என்ன அது?'' என்று ஆரம்பித்தாள். பிரபாகர் யோசித்து, ''எப்ப சொன்னேன்? என்றான். ''காலையில என்னமோ படிச்சே, சொன்னா எனக்குக்கூட கோபம் வரும்னு சொன்னியே!'' என்றாள். ''ஓ அதுவா? அது எதுக்கு இப்ப? இன்னொரு சமயம் சாவகாசமாய்ப் பேசலாம்'' என்றான். ''முடியாது, இப்பவே சொல்லு. காலையில இருந்து போர்டு மீட்டிங். ப்ரொக்ராம் ஷ“ட்டுன்னு காஞ்சு போய் கிடக்கறேன்.'' வசுமதி பிடிவாதமாய்க் கேட்க, சந்தர் ''ஏண்டா, பர்மிஷன் வேற போட்டிருக்கே.. ஒழுங்கா கல்யாணத்துக்குப் போய்ச் சேரணும்னு ஆசையில்லையா?'' என்று சொல்லவே, வசுமதி மேலும் ஆவலானாள். ''அது வந்து வசு, நேத்து ஒரு கதை படிச்சேன். எழுதினது... யார்னு ஞாபகம் இல்லை. அதிலே ஒருத்தன் அவனோட லவர்கிட்ட''Chastity is nothing but lack of opportunity,'' அதாவது கற்பு எனப்படுவது சந்தர்ப்பமின்மையே தவிர வேறெதுவுமில்லை''ன்னு சொல்றான். அதுவும் அவன் சொல்லலை. பெர்னாட்ஷா சொன்னாராம். கதையோட கரு கூட கிட்டத்தட்ட அதுதான்'' என்றான் பிரபாகர். வெண்டைக் காயை எடுத்து வாயில் வைத்த வசுமதி, பிரபாகரை உற்றுப் பார்த்து, என்ன சொல்ல வர்றே? என்றாள். ''கதை முழுதும் படிச்சேன். அற்புதமா இருந்தது. அப்புறம் ரொம்ப நேரம் யோசிச்சுப் பார்த்தேன். பெர்னாட்ஷா சொல்றது சரிதான்னு தோணிச்சு. பெண்கள் கற்பு, கற்புன்னு அனாவசியமா அடிச்சுக்கறாங்கன்னு படுது. அதெல்லாம் கட்டுக்காவல் இருக்கற வரைதான். கொஞ்சம் சாதகமான சந்தர்ப்பம் கிடைச்சா கற்பாவது, ஒண்ணாவது? There is no such thing called கற்பு'' என்ற பிரபாகர், சந்தரின் வார்த்தைகளை மதித்து இந்த விஷயத்தை அந்த சமயத்தில் வசுமதியிடம் சொல்லாது இருந்திருக்கலாம். வசுமதி குளிர்ச்சியான பெண், கோபமான பெண். ஆனால் எப்போது குளிர்வாள், எப்போது கோபிப்பாள் என்பது மர்மமான விஷயம்! இருந்தும் அவள் இமைகளைப் படபடவென்று ஐந்தாறு முறை தொடர்ச்சியாகக் கொட்டினால் அழப் போகிறாள் என்பது வரை பிரபாகருக்குத் தெரியும். வசுமதியை அத்தனை தூரம் அறிவான். பள்ளி, கல்லூரி, இப்போது அலுவலகம் என்று சிறுவயதிலிருந்து பழகியதில் வலுவான, வார்த்தைகளுக்கு மிஞ்சிய நட்பு! இருந்தும் இப்போது அனுமானிக்கத் தவறி விட்டான். வசுமதி எடுத்த எடுப்பில் வெடித்தாள். ''கொஞ்சமாவது அறிவு இருக்கா? ஏன் இப்படி பொறுக்கித்தனமா பேசறே?'' பிரபாகருக்கு இயல்பாகக் கோபம் வந்தது. இருந்தும் நிதானித்து, ''என்ன வசு, உண்மைன்னு தோணற ஒரு கருத்தைச் சொல்ல பொறுக்கியா இருக்கணுமா?'' என்றான். வசுமதி குளிரவில்லை. இன்னும் கோபித்தாள். ''அப்ப சந்தர்ப்பம் கிடைச்சா எல்லாப் பெண்களும் கெட்டுப் போயிடுவாங்கங்கறே. வெல், இதுக்குப் பதில் சொல்லு! உங்கம்மாவுக்குத் தப்பு செய்யறதுக்கு இத்தனை வருஷத்தில் ஒரு சந்தர்ப்பம் கூடவா கிடைக்கலை?'' வார்த்தைகளை அனாயாசமாக அள்ளித் தெளித்தாள். பிரபாகருக்குத் தலைக்குள் ரத்தம் ஜிவ்வென்று பாய்ந்தது. ''இப்ப பொதுவாத்தானே பேசிகிட்டு இருக்கோம்? எதுக்கு எங்கம்மாவை இழுக்கறே? ஆயிரம் தரம் சொல்வேன். பெண்களுக்கு கற்புன்னு ஒண்ணு கிடையாது. எல்லாம் ஒரு ஷோ தான்.'' சாப்பிடுவதை நிறுத்தி அவனையே முறைத்துக் கொண்டிருந்த வசுமதி கையிலிருந்த ஸ்பூனை சட்டென்று அவரைக் காயுடன் அப்படியே பிரபாகரை நோக்கி விட்டெறிந்தாள். இதை கொஞ்சம் எதிர்பார்த்தவன் போல் சந்தர் அதைக் ''காட்ச்'' பிடித்து, ''அம்மா தாய்க்குலமே! நீங்க சும்மா வாயாலே பேசினாலே எங்களுக்குப் புரியும், இதெல்லாம் எதுக்கு?'' என்றவாறே பிரபாகர் பக்கம் திரும்பி, ''ஏண்டா மடையா, அப்பவே சொன்னேனில்லை? ஏதோ சாப்பிட வந்தோம், நாட்டுக்குத் தேவையான விஷயமா - கிர்க்கெட்ல யார் ஜெயிச்சாங்க, தேர்தல் எப்ப வரும்னு பேசிட்டுப் போனோம்னா எவ்வளவு நல்லா இருக்கும்! பெரிய இவங்க... கற்பு இருக்கா இல்லையாமா? கால் காசு பெறாத விஷயம்'' - நிலைமையை மட்டுப்படுத்த அவன் பேசியது வசுமதிக்கு இன்னும் வெறுப்பூட்டியது. பிரபாவுக்கு அவங்க அம்மாவைச் சொன்னவுடனே எப்படிக் கோபம் வருது பார்த்தியா? ஏன் அவன் சொன்ன அந்த ''கேட்டகரி''யில் அவங்க அம்மா, தங்கச்சி மட்டும் இல்லையாமா? அத்தனை ஏன்? எத்தனை நாள் உன்கூட நேரம், காலம் பார்க்காம ஊர் சுத்தியிருக்கேன்? கேவலம் ஒரு லவ் லட்டர் கூட நீ கொடுக்கற மாதிரி வைச்சுக்கலியே!'' தணிந்து சமநிலைக்கு வந்திருந்த பிரபாகர் இப்போது வசுமதியை உசுப்பிவிட ஆசைப்பட்டான். ''நீ கொஞ்சம் அழகா இருந்திருந்தா, கொடுத்திருப்பேனோ என்னவோ'' என்றான் சாவதானமாக. பெண்களின் அடுத்த பலவீனம்! வசுமதியின் அழகு அங்கு பிரசித்தம்! இருந்தும் பிரபாகரின் வார்த்தைகளை அவளால் தாங்க முடியவில்லை. சாப்பிட்டுக் கொண்டிருந்ததை அப்படியே ஜன்னல் வழியாக வெளியே கவிழ்த்தாள். கை கழுவி, பாத்திரங்களை சப்தத்துடன் அடுக்கினாள். ''ஆமாம்... அழகா இல்லாமதான் வாரத்துக்கு நாலு லவ் லெட்டர் வருது'' நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளி, சந்தர் கூப்பிடக்கூப்பிட கேட்காமல் செருப்புத் தேய வெளியே நடந்து போனாள். மூன்றரை மணிக்கு மீண்டும் பிரபாகர் வசுமதியைக் கூப்பிட்டு தான் கிளம்புவதாகச் சொன்ன போதும் அவள் கோபம் தணிந்திருக்க வில்லை. ''எங்கேயோ போய்த் தொலை, ஏன் என்கிட்ட சொல்றே?'' என்று சீறினாள். லேசான மனப்பாரத்துடன் கிளம்பி, திருப்தியில்லாத மனத்துடனே ஊட்டிக்குப் புறப்பட்டுப் போனான். மறுநாள் பெரியப்பா மகன் கோபால் கல்யாணத்திலும் உற்சாகமில்லாமலே இருந்தான். நண்பர்கள் ''என்னப்பா அண்ணன் கல்யாணம் முடிஞ்சது, அடுத்தது நம்மளதுதானே? என்று கிண்டலடித்த போது கூட ஒப்புக்காக சிரித்து வைத்தான். மாலையில் மணமக்களுடனேயே கிளம்பலாம் என்றிருந்த போது, சின்ன மாமா வந்து கார் சாவியை அவன் கையில் கொடுத்தார். பிரபு.... லலிதாவோட சிநேகிதிக்கு கோயமுத்தூர்ல நாளைக்குக் கல்யாணமாமா. இன்னிக்கே அங்கே இருக்கணும்ங்கறா. காலையில் முகூர்த்தம் முடிஞ்சதில் இருந்து போகலாம் போகலாம்னு நச்சிகிட்டு இருக்கா. என்னால உடனே கிளம்ப முடியாது. பொண்ணு, மாப்பிள்ளையை சாயந்திரம் கோயிலுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டு வந்துட்டுதான் கிளம்ப முடியும். தலைக்கு மேலே வேலை கிடக்கு. காரை கொடுக்கச் சொல்லி பிடிவாதம் பிடிக்கறா. அவ டிரைவிங் இந்த ரூட்டுக்கு ஒத்துவராது. கொஞ்சம் முன்னாடியே கிளம்பி, நீயே அவளைக் கொண்டு போய் விட்டுடு'' என்ற போது திடும் என்று மனதில் உற்சாகம் பொங்கியது. காரணம் லலிதா இன்னும் நான்கு மாதங்களில் அவனுக்கு மனைவியாகப் போகிறவள். சொந்த மாமா பெண் என்பதால் லலிதா அவனுக்குப் புதியவளல்ல. இருந்தாலும் கல்யாணத் தேதி நிச்சயிக்கப்பட்ட பின்பு எல்லாமே வித்தியாசமாகத் தோன்றியது. லலிதாவுடன் மாலைநேர மலைவழிப் பயணம் என்பது சோர்ந்திருந்த பிரபாகருக்கு சந்தோஷமளித்தது. லலிதா தயாராகக் கையில் பெட்டியுடன் வந்து நின்றாள். ''கிளம்பலாம் பிரபா. இப்பவே கிளம்பினாதான் போய்ச்சேர சரியாயிருக்கும். லதா தெரியுமில்லே? உயரமா, சுருட்டை முடியா... பீளமேட்டில வீடு.... நீங்ககூட ஒருதரம் என்னை அவங்க வீட்டிலே கொண்டுபோய் விட்டீங்களே எக்சாமுக்குப் படிக்க ஞாபகமிருக்கா?'' மாமா குறுக்கிட்டு, ''உடனே கிளம்பணுமா? மத்தியானம் விருந்து சாப்பிடாமக் கிளம்பினா நல்லாயிருக்காது. ஏற்கெனவே கோபால் நீ கோயிலுக்குக்கூட வராம கிளம்பறேன்னதும் முகத்தைத் தூக்கி வைச்சுக்கிட்டு இருக்கான். இப்பவே பிரபுவும் கிளம்பினா ரொம்ப வருத்தப்படுவான். சாப்பிட்டுட்டு ஒரு மூணு மணிக்குக் கிளம்பினீங்கன்னா ஆறு, ஆறரைக்கெல்லாம் போய்ச் சேர்ந்திடலாம். நீயும் வீட்டுக்குப் போய் குளிச்சுக் கிளம்பறதுக்கு சரியாயிருக்கும் என்றதும் லலிதா முகம் வாடினாள். மாமா அந்தப் பக்கம் நகர்ந்ததும், ''லதா எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃபிரண்டு தெரியுமில்லை? சீக்கிரமா போய் அவகூட இருக்கலாம்னா விட மாட்டேங்கறாங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது. கோபால் கிட்ட நான் ஏற்கெனவே சொல்லிட்டேன். என்னைக் கொண்டுபோய் அங்கே சேர்க்க வேண்டியது உங்க பொறுப்பு'' என்றாள். சாப்பிட்டு விட்டு கோபாலிடம் சொல்லிக் கொள்ளப் போனபோது, அவன், ''பிரபு, நல்லவேளை வந்தே! இவரு மிஸ்டர் வில்லியம் கிளன்டேல், ஆபிஸ் விஷயமா பெர்லின்லேயிருந்து வந்தார். நான்தான் கல்யாணத்துக்குக் கூட்டிகிட்டு வந்தேன். ஊட்டியிலே ரெண்டுநாள் தங்கியிருக்கப் பிரியப்படறார். நீ அவரைக் கூட்டிகிட்டுப் போய் நல்ல ஹோட்டலாப் பார்த்து அரேன்ஜ் பண்ணிட்டு வந்துருடா'' என்றான், ஒரு உயரமான வெளி நாட்டவரை அறிமுகப்படுத்தி. பெரியப்பா மகன்தான் கோபால் என்றாலும் சொந்த சகோதரன் போல. மறுக்க முடியுமா? லேசாகத் தயக்கம் காட்டிய போது, அவனே ''லலிதா சொன்னா. அஞ்சு மணிக்கு இங்கேயிருந்து கிளம்பினாக்கூட எட்டு மணிக்கெல்லாம் போய்ச் சேர்ந்திடலாம் என்றான் சமாதானமாக. எல்லாம் முடிந்து ஐந்தரை மணிக்குக் கிளம்பிய போது லலிதா உம்மென்றிருந்தாள். முகத்திலேயே கோபம் தெரிந்தது. சமாதானப்படுத்த முயன்றான். ''சொல்லாம கொள்ளாம நான் பாட்டுக்கு வண்டியை எடுத்துகிட்டு கிளம்பியிருக்கணும். அப்ப எல்லாம் சரியா இருந்திருக்கும்'' என்றாள். அப்புறம் பேசாமலேயே வந்தாள். பிரபாகர் ஹேர்பின் வளைவுகளில் அனாயசமாகத் திருப்பிய போது மட்டும், ''வேகம் வேண்டாம் பிரபா, மெதுவாகவே போங்க'' என்றாள். பிரபாகர், உன்னைக் கொண்டுபோய் ராத்திரிக்குள்ள கல்யாண வீட்டில் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. கவலைப்படாம இப்ப ஏதாவது பேசு பார்ப்போம்'' என்றதற்கு, கவலைப்படாம எப்படி இருக்கறது? மழை வர்ற மாதிரி இருக்கு போய்ச் சேருவோமான்னு தெரியலை. இதுக்குத்தான் முன்னாடியே கிளம்பலாம்னு அடிச்சுகிட்டேன் என்றாள். சொன்னது போலவே மழை பிடித்துக் கொண்டது. பரலியாற்றில் மழை வலுத்து, மேலே செல்ல முடியாமல் காரை நிறுத்தி ஒரு கடையில் டீ குடித்து மழை கொஞ்சம் மட்டுப்பட்டதும் மீண்டும் இறங்கி, மேட்டுப் பாளையத்துக்கு சற்று முன்பு வந்த போது, கார் இரண்டு மூன்று சிலுப்பல்களோடு நின்று போனது. மழையில் நனைந்து கொண்டே, பானெட்டைத் திறந்து ஆராய்ந்து பார்த்தான், பிரயோசனமில்லை. பாட்டரி கனேக்ஷன் அவுட்! சோல்டர் செய்தாக வேண்டும். இருட்டில் கடந்து போன ஒன்றிரண்டு வாகனங்களை நிறத்த முயன்று பயனில்லாமல் போன போது பிரபாகர் நிஜமாகவே கவலைப்பட ஆரம்பித்தான். லலிதாவைத் தனியாக பஸ்சில் கோவைக்கு அந்த நேரத்தில் அனுப்ப முடியாது. காரை அத்துவானத்தில் விட்டுவிட்டு தானும் அவளோடு கிளம்பிப் பஸ்சில் போக முடியாது என்ன செய்வது? ''லலிதா....'' மெல்ல அவள் தோளைத் தொட்டு ''சாரி'' என்றான். ''நீங்க என்ன பண்ணுவீங்க?'' என்றவள், அடுத்த நிமிடம் விசும்பி அழ ஆரம்பித்தாள். ஏமாற்றத்தில் அழுகிறாள் என்பது புரிந்தாலும், ஒன்றும் செய்ய முடியாத இக்கட்டில் கையைப் பிசைந்து, மீண்டும் சாலையோரம் நின்று கடந்து போகும் வாகனங்களை நிறுத்த முயற்சித்தான். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இருட்டில், மழைநேரத்தில், மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் நின்று கொண்டு ஒருவன் கையசைத்தால் யாராக இருந்தாலும் லிஃப்ட் கொடுக்க யோசிக்கத்தான் செய்வார்கள். கொஞ்ச நேர முயற்சிக்குப் பின்பு கடந்து போன ஒரு மோட்டார் பைக் வட்டமடித்துத் திரும்பி அருகில் வந்த போது, ஆச்சரியத்தில் பிரமித்துப் போனான். வந்தது சுப்ரமணியன். கல்லூரித் தோழன். மேல் படிப்பு முடித்து வெளிநாட்டில் இருக்கிறான் என்று கேள்விப்பட்டான். இப்போது... இங்கே.... ''டிரெயினிங் முடிஞ்சு, இப்ப இங்கே புது யூனிட்ல இருக்கேன். யூனிட்ல இருந்து வீட்டுக்கு ஃபோன் வந்தது. ஒரு மெஷின் ப்ரேக் டவுனாயிடுச்சு. அவசர வேலை. அதுதான் ராத்திரியில கிளம்பிட்டேன். நாளைக்கு டெல்லியில இருந்து யூனிட் விசிட் வரப் போறாங்க'' என்று விவரித்தவன், ''பிரபு, உன்னைப் பார்ப்பேன்னு நினைக்கவேயில்லடா.. ஹெள நைஸ்'' என்றான். பிரபாகர் நிலைமையைச் சொன்னான். பலவித யோசனைகளுக்குப் பிறகு,, ''சரி, இருக்கறதிலயே பெஸ்ட் ஐடியா இதுதான். நான் பைக்ல போய் மேட்டுப்பாளையத்திலிருந்து ஆட்டோ கூட்டி கிட்டு வர்றேன். நீயும் அவங்களும் என் வீட்டுக்குப் போய் ஏதாவது சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க. நான் யூனிட் போய் ஆள் அனுப்பி, வொர்க்ஷாப்பில இருந்து மெக்கானிக் கூட்டிக்கிட்டு வர ஏற்பாடு பண்றேன். அவங்க காரை ரெடி பண்ணி வீட்டுக்கு எடுத்துட்டு வரட்டும். உடனே நீங்க கிளம்பலாம். காலை கிளம்பறதானாலும் சரி...'' அலுவலகத் தொலைபேசி எண், வீட்டுச் சாவி, அட்ரஸ் கொடுத்தவன், காருக்குள் குனிந்து, ''மேடம், கவலைப்படாம போங்க. சீக்கிரமா கிளம்பிடலாம்'' என்றான் லலிதாவிடம். லலிதா புன்னகைத்து நன்றி தெரிவித்தாள். ஆட்டோவில் சுப்ரமணியம் வீடு வந்து சேர்ந்து கதவைத் திறந்த போது வியந்தார்கள். அழகான, கச்சிதமான வீடு! ஒரு முன்பக்க அறை, ஒரு ஹால், இரண்டு படுக்கையறைகளுடன், சின்ன சமையலறை... எல்லாமே சுத்தமாக வைக்கப்பட்டிருந்தன. பிரபாகர் இப்போது முற்றிலும் வேறு மனநிலையிலிருந்தான். திருமண வீட்டுக் களைப்பு, கார் பிரயாணம், மழை, தாமதம் எல்லாம் முற்றிலும் மறந்து போய் விட்டது. ''இந்தாங்க, முதல்ல தலையைத் துவட்டுங்க'' என்ற லலிதா கொடியில் இருந்த டவலை எடுத்து அவனிடத்தில் நீட்டினாள். அவளையே பார்த்தான் கொஞ்ச நேரம். பிறகு ''நமக்கு கல்யாணம் முடிஞ்சு, தனியா வீடு பார்த்து வந்த மாதிரி இருக்கு, இல்லை?'' என்றான். ''இல்லை'' ''என்ன இன்னும் கோபமா?'' ''எப்படியும் லேட்டாயிடுச்சு. இனிக் கோபப்பட்டு என்ன பண்றது?'' தலையைத் துவட்டிவிட்டு டவலை அவளிடத்தில் கொடுத்தவன், வாங்க முயன்ற அவள் விரல்களைப் பற்றினான். அருகே இழுத்தான். ''ப்ச், என்ன பிரபா இது, விடுங்க....'' என்றவள் தன்னை விடுவித்துக் கொண்டாள். கொடியில் டவலை உலர்த்தியவளை நெருங்கி, மீண்டும் கைகளில் சேர்த்துக் கொண்டான். ''எனக்குப் பசிக்குது, விடுங்க என்னை. எதாவது சாப்பிட இருக்கான்னு பார்க்கறேன்'' - யதார்த்தமாய்ப் பேசி, மீண்டும் விடுதலை பெற்று சமையலறைக்குள் புகுந்தாள். ரொட்டித் துண்டுகள், ஜாம், சூடாக்கப்பட்ட பாலுடன் வந்தவள் பிரபாகருக்குத் தந்து தானும் உண்ணத் தொடங்கினாள். சாப்பாடு முடித்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த பிரபாகர், ''லலிதா, நீ ரொம்ப அழகாயிருக்கே'' என்றான் ஆங்கிலத்தில். ''தாங்க்யூ'' ''கண்களைக் கட்டிப் போட்டாள் - அப்படின்னு கதைகள்ல படிச்சிருக்கேன். இப்பதான் அது என்னண்னு புரியுது.'' ''அப்படியா?'' ''சரி.....'' சாப்பிட்டுவிட்டு காலி தம்ளர்களுடன் சமையலறையை நோக்கி நகர்ந்தவள் மீண்டும் சிறைப்பட்டாள். கன்னம், கண்கள், கூந்தல் என்று ஆராயப்பட்டாள். ''இன்னிக்கு எனக்கு நீ ரொம்பப் புதுசா இருக்கே'' என்றான் ரொம்பக் கிசுகிசுப்பாக அவள்காதருகே.... ''எனக்கு நீங்க பழசாத்தான் இருக்கீங்க. நீங்க பண்றதுதான் ரொம்பப் புதுசா இருக்கு'' என்றவள், தன் இடையைச் சுற்றியிருந்த அவன் கைவிரல்களைப் பிரித்துத் தூர விலக்கினாள். தோள்களைக் குலுக்கி அவன் வலது கரத்தினின்றும் விடுபட்டாள். ஸ்திரமாய் அவனை விட்டு நகர்ந்தாள். ''ஏன் ஓடறே? என்னைப் பிடிக்கலையா?'' கேள்வி அவனுக்கே அபத்தமாகப் பட்டது. உள்ளே சென்று தம்ளர்களைக் கழுவிய பிறகு, இடது பக்கப் படுக்கையறைக்குள் புகுந்து, பிரபாகர் உணருமுன் கதவைத் தாளிட்டுக் கொண்டாள். இரண்டு, மூன்று முறை கதவைத் தட்டியும் பிரயோசனமில்லை. அந்தக் கதவுகள் திறக்கப்படவில்லை. கார் சரி செய்யப்பட்டு வந்து, தொலைபேசியில் சுப்ரமணியனை அழைத்து பல முறை நன்றி தெரிவித்து, வீட்டைப் பூட்டி, சாவியை அவன் யூனிட் ஆளிடம் கொடுத்தனுப்பி விட்டு, வண்டியைக் கிளப்பி லலிதாவைக் கோவையில் கல்யாண வீட்டில் விடும் போது மணி இரவு பன்னிரண்டரை. ''தாங்க்ஸ் பிரபா... குட் நைட்.... நாளைக்கு வீட்டில இருக்க மாட்டேன். நாளன்னிக்கு சாயந்திரம் வீட்டுக்கு வாங்க. முடியலேன்னா ஃபோன் பண்ணுங்க,'' இயல்பாகப் பேசியவள், அவன் உள்ளங்கையை மெத்தென்று அழுத்தி விடைபெற்றாள். மறுநாள் பதினொன்றரை மணிக்கு அலுவலகம் திரும்பிய பிரபாகர், முதல் வேலையாய் வசுமதியை இன்டர்காமில் அழைத்தான். ''ஹாய்'' பிரபா, எப்ப வந்தே? நீ இல்லாம நேத்திக்கு ஒரே போர்'' - உற்சாகத்தில் பொங்கினாள். அதுதான் வசு, குளிர்ச்சியாக இருக்கிறாள். ''உடனே கான்ட்டீனுக்கு வா, உன்கிட்ட பேசணும்.'' இப்ப எம்.டி. கூப்பிடுவாரு. இன்னும் பத்து நிமிஷத்துல வர்றேன், சரியா?'' ஆவி பொங்கிய காபியை டபராவில் ஊற்றி ஆற்றிய வசுமதி, ஒவ்வொரு வாயாக ரசித்துக் குடித்தவாறே கேள்விகளை அடுக்கினாள். ''சொல்லு, கல்யாணம்லாம் எப்படி நடந்தது? பொண்ணு எப்படி? எத்தனை மணிக்குத் திரும்பி வந்தே?'' பிரபாகர் பதில் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ''ஹேய், என்ன இது? ஒண்ணும் பேச மாட்டேங்கறே? இப்ப எதுக்கு இவ்வளவு அவசரமா கூப்பிட்டே? எங்கயாவது அடி, கடி வாங்கினியா?'' என்றாள். ''அதெல்லாம் ஒண்ணுமில்லை. உனக்கச் சேர வேண்டிய நூறு ரூபாயை உடனே கொடுத்தாதான் மனசு ஆறும் போலத் தோணிச்சு. அதான் கூப்பிட்டேன்.'' ''ஹை, நூறு ரூபாயா? கொடு...கொடு... ஆமா எந்த பெட்டில தோத்தே? எனக்கே தெரியாம எப்ப தோத்தே? சரி எதுவா இருந்தா என்ன? முதல்ல பணத்தைக் கொடுத்திட்டு அப்புறம் பேசு... தெரியும் எனக்கு. வசுமதிக்கு இன்னிக்குப் பண வரவுன்னு'' - மூச்சு விடாமல் பேசியவள் கையை நீட்டினாள். நீட்டப்பட்ட கையில் ஐம்பது ரூபாய்த்தாளை வைத்தான் பிரபாகர். ''ஏய், என்ன இது? எதுல தோத்தேன்னும் சொல்ல மாட்டேங்கறே! இப்ப என்னடான்னா ஐம்பது ரூபாதான் தர்றே... மிச்ச ஐம்பது ரூபாயை யார்கிட்டே இருந்து கலெக்ட் பண்றதாமா? - சிணுங்கினாள். ''பெர்னாட்ஷா கிட்டே இருந்து'' - பிரபாகரின் பதிலில் லேசான பெருமிதம் இருந்தது.
பீர்பாலின் நகைச்சுவையான பேச்சுகளை அக்பர் மட்டுமன்றி தர்பாரில் பலரும் ரசித்தனர். ஆனால், சிலருக்கு மட்டும் பீர்பாலுக்குக் கிடைத்த பாராட்டுகள் பொறாமையை அளித்தன. ஒவ்வொரு முறையும் அக்பர் மனந்திறந்து பீர்பாலைப் பாராட்டுகையில், அவர்களுடைய மனம் பற்றியெரிந்தது. எப்படியாவது பீர்பாலை மட்டம் தட்ட வேண்டும் என்றும்,அவமானப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் ஆவலாயிருந்தனர். அவர்களில் சைதான்கான் முதன்மையானவர். சைதான்கான் தன்னைப்போலவே பீர்பாலின் மீது பொறாமை கொண்ட மற்றவர்களுடன் சேர்ந்து அவரை அவமானப்படுத்தத் திட்டங்கள் தீட்டினார். அவற்றுள் ஒரு திட்டம் அனைவருக்கும் பிடித்துப் போனதால் அதை செயலாற்ற முடிவு செய்தனர். மறுநாள் வழக்கம் போல் தர்பார் கூடியது. முக்கியமான அலுவல்கள் முடிந்தபின், அக்பர் சிம்மாசனத்தில் நன்றாக சாய்ந்து கொண்டு அமர்ந்தார். பொதுவாக அந்த சமயத்தில்தான் அவர் சபையோரிடமிருந்து அறிவுரைகள், யோசனைகள் ஆகியவற்றைக் கேட்பது வழக்கம். உடனே சைதான்கான் எழுந்து நின்று அக்பரை வணங்க, அவரும் பேசுவதற்கு அனுமதி தந்தார். உடனே சைதான்கான் பீர்பாலைப் பார்த்துக் கொண்டே, “சக்கரவர்த்தி! நமது பீர்பாலைப் போல் புத்திசாலி யாருமே இல்லை. அவருக்கு அபார மூளை!” என்று பீர்பாலுக்கு ஐஸ் வைத்தார். “உங்களுக்கு மட்டும் புத்தி குறைவா? நீங்களும் தான் புத்திசாலி!” என்றார் பீர்பால். “என்ன இருந்தாலும் உங்களுடைய புத்திசாலித்தனத்திற்கு ஈடாகுமா?” என்ற சைதான்கான் சக்கரவர்த்தியை நோக்கி விஷமமாக, “சக்கரவர்த்தி! பீர்பாலே இத்தனை புத்திசாலியாக இருந்தால் அவருடைய தகப்பனார் இன்னும் எத்தனை புத்திசாலியாக இருப்பார்?” என்றார். அதைக்கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்த அக்பர், “அட, ஆமாம்! இது ஏன் எனக்குத் தோன்றவில்லை?” என்றார். “அப்படியானால் உடனே பீர்பாலின் தகப்பனாரை தர்பாருக்கு வரவழைப்போம் பிரபு!” என்றார் சைதான்கான். தன்னுடைய திட்டம் இத்தனை சீக்கிரம் பலிக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அதைக் கேட்ட பீர்பால் திடுக்கிட்டார். சைதான்கான் ஆரம்பத்தில் இருந்தே தன்னைக் கவிழ்ப்பதற்காகத்தான் திட்டம் போட்டிருக்கிறான் என்று உணர்ந்தார். ஆனால் இவ்வளவு சாமர்த்தியமான திட்டத்தை எதிர்பார்க்கவில்லை. பீர்பாலின் தகப்பனார் அவ்வளவாகப் படிப்பறிவு இல்லாதவர். கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி. அவரை தர்பாரில் அழைத்து வந்து, தாறுமாறாக அவரை கேள்விகள் கேட்டு, அவரை அவமானப்படுத்துவதன் மூலம், அவர்கள் தன்னை அவமானப்படுத்த நினைக்கிறார்கள் என்று பீர்பால் புரிந்து கொண்டார். இதற்கிடையில் அக்பர், “பீர்பால்! நீ உடனே கிராமத்திற்குச் சென்று உன் தகப்பனாரை அழைத்து வா!” என்று கட்டளை இட்டார். அக்பரின் கட்டளையை ஏற்றுக் கொண்டு ரதத்திலேறி உடனே பீர்பால் தன் தகப்பனார் வசித்து வந்த கிராமத்தை அடைந்தார். அவர் கால்களில் விழுந்து வணங்க, அவரும் தன் மகனை ஆசீர்வதித்தார். பிறகு இருவரும் உணவருந்தினர். இரவில் அவர் படுக்கைக்குச் செல்லுமுன், பீர்பால் தான் வந்த நோக்கத்தைத் தன் தந்தையிடம் மெதுவாக வெளியிட்டார். பரபரப்படைந்த அந்த முதியவர், “நானா… தர்பாருக்கு வருவதா! நான் படிக்காதவன்! தர்பாரில் சக்கரவர்த்திமுன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றோ, எப்படி பேசுவதென்றோ அறியாதவன்!” என்று பதைபதைத்தார். “கவலைப்படாதீர்கள்! எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றும், என்ன பேசவேண்டுமென்றும் நான் சொல்லித் தருகிறேன். தர்பாரில் நுழைந்ததும் சக்கரவர்த்தி முன் தலை தரையில் படும்படி விழுந்து சலாம் செய்யுங்கள். அவருடன் பேசும் போது, பணிவுடன் தலையை குனிந்தப்படி பதில் சொல்லுங்கள். யார் உங்களிடம் எது கேட்டாலும், தலையசைத்துப் புன்னகை மட்டும் செய்யுங்கள். மற்ற விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் பீர்பால். “மௌனம் சர்வார்த்த சாதகம்” என்று கூறிய பெரியவர் சிரித்துக் கொண்டே, “அப்படியே ஆகட்டும்!” என்றார். “எல்லாம் முடிந்த பிறகு யாராவது உங்களைப் பார்த்து ஏன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை என்று கேட்டால், உடனே நீங்கள்…” என்று பீர்பால் முதியவர் காதில் ரகசியமாகக் கூற, அவர் விழுந்து விழுந்து சிரித்தார். அதன்பிறகு பீர்பால் தன் தகப்பனாரை அழைத்துக்கொண்டு தலைநகரை அடைந்து, தர்பாருக்குள் நுழைந்தார். தர்பாரில் ஏற்கெனவே அக்பரும், மற்றவர்களும் வந்திருந்தனர். முதலில் பீர்பால் தனது தலை தரையில் படும்படி அக்பரை விழுந்து வணங்க, அவருடைய தகப்பனாரும் அப்படியே செய்தார். “வாருங்கள் பெரியவரே! உட்காருங்கள்!” என்று அக்பர் மரியாதையுடன் கூற முதியவரும் பீர்பாலுக்கருகே ஓர் இருக்கையில் அமர்ந்தார்.
வையாபுரி பட்டினம் என்ற நகரம் கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்தது. வையாபுரி பட்டினத்தில் முத்து வியாபாரி மாணிக்கத்தை தெரியாதவர் இருக்கமுடியாது. மாணிக்கத்தின் வீடு அரண்மனையைப் போல் விசாலமாக இருக்கும். முத்து வியாபாரி மாணிக்கத்திற்கு முத்து, ரத்தினம், வைரம் என்று மூன்று மகன்கள். இவர்களில் பெரியவன் முத்து வெளிநாடுகளில் வியாபாரம் செய்து பெரும்பொருள் ஈட்டினான். அவன் தம்பி ரத்தினமும், வைரமும் உள்ளூர் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டனர். முத்து வியாபாரி மாணிக்கத்திற்கு ஒரு நாள் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. தான் இறந்து விடுவோம் என்று தோன்றியது. சொத்துக்கள் அனைத்தையும் உள்ளூரில் இருக்கும் தனது மகன்களிடம் ஒப்படைத்து விட்டு இறந்துபோனார். பேராசை கொண்ட ரத்தினமும், வைரமும் அப்பாவின் சொத்துக்களை இரண்டாகப் பிரித்துக் கொண்டு அண்ணன் முத்துவை கொலை செய்ய திட்டமிட்டனர். ஒரு நாள் அண்ணன் முத்து திரும்பி வந்தான். அவனிடம் சொத்துக்களை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். அண்ணனும் தம்பிகள் சொன்னதை நம்பினான். ஆனால் அன்று இரவே முத்துத் தூங்கி கொண்டிருக்கும் போது அவனை அடித்து ஒரு குளத்தில் வீசி எறிந்தனர். அடுத்த நாள் அந்த குளக்கரையில இருந்த கோவிலின் எதிரில் படுத்துகிடந்தான் முத்து. ஆனால் அவன் உடம்பில் எந்த விதமான காயமும் இல்லை. தூங்கி எழுந்த முத்து தனக்கு முன்னால் கடவுள் பிரத்யட்சமாய் தோன்றியிருப்பதைக் கண்டு வணங்கினான். "என்ன நடந்தது...?" என்றார் கடவுள். நடந்ததைச் சொன்னான் முத்து. "இனி உனக்கு எந்த ஆபத்தும் வராது. 400 ஆண்டுகள் வரை நீ வாழ்வாங்கு வாழ்வாய்...." என்று வரமளித்து விட்டு கடவுள் மறைந்தார். முத்து வீட்டிற்குத் திரும்பினான் ரத்தினமும் வைரமும் அதிர்ச்சியடைந்தனர். "காலையில் உங்களைக் காணாமல் துடித்துப் போனோம்... உங்களைப் பார்த்த பின்னர் தான்..... எங்களுக்கு உயிரே வந்தது" என்று சொல்லி அழுதனர். "என்ன நடந்தது......" என்று கேட்டனர். எதையும் மறைத்துப் பேசத் தெரியாத முத்து நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னதுடன், 400 ஆண்டுகள் சாகாமல் வாழ பெற்ற வரத்தையும் பற்றி கூறினான். தாங்களும் இதே போல் அதிக ஆண்டு வாழவேண்டும் என்று திட்டமிட்டனர். பேராசை பிடித்த ரத்தினமும், வைரமும் தங்கள் இருவரையும் அடித்து அந்த குளத்தில் வீசி எறியும்படி ஏற்பாடு செய்தனர். அடுத்த நாள் அவர்கள் இருவரும் கோவிலின் எதிரில் தூங்கியபடி கிடந்தனர். தூங்கி எழுந்தனர். அவர்கள் எதிரில் கடவுள் தோன்றினார். "உங்களுக்கு என்ன நடந்தது"? என்றார் கடவுள். தங்களை விரோதிகள் அடித்துப் போட்டதாக கூறினர். "கடவுளே நான் 1000 ஆண்டு சாகாமல் வாழவேண்டும்....." என்றான் ரத்தினம். "நான் 2000 ஆண்டு சாகாமல் வாழ வேண்டும்" என்றான் வைரம். ரத்தினம் 3000 ஆண்டு என்றான். வைரம் 4000 என்றான். இப்படி ஆண்டுகளை ஏற்றிக்கொண்டே போனார்கள். கடவுளுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. "நான் சொல்வது போல் செய்தால் உங்கள் திறமைக்குத் தகுந்தவாறு பத்தாயிரம் ஆண்டுகள் கூட சாகாமல் வாழலாம்.." என்றார் கடவுள். "சொல்லுங்கள்... சொல்லுங்கள்" என்றனர் இருவரும் அவசரம் அவசரமாக. "கோயிலில் எதிரில் இருக்கு இந்த குளத்தில் நீங்கள் மூழ்கி இருக்கும் ஒவ்வொரு மணித்துளிக்கும் 100 ஆண்டுகள் சாகாமல் வாழும் வரம் கிடைக்கும்" என்று கடவுள் சொல்லி முடிப்பதற்குள் இருவரும் குளத்தில் குதித்தனர். இருவரும் நீருக்குள் மூழ்கினர். ரத்தினத்தை விட 100 ஆண்டாவது அதிகம் பெற வேண்டும் என்று வைரம் நினைத்தான். வைரத்தைவிட 100 ஆண்டு அதிகமாகப் பெற வேண்டும் என்று நினைத்தான் ரத்தினம். யார் அதிக ஆண்டு சாகாமல் இருக்கும் வரத்தைப் பெறப் போகிறார் என்று பார்த்தபடி கடவுள் நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் வைரமும், ரத்தினமும் பிணமாக குளத்தில் மிதந்தனர்.
ஒரு உண்மையான ஆன்மீக வாதியின் ஒழுக்கம் எதுவும் அவன்மேல் திணிக்கப்பட்டதாக இருக்காது. அது அவனது தன்னுணர்விலிருந்து எழுந்ததாக இருக்கும். அவன் சரியானதை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்ய மாட்டான். தவறானது எதையும் செய்துவிடக் கூடாது எனவும் முயல மாட்டான். அவன் எதையும் விழிப்புணர்வோடு பார்ப்பான், அவனது தன்னுணர்விலிருந்து செயல்படுவான். அதனால் அவன் செய்வது எதுவோ அதுவே சரியானது. உண்மையில் தன்னுணர்வோடு இருக்கும்போது தவறானது எதையும் செய்யமுடியாது. நாகார்ஜூனா என்ற மிகச் சிறந்த ஞானியைப் பற்றி ஒரு அழகான கதை உண்டு. அவர் ஒரு நிர்வாணமாக திரியும் பக்கிரி, ஆனால் உண்மையான தேடுதல் உடையவர்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டார். ஒரு நாட்டின் அரசி கூட நாகார்ஜூனா மீது மிகவும் பக்தியோடு இருந்தாள். அவள் ஒருநாள் நாகார்ஜூனாவை அரண்மனைக்கு விருந்தாளியாக அழைத்தாள். நாகார்ஜூனா அரண்மனைக்குச் சென்றார். அரசி தனக்கு ஒரு உதவி வேண்டும் எனக் கேட்டாள். அவர் என்ன உதவி வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அரசி உங்களது பிச்சைப் பாத்திரம்தான் வேண்டும் என்றாள். நாகார்ஜூனா கொடுத்துவிட்டார் – அது ஒன்றுதான் அவரிடம் உள்ள பொருள் – பிச்சைப் பாத்திரம். ராணி உள்ளே சென்று வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான பிச்சைப் பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்து நாகார்ஜூனாவிடம் கொடுத்தாள். அவள், இதை வைத்துக் கொள்ளுங்கள். வருடக் கணக்காக உங்கள் கைகளில் இருந்த அந்த பிச்சை பாத்திரத்தை நான் வழிபட போகிறேன் – உங்களின் துடிப்பில் சிறிதளவாவது அது கொண்டிருக்கும். இனி அது என் கோவிலாக இருக்கும். உங்களைப் போன்ற மனிதர் ஒரு சாதாரண மரத்திலான பிச்சை பாத்திரத்தை ஏந்தக் கூடாது. இந்த தங்க பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். நான் இதை உங்களுக்காகவே விசேஷமாக செய்தேன். என்றாள். அது உண்மையிலேயே விலையுயர்ந்தது. நாகார்ஜூனா சாதாரண முனிவர்கள் போல இருந்திருந்தால், நான் இதை தொட மாட்டேன். நான் துறவி. இந்த உலகத்தை துறந்து விட்டேன் என்று கூறியிருப்பார். ஆனால் அவரைப் பொறுத்தவரை எல்லாமும் ஒன்றுதான், அதனால் அவர் அந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டார். அவர் அரண்மனையை விட்டுப் போகும்போது, ஒரு திருடன் அவரைப் பார்த்தான். அவனால் அவனது கண்களையே நம்ப முடியவில்லை. ஒரு நிர்வாண சந்நியாசியிடம் இவ்வளவு விலையுயர்ந்த பொருளா இவரால் எவ்வளவு காலம் இதை பாதுகாக்க முடியும் அதனால் திருடன் அவரை பின்தொடர்ந்தான். நாகார்ஜூனா ஊருக்கு வெளியே உள்ள ஒரு பாழடைந்த கோவிலில் தங்கியிருந்தார் – கதவுகளும் இல்லை, ஜன்னல்களும் இல்லை. மிகவும் பாழடைந்தது. திருடன் அதைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். சீக்கிரமே அவர் தூங்கப் போய்விடுவார். பின் எந்த கஷ்டமும் இல்லை. நான் அந்த பாத்திரத்தை எடுத்துக் கொள்வேன் என நினைத்தான். திருடன் கதவுக்கு வெளியே ஒரு சுவறின் அருகில் பதுங்கியிருந்தான். நாகார்ஜூனா அந்த பாத்திரத்தை வெளியே விட்டெறிந்தார். திருடனால் நடந்ததை நம்பவே முடியவில்லை. நாகார்ஜூனா இந்த திருடன் தன்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்திருந்தார். இவன் தனக்காக வரவில்லை, இந்த பாத்திரத்திற்காகத் தான் வருகிறான் என்பதை நன்கு அறிந்த அவர் அதை வெளியே வீசி விட்டார். எதற்கு அனாவசியமாக அவன் காத்திருக்க வேண்டும் எடுத்துக் கொண்டு அவன் போகட்டும், நானும் ஓய்வெடுக்கலாம் என நினைத்தார். இவ்வளவு விலையுயர்ந்த பொருளை நாகார்ஜூனா இவ்வளவு சுலபமாக வீசி விட்டாரே என ஆச்சரியப்பட்ட திருடனுக்கு அது தனக்காகத் தான் வீசப்பட்டது என நன்றாகத் தெரிந்தது. அதனால் அவருக்கு நன்றி சொல்லாமல் அவனால் போக முடியவில்லை. அவன், தலையை உள்ளே நீட்டி, சாமி, மிகவும் நன்றி. ஆனால் நீங்கள் மிக வித்தியாசமான மனிதர் – என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. மேலும் எனக்கு ஆழமான ஆசை ஒன்று எழுகிறது. ஒரு திருடனாக இருந்து என் வாழ்நாளை நான் வீணடித்துவிட்டேன். ஆனால் உங்களைப் போன்றவர்களும் இருக்கிறார்களா நான் உள்ளே வந்து உங்கள் காலில் விழலாமா எனக் கேட்டான். நாகார்ஜூனா சிரித்தார், அவர், வா, அதற்காகத்தான் அந்த பாத்திரத்தை வெளியே வீசினேன். அப்போதுதான் நீ உள்ளே வருவாய். என்றார். திருடன் மாட்டிக் கொண்டான். உள்ளே வந்து பாதங்களை தொட்டான். அந்த சமயத்தில் திருடன் மிகவும் வெளிப்படையாக இருந்தான். ஏனெனில் இவர் சாதாரண மனிதர் அல்ல என்பதை அவன் கண்டான். அவன் மிகவும் மென்மையாகவும், திறந்தும், நன்றியோடும், திகைத்தும், உள்வாங்கத்தயாராகவும் இருந்தான். அவன் அவர் காலில் விழுந்து வணங்கிய போது, வாழ்க்கையில் முதன்முறையாக அவன் தெய்வீகத்தை உணர்ந்தான். அவன் நாகார்ஜூனாவிடம், நானும் உங்களைப் போல மாற இன்னும் எத்தனை பிறவிகள் ஆகும் எனக் கேட்டான். நாகார்ஜூனா, எத்தனை பிறவிகளா அது இங்கேயே இப்போதே, இன்றே நடக்கலாம் என்றார். திருடன், நீங்கள் கிண்டல் செய்கிறீர்கள். அது இப்போது எப்படி நிகழமுடியும் நான் ஒரு திருடன், நாடே அறியும். அவர்களால் என்னை பிடிக்க முடிய வில்லை. அரசர் கூட என்னை பார்த்து பயப்படுவார். ஏனெனில் மூன்றுமுறை பொக்கிழத்திற்க்குள் நுழைந்து திருடிக் கொண்டு போயிருக்கிறேன். அவர்களுக்கு அது நான்தான் எனத் தெரியும். ஆனால் அத்தாட்சியில்லை. நான் ஒரு பக்கா திருடன் – நீங்கள் இந்த பகுதிக்கு அன்னியராக இருப்பதால் உங்களுக்கு இவை தெரியாமலிருக்கலாம். இப்போதே நான் எப்படி மாற முடியும் என்றான். நாகார்ஜூனா ஆயிரக்கணக்கான வருடங்களாக வெளிச்சமே இன்றி இருண்டு கிடக்கும் ஒரு வீட்டிற்க்குள் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு வந்தால், இருள் ஆயிரக்கணக்கான வருடங்களாக நான் இங்கே இருக்கிறேன். ஒரு தீபத்தை உள்ளே கொண்டு வந்ததால் மட்டுமே என்னால் வெளியே போக முடியாது. நான் நெடுங்காலமாக இங்கே இருக்கிறேன். எனக் கூற முடியுமா இருள் சண்டையிட முடியுமா ஒருநாள் இருட்டு, ஆயிரக்கணக்கான வருட இருட்டு என இருட்டில் பேதம் உண்டா எனக் கேட்டார். திருடனால் அதை புரிந்து கொள்ள முடிந்தது, இருள் வெளிச்சத்தை எதிர்க்க முடியாது. வெளிச்சம் வரும்போது, இருள் மறைந்துவிடும். நாகார்ஜூனா, நீ பல பிறவி பிறவியாக இருளில் இருந்திருக்கலாம். – அது ஒரு பொருட்டேயல்ல. நான் உனக்கு ஒரு ரகசியத்தை கொடுக்கிறேன். அதன்மூலம் நீ உன் இருப்பில் வெளிச்சத்தை கொண்டு வர முடியும். என்றார். திருடன், என் தொழில் அதை நான் விட வேண்டுமா எனக் கேட்டான். நாகார்ஜூனா அதை நீதான் தீர்மானிக்க வேண்டும். எனக்கு உன் தொழிலைப் பற்றியோ உன்னைப் பற்றியோ அக்கறையில்லை. உன் இருப்பில் வெளிச்சத்தை கொண்டுவரக்கூடிய ஒரு ரகசியத்தை நான் உனக்குத் தருவது மட்டுமே நான் செய்வது. மற்றபடி எல்லாமே உன்னை பொறுத்தது. என்றார். திருடன், ஆனால் நான் மற்ற சன்னியாசிகளிடம் சென்றபோது, அவர்கள் எப்போதும், முதலில் திருடுவதை நிறுத்து – பின்புதான் தீட்சையளிக்க முடியும் எனக் கூறுவர். என்றான். நாகார்ஜூனா சிரித்து, நீ சன்னியாசிகளிடம் செல்லாமல் திருடர்களிடம் சென்றிருக்கலாம். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. நீ வெறுமனே உன் சுவாசத்தை கவனி – இது புத்தரின் முறை – உன் சுவாசம் உள்ளே போவதையும் வெளியேறுவதையும் கவனி. எப்போதெல்லாம் நினைவு வருகிறதோ, அப்போதெல்லாம் உன் சுவாசத்தை கவனி. திருடப் போகும்போது, வேறு யாருடைய வீட்டிற்க்குள் இரவில் நுழையும்போதும், உன் சுவாசத்தை கவனி. பொக்கிஷத்தை திறக்கும்போதும், வைரங்கள் அங்கே இருப்பதை பார்க்கும்போதும் உன் சுவாசத்தை கவனி. என்ன செய்ய விரும்புகிறாயே அதை செய் – ஆனால் சுவாசத்தை கவனிக்க மறந்து விடாதே. என்றார். திருடன், இது மிகவும் எளிதானதாக தோன்றுகிறதே. ஒழுக்கம் தேவையில்லையா குணநலன் வேண்டாமா வேறு எதுவும் தேவையில்லையா என்றான். நாகார்ஜூனா, நிச்சயமாக வேறு எதுவுமில்லை. உன் சுவாசத்தை கவனி. அவ்வளவுதான் என்றார். பதினைந்து நாட்களுக்கு பிறகு திருடன் திரும்ப வந்தான். ஆனால் அவன் முற்றிலும் புதியவனாக இருந்தான். அவன் நாகார்ஜூனாவின் காலில் விழுந்து வணங்கி, என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் ஒரு துளி கூட சந்தேகப் பட முடியாத விதத்தில் மிக அழகாக என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் இந்த பதினைந்து நாட்களாக முயற்சி செய்தேன் – அது நடக்கவே இல்லை. நான் என் சுவாசத்தை கவனித்தால் என்னால் திருட முடியவில்லை. நான் திருடினால், என் சுவாசத்தை என்னால் கவனிக்க முடியவில்லை. சுவாசத்தை கவனித்தால் நான் மிகவும் மௌனமாக, விழிப்போடு, தன்னுணர்வோடு, கவனமானவனாக இருக்கிறேன். அப்போது வைரங்கள் கூட கூழாங்கற்களாக தோன்றுகிறது. நீங்கள் எனக்கு ஒரு கஷ்டத்தை, அலைபாயுதலை உருவாக்கி விட்டீர்கள். நான் இப்போது என்ன செய்வது என்று கேட்டான். நாகார்ஜூனா, வெளியே போ – நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதை செய். அந்த அமைதி, அந்த மௌனம், அந்த ஆனந்தம் என உன் சுவாசத்தை நீ கவனிக்கும் போது கிடைப்பது வேண்டும் என நினைத்தால் அதை தேர்ந்தெடு. அதை விட வைரமும் தங்கமும் வெள்ளியும் விலைமதிப்புள்ளது என முடிவெடுத்தால் அதை தேர்ந்தெடு. நீதான் தேர்ந்தெடுக்க வேண்டும். உன் வாழ்வில் தலையிட நான் யார் எனக் கேட்டார். அந்த மனிதன், என்னால் தன்னுணர்வற்ற நிலையை தேர்ந்தெடுக்க முடியாது. இதுபோன்ற கணங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னை உங்களது சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு தீட்சையளியுங்கள் என்று கேட்டான். நாகார்ஜூனா, நான் உனக்கு ஏற்கனவே தீட்சையளித்து விட்டேன் என்றார்.
ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டான். பாபர் ராமன் சொல்லாமலேயே நின்று விட்டானே சரியான தோல்விதான் அவனுக்கு என மகிழ்ந்தார். ஒருநாள் பாபர் தன் மந்திரியுடன் உலாவச் சென்றார். வழக்கம்போல அரண்மனைச் சேவகன் ஒருவன் சில பொன்முடிப்புகளைச் சுமந்து வந்தான். மன்னர் குதிரையை மெதுவாக நடத்திச் சென்று கொண்டிருந்தார். பாதை ஓரத்தில் முஸ்லிம் கிழவர் ஒருவர் தள்ளாடியபடியே ஏதோ செடிகளை நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரருகே சென்று தன் குதிரையை நிறுத்தினார்." பெரியவரே! இந்தத் தள்ளாத வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?", " நல்ல மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன்." இதை அவர் மிகவும் சிரமப் பட்டுக் கூறினார். " ஏன் ஐயா! இந்தத் தள்ளாத வயதில் உமக்கு ஏன் இந்தத் தொல்லை! அத்துடன் இது காய்த்துப் பின் பழுத்து அந்தப் பழத்தை நீர் உண்ணப் போகிறீரா? " என்று சிரித்தார். " அரசே! நாம் உண்ணும் மாங்கனிகள் நம் முன்னோர் நட்டதுதானே! அவர்கள் மரங்களை நட்டதால் தானே நாம் இன்று மாங்கனிகளை உண்ணுகிறோம்! அவர்கள் நடாமல் இருந்திருந்தால் நமக்கு ஏது மாம்பழங்கள்? எனவே வரும் தலைமுறையினர் உண்ணவே இம்மரங்களை நான் நடுகிறேன்", "ஆஹா! சரியான பதில். நல்லவிளக்கம். மிக்க மகிழ்ச்சி." உடனே மந்திரியார் ஒரு பொன் முடிப்பைப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட கிழவர் சிரித்தார். " அரசே! அல்லா பெரியவர். எல்லோருக்கும் மரம் பழுத்தபிறகே பலன் தரும். ஆனால் பாபரின் ஆட்சியில் மரம் நட்டவுடனே பலன் கொடுத்து விட்டதே!" பாபர் மனம் பெரிதும் மகிழ்ந்தது. "ஆகா! சரியாகச் சொன்னீர்கள் பெரியவரே!" என்றபடியே மந்திரியைப் பார்க்க அவர் இன்னொரு பொன்முடிப்பை அளித்தார். அதையும் பெற்றுக்கொண்ட பெரியவர், "அரசே! இந்த மாங்கனிகள் பழுத்துப் பின் பலனளிப்பது ஆண்டுக்கு ஒருமுறைதான். ஆனால் தங்களின் மேலான குணத்தினால் நட்டவுடனே இருமுறை எனக்குப் பலனளித்து விட்டது. என்னே அல்லாவின் கருணை?" என்றார். "நன்றாகச் சொன்னீர்கள் பெரியவரே! " என்று கூறியவர் மீண்டும் ஒரு பொன் முடிப்பையும் அளித்தார். பின் மந்திரியைப் பார்த்து "மந்திரியாரே! சீக்கிரம் இங்கிருந்து சென்று விட வேண்டும். இல்லையேல் சாதுர்யமாகப்பேசி நம் பொக்கிஷத்தையே காலிசெய்து விடுவார் இந்தப் பெரியவர்." என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் பாபர். " சற்று நிற்க முடியுமா அரசே?" என்று சொன்ன பெரியவர் தன் தாடி மீசையைக் களைந்து விட்டுத தெனாலி ராமனாக நின்றார். பாபர் திகைத்தார். சற்று நேரத்திற்குள் மூன்று பரிசுகளைப் பெற்றவன் தெனாலி ராமனா? தெனாலி ராமன் பணிவுடன் கூறினான். "அரசே, மன்னிக்கவேண்டும். எங்கள் மன்னர் கிருஷ்ண தேவ ராயர் தங்களிடம் நான் பரிசு பெற்று வரவேண்டும் எனக் கட்டளையிட்டு அனுப்பினார். இன்று அவரது கட்டளைப் படியே தங்களிடம் பரிசுகளைப் பெற்று விட்டேன். இனி ஊர் திரும்பத் தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்.", "தெனாலி ராமா! உண்மையிலேயே நீ திறமைசாலிதான். உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவி. நாளைக்கு அரச மரியாதையையும் பெற்றுக் கொண்டு விஜயநகரம் செல்லலாம்." என்றார் அரசர். பின் மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குத் திரும்பினார்.. வெற்ற்யுடன் ஊருக்கு வந்து சேர்ந்த தெனாலி ராமனைப் பார்த்த கிருஷ்ணதேவ ராயர் நடந்தவைகளைக் கேட்டறிந்தார். தான் சொன்னபடியே தெனாலி ராமனுக்குப் பல பரிசுகளையும் கொடுத்தார். தன் நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்றிய ராமனை மன்னரும் மக்களும் போற்றிப் புகழ்ந்தனர்.
சீனாவில் ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள். ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது. பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர். வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது. பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் ‘நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்’ என்று சொன்னான். மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள். இத்தனை பேரில் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று. அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர். பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது. மற்ற ஒன்பது விவசாயிகளும் “இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு” என்று கத்திக் கொண்டே அவன் மேல் பாய்ந்தனர். அந்த விவசாயி கெஞ்சிக் கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாகக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர். அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான். அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான். மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது. ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளிப் பாதுகாப்பை இழந்து பரிதாபமாகக் கருகிச் செத்துப் போய் விட்டனர்.
அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த ஒரு தத்துவ ஞானி முல்லாவைச் சந்திக்க விரும்பி அவரை எப்பொழுது சந்திக்க முடியும் என்று கேட்டு அனுப்பியிருந்தார். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் தம்மைச் சந்திக்க வசதியாக இருக்கும் என்று முல்லா மறு மொழி அனுப்பியிருந்தார். அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தத்துவ ஞானி முல்லாவின் வீட்டுக்கு வந்தார். ஆனால் தவிர்க்க முடியாத ஒர் அலுவல் காரணமாக அந்த நேரத்தில் முல்லாவினால் வீட்டில் இருக்க இயலாமல் போய் விட்டது. தம்மை வரச் சொல்லிவிட்டு முல்லா வீட்டில் இல்லாமல் போனது அவர் வேண்டுமென்றே தம்மை இழிவுபடுத்தப் போட்ட திட்டம் என்று தவறாகக் கருதி கடுங்கோபம் கொண்ட தத்துவஞானி ஒரு சுண்ணாம்புக் கட்டியை எடுத்து முல்லாவின் வீட்டுக் கதவில் முட்டாள் கழுதை என்று எழுதிவிட்டுச் சென்றார். சற்று நேரங்கழித்து வீடு திரும்பிய முல்லா தன் வீட்டுக் கதவில் எழுதப்பட்டிருந்த சொல்லைப் பார்த்து விட்டு அவர் மனைவியிடம் விசாரித்தார். நடந்த நிகழ்ச்சியை மனைவி அவரிடம் விளக்கிச் சொன்னார். உடனே முல்லா அந்தத் தத்துவ ஞானியின் வீட்டிற்குச் சென்றார். முல்லாவைக் கண்டதும் தத்துவ ஞானிக்கு அச்சமாக இருந்தது. அவரைப் பற்றி முட்டாள் கழுதை என்று அவர் வீட்டுக் கதவில் எழுதியது கண்டு கோபம் கொண்டு முல்லா தம்மிடம் சண்டை போட வந்திருக்கிறாரோ என்று எண்ணினார். ஆனால் முல்லாவோ, ஞானியைப் பணிவுடன் வணங்கி " அறிஞர் பெருமானே, என் வீட்டுக் கதவில் தங்கள் பெயரை தாங்கள் எழுதிவிட்டு வந்திருப்பதைக் கண்டு தாங்கள் வந்து சென்ற விஷயத்தை அறிந்து கொண்டேன். மன்னிக்க வேண்டும், எதிர்பாராத அலுவல் காரணமாக தாங்கள் வந்த சமயம் வீட்டில் இருக்க முடியாமல் போய்விட்டது" என்றார். தன்னையே முட்டாள் கழுதை ஆக்கிவிட்ட முல்லாவின் அறிவுச் சாதுரியத்தைக் கண்டு தத்துவ ஞானி வாயடைத்துப் போய்விட்டார்.
பீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு, பீர்பாலின் அறிவாற்றலை ஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது. அதனால ஒரு கடிதத்துல, மேன்மை தாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு, ஆண்டவன் தங்களுக்கு நலன்கள் பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக. தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்னு எழுதி கையெழுத்துப் போட்டு, தூதன் மூலமா அக்பருக்கு அனுப்பினாரு காபூல் அரசர். கடிதத்தைப் படிச்ச அக்பர் திகைச்சு, ஒரு குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே புரியவில்லையேன்னு குழம்பி, பீர்பால்கிட்ட கடிதத்தை காட்டினாரு. பீர்பால் சிறிது நேரம் யோசிச்சாரு. அப்புறம், அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம் அனுப்புவதாக பதில் எழுதுமாறு சொன்னார். அக்பரும் அதேபோல் தபால் எழுதி அனுப்பினாரு. அப்புறம் அக்பர், பீர்பாலிடம், ஒரு குடம் அதிசயம் எப்படி அனுப்புவீர்?னு விசாரிச்சாரு. அதுக்கு பீர்பால், மூன்று மாதம் கழித்து அந்த அதிசயத்தைப் பாருங்களேன்னாரு. பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்தார். ஒரு பூசணிக்கொடியில் காச்சிருந்த பூசணிப்பிஞ்சு ஒண்ணை கொடியோட மண் குடத்திற்குள் வைத்தார். வைக்கோலால் குடத்ததை மூடினாரு. நாளாக நாளாக பூசணிப் பிஞ்சு குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது. குடம் நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும், பூசணிக்காயைத் தவிர மற்ற வைக்கோல், கொடி, காயின் காம்பு எல்லாவற்றையும் கத்தரித்து விட்டார் பீர்பால். இப்போ அந்தக் குடத்தை அக்பரிடம் காட்டினார் பீர்பால். அக்பருக்கு ஆச்சரியம். குடத்தின் வாயோ உள்ளே இருக்கும் பூசணிக்காயைவிட மிகவும் சிறியது. இதனுள் இவ்வளவு பெரிய பூசணிக்காயை எப்படி நுழைத்தார்னு. பீர்பால் அதை விளக்கிவிட்டு, அந்தப் பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல் அரசனுக்கு, அதிசயம்னு அனுப்பினாரு. அதைப் பார்த்த காபூல் அரசன் பீர்பாலோட புத்திக் கூர்மையை எண்ணி வியந்தாராம்.
போர்வீரன் ஒருவன் ஜென் குருவை அணுகிக் கேட்டான். "ஐயா, சொர்க்கம் அல்லது நரகம் என்று உண்மையிலேயே ஏதாவது இருக்கிறதா?" அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துக் கேட்டார் குரு- "நீ உண்மையிலேயே ஒரு போர்வீரனா? பார்த்தால் பிச்சைக்காரன் போல இருக்கிறாய். உன்னைத் தன் படைவீரனாக நியமித்திருக்கும் உன்னுடைய அரசன் எப்பேர்ப்பட்ட பிச்சைக்காரனாக இருப்பான்?" போர்வீரன் கடுங்கோபத்துடன் வாளை உறையில் இருந்து உருவத் துவங்கினான். ஓஹோ. வாளை வைத்திருக்கிறாயோ? அதற்கு என் தலையை சீவும் வல்லமை இருக்கிறதா என்று கேட்டார் குரு. அவன் ஏறத்தாழ அவர் தலையை சீவத் தயார் ஆனான். அவன் கையைப் பிடித்து நிறுத்தி குரு சொன்னார் "இப்போது நரகத்தின் கதவுகள் திறக்கின்றன" அவன் ஒருவாறு சமாளித்து தலைகுனிந்து வெட்கி அவரை வணங்கி நின்றான். குரு சொன்னார்- "இப்போது சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன..
நான் மிகவும் அழகான யூத கதையைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது – அது ஒரு மனிதனைப் பற்றிய கதை. அவன் எப்போதும் தூக்க கலக்கத்தில் இருந்தான். எல்லா இடங்களிலும் எப்போதும் தூங்குவதற்கு தயாராக இருந்தான். பெரிய பொது கூட்டங்களிலும், எல்லா இசை நிகழ்ச்சிகளிலும், எல்லா முக்கிய ஆலோசனை கூட்டங்களிலும், அவன் அமர்ந்து தூங்கிகொண்டிருப்பதை பார்க்கமுடியும். உனக்கு கண்டிப்பாக அந்த மனிதனை தெரிந்திருக்கும் ஏனெனில் நீதான் அது. நீ அந்த மனிதனை பலமுறை கடந்திருப்பாய், ஏனெனில் அவனை நீ எப்படி ஒதுக்க முடியும்? — அது நீ. நினைத்து பார்க்ககூடிய நினைத்து பார்க்க முடியாத அனைத்து நிலைகளிலும் அவன் தூங்கினான். அவன் தனது முழங்கையை காற்றில் மடித்து தனது கைகளை தனது தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு தூங்கினான். அவன் நின்றுகொண்டு, விழாமல் இருப்பதற்காக சாய்ந்துகொண்டு தூங்கினான். அவன் திரை அரங்கத்திலும், தெருக்களிலும், மசூதிகளிலும் தூங்கினான். அவன் எங்கே சென்றாலும் அவனுடைய கண்கள் தூக்க மயக்கத்திலேயே இருக்கும். அவன் இந்துவாக இருந்திருந்தால் அவன் தலைகீழாக நின்றுகொண்டு சிரசாசனத்தில் கூட தூங்கியிருப்பான். நான் இந்துக்கள் அவ்வாறு தூங்குவதை பார்த்திருக்கிறேன். பல யோகிகள் தலைகீழாக நின்றுகொண்டு தூங்குவதில் திறமைசாலிகள். அது கடினம், கஷ்டமான காரியம், அதற்கு மிக பயிற்சி தேவை – ஆனால் அது நடக்கிறது. அவன் ஏற்கனவே ஏழு பெரிய அக்னிகளை தூங்கி கடந்துவிட்டதாக பக்கத்து வீட்டுகாரர்கள் கூறுவார்கள், ஒருமுறை ஒரு பெரிய தீ விபத்தில் அவனை படுக்கையில் இருந்து தூக்கி பக்கத்து சந்தில் வைத்துவிட்டனர், அவன் இன்னமும் தூங்கிகொண்டிருந்தான். ரோந்து வந்தவர்கள் அவனை கூட்டிசெல்லும் வரை அவன் சில மணிநேரங்கள் அந்த சந்தில் தூங்கிகொண்டிருந்தான். அவன் கல்யாணத்தில் மந்திரம் சொல்லும் போது பாதியில் தூங்கிவிட்டான் அவனுடைய தலையில் பலமணிநேரம் அடித்து அவனை எழுப்பினார்கள். அவன் மெதுவாக அடுத்த வார்த்தையை சொல்லிவிட்டு திரும்பவும் தூங்கிவிட்டான். நீ தாலி கட்டியதை நினைத்துப் பார். உன்னுடைய தேன் நிலவை நினைத்துப் பார். உன்னுடைய கல்யாணத்தை நினைத்துப் பார். எப்போதாவது விழித்துகொண்டுள்ளாயா? நீ எப்போதாவது தூங்ககூடிய வாய்ப்பை தவறவிட்டுள்ளாயா? நீ எப்போதும் தூங்கிகொண்டேயிருக்கிறாய்! நம்முடைய கதாநாயகனை பற்றி சொல்லபோகும் கதையை நீ நம்புவாய் என்பதற்காகவே இவ்வளவும் சொல்கிறேன். ஒருமுறை, அவன் தூங்கிவிட்டான், அவன் தூங்கினான், தூங்கினான், தூங்கிகொண்டேயிருந்தான், ஆனால் தூக்கத்தில் வெளியே தெருக்களில் இடிஇடிப்பது போல சத்தம் கேட்பதாக பட்டது, அவனுடைய படுக்கையும் லேசாக ஆடியது, எனவே அவன் அவனுடைய தூக்கத்தில் வெளியே மழை பெய்கிறது என நினைத்துக்கொண்டான், அதன் காரணமாக அவனுடைய தூக்கம் இன்னும் இனிமையானதாக மாறியது. அவன் போர்வையிலும், அதனுடைய இதமான சூட்டிலும் தன்னை சுருட்டிக்கொண்டான். தூக்கத்தில் எத்தனை முறை விஷயங்களை எப்படியெல்லாம் அர்த்தபடுத்தியுள்ளாய் என நினைவு இருக்கிறதா? சில சமயங்களில் நீ அலாரம் வைத்திருப்பாய், அது சத்தம் போடும்போது நீ சர்ச்சில் இருப்பதாகவும் அங்கு மணிகள் சத்தமிடுவதாகவும் கனவு காணத் தொடங்குவாய். அலாரத்தை ஒதுக்குவதற்கான, அலாரம் உண்டாக்கும் தொந்திரவை ஒதுக்குவதற்கான மனதின் ஒரு சாதுரியம். அவன் எழுந்தபோது அவன் ஒரு ஆச்சரியகரமான சூனியத்தை கண்டான், அவனுடைய மனைவி இல்லை, அவனுடைய படுக்கை இல்லை, அவனுடைய போர்வை இல்லை. அவன் ஜன்னல் வழியாக பார்க்க விரும்பினான், ஆனால் பார்ப்பதற்கு அங்கு ஜன்னல் இல்லை. அவன் மூன்று மாடிகள் கீழே ஓடி உதவி என கத்த விரும்பினான் ஆனால் ஓடுவதற்கு படிகளும் இல்லை கத்துவதற்கு காற்றும் இல்லை. அவன் வெறுமனே வெளியே செல்ல விரும்பியபோது, வெளியே என்று ஏதுமில்லை என்பதை அவன் கண்டான். அனைத்தும் காணாமல் போய்விட்டது சிறிது நேரம் என்ன நடந்துள்ளது என்பதை கிரகிக்கமுடியாமல் குழப்பத்தில் அங்கேயே நின்றான். ஆனால் பிறகு அவனுக்கு அவனே நினைத்துக்கொண்டான், நான் தூங்கபோகிறேன். ஆனால் அப்படித் தூங்குவதற்கு இனி எந்த பூமியும் இல்லை என்பதை அவன் கண்டான்.பிறகுதான் அவன் இரண்டு விரல்களை நெற்றியில் வைத்துக்கொண்டு யோசிக்க தொடங்கினான். உலகத்தின் முடிவு வரை தூங்கிவிட்டேன் என்பது தெளிவாகிறது. இது, "நான் என்ன செய்திருக்கிறேன் பார்!" என்று கர்வப்பட்டுக்கொள்ளப்படவேண்டிய ஒன்றுதான். ஆனாலும் அவன் சோகத்தில் ஆழ்ந்தான். இனி உலகம் இல்லை, அவன், உலகமில்லாமல் நான் என்ன செய்வேன், நான் எங்கு வேலைக்கு செல்வேன், நான் எவ்வாறு வாழ்வை மேற்கொள்வேன், முக்கியமாக இப்போது தினசரி செலவினங்கள் மிக அதிகமாகிவிட்டன, ஒரு டஜன் முட்டை விலை இருபது டாலராகிவிட்டது. அவை புதியனவா என்பது யாருக்கும் தெரியாது, அது தவிர கேஸ் கம்பெனி எனக்கு தர வேண்டிய ஐந்து டாலர்கள் என்னவாவது? என்னுடைய மனைவி எங்கே சென்றிருக்கிறாள்? அவளும் இந்த உலகத்தோடு நான் பாக்கெட்டில் வைத்திருந்த முப்பது டாலர் பணத்தோடு மறைந்திருக்ககூடிய வாய்ப்பு உண்டா? அவள் மறைந்துபோகக்கூடிய குணமுடையவள் அல்ல, என்று அவனே அவனுக்குள் நினைத்துக்கொண்டான். திடீரென உலகம் மறைந்துவிட்டால் நீயும் இவ்வாறே நினைப்பாய். உனக்கு வேறெதுவும் நினைக்கத் தெரியாது. நீ முட்டையின் விலையைப் பற்றியும், அலுவலகத்தை பற்றியும், மனைவி மற்றும் பணம் குறித்தும் நினைத்துக்கொள்வாய். வேறெதைபற்றியும் சிந்திக்க உனக்குத் தெரியாது. முழு உலகமும் மறைந்துவிட்டது – ஆனால் நீ உன்னுடைய சிந்தனையில் இயந்திரத்தனமாகிவிட்டாய். நான் தூங்க நினைத்தால் என்ன செய்வது? உலகம் இல்லாவிட்டால் நான் எதில் படுப்பேன்? என்னுடைய முதுகு வலித்தால்?, கடையில் இருக்கும் வேலைகளை யார் முடிப்பது? எனக்கு மால்ட் வேண்டுமென்றால் எங்கு கிடைக்கும்?. ஒரு மனிதன் தூங்கும்போது உலகம் அவன் தலைக்கடியில் இருந்தது ஆனால் எழும்போது உலகம் இல்லை என்பதை போல எங்காவது பார்த்திருக்கிறீர்களா? என்று அவன் நினைத்துக்கொண்டான். இது ஒருநாள் இல்லை ஒருநாள் நடக்கப்போகிறது – சாகும்போது ஒவ்வொரு மனிதனுக்கும் இதுதான் நடக்கிறது. திடீரென முழு உலகமும் மறைந்துவிடுகிறது. தீடீரென அவன் இந்த உலகத்தின் பகுதியல்ல. திடீரென அவன் இன்னொரு பரிமாணத்தில் இருக்கிறான். இது இறக்கும் எல்லோருக்கும் நடக்கிறது, ஏனெனில் நீ அறிந்தவை எல்லாம் மேலோட்டமானவையே. நீ இறக்கும் பொழுது, திடீரென உனது மேல்தளம் மறைந்துவிடுகிறது – நீ உனது மையத்தை நோக்கி தூக்கி எறியப்படுகிறாய். உனக்கு அந்த மொழி தெரியாது. உனக்கு மையத்தை குறித்து எதுவும் தெரியாது. அது சூனியத்தை போல, வெறுமையாக காட்சியளிக்கிறது. வெற்றிடமாக, ஏதுமின்றி இருப்பது போல தெரிகிறது. நமது கதாநாயகன் உள்ளாடையுடன் நின்று என்ன செய்வது என யோசித்துகொண்டிருந்தபொழுது, அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. போனால் போகட்டும், எந்த உலகமும் இல்லை, அது யாருக்கு வேண்டும்? மறைந்தது மறைந்துவிட்டது – நான் திரைப்படத்துக்கு சென்று நேரத்தை கழிக்கிறேன். ஆனால் அவன் ஆச்சரியபடும்படி உலகத்தோடு திரையரங்குகளும் மறைந்துவிட்டன என்பதைக் கண்டான். மிகவும் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டுவிட்டேன், என நினைத்துக்கொண்டே நமது கதாநாயகன் மீசையை தடவத் தொடங்கினான். தூங்கியதன் மூலம் மிகப்பெரிய குழப்பத்தை உண்டாக்கிவிட்டேன் நான் ஆழ்ந்து தூங்காமல் இருந்திருந்தால் எல்லாவற்றோடும் நானும் மறைந்திருப்பேன் என அவனை அவனே திட்டிக்கொண்டான். அப்படி பார்த்தால் நான் அதிர்ஷ்டம் இல்லாதவன், எனக்கு மால்ட் எங்கு கிடைக்கும் காலையில் அதை குடிக்க எனக்கு பிடிக்கும். என்னுடைய மனைவி? அவள் யாரோடு மறைந்தாள் என யாருக்கு தெரியும்? அது மேல்தளத்தில் இருக்கும் அந்த துணி தேய்ப்பவனாக இருந்தால், நான் அவளை கொன்றுவிடுவேன். கடவுளே எனக்கு உதவி செய். எவ்வளவு நேரம் கடந்துவிட்டது என்று யாருக்கு தெரியும்? இந்த வார்த்தைகளை கூறியபடியே நமது கதாநாயகன் அவனுடைய கைகடிகாரத்தை பார்க்க விரும்பினான் ஆனால் அது எங்கே என்று தெரியவில்லை. அவன் இரு கைகளாலும் முடிவில்லாத வெற்றிடத்தில் வலது இடது பைகள் இருக்குமிடங்களில் தேடினான் ஆனால் தொடுவதற்கு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் இப்போதுதான் கடிகாரத்திற்கு இரண்டு டாலர்கள் கொடுத்துள்ளேன் இதோ அது ஏற்கனவே மறைந்துவிட்டது, என அவனுக்கு அவனே நினைத்துக்கொண்டான். சரி உலகம் பாதாளத்திற்கு போயிருந்தாலும், அது பாதாளத்திற்கு போய்விட்டது. அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. அது எனது உலகமல்ல. ஆனால் கடிகாரம்! ஆனால் என்னுடைய கடிகாரம் ஏன் பாதாளம் போகவேண்டும்? புதிய கடிகாரம். இரண்டு டாலர்கள். அது காயப்படாதது. மால்ட் எனக்கு எங்கு கிடைக்கும் காலையில் மால்ட்டை விட சிறந்தது வேறு ஒன்றுமில்லை. யாருக்கு தெரியும் ஒருவேளை என்னுடைய மனைவி…. மோசமான அழிவின் போது தூங்கியிருக்கிறேன், எனக்கு மோசமானதுதான் நடக்கும். உதவி, உதவி, உ-த-வி! என்னுடைய மூளை எங்கே? முன்பே என் மூளை எங்கு போயிற்று? உலகத்தையும் என்னுடைய மனைவியையும், அவள் இளமையாக இருக்கும் போதே பார்த்துக்கொள்ளவில்லை, நான் ஏன் அவைகளை மறைந்து போக விட்டுவிட்டேன்? நமது கதாநாயகன் சூனியத்தில் தலையை முட்டிக்கொள்ள தொடங்கினான், ஆனால் சூனியம் மிகவும் லேசாக இருந்த காரணத்தால் அது அவனை காயப்படுத்தவில்லை, அதனால் அவன் இக்கதையை சொல்வதற்கு உயிரோடு இருந்தான். இது மனித மனத்தின் கதை. நீ உன்னைச் சுற்றி கற்பனை உலகத்தை உருவாக்கியுள்ளாய். நீ சாகும்போது உன்னுடன் வரமுடியாத பொருட்கள் மீது பற்று வைத்துக்கொண்டே செல்கிறாய். உன்னிடம் இருந்து எடுத்துகொள்ளபடக்கூடிய பொருட்களோடு உன்னை நீ அடையாளபடுத்திக் கொள்கிறாய்.
சக்கரவர்த்தி அக்பர் திடீர் திடீரென உணர்ச்சிவசப்படுபவர்! அவர் எப்போது உற்சாகத்துடன் இருப்பார், எப்போது எரிந்து விழுவார் என்று சொல்ல முடியாது. பல சமயங்களில், அவரையே கேலி செய்வதுபோல் அமைந்துள்ள நகைச்சுவைத் துணுக்குகளைக் கேட்டும் கோபம் அடையாமல் சிரிக்கவும் செய்வார். ஆனால், சில சமயங்களில் சில சாதாரண துணுக்குகள் கூட அவரை கோபமுறச் செய்யும். தர்பாரிலுள்ள அனைவருக்கும் அக்பரின் அடிக்கடி மாறுபடும் மனநிலையைப் பற்றித் தெரியும். அக்பரின் பேகத்திற்கும் இது தெரியும். ஆனால், பேகம் அதைப் பொருட்படுத்தாமல் பல சமயங்களில் அவரைக் கிண்டல் செய்வதுண்டு. சிலசமயம் அவளுடைய கேலிப் பேச்சினால் கோபமடைந்தாலும், சக்கரவர்த்தி உடனே அவளிடம் சாந்தமாகி விடுவார் என்ற அனுபவம்தான் காரணம்! ஒருநாள் மாலை நேரம், அக்பரும் பேகமும் அந்தப்புரத்தில் அருகருகே அமர்ந்திருந்தனர். சாளரத்தின் வழியே வீசிய தென்றல் காற்றில் மல்லிகை மணம் தவழ்ந்தது. அதை அக்பர் வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரைக் கிண்டல் செய்ய வேண்டுமென்று பேகத்திற்குத் தோன்றியது. “ஏது! மல்லிகை மணம் உங்களை மயக்குகிறதோ? என்னிடம் இல்லாதது மல்லிகையில் அப்படி என்ன இருக்கிறது?” என்று வாயைக் கிண்டினாள். “ஆம்! மல்லிகை மணம் என்னை மயக்குகிறது. அதிலுள்ள மயக்கம் உன்னிடம் இல்லை!” என்றார் திடீரென எரிச்சலுற்ற அக்பர். “என்னைத்தான் நேசிக்கிறீர்கள் என்று நினைத்தேன். என்னைவிட மல்லிகை மீதுதான் மோகமா?” என்று பேகம் மீண்டும் வம்புக்கிழுத்தாள். “ஆமாம்! உன் மீது மோகம் இருக்கவேண்டுமென்று என்ன அவசியம்?” என்றார் மேலும் கோபமுற்ற அக்பர். “மனைவி என்ற முறையில் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க எனக்கு உரிமை உண்டு!” என்று பதிலளித்தார் பேகம். “அந்த உரிமை யாருக்கும் கிடையாது. நான் மற்றவர்களைப் போல் சாதாரண மனிதனில்லை. ஏனெனில் நான் சக்கரவர்த்தி!” என்று உரக்க முழங்கினார் அக்பர். “என்ன? எனக்குக்கூட கிடையாதா? நான் என்ன சாதாரணப் பெண்ணா?” என்றார் பேகம். அக்பர் தான் கேலியாகக் கேட்டதில் கோபமடைந்து விட்டார் என்று உணர்ந்த அவளுடைய கண்கள் பனித்தன. “அந்த ஸ்தானத்தை நீ இழக்கும் வேளை நெருங்கிவிட்டது!” என்று அக்பர் ஒரு குண்டைத் தூக்கிப் போட, அதை சற்றும் எதிர்பாராத பேகம் அழுதே விட்டாள். ஆனால், அவள் கண்ணிரைப் பொருட்படுத்தாத அக்பர், “என்னுடன் உனக்கான உறவு இன்றுடன் முடிந்தது. நீ உன் பிறந்தவீட்டுக்கு நாளைக்கே போய்விடு! உனக்குப் பிடித்த பொருள்களை நீ எடுத்துச் செல்லலாம்” என்று சொல்லிவிட்டு கோபத்துடன் வெளியேறி விட்டார். தன்னுடைய விளையாட்டு இப்படி வினையாகும் என்று சற்றும் எதிர்பாராத பேகம் துடிதுடித்துப் போனாள். ஏதோ கோபத்தில் கூறிவிட்டாரென்றும், விரைவில் அவர் கோபம் தணிந்து விடுமென்றும் தன்னை சமாதானம் செய்து கொண்டாள். ஆனால், அன்றிரவு அக்பர் அவளைத்தேடி அந்தப்புரத்திற்கு வரவேயில்லை. ‘ஐயோ, விஷயம் விபரீதமாகி விட்டதே!’ என்று பதைபதைத்துப் போன பேகம், மறுநாள் தன் தாதி மூலம் “நான் உங்களுடைய மனத்தை என் கேலிப்பேச்சினால் புண்படுத்தியதற்கு மிகவும் வருந்துகிறேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று கடிதம் எழுதிஅனுப்பினாள். ஆனால், அக்பர் “உங்கள் பேகத்தைப் பெட்டி, படுக்கைகளுடன் நாளையே கிளம்பச் சொல்!” என்று இரக்கமின்றி பதில் சொல்லி அனுப்பினார். அதைக்கேட்டு இடி விழுந்தது போலான பேகம், அளவற்ற கோபமடைந்தத் தன் கணவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று வழிதெரியாமல் தவித்தாள். கடைசியில் அவளுக்கு பீர்பால் ஞாபகம்வர, அவரை உடனே வரவழைத்தாள். உடனே பேகத்தைத் தேடிவந்த பீர்பால் அவள் முன்னிலையில் வணக்கம் தெரிவித்தபின் தன்னை அழைத்தக் காரணம் கேட்க, பேகம் கண்களில் நீர் தளும்ப நடந்த விஷயத்தைக் கூறியவுடன் “நான் சொல்வதை அப்படியே செய்யுங்கள்! உங்கள் பிரச்சினை தீர்ந்து விடும்!” என்று பீர்பால் பேகத்திற்கு தைரியம் கூறிவிட்டு வீடு திரும்பினார். உடனே பீர்பாலின் யோசனைப்படி, தன் பொருள்களை எடுத்துப் பெட்டியில்வைத்துக் கொள்ளத் தொடங்கினாள். தன்னுடையது மட்டுமின்றி, அக்பரின்பொருள்களையும் எடுத்து வைக்க ஆரம்பித்தாள். பிறகு தன் தாதி மூலம்அக்பருக்கு, “பிரபு! நான் பிறந்த வீடு செல்லத் தயாராகி விட்டேன். ஆனால்,போவதற்கு முன் உங்களை ஒரேயோரு முறை சந்தித்து மன்னிப்புக் கோரவிரும்புகிறேன்” என்று செய்தி அனுப்பினாள். அதற்கு சம்மதித்த அக்பர், ஒரு மணி நேரம் சென்றபின் அந்தப்புரத்தை அடைந்தார். அவரை வாயிலில் நின்று புன்னகையுடன் வரவேற்ற பேகம் அவருக்கு இருக்கையளித்து உபசரித்தாள். ஆனால், அவளுடைய உபசரிப்பை அலட்சியம் செய்த அக்பர், கடுமையான குரலில் “நீ எப்போது போகப் போகிறாய் என்று மட்டும் சொல்!” என்றார். “இதோ கிளம்பிக் கொண்டே இருக்கிறேன். ஆனால், போவதற்கு முன், நான் இதுவரை உங்கள் மனத்தைப் புண்படுத்திய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மன்னிப்புக் கேட்கிறேன். மன்னித்தேன் என்று உங்கள் வாயினால் கேட்ட பின்னரே, என்னால் நிம்மதியாகப் பிறந்த வீடு செல்ல முடியும்” என்று பேகம் உருகினாள். “சரி, மன்னித்து விட்டேன்! இப்போது புறப்படுகிறாயா?” என்று வேண்டா வெறுப்புடன் கூறிய அக்பர் எழுந்து செல்லத் தயாரானார். உடனே அவரை அமரச் சொன்ன பேகம், “தயவு செய்து நான் அன்புடன் அளிக்கும் இந்தப் பழச்சாறை அருந்துங்கள்” என்று ஒரு கோப்பையை நீட்டிய பின், “இதுதான் நான் உங்களுக்கு அளிக்கப் போகும் கடைசி பானம்!” என்று விம்மியழ, அக்பரும் சற்றே மனமிளகி, அந்தப் பழச்சாறைக் குடித்தார். குடித்த பிறகு பேகத்தை நோக்கி, “உனக்கு மிகவும் பிடித்தமான பொருள்கள் எதுவானாலும் நீ இங்கிருந்து எடுத்துச் செல்ல உனக்கு ஏற்கெனவே அனுமதி அளித்துவிட்டேன். நான் வருகிறேன்” என்று விறைப்புடன் அக்பர் கூற, பேகத்தின் இதழ்களில் ஒரு விஷமப் புன்னகை அரும்பியது. பிறகு, எழுந்து இருந்து செல்ல முற்பட்ட அக்பருக்கு திடீரென உடலை என்னவோ செய்ய, “எனக்கு ஒரே தூக்கமாக வருகிறது” என்று தள்ளாடினார். உடனே விரைந்து சென்று அவரைத் தாங்கிப் பிடித்த பேகம், “ஐயோ! ஏன் இப்படித் தடுமாறுகிறீர்கள்? சற்று நேரம் உட்கார்ந்து விட்டுச் செல்லுங்கள்” என்று அவரைக் கையைப் பிடித்து அழைத்து வந்து படுக்கையில் உட்காரச் செய்தாள். அடுத்தகணம் தன்னை அறியாமல் படுக்கையில் சாய்ந்த அக்பர், அப்படியே தூங்கி விட்டார். தான் பழச்சாறில் கலந்த மருந்து வேலை செய்வதைக் கண்டு மகிழ்ந்த பேகம், உடனே தன் கைகளைத் தட்டி சில காவலர்களை அழைத்து, அக்பரை படுக்கையோடு சேர்த்து எடுத்துச் சென்று பல்லக்கில் வைக்கும்படி உத்தரவிட்டாள். அப்படியே அவர்கள் செய்ய, உடனே பேகம் தங்கள் இருவரது உடைமைகளையும் மற்றொரு பல்லக்கில் ஏற்றித் தானும் ஏறிக்கொள்ள, உடனே இரண்டு பல்லக்குகளும் ஆள்களால் சுமக்கப்பட்டு, பேகத்தின் பிறந்த வீட்டை அடைந்தன. தன் வீட்டையடைந்ததும், பேகம் அங்கிருந்த பணியாட்களுக்கு இட்டக் கட்டளையின்படி, அவர்கள் அக்பரைப் படுக்கையோடு தூக்கிக் கொண்டு வந்து படுக்கையறையில் கிடத்தினார்கள். “ஐயோ! ஏன் இப்படி சக்கரவர்த்தியை தூக்கி வருகின்றனர்? அவருக்கு உடல் சரியில்லையா?” என்று பேகத்தின் பெற்றோர் பதறிப்போக, “ஒன்றுமில்லை. கடந்த சிலநாள்களாக இருந்த மிக அதிகமான வேலையினால், பல்லக்கில் வரும்போது தூங்கிக் கொண்டே வந்தார். உண்மையில் ஒரு நாள் ஒய்வு எடுக்கவே அவர் இங்கு வந்துள்ளார்” என்று பேகம் பதிலளித்தாள். ஒரு மணி நேரம் கழித்து கண்களைத் திறந்த அக்பர், பேகத்தை நோக்கி, “நான் எங்கிருக்கிறேன்?” என்று கேட்டார். “நீங்கள் என் பிறந்த வீட்டில்தான் இருக்கிறீர்கள்” என்று பேகம் புன்னகையுடன் கூற, அக்பருக்கு சுரீர் என்று கோபம் தலைக்கேறியது. “நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என்னை இங்கு தூக்கி வர உனக்கு யார் அனுமதி கொடுத்தது?” என்று அவர் சீறினார். “நீங்கள் தான் பிரபு!” என்று அவர் சீறினார். “என்ன உளறுகிறாய்? நான் எப்போது அனுமதி தந்தேன்?” என்று அக்பர் கேட்க, அதற்கு பேகம், “உனக்குப் பிடித்த பொருள் எதுவானாலும் நீ இங்கிருந்து அதை எடுத்துச் செல்லலாம் என்று அனுமதி அளித்ததே நீங்கள்தான்! எனக்கு உலகிலேயே மிகவும் பிடித்த பொருள் நீங்கள்தான்! அதனால் உங்களை என்னுடன் எடுத்து வந்ததில் என்ன தவறு?” என்று சாமர்த்தியமாக மடக்கினாள். “ஓ!” என்ற அக்பர் திடீரென வாய்விட்டு சிரித்தார். “நீ மிகவும் சாமர்த்தியமாக செயற்பட்டு இருக்கிறாய். சரி வா! நாம் நம் அரண்மனைக்குப் போவோம்!” என்ற அக்பர், தொடர்ந்து, “அதிருக்கட்டும்! உனக்கு இந்த அபாரமான யோசனையை சொல்லிக் கொடுத்தது யார்?” என்று கேட்டார். அதற்கு பேகம் “நீங்கள்தான் மிகவும் புத்திசாலியாயிற்றே! கண்டுபிடியுங்களேன்!” என்றாள் . “அது நிச்சயம் பீர்பாலாகத் தானிருக்கும்” என்றார் அக்பர்.
அந்தியூர் என்ற காட்டில் புறாக்கள் கூட்டமாக சேர்ந்து ஒரு ஆலமரத்தில் வாழ்ந்து வந்தன, அவற்றில் ஒரு வயதான புறாவும் உண்டு, புறாக்கள் எல்லாம் இரை தேடி வந்து மரத்தில் அமரும். அப்போ வயதான புறா தன் அனுபவங்களை கூறும், அப்போ நிறைய புறாக்கள் பழங்கதைகள் சொல்லி எங்களுக்கு ஏன் வீணாக அறிவுரை சொல்லுறீங்க, நாங்களே யோசிக்கும் அளவுக்கு எங்களுக்கும் அறிவு இருக்குது என்று உதாசினப்படுத்துவார்கள். சிலருக்கு உண்மையிலேயே ஆபத்து வந்தால் அப்போ அந்த வயதான புறா தான் நல்ல வழி காட்டும். ஒரு நாள் அனைத்து புறாக்களும் சேர்ந்து உணவு தேடி சென்றன. அப்போ ஓரிடத்தில் பறவைகளைப் பிடிக்க வேடன் ஒருவன் வலை விரித்திருந்தான், அதன் அடியில் பெரிய பெரிய நெல்மணிகளை கொட்டியிருந்தான். அப்போ புறாக்கள் அனைத்தும் அந்த நெல்மணிகளை சாப்பிட திட்டமிட்டன, ஆனால் வயதான புறா அது வேடம் விரித்த வலை, நாம் போய் நெல்லை சாப்பிட்டால் மாட்டிக் கொள்வோம், எனவே வேற இடத்தில் இரைத் தேடலாம் என்றது, ஆனால் மற்றவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. வலையில் மாட்டாமல் நெல்மணிகளை சாப்பிட போகிறோம் என்று கூறி வலையின் மீது சாமர்த்தியமாக அமர்ந்து சாப்பிட்டன, ஒரு புறாவும் வலையில் மாட்டவில்லை, அப்போ வயதான புறாவைப் பார்த்து கேலி செய்தன மற்ற புறாக்கள். திடிரென்று ஒரு குண்டு புறா நிலைத் தடுமாறி ஒரு புறா மேல் விழ, அனைத்தும் சரிந்து நிலை குலைய, அவற்றின் கால்கள் வலையின் பின்னிக் கொண்டன, அவ்வளவு தான் அனைத்து புறாக்களும் வலையில் மாட்டிக் கொண்டன. அவ்வளவு தான் அனைத்தும் என்ன என்ன முயற்சியோ செய்தன, ஆனால் ஒன்றும் முடியவில்லை. வலையானது தரையோடு சேர்த்து அடிக்கப்படிருந்தது. உடனே அனைத்துப் புறாக்களும் வயதான புறாவை பார்த்து மன்னிப்பு கேட்டு, தங்களை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்றன. வயதான புறா "என் ஒருவனால் உங்கள் அனைவரையும் விடுவிக்க முடியாது, அதற்கான சக்தியும் என்னிடம் இல்லை, ஆனால் என்னுடைய வயதான அனுபவத்தால் கிடைத்ததை வைத்து ஒரு வழி சொல்கிறேன், அதன்படி நடந்தால் தப்பிக்கலாம் என்றது. மற்ற புறாக்கள் கண்டிப்பாக சொல்லுங்க, இதுவரை உங்கள் அனுபவங்களை உதாசினப்படுத்தியதற்கு மன்னியுங்க என்றன. வயதான புறா "இன்னும் கொஞ்ச நேரத்தில் வேடன் வருவான், அவன் வரும் போது நீங்க யாரும் உயிரோடு இருப்பது போல் காட்டிக் கொள்ளக்கூடாது, மரணம் அடைந்த மாதிரி விழுந்து கிடக்க வேண்டும்.", "அவனும் செத்துப் போன புறாக்கள் தானே என்று உங்களை தரையில் போடுவான், கடைசி புறாவை போடும் வரை அமைதி காக்க வேண்டும், கடைசி புறாவைப் போட்டதும், நான் வேகமாக வந்து வேடனை கொத்துவேன், அவன் நிலை குலைந்தவுடன் நீங்க அனைவரும் உடனே பறந்து தப்பிவிடுங்க" அனைத்து புறாக்களும் வயதான புறாவை வணங்கி, அது சொன்னது போல் செத்துப் போனது போல் நடித்தன, அங்கே வந்த வேடனும் அனைத்தும் செத்து கிடப்பதைக் கண்டு, தண்ணீர் குடிக்காததால் ஒருவேளை அனைத்தும் இறந்து போயிருக்கும் என்று நினைத்து, ஒவ்வொரு புறாவையும் வலையில் விடுவித்து கீழே போட்டான். கடைசி புறாவையும் போட்டு நிமிர்ந்து நிற்கவும், நம்ம வயதான புறா வேகமாக பறந்து வந்து வேடனின் தலையில் கொத்தியது, திடிரென்று நடந்த இந்த சம்பவத்தால் வேடன் பயந்து கண்களை மூடிக் கொண்டு, தலையின் மேல் கைகளை வீசினான். அவ்வளவு தான் அந்த சந்தர்ப்பத்தில் அனைத்து புறாக்களும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்பது போல் தப்பி பறந்தோடின. பின்னர் அனைத்து புறாக்களும் ஆலமரத்தில் கூடி, வயதான புறாவை போற்றின, பெரியவங்க சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கும், அவர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் துன்பமே வராது என்பதை புரிந்துக் கொண்டோம், இனிமேல் உங்கள் அறிவுரைப் படியே நடப்போம் என்று உறுதி கூறின. தினமும் வயதான புறாவின் அறிவுரைகள் கேட்டு நடந்து,. ஆபத்தில்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.
சீமான் முதலாளி வீட்டு வேலைக்காரன் வந்து சொன்னதும், தலையில் இரும்புத்தடி விழுந்தது மாதிரி இருந்தது, அம்மாசிக்கிழவனுக்கு. விஷயத்தைத் தெரிந்ததுமே விழுந்தடித்து ஓடக் கூடியவன் தான்; ஆனால் முடியவில்லை. வாழ்க்கையில் முக்காலேயே மும்மாகாணிக் காலத்தை ஓட்டி விட்ட அந்தப் பழுத்த பழத்துக்கு இப்போ மேலுக்கு நல்ல சுகமில்லை. முகம் சுரைக்குடுக்கை மாதிரி வீங்கியிருக்கிறது. உடம்பிலுள்ள தோல் எல்லாம் காய்ந்த வாழை மட்டையாகத் தொங்குகின்றன. மார்பு எலும்புகள் கூடுபாய்ந்து மூங்கில் கூடை மாதிரி வரிவரியாகத் தெரிகின்றன. அடிவயிறு முட்டிக் கலயம் போல உருண்டு மினுமினுப்பாயிருக்கிறது. அன்னம், தண்ணி, ஆகாரம் என்று உள்ளேயிறக்கிப் பத்து நாட்களுக்கு மேலாச்சு. வீட்டில் அவனைப் பார்த்துக் கொள்ள பிரத்தியேகமாக யாரும் கிடையாது. அவன் தனிக் கட்டையாகி ரொம்பக் காலமாச்சு. பக்கத்துக் குடிசைகளிலிருக்கும் அண்ணன் மக்கள், தம்பி மக்கள் தான் தற்போது அவனைக் கவனித்துக் கொள்கிறார்கள். முன்பு அவன் கெதியும் மதியுமாய் இருந்தபோது, ஊருக்குள்ளே போய் முதலாளிமார்கள் வீடுகளில் ஏதாவது அத்தம் தொத்தம், எடுபிடி வேலைகள் செய்து கஞ்சி வாங்கி வந்து குடிப்பான். இப்போ அதிகமாக அந்தப் பக்கம் நடமாட்டமில்லாததால் சீமான் முதலாளி வீட்டு நிலவரம் அவனுக்குத் தெரியாமலே போயிருந்தது. ஊரை விட்டுத் தள்ளி ஒதுக்குப்புறமாக இருக்கிற அந்தக் குடியிருப்புக்கு மெனக்கிட்டு யார் வந்து சொல்லப் போகிறார்கள்? சீமான் முதலாளி செத்துப் போனாராம்! அம்மாசிக்கிழவனின் ஆட்கள் உடனடியாக அங்கு போய் நிற்கணுமாம்! - பழைய கிராம முன்சீப் ஐயா தாக்கல் சொல்லிவிட்டிருக்கிறார். பெரிய வீட்டுத் துட்டி. எள் மூட்டை வந்ததும் எண்ணெய் டின்களாகப் போய் நிற்க முடியவில்லையே என்று கிழவனுக்கு ஒரே மன உளைச்சல், விசாரம். காலை நேரம், பொழுது கிளம்பி மேலே ஒரு பாகம் உயரம் வந்திருக்கும். சரி. கிழவனால்தான் போக முடியவில்லை. மற்றவர்களையாவது அவன் உடனே அங்கு அனுப்பியாக வேண்டும். இல்லாவிட்டால் சாமிமார்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டியது வரும். பொம்பளைகள் ஊர், ஊருக்குத் துட்டி சொல்லிப் போகணும்; ஆம்பிளைகள் கொட்டடிக்கணும்; தேர்க் கட்டக் கம்பு வெட்டி வரணும்; சுடுகாட்டுக்குப் பெரிய பெரிய மரக்கட்டைகளைக் கொண்டு சேர்க்கணும். மூடை, மூடையாக எருவும், தென்னங் கூந்தலங்களும் வேறு போய்ச் சேர வேண்டியதிருந்தன. இது போக அல்லறை சில்லறை வேலைகளும் அவர்களுக்காகவே இருக்கும். ராத்திரி சுடுகாட்டில் நின்று பிணத்தை எரிப்பது ஒரு முக்கியமான சோலி. அம்மாசிக் கிழவனின் அண்ணன் மகன் சடையனோடு சேர்ந்து அந்த ஆறு வீட்டு ஆணும், பொண்ணும் ராத்திரி செங்கல்லோடு வேலைக்குப் போய்விட்டு அப்போதுதான் அங்கு வந்து இறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் போய் நின்ற அம்மாசி, விஷயத்தைச் சொல்லி அப்படியே துட்டி வீட்டுக்கு ஓடும்படி விரட்டினான். அவர்களுக்கு மனசுக்குள் கொஞ்சம் சங்கடம்தான். ராத்திரிப் பூராவும் தூங்காமல் வேலை செய்த அசதி. இருந்தாலும் பெரிய ஆள் சொல்வதை அவர்களால் தட்ட முடியவில்லை. அடுத்த கொஞ்ச நேரத்தில், ஆம்பிளைகள் அவரவர்கள் வைத்திருக்கும் கொட்டுகள் சகிதமாக வந்து விட்டார்கள். மூணு பெரிய கொட்டு, ஒரு பம்பைக் கொட்டு, ஒரு கிடுகட்டி, ஒரு ஜதை சிங்கி. பொம்பளைகள் அள்ளி முடிந்த கொண்டைகளோடு புறப்படலானார்கள். எப்போதும் அம்மாசிக் கிழவன் தான் சூழல் வாசிப்பது. அவன் தான் நடக்கக் கூட ஜீவனில்லாமல் கிடக்கிறானே! வெறும் கொட்டுகள் மட்டுமே போயின. துட்டி வீட்டுக்கு முன்னால் ஊரே திரண்டு கிடந்தது. அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளிலும், பெஞ்சுகளிலுமாக வந்தவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சீமான் முதலாளியின் மக்கள் மார்கள், வீட்டுக்கு முன்னாலுள்ள பெரிய ஒட்டுத் திண்ணையில் அமர்ந்து வந்தவர்களுக்குத் துட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பந்தல் போடும் வேலைகள் முடிந்திருந்தன. கொட்டுக்காரன் - சடையனின் கூட்டம், துட்டி வீட்டுக்கு முன்னால் போய்ப் பவ்யமாக நின்று அங்கிருந்த எல்லாரையும் பார்த்து கும்பிட்டுக் கொண்டார்கள். சாவு ஓலைகள் தயாராக எழுதப் பட்டிருந்தன. பழைய கிராம முன்சீப் ஐயா, அவற்றைச் சடையன் ஏந்தி நின்ற துண்டில் எட்டயிருந்து போட்டு, "இன்னின்ன ஊர்க்கெல்லாம் போகணும்டா" என்றார். சடையன் அதைப் பொம்பளைகள் கையில் கொடுத்து, "இன்னின்னார் இன்னின்ன திசைக்குப் போங்க" என்றான். கொஞ் நேரம் யாரும் எதுவும் பேசவில்லை... பொம்பளைகள் சற்று தயங்கியபடி நின்றார்கள். அதைப் புரிந்து கொண்ட சடையன், கி.மு.ஐயாவிடம், " இந்தப் பொம்பளைகளுக்குப் பஸ் சார்ஜ்க்கும், ஒரு நேரம் பசியாறுகிறதுக்கும் ஏதாவது குடுத்து அனுப்புங்க சாமி" என்றான். "என்னடா சடையா? இது புதுசா இருக்கு? என்னைக்கு மில்லாத வழக்கமா?" - ஊர் மணியக்காரர் கேட்டார். "அதெல்லாம் இங்கு ஒன்னும் நடக்காது; நீங்க ஆக வேண்டிய காரியத்தப் பாருங்க!" என்றார், அதே கி.மு.ஐயா. சிறிது நேரம் வளர்த்த நாய் முகத்தைப் பார்த்தது போல துட்டி வீட்டுக்காரர்களைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பொம்பளைகள் போகலானார்கள். சடையனோடு சேர்ந்த கொட்டுக்காரர்கள், ஒரே கலரில் அமைந்த உடைகளை எடுத்து மாட்டினார்கள். காலில் சதங்கையைக் கட்டிக் கொண்டார்கள். கொட்டுக்களை எடுத்து இடுப்பில் வரிந்து கொண்டார்கள். கொட்டைத் தொட்டு கும்பிட்டு விட்டுச் "சட், சட்" என்று தட்டிச் சுதி பார்த்துக் கொண்டார்கள். முதன் முதலில், "கும்...கும்...கும்...கும்..." என்று வழக்கமாக அடிக்கும் அடியில் ஆரம்பித்துக் போகப் போக அடியை மாற்றிச் சாவு வீட்டிற்கே உரிய வர்ணத்தில், "சும்பளங்குச் சும்பளங்குச் சும்பளங். "சட்..சட்... சும்பளங்குச் சும்பளங்குச் சும்பளங்..." என்று முழங்கினார்கள். கூட்டம் அவர்கள் அடிக்கும் அடியைப் பார்த்தும், அவர்கள் போடும் ஆட்டத்தைப் பார்த்தும் ரசித்துக் கொண்டிருந்தது. சீமான் முதலாளியின் மூத்த மகனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சல்லிச் செல்லையா, திடீரென்று அந்தப் பெரிய திண்ணை யிலிருந்து குதித்து வந்து, கொட்டுக் காரர்களுக்கு அருகில் போய் நின்று, இடது கையை மேலே தூக்கிப் பிடித்து, "நிறுத்துங்கடா கொட்ட!" என்றார். மறுநிமிசம் கொட்டுச் சத்தம் நின்றது. "என்னடா! சூழல் இல்லாமக் கொட்டடிச்சு ஒப்பேத்திட்டுப் போகலாம்ன்னு வந்திருக்கீளா? எங்கடா அந்த வாசிப்புக்காரன் அம்மாசிக் கிழவன்?" என்று பேயாக இரைந்தார், அந்த இடமே அதிரும்படியாக. "பெரிசுக்கு ஒடம்புக்குச் சொகமில்ல மொதலாளி" சடையன் சொன்னான். "அவனுக்கு என்ன பேதியா எடுத்துருக்கு?", "சாப்பாடு, தண்ணி செல்லாமக் கெடக்காரு மொதலாளி", "என்னடா! இதுக்கு முன்னால என்னயச் சாமி, சாமியின்னு சொல்லுவ! இப்போ என்னல புதுசா மொதலாளிப் பட்டம் குடுக்கிற!... அஞ்சு ஏர்க்காட்டையும் அழிச்சுக் குடிச்சுட்டு, இப்ப, கையகல நெலமில்லாம இருக்கிற என்னய நக்கலா பண்ற? செருப்புப் பிஞ்சு போகும்!" என்று ஆவேசமாக எச்சரித்தார் அவர். "அப்படியெல்லாம் ஒன்னுமில்ல சாமி", "கெழவன் என்ன சாகவா கெடக்கிறான்? அவனால முடியலையின்னா ஒங்கள்ல ஒருவன் எடுத்துக் குழல் ஊத வேண்டியதுதானடா!" கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார். "அதுக்குக் கொஞ்சமாவது ராகம் தெரியணுமே சாமி!... மேல் உதடு இல்லாதவன் சீங்குழல் வாசிச்ச மாதிரி இருக்கும்", "வேற ஊருலயிருந்து ஒருவன கூட்டிக்கிட்டு வர வேண்டியது தானடா!" - இது இன்னொருவர். "அவங்க, முன்னூறு, நானூறுன்னு சம்பளம் கேக்குறாங்களே!", "குடுத்துக் கூட்டிக்கிட்டு வர வேண்டியதுதானே?... குழல் இல்லாத கொட்டு, தலையில்லாத முண்டம் மாதிரியில்ல இருக்கு? சோறு போட்டா வெஞ்சனத்தோட போடணும்" கீழவீட்டுப் பண்ணை சொன்னார். "துட்டி வீட்டுச்சாமிமார்க செலவ ஏத்துக்கிட்டாகன்னா, அஞ்சு நொடியில ஆளக்கொண்டுக்கிட்டு வந்துருவேன்", "நாங்க ஏண்டா அத ஏத்துக்கிறணும்? அது ஒங்களப் பொறுத்த விசயம் தானே?" சீமான் முதலாளியின் ரெண்டாவது மகன் கேட்டான். "சாமி, நாங்க அன்றாடம் கூலி வேலைக்குப் போய்த்தான் கஞ்சி குடிக்கிறோம். இந்த நிலையில் முன்னூறு, நானூறுக்கு எங்க போவோம்?", "இப்டியே விட்டா கொட்டிக்கிறதுக்கும் கூலி கேப்பாங்க போலிருக்க" கி.மு.வின் மூணாவது மகன் அவன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டான். "டேய், ஊருக்குத் தொண்டூழியம் செய்யறதுக்குத் தானடா அந்தக் காலத்துல ஒங்களுக்கு மானியக்காடுக விட்டிருக்காக!" என்றார் பழைய கிராம முன்சீப் ஐயா. "ஒங்களுக்குத் தெரியாத விசயமில்ல சாமி. அது மூணு தலைமுறைக்கு முன்னாலயே எங்கள விட்டுப் போயிருச்சே!", "என்னல நானும் பாத்துக்கிட்டே இருக்கேன்; பேச்சுக்குப் பேச்சுப் பேசி அடைச்சுக்கிட்டேயிருக்க!" - கோபாவேசத்தில் வந்த சல்லிச் செல்லையா, சடையனின் கன்னத்தில் ஒரு போடு போட்டார், காதோடு சேர்த்து. "என்ன சாமி, அண்ணனப் போட்டு இப்டி அடிக்கிறியே?" கிடுகட்டிக்காரன் கேட்டான். "நீ ஞாயம் கேக்குறயாடா, சிரிக்கிபுள்ள!" - அவனுக்கும் ஒரு பூசை விழுந்தது. ரெண்டு பேரும் கன்னத்தைத் தடவி விட்டுக் கொண்டு அங்கேயே நின்றார்கள். "சரி, அது போகட்டும். அம்மாசிக் கிழவன் இன்னைக்கு வரல. வழக்கமாக அவன்தான் பிரேதங்கள் சுட்டுச் சாம்பலாக்கிக் குடுப்பான். இன்னைக்கு அவன் வேலய யார் பார்க்கப் போறா? அந்தச் சோலி ஒங்களுக்குத் தெரியுமா?" கி.மு. ஐயாதான் இதையும் கேட்டார். "என்னமோ தெரிஞ்ச மட்டும் பாக்குறோம்... ஒங்க திருப்திக்கு வேணும்ன்னா நீங்களும் கூட மாடாயிருந்து கோளாறு சொல்லுங்க" என்றான் சடையன். "என்னடா சொன்ன? அந்த ஈனத் தொழில நாங்களும் சேந்து செய்யணுங்கிறயாடா! நீங்க எதுக்குடா இருக்கியே!" சொல்லிக் கொண்டே வந்த ஒரு மீசைக்காரர், வந்த வெறியில் சடையனைக் கொட்டோடு சேர்த்துக் கீழே தள்ளி, "நளுக்கு, நளுக்" கென்று நாலு மிதித்தார். "சிரிக்கி புள்ளயக் கொல்லாம விடக்கூடாது" - சல்லிச் செல்லையாவுக்கு வந்த கோபம் இன்ன மட்டுமென்றில்லை. இடையில் நின்ற ஒருவர் அவரைத் தடுத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டார். "என்ன சாமிமார்களா? இந்த ஏழக்குடிகள இந்தப் பாடுபடுத்துறீயே" - கேட்ட சிங்கிக்காரனுக்கு விழுந்த பூசையும் காணும். கீழே விழுந்து கிடந்த சடையன், மெதுவாக எழுந்து, இடுப்பைப் பிடித்துக் கொண்டே மற்றவர்களைப் பார்த்து, "வாங்கடா, போகலாம்" என்றான். காலில் கட்டிய சதங்கைகளை அவிழ்த்துக் கையில் பிடித்துக் கொண்டு எல்லாருமாக வீட்டைப் பார்த்து நடக்கலானார்கள். துட்டி வீட்டில் அவர்களைக் கொண்டு செய்ய வேண்டிய ஈமக் காரியங்கள் எத்தனையோ இருந்தன. "எங்கடா போறியே?" சல்லிச் செல்லையா கேட்டார். அவர்கள் திரும்பிக் கூடப் பார்க்காமல் போய்க் கொண்டே இருந்தார்கள். "ஒங்களையெல்லாம் வீட்டோட வச்சுக் கொளுத்தணும்டா!... போங்க! முக்குரோடு சிங்கம் மச்சான் கடைக்குப் போயிட்டு நேரே அங்கவாறேன்" என்றாரவர். வீட்டுக்குப் போன அவர்கள், அம்மாசிக் கிழவனுக்கு முன்னால் போய் நின்றார்கள். அவன் திடுக்கிட்டுப் போனான். கடையன் துட்டி வீட்டில் நடந்ததையெல்லாம் சொன்னான். கிழவனுக்கு இவர்கள் மேல்தான் கோபம். "என்னடா வேல பண்ணிட்டு வந்திருக்கியே! சாமிமார்கள எதிர்த்துப் பேசலாமா? அவுக அடிக்க, அடிக்க நாம கையேந்துகிறவங்கதான்... முட்டாத்தனமா நடந்திருக்கேளேடா." பேசுவதற்கு ஜீவன் இல்லாவிட்டாலும் ஒரு வெறியில் ஓங்கிச் சத்தம் போட்டான் கிழவன். கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமலிருந்த சடையன், அப்புறம் கேட்டான்; " இப்போ நாங்க என்ன செய்யணும் சின்னையா?", "எல்லோரும் அங்க போகணும்; நாம செய்யக் கூடிய சாவுச் சடங்குள எல்லாம சாமிமார்க மனங்குளிரச் செய்யணும்" சடையனோடு சேர்ந்து அங்கு நின்ற எல்லாரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். திடீரென்று கிழவனுக்கு எங்கிருந்துதான் அந்தத் தெம்பு வந்ததோ, "விருட்"டென்று வீட்டுக்குள் போய் ஒரு போணி தண்ணீரை அள்ளிக்குடித்துவிட்டு அவன் ஊதுகின்ற குழலோடு வெளியே வந்தான். அப்போது சடையன் கிழவனைப் பார்த்து சொன்னான்: "சின்னையா, இது ஒங்க காலத்தோடு சரி.. நாங்க இந்த ஊர்ல இருந்தாலும் சரி; அடியோடு போக்கழிஞ்சு போனாலும் சரி...", ".................." அந்த ஆறு வீட்டுக்காரன்களின் குழந்தை குட்டிகள் எல்லாம், வெள்ளங்காட்டி (காலை)க் கஞ்சி கூடக் குடிக்காமல் பரட்டைத் தலையோடு அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தன. நாலா ஊர் ஜனங்களும் வந்து, செய்ய வேண்டிய சாஸ்திரங்கள் யாவும் செய்து முடித்தபின், கொட்டு முழக்கோடும், குழல் சத்தத்தோடும் சீமான் முதலாளி தேர் ஏறிப் போக, ராத்திரி ஊர் ஒடுங்கும் நேரத்திற்கு மேலாகிவிட்டது. இனி, சுடுகாட்டில் வைத்து நடத்தக் கூடிய காரியங்கள் மட்டுமே பாக்கி. - முதலாளியைக் கொண்டு கட்டையில் வைத்தார்கள். மக்க(ள்)மார்கள் மொட்டையடித்துக் கொண்டார்கள். வாய்க்கரிசி போடப்பட்டன. பிரேதத்தின் மேல் எருவையும், தென்னங்கூந்தல்களையும் அழகாக அடுக்கினான் அம்மாசிக் கிழவன். மூத்தமகன் கொள்ளி வைத்து முடித்ததும், கூட்டம் கலையலாயிற்று. அடுத்து நடக்க இருப்பது அம்மாசிக்கிழவன் வேலைதான். யாரையுமே உதவிக்கு அங்கு நிற்கும்படி கிழவன் கேட்டுக் கொள்ளவில்லை, வழக்கம் போல. காரியமெல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்த சடையன், சின்னையாவுக்கு டீ போட்டு எடுத்துக் கொண்டு, ஊருக்குத் தெற்கே வெகுதூரத்திலிருக்கும் மயானத்திற்குப் போனான். சுடலையில் சீமான் முதலாளி "தகதக" வென்று எரிந்து கொண்டிருந்தார். அம்மாசிக் கிழவனைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான் சடையன், பரபரப்புடன். ... முதலாளியின் கால்மாட்டிற்கு நாலுபாகம் வடக்கே தள்ளி ஒரு பள்ளத்தில் கிழவன் விழுந்து கிடப்பது, அந்தச் சுடலை வெளிச்சத்தில் நன்றாகவே தெரிந்தது.
தன் முன்னால் தரையில் அமர்ந்து, கதறியழும் வயதானப் பெண்ணை, மாவட்ட ஆட்சியாளர் இந்துவால், தேற்ற முடியவில்லை. பக்கத்தில் உள்ள, ஒரு சிறு கிராமத்திற்கு நிதியுதவி செய்யச் சென்றபோதுதான், அந்தப் பெண்மணி, அவளது காலில் விழுந்து அழுதாள். ஏன் அழுகிறாள்? தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்துவிட்டு, பல நாட்களாய் சிறுகச், சிறுகச், சேர்த்த காசைக் கொண்டு, தன் மகளுக்கு நகை வாங்க நகருக்குச் செல்லும்போது, எவனோ ஒரு பிட்பாக்கெட்காரன் இரக்கமின்றி எடுத்துவிட்டான். இந்த சம்பவத்தைக், கேட்டுக் கொண்டிருக்கும் இந்துமதியின் மனம் பதினைந்து ஆண்டுகளுக்கு, முன்பு நடந்த நிகழ்வுக்கு சென்றது. எல்லா மரங்கள், செடிகளும், கொடிகளும், முதுமைக்கு விடைகொடுத்து, இளமையைச் சந்திக்கக் காத்திருக்கும், மார்கழி மாதம் அது. மருதாணியின் வெளுப்பைப் போல், இன்றும் வழக்கமாக சூரியன் வெளுத்தான் சற்று தாமதமாக... பட்டனை அழுத்தியவுடன் இயங்குகின்ற இயந்திரமாய், மணி அடித்தவுடன், மாணவர்களின் சலசலப்போடு புது கிளுகிளுப்போடு, வகுப்பறை ஆரம்பித்தது. அது அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர். அன்று ஆறாம் வகுப்பு ஆசிரியர் கார்த்திகேயன், வரவில்லை. ஆசிரியர் வரவில்லையென்றால் சொல்லவேண்டுமா? அவ்வளவு தான் ஒருவர். ஒருவரின் குடுமியைப் பிடித்தும், அடித்தும் விளையாடிக் கொண்டிருந்தனர். ஏ குண்டு, கொழுக்கட்டை, கருவாச்சி என ஒருவர், மற்றவரை அவர்களது பட்டப் பெயர்களால் அழைக்கலாயினர். ராஜேஸ்வரியின் தந்தை, சிங்கப்பூரில் இருக்கிறார். தினமும் விதவிதமான, உடையுடன், பள்ளிக்கு வருவாள். இவளது அருகில் பள்ளியில், அமர்ந்து இருப்பவள் இந்துமதி. அவளது தந்தை சிறு வயதில் இறந்துவிட்டார். எனவே அவளது அம்மாவும், இரண்டு தங்கச்சிகளும், தான் இவளுக்குப் பெரிய சொத்து. இவளது அம்மாவினுடைய உழைப்பில் தான், குடும்பம் நடக்கிறது. இவளது அம்மா இலட்சுமியம்மாள் பஞ்சு ஆலையில் வேலைப் பார்க்கிறாள். வழக்கம் போல், ராஜேஸ்வரி தனது தந்தை சிங்கப்பூரில் இருந்து கொண்டுவந்த, பேனாவை வைத்துப் பெருமையடிக்கத் துவங்கினாள். ஐயா! எங்கப்பா சிங்கப்பூர்ல இருந்து கொண்டுவந்த சிங்கப்பூர் பேனா, சிவப்பு மை பேனா, பார்த்தியா? எவ்வளவு அழகா, இருக்குன்னு. வறுமை இந்துவின் வார்த்தைகளுக்குத் தாழிட்டது, இருப்பினும். ஏப்பா! ஏப்பா! இதை எனக்குத் தர்றியா? என ராஜியிடம் கேட்கிறாள். ராஜி... ம்ம் அசுக்குப், பிசுக்குப், போடி உனக்குத் தரமாட்டேன், என்று சொல்லி அவளைத் தொடக்கூட அனுமதிக்கவில்லை. "பணக்கார வர்க்கத்தை வேடிக்கைப் பார்த்து, ஆசையை அடக்கிக் கொள்வதை, வாடிக்கையாக்க வேண்டும்." என்பது, அந்தப் பிஞ்சு நெஞ்சத்திற்குத் தெரியவில்லை. ரொம்பப் பீத்திக்காதடி, நானும் எங்கம்மாக்கிட்ட இந்த மாதிரி பேனா, வாங்கிக் கேப்பேன்னு தேம்பித் தேம்பி சொல்லிக் கொண்டே அழுகிறாள். இந்துவின் வீடு, பள்ளியில் இருந்து சற்று தூரத்தில் உள்ளது. மாலையில் பள்ளி முடிந்ததும், வீட்டிற்குச் செல்லும்போது, வழியோரம் காணப்படும் கருவை மரங்களின் இலைகளையும், மஞ்சள் பூக்களையும், உதிர்த்து, உதிர்த்து, அவைகளிடம் தனது கோபத்தைக் காட்டிக் கொண்டே போனாள். வீட்டை அடைந்ததும், அவள் தனது பையை ஒரு மூலையில் வீசி எறிந்துவிட்டு, பக்கத்து வீட்டுக்குத் தொலைக்காட்சிப் பார்க்கச் சென்று விட்டாள். இந்துமதியின் தாய் ஆலையை விட்டு வந்ததும், "இந்து, இந்து", என அழைக்கவே அவளைக் காணவில்லை மறுமுறை "இந்து, இந்து" என அழைக்க... "அம்மாக் கத்துறது ஊருக்கேக் கேட்கும் போல, ச்சே செத்த நேரம் கூட நிம்மதியாப் படம் பார்க்க முடியல, என முனங்கியவாறே", வீட்டிற்குள் நுழைந்தாள். "நானே ஒத்தக் கையாளு, பொம்பளப் பிள்ளை கொஞ்சம் ஒத்தாசையா இருக்கக் கூடாது", எனக் கூறிவிட்டு சமைக்கத் துவங்குகிறாள். இந்துமதி அம்மாவிடம் தயங்கிக் கொண்டே, " அம்மா, அம்மா இந்த இராஜிப் பிள்ளை வச்சிருக்கிற பேனா மாதிரி எனக்கு வாங்கித்தர்றியாம்மா?" "யாருடி இவ, வேற வேலையில்லை பெரிய இடத்துப் பிள்ளைங்க அப்படி, இப்படின்னு, வச்சிருப்பாங்க. அதையெல்லாம் பார்த்துட்டுக் கேட்கக் கூடாது", தலையில் ஒரு கொட்டு வைக்கிறாள் அம்மா. இந்துமதி கலங்கிய கண்களோடும், வீங்கிய முகத்தோடும், பள்ளிக்குச் சென்றாள். இடைவேளையில் ராஜி இல்லாதநேரம், அவளது பேனாவைத் திருடுகிறாள். இராஜி அழுதுகொண்டே "சார், சார் என் பேனாவைக் காணோம் சார்! எங்கம்மா அடிப்பாங்க சார்" என்றாள். தன் ஆசிரியரிடம் புகார் செய்தாள். இந்துமதியின் விழிகள் அங்கும், இங்கும் உருண்டோடின. அச்சம் அவளை, ஆட்கொண்டது. வாத்தியார் கார்த்திக் மிகவும் பண்பானவர். அவர் தனது மாணவர்களை விட்டு அனைத்துப் பைகளையும், சோதனையிடச் சொல்கிறார். இந்துவின் பையில் பேனா, இருப்பது தெரியவருகிறது. ஆசிரியர் இந்துவைத் தனியாக அழைத்து, "இந்து இங்க வாப்பா, நீ நல்லப்பிள்ளையாச்சே ஏன் இந்தத் தப்புப் பண்ணுன?" இந்து அழுகிறாள். "சார், இந்த மாதிரி பேனா எங்கம்மாக்கிட்ட வாங்கித் தரச் சொன்னேன், சார். அம்மா, அதுக்கு இதெல்லாம் பெரிய இடத்துப் பிள்ளைங்க வச்சிருக்கது, நம்மெல்லாம் அதுக்கு ஆசைப் படக் கூடாதுன்னு, சொல்லுச்சு சார். ஏன் சார் நான் ஆசைப்படக் கூடாதா?" எனக் கேட்கும் அவள் கண்களில் ஏக்கம் தெரிகிறது. ஆசிரியர் கார்த்திக், "ச்சே ச்சே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நம்மாலயும் வாங்க முடியும். ஆனா பிறர் பொருளுக்கு, ஆசைப் படக் கூடாது. ஆனா உண்மையா இருக்கணும். இல்லைன்னா, சாமி நம்மளத் தண்டிக்கும் திருடுனாப் படிப்பு வராது! நீ விரும்புற பொருட்களையெல்லாம் வாங்க முடியும் எப்போ தெரியுமா? நீ நல்லாப் படிச்சு, வேலைக்கு வந்தா, நீ விரும்புற பொருட்களையெல்லாம் வாங்கலாம்" என்னும் ஆசிரியரின் வார்த்தைகள் இந்துவின் காதில் எதிரொளிக்கின்றன... கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் அந்தப் பெண்மணியைத் தேற்றத் துவங்கினாள்.
ஒரு நாள் இரவு நேரத்தில் அக்பரும், பீர்பாலும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் சால்வையை இருக்கமாக இருவரும் போர்த்திக்கொண்டிருந்தனர். அப்படியும் குளிர் அக்பரை மிகவும் வாட்டியெடுத்தது. அக்பர் பீர்பாலை பார்த்து ” பீர்பால் இந்த குளிரின் கொடுமையை பார்த்தீரா… எதிரிகளுக்கு அஞ்சாத நெஞ்சம் இருந்தும் இந்த குளிருக்கு அஞ்சாமல் இருக்க முடியவில்லையே! இந்த குளிரை பொருட்படுத்தாமல், யமுனை ஆற்றில் ஒரு இரவு முழுக்க, கழுத்தளவு நீரில் யாராலும் நிற்க இயலுமோ! அவ்வாறு நின்றால், அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கலாம்” என்றார். “அரசே, சிங்கத்தின் முடியை கூட கொண்டு வந்துவிடலாம். ஆனால் நடுங்கும் குளிரில் இரவு முழுவது ஆற்றில் நிற்பது என்பது சதாரண காரியமா?” என்றார் பீர்பால். “யமுனை ஆற்றில் குளிரில் நிற்பதற்கு எந்தவித திறமையும் தேவையில்லை, மன உறுதி இருந்தாலே போதும்! நாடு முழுவதும் இந்த செய்தியை அறிவிக்க சொல்லுங்கள்! பணத்தின் மீது ஆசைப்பட்டு நிறைய பேர் பங்கு பெற வருவார்கள். அதில் யார் வெற்றி பெறுவார்கள் எனப்பார்ப்போம்” என்றார் அக்பர். அரசரின் ஆணை நாடெங்கும் அறிவிக்கப்பட்டது. அடுத்த நாளே, ஒரு இளைஞன் அரசரிடம் வந்து ” அரசே, யமுனை நதியில் கழுத்தளவு நீரில் இரவு முழுவதும் நிற்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்றான். அக்பர் அந்த இளைஞனை வியப்பாக பார்த்து “இன்று இரவு போட்டிக்கு தயாராகு” என்றார். இளைஞனும் தயாரானான். நடுங்கும் குளிரில் நிற்பது சதாரண விசயமில்லையே என நினைத்த அக்பர், அந்த இளைஞனை கண்காணிப்பதற்கு இரண்டு காவலாளிகளை நியமித்தார். யமுனை ஆற்றில் வெற்று உடம்புடன் இறங்கினான் இளைஞன். கழுத்தளவு வரை நீர் உள்ள இடத்தில் நின்று கொண்டான். உடல் மிகவும் நடுங்கியது, குளிர் வாட்டியது, அவனால் தாக்குபிடிக்கமுடியவில்லை. ஆனாலும் பரிசாக கிடைக்கப்போகும் ஆயிரம் பொற்காசுகளை எண்ணி பார்த்தான். புது தெம்பு வரவே, இரவு முழுவதும் கண் விழித்து நின்று கொண்டிருந்தான். பொழுது விடிந்தது. வெயில் மேனியில் பட உடல் சீரான நிலைக்கு வந்தது. ஆயிரம் பொற்காசுகளை பெறப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ஆற்றை விட்டு மேலே வந்தான். அவனை காவலாளிகள் மன்னரிடம் அழைத்து சென்று இரவு முழுவது இளைஞன் கழுத்தளவு நீருக்குள் நின்றதை கூறினார்கள். அக்பருக்கோ மிகவும் வியப்பாக இருந்தது. “இளைஞனே உன் மன உறுதியை பாராட்டுகிறேன்! அந்த இரவில், கடும்குளிரில் நீருக்குள் எப்படி இருந்தாய்? அப்படி நிற்கும்போது உனக்கு எந்த வகையிலும், ஏதாவது துணையாக இருந்ததா? என்றார் அக்பர். அந்த இளைஞனும் அப்பாவியாய் “அரசே அரண்மனையின் மேல் மாடத்தில் எரிந்து கொண்டிருந்த சிறிய விளக்கின் ஒளியை பார்த்துக்கொண்டே இரவுப்பொழுதை கழித்தேன்” என்றான். “இளைஞனே அதானே பார்த்தேன். நடுங்கும் குளிரில் தண்ணீருக்குள் எப்படி உன்னால் இருக்க முடிந்தது என்று இப்பொழுது புரிகிறது! உன் குளிரை போக்க அரண்மனையிலிருந்து வீசிய விளக்கின் ஒளி உனக்கு உதவி செய்திருக்கிறது. அந்த சூட்டில் தான் இரவு முழுவது நின்றிருக்கிறாய். எனவே உனக்கு ஆயிரம் பொற்காசுகள் கிடையாது” என்றார். பரிசுத்தொகை கிடைக்கவில்லை என்றதும் அந்த இளைஞன் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றான். பீர்பால் அவனை கண்டு என்னவென்று விசாரிக்க. இளைஞனும் பீர்பாலிடம் எல்லாவற்றையும் சொன்னான். பீர்பால் அவனுக்கு ஆறுதல் கூறி பரிசு தொகையை கிடைக்க உதவி செய்வதாக உறுதியளித்தார். சில நாட்களுக்கு பிறகு, அக்பர் வேட்டையாட புறப்பட்டுக்கொண்டிருந்தார். பீர்பாலை தம்முடன் அழைத்து செல்ல எண்ணிய அக்பர் காவலாளியை கூப்பிட்டு பீர்பால் வீட்டுக்கு சென்று அழைத்து வரச்சொன்னார். பீர்பால் தன்னை தேடி வந்த காவலாளியிடம் தான் சமையல் சென்று கொண்டிருப்பதையும், சாப்பிட்டு விட்டு வருவதாகவும் கூறினார். நீண்ட நேரம் பீர்பாலுக்காக அக்பர் காத்திருந்தார். பீர்பால் வரவில்லை. மிகவும் கோபமடைந்த அரசர் பீர்பாலின் வீட்டுக்கு சென்று பார்த்துவிட்டு வரலாம் எனப்புறப்பட்டார். பீர்பால் வீட்டில் ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார். பாத்திரத்திலிருந்து பத்தடி தூரம் தள்ளி அடுப்பை வைத்திருந்தார். அடுப்பில் விறகுகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதை கண்ட அக்பருக்கு ஒன்றும் புரியவில்லை. பீர்பாலிடமே கேட்டார். “பீர்பால் தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” அக்பர். “அரசே சமையல் செய்து கொண்டிருக்கிறேன்” பீர்பால். “உமக்கு என்ன மூளை குழம்பி விட்டதா? பாத்திரம் ஒரு பக்கம் இருக்கிறது. அடுப்பு ஒரு பக்கம் இருக்கிறது. அதில் எப்படி சோறு வேகும்?” என்றார் அக்பர் கோபத்துடன். “அரசே நிச்சயம் சோறு வேகும். யமுனை ஆற்றில் தண்ணீரில் இருந்தவனுக்கு அரண்மனையில் இருந்த விளக்கின் வெளிச்சம் சூட்டை தந்திருக்கும்போது மிகவும் பக்கத்தில் இருக்கிற அடுப்பில் ஏற்படும் சூடு அரிசி பாத்திரத்தில் பட்டும் சோறு வெந்து விடாமல் போகுமா?’ என்றார் பீர்பால். மிகவும் நாசூக்காக தமக்கு புரிய வைத்த பீர்பாலை பாராட்டி அந்த இளைஞனை வரவழைத்து… முன்பு கூறிய படியே ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தார்.
தேனீ ஒன்று ஜூபிடரைச் சந்தித்து ஒரு பானை நிறைய சுத்தமான, சுவை மிகுந்த தேனை கொடுத்தது. கடவுளரான ஜூபிடரும் அதை அன்போடு வாங்கிக் கொண்டார். தேனீயின் அன்பால் மகிழ்ந்த அவர், தேனீ கேட்கும் வரத்தைத் தருவதாகவும் சொன்னார். தேனீ உடனே, தான் கொட்டியவுடன் மரணம் சம்பவிக்க வேண்டும் என்று வரம் கேட்டது. தேனீ இப்படி மோசமான வரத்தைக் கேட்டதில் ஜூபிடர் கோபமடைந்தார். தேனீயின் கருணையில் பிற உயிரினங்கள் வாழ்வதா என்றும் யோசித்தார். பிறகு, தேனீ கேட்ட வரத்தைத் தருவதாகவும் ஆனால் அவை ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்றும் சொன்னார் ஜூபிடர். "ஏன்?" என்று கேட்டது தேனீ. "நீ யாரைக் கொட்டினாலும் மரணம் சம்பவிக்கும். அவர்களுக்கல்ல, உனக்கு" என்றார் ஜூபிடர். தீய எண்ணம் தீமையையே கொண்டுவரும்.
முல்லாவின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பெண்மணி வசித்து வந்தாள். முல்லா வீட்டில் என்ன சமையல் செய்தாலும் அவள் அதை மோப்பம் பிடித்து தனது சிறிய மகளை அனுப்பி சமைத்த பொருளை கொஞ்சம் கேட்டு வாங்கி வரச் சொல்வாள். அவளுடைய அந்த விரும்பத்தகாத வழக்கம் முல்லாவுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதை எப்படித் தடுப்பது என்றும் விளங்கவில்லை. ஒருநாள் முல்லாவுக்கு "கோழிக்குஞ்சு சூப் " தயாரிக்கச் செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. " சூப்" தயார் செய்யச் சொல்லலாம் என மனைவியை அழைத்தார். மனைவி அவர் முன்னால் வந்து நின்றபோது முல்லாவுக்கு அண்டை வீட்டுகாரியின் நினைவு வந்தது. வீட்டில் சூப் செய்யத் தொடங்கினால் அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்துக் கொண்டு சூப் வாங்க ஆள் அனுப்பி விடுவாளே என்ற எண்ணம் அவருக்கு ஏற்ப்பட்டது. " சூப் இப்போது தயார் செய்ய வேண்டாம் என்று கூறி மனைவியை அனுப்பி விட்டார்." சற்று நேரத்திற்கெல்லாம் கதவு தட்டப்படும் ஒசை கேட்டது. முல்லா எழுந்து சென்று கதவைத் திறந்தார். அண்டை வீட்டுக்காரியின் சின்னப் பெண் கையில் ஒரு கிண்ணத்துடன் வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்தாள். என்ன? என முல்லா விசாரித்தார். உங்கள் வீட்டில் கோழி சூப் தயாரித்தீர்களாமே! அம்மா கொஞ்சம் வாங்கிக் கொண்டு வரச்சொன்னாள் என்று சிறுமி கூறினாள். முல்லா உரத்த குரலில் " ஒஹோஹோ" என்று சிரித்தார். உள்ளேயிருந்த மனைவி ஒடிவந்து " உங்களுக்கு என்ன வந்துவிட்டது? ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டாள். " இந்த வினோதத்தைப் பார்?" இத்தனை காலமாக நாம் சமையல் செய்யும்போதுதான் அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்து நாம் சமைக்கும் பொருளில் கொஞ்சம் வாங்கி வரச் சொல்லுவாள். இப்போது நான் சூப் செய்யச் சொல்ல வேண்டும் என்று மனத்திலேதான் நினைத்தேன். இதைக்கூட அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்து சூப் வாங்கி வரச் சொல்லி மகளை அனுப்பியிருக்கிறாள் பார் என்று கூறிவிட்டு முல்லா சிரிக்கலானார்.
ஆனைக்குடி என்ற ஊரில் அழகேசன் என்ற ஏழை இளைஞன் இருந்தார், அவர் பக்கத்து ஊரில் ஜம்பு என்ற ஜமிந்தாரிடம் வேலை பார்த்து வந்தார், கடுமையாக உழைத்தாலும் ஜமிந்தார் ஒன்றுமே கொடுக்க மாட்டார், சாப்பாடு மட்டுமே போடுவார். இருந்தாலும் தனக்கு வேலை கொடுத்த ஜமிந்தாருக்கு மிகவும் உண்மையாக உழைத்தார், ஜமிந்தார் கொடுப்பதில் தன் தாயாருக்கு பொருட்கள் வாங்கி கொடுத்து அனுப்புவார். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்து, பின்னர் தன் தாயை பார்க்க போவதாக ஜமிந்தாரிடம் சொன்னார் அழகேசன். ஜமிந்தாருக்கு அவரை விட மனசு இல்லை, இருந்தாலும் போய் வா, இதோ இரண்டு ஆண்டுக்கான உன் கூலி என்று கூறி 5 செப்பு காசுகள் கொடுத்தார். அவரும் மனம் கோணாமல் தாயாரைப் பார்க்க போகிற மகிழ்ச்சியில் சந்தோசமாக வாங்கி, முதலாளிக்கு நன்றி சொல்லிட்டு ஊருக்கு கிளம்பினார். அதே நேரம் அந்த ஊரில் ஒரு பெரிய திருடன் ஒருவன், ஜம்பு ஜமிந்தாரின் வீட்டை ரொம்ப நாட்களாக நோட்டம் போட்டுட்டு வந்தான். அழகேசன் இருந்தவரை அவனால் திருட முடியவில்லை, அழகேசன் ஊருக்கு கிளம்புவதையும், அவர் சம்பளம் வாங்கி சென்றதையும் பார்த்தான், கண்டிப்பாக நிறைய தங்கம் கொண்டு செல்வார் என்று நினைத்தான், அதற்கு முன்னர் ஜமிந்தார் வெளியே சென்ற நேரம் பார்த்து அவரது வீட்டில் யாருக்கும் தெரியாமல் நுழைந்து, அங்கே பாதுகாப்பாக வைத்திருந்த தங்க காசுகள், நகைகள் மற்றும் அனைத்து ஆபரணங்களையும் கொள்ளை அடித்து, பெரிய மூட்டை கட்டினான். பேராசை யாரை விட்டது, இது போதாது என்று நினைத்து, அழகேசன் கையில் இருக்கும் பொருட்களையும் பிடுங்க திட்டமிட்டான், எப்படி அழகேசன் காட்டு வழியாகத் தான் நடந்து ஊருக்கு செல்வார், எனவே அங்கே அவரை அங்கேயே மடக்கி, இருப்பதை திருடலாம் என்று நினைத்தான். குறுக்கு பாதையில் ஓடி காட்டில் ஒளிந்துக் கொண்டான். அழகேசன் காட்டு வழியாக செல்லும் போது ஒரு இடத்தில் ஒரு குள்ளமான ஒருவர் கீழே விழுந்து கிடந்தார், அவரை ஓடி போய் தூக்கி, குடிக்க தண்ணீர் கொடுத்தார். சிறிது நேரத்தில் அந்த குள்ள மனிதர் கண் விழித்து பார்த்தார், அவரது தோற்றம் வேடிக்கையாக இருந்தது. நீண்ட வெண்ணிறத்தாடி, தலையில் கூம்பு வடிவில் தொப்பி. "அய்யா, பெரியவரே! என்ன ஆச்சு, ஏன் மயங்கி கிடக்கிறீங்க", "தம்பி, என்னை காப்பாற்றியதற்கு நன்றி, நான் பசியாலும், பட்டினியாலும் வாடுகிறேன், எனக்கு உன்னால் முடிந்த உதவியை செய்வாயாக", "அ=ய்யா, நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த வருமானம் இதோ இருக்குது, இதில் 2 செப்பு காசுகள் நீங்க வைத்துக் கொள்ளுங்க" ‘தம்பி! உன் இரக்க குணம் என்னை மகிழ்ச்சி கொள்ளச் செய்யுது, கை மாறாக நான் உனக்கு உதவ இருக்கிறேன். எனக்கு சில மந்திர சக்திகள் இருக்குது, அதனை பயன்படுத்த மற்றவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறேன், உனக்கு என்ன வேண்டும் கேள், தருகிறேன்" அழகேசனுக்கு ஆச்சரியம், நம்பமுடியவில்லை. என்னடா இது, நாம இவருக்கு உதவினால் அவர் நமக்கு உதவுகிறாராம், அதுவும் மந்திரசக்தியால், புரியவில்லையே என்று திகைத்தார். "தம்பி, சந்தேகம் வேண்டாம், உனக்கு உதவி செய்ய இருக்கிறேன், என்ன வேண்டும் கேள்", "அய்யா, எனக்கு இசையில் மிக்க ஆர்வம் உண்டு, நான் ஊதினால் இனிமையான இசை வரக்கூடிய ஒரு புல்லாங்குழல் கொடுங்க, அதை கேட்டவர்களும் மெய் மறந்து போகும் அளவுக்கு இருக்க வேண்டும்" உடனே குள்ள மனிதர் கண்ணை மூடி ஏதோ மந்திரம் சொல்ல, கையில் அழகான புல்லாங்குழல் வந்தது, அதை அழகேசனுக்கு கொடுத்து, ஆசிர்வாதம் செய்து, வேறு வழியில் சென்று விட்டார். அழகேசனும் மகிழ்ச்சியாக நடக்கத் தொடங்கினார், திடிரென்று அவர் முன்னால் பெரிய கத்தியோடு அந்த திருடன் வந்து நின்றான், மரியாதையாக உங்க முதலாளி கொடுத்த காசுகளை எனக்கு கொடு என்றான். அழகேசனுக்கு பயம், ஏன் வீணாக திருடனிடம் சண்டை போட்டு, உயிரை இழக்க வேண்டும், என்று நினைத்து, பையில் இருந்த 3 செப்பு காசுகளை கொடுத்தான். என்ன 3 செப்பு காசா, அவர் 5 அல்லவா கொடுத்தார், தங்கம் கிடையாதா, கஞ்சப்பயல், அதான் அவன் வீட்டில் நான் இத்தனை தங்கம் இருந்ததா, ஆமாம் மீதி 2 காசு எங்கே, அதையும் கொடு, இல்லை என்றால் கொன்று விடுவேன்", "என்னிடம் 3 தான் இருக்குது, 2 ஒரு குள்ள மனிதருக்கு கொடுத்து விட்டேன்", "நான், நம்ப மாட்டேன், எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்?" அழகேசன் என்ன செய்வது என்று யோசித்தார், திருடனிடமிருந்து தப்பிக்க ஒரே ஒரு ஆயுதம், அந்த புல்லாங்குழல் தான், அதை உபயோகிக்கலாம் என்று முடிவு செய்து "மீதி 2 காசு, இதுக்குள்ளே இருக்குது, இரு, ஊதி எடுக்கிறேன்" என்று கூறி புல்லாங்குழலை இசைக்கத் தொடங்கினார். அதிலிருந்து அருமையான இனிய இசை கிளம்பியது, அனைத்து பறவைகளும் மெய் மறந்து கேட்டன, திருடன் சும்மாவா இருக்க முடியும், திருடனும் ஆகா, ஓகோ என்று தை தைக்கா என்று குதிக்கத் தொடங்கினான், அழகேசன் விடாமல் இசைக்க, திருடன் அங்கே இங்கே ஆடத் தொடங்கினான், கீழே விழுந்தான், முள் செடியில் மாட்டிக் கொண்டான், தொடர்ந்து ஆட உடம்பு எல்லாம் அடிப்பட்டு, ரத்தக்களரியாகி, "அய்யா, அய்யா, தயவு செய்து புல்லாங்குழல் இசைப்பதை நிறுத்துங்க, இல்லேன்னா, நான் செத்து போயிடுவேன், என்னால் வலி தாங்க முடியலை, ஆடாமலும் இருக்க முடியலை, நான் திருடியதை எல்லாம் உங்களுக்கே கொடுத்து விடுகிறேன்" என்றான். அழகேசனும் அவனிடமிருந்ததை எல்லாம் வாங்கி விட்டு, அவனை ஒரு மரத்தில் கட்டி வைத்து விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பினார். அங்கே ஜமிந்தார் "அய்யோ, எல்லாமே போயிட்டதே, நான் சம்பாதித்தது எல்லாமே களவு போயிட்டதே, நான் தவறாக சம்பாதித்தது முதல் எல்லாமே போயிட்டதே, இனிமேல் நான் என்ன செய்வேன்" என்று புலம்பிக் கொண்டிருந்தார். அழகேசன் அவரை பார்த்து "அய்யா அழ வேண்டாம், திருடன் திருடியதை எல்லாம் நான் வாங்கி வந்து விட்டேன், அவனன காட்டில் கட்டி வைத்திருக்கிறேன், உடனே ஊர்க்காவலர்கல் போய் பிடியுங்க, இதோ உங்க நகைகள், பணம், சரி பாருங்க" என்றார். ஜமிந்தாருக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை, இத்தனை நாள் கொடுமைப்படுத்தியும், நேர்மையாக நடந்து கொண்ட அழகேசன் மீது மரியாதை ஏற்ப்பட்டது, தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, அழகேசனுக்கு அந்த ஊரிலேயே பங்களா ஒன்றையும், நிறைய நிலங்களையும் கொடுத்து உதவினார். அழகேசனும் தன் தாயாருடனும், அற்புத புல்லாங்குழலுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.
கிருஷ்ணதேவராயர் சில யானைகள் முன்னால் வர, பின்னால் ஒரு யானையின் மீது அமர்ந்து வீதி உலாச் சென்றார். ஒரு வீதியில் செல்லும்போது, எதிரில் வந்த இளைஞன் ஒருவன், முதலில் சென்ற யானையின் தந்தத்தைப் பிடித்துத் தள்ளினான். யானை சிறிது தூரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அரசர் தம் மந்திரியான அப்பாஜியிடம் “இந்த இளைஞன் எவ்வளவு பலசாலியாக இருக்கிறான்?” என்றார். “அரசே! கவலையில்லாமல் வளர்ந்த பிள்ளை போலும்” என்று அப்பாஜி பதிலளித்தான். மறுநாளே அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தான். பின்பு அவனுடைய வீட்டைத் தேடிச் சென்றான். இளைஞனின் அம்மாவிடம் “அம்மா! ஒரே பிள்ளை என்று மிகுந்த செல்லம் கொடுக்கிறீர்கள். இப்படியே போனால் வளர்ந்த பிறகு பொறுப்பே இல்லாமல் இருப்பான். இனிமேல் அவனுக்கு அளிக்கும் உணவில் உப்பே போடாதீர்கள். ‘சம்பாதித்து வந்தால்தான் உப்பு போடுவேன்’ என்று சொன்னால், உங்கள் பிள்ளை பொறுப்பானவனாகிவிடுவான்.” என்று அப்பாஜி கூறியதும் அவ்வாறே செய்யலானாள். சில நாள்கள் சென்ற பின்பு, இராயர் முன்பு போலவே யானைப் படையுடன் நகர்வலம் சென்றார். யானையைக் கண்டதும் அந்த இளைஞன் தந்தத்தைப் பிடித்துத் தள்ள முயன்றான். அவனால் முடியவில்லை. அதற்குள் யானை அவனைக் கீழே தள்ளிவிட்டது. “அரசே! பார்த்தீர்களா? சம்பாதிப்பது எப்படி என்ற கவலையால் இளைஞன் பலமிழந்தான். கவலையின்மையே பலத்தைத் தரும் என்பது புரிகிறதா?” என்றார் அப்பாஜி. அரசரும் ‘நன்றாகப் புரிந்தது’ என்றார்.
இயற்கை பச்சைப் பாய் விரித்து அழைக்க காலைக்கதிரவன் விளக்காக இயற்கை மகள் இருகை நீட்டி அழைக்கிறாள். டிங்டாங்... டிங்டாங்... என கடிகாரம் ஏழு முறை அடித்து ஓய துயில் கலைந்தான் ரமேஷ். எழுந்து கண்களைக்கசக்கி அறையைப் பார்த்தான். நந்தினியும், குழந்தைகளும் அங்கு இல்லை. படுக்கையை உதறி வெளியில் பால்கணியை நோக்கினான். சுற்றிலும் அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. "அம்மா பால்" என பால்காரன் ஒருபுறம் கூவினான். "கத்தரி... முருங்கை... கீரை... அம்மா" ... என காய்கறி விற்பவள் கூவினாள். கனவில் வந்த இயற்கை காட்சியை மனதில் ஒரு முறை நினைத்து உவகை கொண்டான். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான். குழந்தைகள் ஸ்ருதியும், சுவாதியும் படித்துக் கொண்டிருந்தனர். நந்தினி கொடுத்த காபியை வாங்கிக் கொண்டு செய்தித்தாளைப் புரட்டினான். "சே! வர வர மனிதத் தன்மையே செத்துப் போயிடும் போலிருக்கு" - ரமேஷ் "எதைக் கண்டு இப்படிக் காலைலயே இப்படி அலுத்துக்கிறீங்க". "இங்க பார் நந்தினி ஒரு யானை பாகனை அந்த யானை துவம்சம் செய்றதை ஒருத்தன் புகைப்படம் எடுத்து பேப்பர்ல போட்டிருக்கிறான். இதை செய்ற நேரம் அவனைக் காப்பாத்தி இருக்கலாம் அல்லவா", "மனுஷத் தன்மைனா என்னப்பா" அப்பாவியாய் கேட்டாள் மூன்றாவது படிக்கும் மூத்தமகள் ஸ்ருதி. "சொல்றேண்டா செல்லம்" என குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு, "மனுஷத் தன்மைன்னா யாராவது ஆபத்திலே உதவியில்லாம இருந்தா உதவி செய்யனும். பசின்னு யாராவது கேட்டா சோறு போடனும். மொத்தத்துல இல்லாதவங்களுக்கு உதவி செய்யனும். "ஆமா டாடி நேத்து எங்க க்ளாஸ் லில்லி மயங்கி விழுந்துட்டா டீச்சர் எங்கிட்டதான் தண்ணி வாங்கி கொடுத்தாங்க" என்று உற்சாகமாக சொன்னாள் இளையவள் ஸ்வாதி. "வெரி குட் அப்படித்தான் எல்லாருக்கும் உதவனும்". "சரி... சரி... ரெண்டு பேரும் சீக்கிரம் கிளம்புங்க" என்று குரல் கொடுத்தாள் நந்தினி. அடுத்த அரைமணி நேரம் வரை எல்லோரும் சாவி கொடுத்த இயந்திரமாக சுழலத் தொடங்கினர். "எங்க என் ஸ்கூட்டர் சாவி சீக்கிரம் கொண்டு வா", "நான் இங்க குழந்தைகள கவனிக்கிறதா உங்கள கவனிக்கிறதா நீங்களே வந்து எடுங்க தினமும் இது ஒரு வேலையாப் போச்சு. பல்லைக் கடித்துக் கொண்டு வந்து ஸ்கூட்டர் சாவியை எடுத்துக் கொண்டு அதை ஸ்டார்ட் செய்யத் தொடங்கினாள். பல முறை முயன்றும் வண்டி ஸ்டார்ட் ஆக மறுத்தது. சிறிது நேரம் நின்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு இருந்தான். அப்போது - எதிரில் ஒரு சிறுவன் மெதுவாக வந்து கொண்டிருந்தான். அவன் அழுக்கு படிந்த கந்தல் ஆடையும், மழையில் நனைந்த சணல் போல் திரிந்து கிடந்த அவன் தலைகேசமும் கையில் நெளிந்து இருந்த ஈயத்தட்டும் அவன் யாசகன் என்று கூறாதே விளங்கிற்று. "ஐயா... சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு பசிக்குது... ஏதாவது போடுங்க சாமி... " ஆமா வர்ற ஆத்திரத்துல ரெண்டு போடத்தான் போறேன். காலங்கார்த்தாலேயே உன் முன்னாடி முழிச்சிட்டு போனா விளங்குன மாதிரி தான்". "ஐயா... ரொம்ப பசிக்குதுய்யா" என்றான் கொஞ்சம் கிட்ட நெருங்கி. "விட்டா தலைமேலேயே ஏறுவ போலிருக்கே ச்சீ.. போடா" என்று அவனை தள்ள பக்கத்தில் இருந்த கதவில் பட்டு அவன் கந்தல் சட்டை மேலும் கிழிந்தது. அவன் சட்டையின் கிழிசல் அளவை ஒரு முறை வெறுமையாகப் பார்த்தான் பின் பேசாமல் போய்விட்டான். ரமேஷ் அதைக் கண்டும் காணாதது போல் இருந்துவிட்டான். "என்ன ரெடியா..." உள்நோக்கி குரல் கொடுத்தான். "இதோ வந்திட்டோம் டாடி..." குழந்தைகள் ஓடி வந்தன. ஏற்கனவே இருந்த கோபத்தில் வண்டியை தன் மனைவியாக பாவித்து ஒரு உதைவிட்டான். உடனே ஸ்டார்ட் ஆகியது. டாட்டா... மம்மி என குழந்தைகள் கை அசைக்க கிளம்பினான். டாடி எல்லோருக்கும் உதவி செய்றது தான் மனித நேயம்ன்னு சொன்னீங்க நீங்க மட்டும் ஏன் அந்த பையனுக்கு சோறு குடுக்கல... அப்ப நீங்க மனுஷன் இல்லையா... " என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாள் ஸ்வாதி. "ஷட்-அப்" என்று பொரிந்தான். ஸ்கூலில் குழந்தைகளை விட்டு விட்டு அலுவலகம் வந்து வேலையில் மூழ்கினான். சிறிது நேரத்தில் யூனியன் லீடர் வந்தார். "ரமேஷ் சார்... தீபாவளி போனஸ் இந்த வருஷம் கிடையாதுன்னு எம்.டி சொல்றாரு நீங்க கொஞ்சம் என்னன்னு கேளுங்க", "அப்படியா... சரி என்னன்னு கேட்டு நான் போனஸ் கிடைக்க ஏற்பாடு செய்றேன். நீங்க நிம்மதியாப் போங்க. நாளைக்கு நல்ல பதிலா சொல்றேன்" மாலை 5 மணிக்கு எம்.டி அறைக்குள் நுழைந்தான். "சார் ... போனஸ் ... இல்லைன்னு சொன்னீங்களாமே", "வேற என்ன மிஸ்டர் சொல்றது. போன தடவை லாபம் இரட்டிப்பு மடங்கு வந்ததால் இரண்டு பங்கு போனஸ் கொடுத்தேன். இப்ப முதலுக்கே மோசம்" என்றார். அவருடன் அரை மணி நேரம் வாதாடியும் பயனற்றுப் போகவே கவலையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். சே... போனஸ் வாங்கி கொஞ்சம் கடன் அடைக்கலாம் என்று இருந்தேனே என்று யோசனை பண்ணியபடி வரும் வேளையில்... "க்ரீச்" என சத்தம் கேட்டது அடுத்த நிமிடம் சாலையில் உருண்டான் ரமேஷ். அவன் கண் விழித்தான். இருட்டி இருந்தது தான் ஏதோ மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தான். பக்கத்தில் நந்தினியும், குழந்தைகளும், கூடவே... அவன். அவன்... அவன் ஏதோ முனகினான். "ஆமாங்க காலைல அடிச்சு வெரட்டினீங்களே அந்த பையன் தான்", "சார்... நீங்க அந்த மோட்டார் பைக்கில வந்திட்டு இருந்தீங்களா அப்படி அந்த கடை வாசல்ல திருஷ்டி பூசணிக்காய் உடைத்து வாசல்ல திருஷ்டி பூசணிக்காய் உடைத்து இருந்தாங்க. நீங்க தெரியாம வண்டிய அதில விட்டவுடனே வழுக்கிடுச்சு" என்றான் அந்த சிறுவன். அவன் வெற்று உடம்பை கைகளால் மறைத்த படி நின்றான். "நீங்க விழுந்ததைப் பார்த்துட்டு இவன் ஓடி வந்து பார்த்தப்ப உங்க தலைல இரத்தம் வழிஞ்சுகிட்டு இருந்திருக்கு. அப்புறம் தன் சட்டையை கழற்றி உங்க தலைக்கு கட்டுப் போட்டு உங்கள இங்க சேர்த்துட்டு எனக்கு வந்து சொன்னான். அப்புறம் தான் நான் வந்தேன்." என்றாள் நந்தினி. சிறுவனின் கிழிசல் சட்டையைப் போலவே தன் மனதும் கிழிந்ததை உணர்ந்தான். அப் பத்து வயது பாலகனின் குழந்தைத் தனமான பண்புகளில் தனக்கு இல்லாத மனிதப் பண்பைக் கண்டு, கண்ணீர் மல்க அவன் கையைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டான். குழந்தைகள் புரியாமல் விழித்தனர். நந்தினி மட்டும் பொருள் பொதிந்த பார்வையை அவன் மேல் நாட்டி புன்னகைத்தாள்.
கண்ணுசாமி என்னும் பெயருடைய ஒருவன் இரும்பு வியாபாரம் செய்து வந்தான். திடீரென்று ஒரு நாள் புண்ணியத்தலங்களுக்குச் செல்ல வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. கைவசம் உள்ள இரும்பை உடனடியாக விற்பனை செய்யவும் முடியலில்லை. எனவே தனது நண்பனான முத்து என்பவனிடம் சென்றான். முத்து, நான் என் குடும்பத்தாருடன் தல யாத்திரை போக நினனத்திருக்கிறேன். என்னிடம் பத்து பாரம் இரும்பு உள்ளது. அதை உன்னுடைய புறக்கடையில் போட்டு வைக்கிறேன். நான் திரும்பி வந்ததும் அதைப் பெற்றுக் கொள்கிறேன். இந்த உதவியைச் செய்வாயா?" என்று முத்துவிடம் கேட்டான் கண்ணுசாமி.. ஓ, அதற்கென்ன! தாராளமாக உன்னிடம் இருக்கும் இரும்பை என் வீட்டுக் கொல்லைப் புறத்தில் போட்டுவை. நான் என்ன அதற்குச் சோறும் தண்ணீருமா போடப் போகிறேன். நீ எப்போது வந்தாலும் திரும்ப எடுத்து கொள்ளலாம்" என்றான் முத்து. கண்ணுசாமியும் தன்னிடமிருந்த இரும்பு முழுவதையும் முத்துவின் வீட்டில் கொண்டு வந்து போட்டான். பின்னர் அவன் தலயாத்திரைக்குப் புறப்பட்டு விட்டான். கண்ணுசாமி ஊரை விட்டுப் போனதும் அவன் கொடுத்துச் சென்ற இரும்பை நல்ல விலைக்கு விற்று விட்டான் முத்து. பல மாதங்கள் கழிந்தன. கண்ணுசாமி தலயாத்திரையை ழுடித்துக் கொண்டு திரும்பி வந்தான். தன் நண்பன் முத்துவிடம் சென்று, "நண்பா, நான் உன்னிடம் ஒப்படைத்து விட்டுப் போன இரும்பை திரும்பக் கொடுக்கிறாயா?" என்று கேட்டான். "இரும்பா? அதை எலி தின்று விட்டதே! என்றான் முத்து" விதண்டாவாதமாகப் பேசுகிறவனிடம் நியாயம் பேசிப் பயனில்லை என்று உணர்ந்த கண்ணுசாமி, நேராக மரியாதை இராமனிடம் சென்றான். முத்து தன்னை ஏமாற்றி விட்டதல்லாமல் விதண்டாவாதமாகப் பேசுவதையும் தெரிவித்தான். முழுக் கதையையும் கேட்ட மரியாதை இராமன், "நீ வரும்போது அவனிடம் கோபமாகப் பேசியோ சண்டைபோட்டு விட்டோ வந்தாயா7" என்று கேட்டான். "நான் அவனிடம் ஒன்றும் பேசவில்லை நேராக உங்களிடம்தான் வருகிறேன்" என்றான் கண்ணுசாமி. "நல்லவேலை செய்தாய் ழுள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். நான் இதற்கொரு யோசனை சொல்கிறேன், அதன்படி நட, மறுநாள் அவன் என்னிடம் வந்து நிற்பான். அப்போழுது பேசிக் கொள்வோம்" என்று கூறிய மரியாதை இராமன் கண்ணுசாமியின் காதில் இரகசியமாக ஏதோ சொல்லியனுப்பினான். மறுநாள் கண்ணுசாமி முத்துவின் வீட்டுக்குச் சென்றான். அவன், இரும்பு விஷயமாகதான் மீண்டும் தன் வீட்டுக்கு வந்திருக்கிறானோ என்று நினைத்தான் முத்து. முத்து, இரும்பு விஷயமாக நான் இப்போது வரவில்லை அது பனழய இரும்புதான்; அதை இலேசில் விற்க முடியாது. விற்கப் போனாலும் வாங்குவதற்கு ஆள் கிடையாது. அது போனதே ஒரு விதத்தில் நல்லதுதான், இல்லாவிட்டால் அதை வேறு சுமந்து கொண்டு என் வீட்டில் சேர்ப்பிக்க வேண்டும்" என்றான் கண்ணுசாமி. முத்துவுக்குக் கண்ணுசாமியின் பேச்சு பரம திருப்தியாக இருந்தது.
இந்த கதை அழகானது. ஜென் குரு ஹேக்குன் அபூர்வ மலர்களில் ஒருவர். ஒரு போர்வீரன் அவரிடம் வந்தான். ஒரு சமுராய், ஒரு சிறந்த வீரன் வந்து ஹேக்குனிடம் நரகம் என்று ஏதாவது உள்ளதா ? சொர்க்கம் என்று ஏதாவது உள்ளதா ? நரகம் மற்றும் சொர்க்கம் என்று ஒன்று இருக்குமானால் அவைகளின் கதவுகள் எங்கே உள்ளன ? நான் எங்கேயிருந்து உள்ளே செல்வது ? நான் எவ்வாறு நரகத்தை தவிர்த்துவிட்டு சொர்க்கத்தை தேர்ந்தெடுப்பது ? என கேட்டான், அவன் ஒரு எளிய வீரன். வீரர்கள் எப்போதும் எளிமையானவர்கள். எளிமையாக இருக்கும் ஒரு வியாபாரியை கண்டுபிடிப்பது கடினம். ஒரு வியாபாரி எப்போதும் தந்திரமான புத்தியை உடையவன். இல்லாவிடில் அவன் ஒரு வியாபாரியாக இருக்கமுடியாது. ஒரு வீரன் எப்போதும் எளிமையானவன், இல்லாவிடில் அவன் ஒரு வீரனாக இருக்கமுடியாது. ஒரு வீரன் இரண்டு விஷயங்களை மட்டுமே அறிவான், வாழ்க்கை மற்றும் இறப்பு – அதிகமல்ல. அவனுடைய வாழ்க்கை எப்போதும் பணயத்திலேயே உள்ளது, அவன் எப்போதும் சூதாடிக்கொண்டிருக்கிறான், அவன் ஒரு எளிமையான மனிதன். அதனால்தான் வியாபாரிகள் ஒரே ஒரு மகாவீரரையோ, ஒரே ஒரு புத்தரையோ கூட உருவாக்கமுடியவில்லை. பிராமணர்களும்கூட ஒரு இராமரையோ, ஒரு புத்தரையோ, ஒரு மகாவீரரையோ உருவாக்கமுடியவில்லை. பிராமணர்களும் தந்திரசாலிகள், வேறு ஒரு வகையில் தந்திரசாலிகள். அவர்களும் ஒரு வேறுபட்ட உலகத்தின், மறு உலகத்தின் வியாபாரிகளே. அவர்கள் இந்த உலகத்தை சேராத ஒரு வியாபாரத்தை செய்கிறார்கள், ஆனால் அது மறு உலகத்தை சேர்ந்தது. அவர்களுடைய பூசாரித்தனம் ஒரு வியாபாரம். அவர்களுடைய மதம் கணிதம், கணக்கீடு. அவர்களும் தந்திரசாலிகளே, வியாபாரிகளை விட அதிக தந்திரசாலிகள். வியாபாரி அவனுடைய உலகத்திற்கு உட்பட்டவன், அவர்களுடைய தந்திரம் அதையும் கடந்து செல்கிறது. அவர்கள் எப்போதும் மறு உலகத்தைப்பற்றி, அவர்கள் மறு உலகத்தை அடையும்போது அங்கு கிடைக்கபோகும் பரிசுகள் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சடங்குகள், அவர்களுடைய முழு மனமும் மறு உலகில் அதிக சுகத்தை எப்படி பெறுவது என்பது குறித்து சிந்தித்துகொண்டிருக்கிறது. அவர்களது கவலை சுகத்தை பற்றியது. வியாபாரிகளால் முடியவில்லை. பிராமணர்கள்கூட ஒரு புத்தரை உருவாக்கமுடியவில்லை. இது அதிசயமாய் உள்ளது. 24 தீர்த்தங்கரர்கள் அனைவரும் சத்திரியர்கள், வீரர்கள். புத்தர் ஒரு சத்திரியர், இராமன் மற்றும் கிருஷ்ணர் இருவரும் சத்திரியர்கள். அவர்கள் எளிமையான மக்கள், அவர்களுடைய மனதில் எந்த தந்திரமும், எந்த கணக்கீடும் இல்லை. அவர்களுக்கு இரண்டு விஷயங்கள் மட்டுமே தெரியும் – வாழ்க்கை மற்றும் இறப்பு. இந்த எளிமையான வீரன் ஹேக்குனிடம் சொர்க்கம் எங்கே இருக்கிறது மற்றும் நரகம் எங்கே இருக்கிறது என்று கேட்பதற்காக வந்துள்ளான், அவன் எந்த கோட்பாடுகளையும் தெரிந்துகொள்வதற்காக வரவில்லை. அவன் கதவுகளை தெரிந்துகொள்ள விரும்பினான். அதனால் அவன் நரகத்தை தவிர்த்துவிட்டு சொர்க்கத்தில் நுழையலாம் ஹேக்குன் ஒரு வீரன் மட்டுமே புரிந்துகொள்ளகூடிய வகையில் பதிலளித்தார். அங்கு ஒரு பிராமணன் இருந்திருந்தால், வேதங்கள் தேவைப்பட்டிருக்கும், அவர் வேதங்கள், உபநிடதங்கள், பைபிள், குரான், ஆகியவற்றிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பார் அப்போதுதான் ஒரு பிராமணன் புரிந்துகொள்ளமுடியும். ஒரு பிராமணனுக்கு தேவையானவை அனைத்தும் வேதங்களில் உள்ளது, வேதங்களே உலகம். ஒரு பிராமணன் வார்த்தைகளில், சொற்களில் வாழ்கிறான். ஒரு வியாபாரி அங்கு இருந்திருந்தால், ஹேக்குன் கொடுத்த பதில், இந்த வீரனோடு அவர் நடந்துகொண்ட விதம், ஆகியவற்றால் இந்த விடையை புரிந்துகொண்டிருக்கமாட்டான். ஒரு வியாபாரி எப்போதும் உன்னுடைய சொர்க்கத்தின் விலை என்ன ? என்ன விலை ? நான் அதனை எப்படி அடைவது? நான் என்ன செய்யவேண்டும்? எவ்வளவு புண்ணியம் செய்திருக்கவேண்டும்? அங்குள்ள நாணயம் எது? சொர்க்கத்தை அடைய நான் என்ன செய்யவேண்டும்? என்றே கேட்டுகொண்டிருப்பான். அவன் எப்போதும் விலையை கேட்பான். நான் ஒரு அழகான கதையை கேள்விப்பட்டிருக்கிறேன். இது தொடக்கத்தில் கடவுள் உலகத்தை படைத்தபோது நடந்தது. கடவுள் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்களிடம் பத்து கட்டளைகளை பற்றி கேட்பதற்காக பூமிக்கு வந்தார். வாழ்வின் பத்து விதிமுறைகள். யூதர்கள் அந்த பத்து விதிமுறைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவிட்டார்கள் – கிறிஸ்துவர்களும் முகமதியர்களும். இந்த மதங்கள் அனைத்தும் யூதத்தன்மை உடையவை, அடிப்படை யூதம், யூதன் ஒரு சரியான வியாபாரி. இப்படி அதனை கேட்பதற்காக கடவுள் வந்தார், அவர் இந்துகளிடம் வந்து பத்து கட்டளைகளை பெற்றுகொள்ள விரும்புகிறீர்களா என கேட்டார். இந்துகள் முதல் கட்டளை என்ன ? எங்களுக்கு இந்த பத்து கட்டளைகள் என்னவென்று தெரியாது எங்களுக்கு கண்டிப்பாக ஒரு உதாரணம் தேவை என்றனர். கடவுள் உயிர்களை கொல்லக்கூடாது என கூறினார். இந்துகள் எங்களுக்கு அது கடினமாக இருக்கும். வாழ்க்கை சிக்கலானது, கொல்வதும் உள்ளடங்கியுள்ளது. அது ஒரு பெரிய பிரபஞ்ச விளையாட்டு, அதில் பிறப்பு, இறப்பு, போராட்டம், போட்டி, எல்லாம் உள்ளது. எல்லா போட்டிகளும் எடுக்கப்பட்டுவிட்டால் முழு விஷயமும் தட்டையாக துடிப்பற்றதாகிவிடும். எங்களுக்கு இந்த கட்டளைகள் பிடிக்கவில்லை. அவை முழு விளையாட்டையும் அழித்துவிடும். என கூறினர். பிறகு அவர் முகமதியர்களிடம் சென்று தவறான உறவில் ஈடுபடக்கூடாது என அவர்களுக்கும் அவர் ஒரு உதாரணம் கொடுத்தார். அவர்களும் உதாரணம் கேட்டனர். முகமதியர்கள் இது கடினமாக இருக்கும். வாழ்க்கை எல்லா அழகையும் இழந்துவிடும், குறைந்தபட்சம் நான்கு மனைவிகளாவது தேவை. நீங்கள் அதனை பலவந்தம் என அழைக்கலாம், ஆனால் இதுதான் வாழ்வைத் தரக்கூடியது, எல்லா புனிதமான மக்களும் பெற வேண்டியது. மறு உலகத்தைப்பற்றி யார் அறிவார் ? இதுதான் உலகம், அனுபவிப்பதற்காக எங்களிடம் நீங்கள் இந்த உலகத்தை அளித்துள்ளீர்கள் ஆனால் இப்போது நீங்கள் இந்த பத்து கட்டளைகளோடு வந்துள்ளீர்கள். இது முரண்பாடானது என கூறினர். கடவுள் சுற்றி சுற்றி வந்தார். பிறகு அவர் மோசஸிடம், யூதர்களின் தலைவரிடம் வந்தார். மோசஸ் உதாரணத்தைச் சிறிதும் கேட்கவில்லை, மேலும் கடவுள் பயப்பட்டார், மோசஸ் முடியாது என்று சொல்லிவிட்டால், யாரும் இல்லை, மோசஸ்தான் கடைசி நம்பிக்கை. கடவுள் மோசஸை கேட்டபோது – கடவுள் என்னிடம் பத்து கட்டளைகள் உள்ளன என்று சொன்ன நொடியில் –- மோசஸ் என்ன பதிலளித்தார் ? அவர் அவை என்ன விலை? என்று கேட்டார். இப்படித்தான் ஒரு வியாபாரி யோசிப்பான். அவன் தெரிந்துகொள்ள விரும்பும் முதல் விஷயம் விலை. கடவுள் அவை இலவசம் என கூறினார். மோசஸ் பிறகு நான் பத்தை வைத்துக்கொள்கிறேன். அவை இலவசமாக இருக்கும் பட்சத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறினார். அப்படித்தான் பத்து கட்டளைகளும் பிறந்தன. ஆனால் இந்த சமுராய் ஒரு யூதனல்ல, அவன் ஒரு வியாபாரியல்ல, அவன் ஒரு போர்வீரன். அவன் ஒரு எளிமையான கேள்வியோடு வந்துள்ளான். அவனுக்கு வேதங்களிலோ, விலையிலோ, சொல்லும் பதிலிலோ, ஆர்வமில்லை. அவன் உண்மையின் மீது ஆர்வம் கொண்டிருந்தான். மற்றும் ஹேக்குன் என்ன செய்தார் ? அவர் நீ யார் ? என கேட்டார் போர்வீரன் நான் ஒரு சமுராய் என பதிலளித்தான். ஒரு சமுராயாக இருப்பது ஜப்பானில் மிகவும் பெருமை வாய்ந்த ஒரு விஷயம். அதன் பொருள் ஒரு சிறந்த போர்வீரன், அவனுடைய வாழ்க்கையை இழப்பதற்கு ஒரு நொடிகூட தயங்கமாட்டான். அவனைப்பொறுத்தவரை, வாழ்வும் இறப்பும் வெறும் ஒரு விளையாட்டு. அவன் நான் ஒரு சமுராய், சமுராய்களின் தலைவன். அரசரும்கூட எனக்கு மரியாதை அளிக்கிறார், என கூறினான். ஹேக்குன் சிரித்துவிட்டு, நீ ஒரு சமுராய் ? நீ ஒரு பிச்சைக்காரனைப்போல இருக்கிறாய் என கூறினார். உடனே சமுராயின் பெருமை காயப்பட்டுவிட்டது, அவனுடைய ஆணவம் அடி வாங்கிவிட்டது. அவன் எதற்காக வந்தான் என்பதை அவன் மறந்துவிட்டான். அவன் அவனுடைய வாளை எடுத்து ஹேக்குனை கொல்லப்போனான். சொர்க்கத்தின் கதவைப்பற்றியும் நரகத்தின் கதவைப்பற்றியும் கேட்க இந்த குருவிடம் அவன் வந்துள்ளான் என்பதையே அவன் மறந்துவிட்டான். அப்போது ஹேக்குன் சிரித்துவிட்டு இதுதான் நரகத்தின் கதவு. இந்த வாளோடு, இந்த கோபம், இந்த ஆணவம், கதவு இங்குதான் திறக்கிறது என கூறினார். இதைத்தான் ஒரு போர்வீரன் புரிந்துகொள்ளமுடியும். உடனடியாக அவன் புரிந்துகொண்டான், இதுதான் கதவு. அவன் அவனுடைய வாளை அதன் உறைக்குள் போட்டான். அப்போது ஹேக்குன் இங்கு சொர்க்கத்தின் கதவு திறக்கிறது என கூறினார். நரகமும் சொர்க்கமும் உனக்குள் உள்ளன. இரண்டு கதவுகளும் உனக்குள் உள்ளன. நீ உணர்வற்று செயல்படும்போது அங்கு நரகத்தின் கதவு உள்ளது, நீ கவனமாகவும், உணர்வுடனும் இருக்கும்பொழுது, அங்கு சொர்க்கத்தின் கதவு உள்ளது. இந்த சமுராய்க்கு என்ன நடந்தது? ஹேக்குனை கொல்லப்போகும் அந்த சமயத்தில் அவன் உணர்வோடு இருந்தானா ? அவன் என்ன செய்யப்போகிறான் என்பதுபற்றி அவன் உணர்வோடு இருந்தானா ? அவன் எதற்காக இங்கு வந்துள்ளான் என்பதுபற்றி உணர்வோடு இருந்தானா ? எல்லா உணர்வும் மறைந்துவிட்டது. ஆணவம் ஆட்கொள்ளும்போது, நீ கவனமாக இருக்கமுடியாது. ஆணவம் ஒரு போதை, அந்த போதை உன்னை முழுமையாக உணர்வற்றவனாக்கிவிடும். நீ செயல்படுவாய் ஆனால் அந்த செயல் உனது உணர்வற்ற நிலையிலிருந்து வெளிப்படும் உன்னுடைய உணர்வு நிலையிலிருந்து வெளிப்படாது. மற்றும் உணர்வற்ற நிலையிலிருந்து எந்த செயல் வந்தாலும் அப்போதெல்லாம், நரகத்தின் கதவு திறந்துள்ளது. நீ என்ன செய்தாலும், நீ என்ன செய்கிறாய் என்ற உணர்வு உனக்கு இல்லாவிட்டால் நரகத்தின் கதவு திறந்துவிடுகிறது. திடீரென, ஹேக்குன் இதுதான் கதவு அதை நீ ஏற்கனவே திறந்துவிட்டாய் என சொன்னவுடன் உடனடியாக சமுராய் கவனமடைந்தான் – சூழ்நிலையே கண்டிப்பாக கவனத்தை உண்டாக்கியிருக்கவேண்டும். வெறுமனே கற்பனை செய்து பார். நீ போர்வீரனாக இருந்திருந்தால், சமுராயாக இருந்திருந்தால், வாளை கையில் ஏந்திகொண்டு, கொல்லப்போகிறாய். என்ன நடந்திருக்கும். ஒரு நொடி அதிகமாகியிருந்தால் ஹேக்குனின் தலை வெட்டப்பட்டிருக்கும், ஒரு நொடி அதிகமாகியிருந்தால் அது உடலிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கும். அப்போது ஹேக்குன் இதுதான் நரகத்தின் கதவு என கூறினார். இது ஒரு தத்துவார்த்தமான பதில் அல்ல. எந்த ஞானியும் தத்துவார்த்தமான முறையில் பதில் அளிப்பதில்லை, சாதாரண ஞானமடையாத மனங்களுக்கு மட்டுமே தத்துவம் இருக்கிறது. ஞானி பதிலளிக்கிறார். அப்போது அந்த பதில் வார்த்தைகளால் ஆனதல்ல. அது முழுமையானது. இந்த மனிதன் அவரை கொன்றிருக்கலாம் என்பது பொருட்டல்ல. நீ என்னை கொன்றால் நீ கவனம் பெறுவாய் என்றால், அது தகுதிவாய்ந்ததே – ஹேக்குன் விளையாட்டை விளையாடினார். ஒரு வினாடி தப்பியிருந்தாலும் அந்த மனிதன் அவரை கொன்றிருக்கலாம். ஆனால் சரியான நொடியில் ஹேக்குன் இதுதான் கதவு என கூறினார். நீ ஒருவேளை சமுராயைப்பற்றி கேள்விபடாமல் இருக்கலாம். நீ ஒரு சமுராயை கொல்லப்போவதாக வைத்துகொள்வோம், உன்னுடைய வாள் உன்னுடைய கையில் உள்ளது, அது இப்போது அவனுடைய கழுத்தை தொடப்போகிறது. அவன் உனக்கு முன்னால், பாதுகாப்பு ஏதுமின்றி, எந்த ஆயுதமும் இன்றி, நின்றுகொண்டிருக்கிறான். சமுராய்கள் ஒரு குறிப்பிட்ட சத்தத்தை வைத்திருக்கிறார்கள், ஒரு மந்திரம். அவன் ஒரே ஒரு வார்த்தையை மிகவும் சத்தமாக கூறுவான், நீ உன்னுடைய சக்தி அனைத்தையும் இழந்துவிடுவாய். நீ இறந்ததை போல, ஒரு சிலைபோல ஆகிவிடுவாய். அவன் வெறுமனே ஒருவேளை ஹே என்று கூறலாம். நீ நிள்றுவிடுவாய். உனது கை நகராது. அந்த சத்தம் எல்லாவற்றையும் கட்டுபடுத்தும் இதயத்தில் குத்தும். உன்னுடைய கை நின்றுவிடும், உன்னுடைய மனம் அதிர்ச்சி அடையும், எல்லா செயல்பாடுகளும் மறைந்துவிடும். அவன் ஆயுதம் ஏதுமின்றி இருந்தால்கூட உன்னால் ஒரு சமுராயை கொல்லமுடியாது. ஒரு சத்தம் அவனுக்கு பாதுகாப்பாகிவிடும். நீ ஒரு துப்பாக்கி வைத்திருந்தால், உன்னுடைய கைகள் நகரமுடியாது, அல்லது நீ குறியை தவறவிடுவாய். அது வெறும் ஒரு சத்தம், ஒரு குறிப்பிட்ட முறையில் எழுப்பபடவேண்டிய ஒரு சத்தம், ஆனால் அது உனது இதயத்திற்குள் ஆழமாக சென்று உன்னுடைய செயல்பாட்டை முழுமையாக மாற்றிவிடும், உன்னுடைய செயல்பாட்டின் வழக்கத்தை மாற்றிவிடும். ஹேக்குன் இதுதான் கதவு என கூறியபோது சமுராய் சிலைபோல கண்டிப்பாக நின்றிருக்கவேண்டும். அந்த சிலைபோன்ற நிலையில், எல்லா செயல்களும் உறையும்போது, நீ கவனமடைகிறாய். ஏதாவது செயல் தேவை . . . இல்லாவிடில் உனது உணர்வற்ற தன்மை உடைந்து நீ உணர்வு பெறுவாய். ஒரு மனிதன் ஆறு மணிநேரம் எதுவும் செய்யாமல் அமர்ந்திருந்தால் அவன் ஞானடைந்துவிடுவான் என ஜென் கூறுகிறது. வெறும் ஆறு மணிநேரம் . . .ஆனால் ஆறுமணிநேரம் உண்மையிலேயே மிக அதிகம். நான் ஆறு நிமிடங்கள் போதும் என கூறுகிறேன். நீ முற்றிலுமாக எந்த செயல்பாடும் இன்றி இருக்கமுடியுமானால் ஆறு நொடிகள் கூட போதும். நீ ஏதும் செய்யாமல் இருக்கும்போது, நீ உணர்வற்று இருக்கமுடியாது, நீ ஏதும்செய்யாமல் இருக்கும்போது உன்னுடைய முழு சக்தியும் உணர்வுதன்மை அடைகிறது. ஒரு பிரம்மாண்ட வெடித்தல் நிகழ்கிறது.
ஒரு குளக்கரை. கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. "நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்" என்று. "நமக்கேன்" என்று இராமல் அதன்முன் வந்தது. "என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்?" என்றது. "நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை" என்றது கொக்கு. "மனசு சரி இல்லையா… ஏன்?" என்றது மீன். "அதைஏன் கேட்கிறாய்…" என்று பிகு பண்ணியது கொக்கு. "பரவாயில்லை சொல்லுங்களேன்", "சொன்னால் உனக்குத் திக் என்றாகும்." மீனுக்குப் பரபரத்தது. "சொன்னால்தானே தெரியும்", "வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்…" என்று இழுத்தது கொக்கு. "வரட்டுமே", "என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்.", "அய்யய்யோ!" உடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது. சில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின. அதுமட்டுமா! ஒட்டுமொத்தமாக "நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்" என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன. "நான் என்ன செய்வேன்? என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம். அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்" என்றது கொக்கு மிகவும் இறக்கம் கசிய. மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின. "அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்" என்றன ஒருமித்தக் குரலில். கொக்குக்கும் கசக்குமா காரியம்? நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது. குளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது. "ஓ சீவகாகுண்யனே! என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்" என்று கெஞ்சியது. வருங்காலத்தில் எதுவும் வழிய வரும் - என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது. பறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு. அதற்க்கு "பக்"கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் "சட்"டென்று புரிந்துவிட்டது. தன் நிலையம் அப்படித்தானா? உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது. "கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்" என்றது நண்டு. "அப்படியா? இன்னும் இருக்கிறதா நண்டுகள்?", "எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன.", "ஆஹா! அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்" என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது. குளத்துக்கு நேராக வரும்போது அதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது. அபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன. வஞ்சமனத்தானின் உபாய மும் அபயாமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது.
ஒரு மலைப் பிரதேசத்தில் மலை உச்சியில் ஒர் இனத்தாரும், அடிவாரத்தில் இன்னொரு இனத்தாரும் வாழ்ந்து வந்தார்கள். இரு இனத்தாருக்கும் எப்போதும் பகை. ஒரு முறை உயரத்தில் இருந்தவர்கள் அடிவாரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைக் கடத்தி விட்டார்கள். சமூகத்திலிருந்த சில பெரியவர்கள், மலைமேல் இருந்த சமூகத்தினரிடம் சமாதானமாகப் போய் பேசினால் குழந்தையை மீட்டு வந்து விட சாத்தியம் இருப்பதாக ஊரில் உள்ள இளைஞர்களிடம் அறிவுரை கூறினர். இளைஞர்கள் சிலர் உடனே முன்வந்தார்கள். அவர்கள் கடினமான வேலைகள் செய்து பழகியவர்கள். எந்தச் செயலை எடுத்தாலும் அதை விடாமுயற்சியுடன் முடிக்கும் மனப்போக்கைக் கொண்டவர்கள். ஊர் பெரியவர்களும், இந்தச் செயலை முடிக்க இவர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள். இளைஞர்களும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள். அந்த மலையின் சில பகுதிகள் மிகவும் செங்குத்தானவை. அந்த இளைஞர்களால் அப்படி ஒரு பகுதியை ஏறிக் கடக்க முடியவில்லை. விடாமுயற்சியுடன் அப்பகுதியைக் கடக்க பலமணி நேரமாக பல வழிகளில் முயன்று கொண்டிருந்தனர். களைத்துப் போனால் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் முயற்சித்தனர். அப்போது தம் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மேலேயிருந்து கடத்தப்பட்ட குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வருவதைப் பார்த்தார்கள். அவள் அருகில் வந்தவுடன் "நாங்கள் ஏற சிரமப்பட்ட மலையை நீ ஏறிச் சென்றுவிட்டாயே! எப்படி?" என்று வியப்புடன் கேட்டார்கள். அவள் இடுப்பிலிருந்த குழந்தையைக் காட்டி "இது உங்கள் குழந்தை இல்லை. என் குழந்தை. அதுதான் வித்தியாசம்" என்று பதில் சொன்னாள்.
அந்த இளைஞன் சங்கரனைப் பார்க்கிற போதெல்லாம் புதிராகத் தெரிந்தான் ராமசாமிக்கு. அவனது உள்மனசைக் கிளறி உண்மையை உதடுகளுக்கு வரவழைக்க வேண்டும் என வதைக்கிற சந்தேகச் சித்ரவதை. நல்ல உயரம், ஓரளவு நிறம் வளையாத பனைமரம் போல உறுதியுடன் சீரான தேகம். எந்த நேரமும் ஏதோ தேடலுடனான பார்வை. எதையோ பறிகொடுத்தவன் போல இயல்பின்றி இறுக்கமான முகம். வார்த்தை கொடுத்தாலன்றி வலிய வராது விலகியே செல்கிற சுபாவம். இது ஒரு பக்கமிருக்க, இதையெல்லாம் மிஞ்சுவது போலவும், அவனைப் பற்றிய அனுமானம் அடிவயிற்றைக் கலக்கி அஜீரணமாவது போலவும் "அந்தப் பயல் சங்கரன் எங்க ஊரு தான். பழக்கமில்ல; ஆனா நல்லாத் தெரியும். தேவையில்லாத பிரச்சினைகள்ல மூக்கை நுழைச்சு வீண் விவகாரம் பண்ணுவான். ஊர்ப்பிரச்சினை அது இதுன்னு கண்டவங்க கூட விவகாரம் பண்ற சண்டியர். எதுக்கும் அவன் மேல ஒரு கண்வையுங்க" என நேற்று சங்கரனின் சொந்த ஊரிலிருந்து இந்த அலுவலகத்தில் தங்குவதற்காக வந்திருக்கிற அரசு ஊழியர் தேவதாஸ் சொல்லியிருந்த வார்த்தைகள் நெற்றியடியாய் கிறுகிறுக்கச் செய்கிறது. "அந்தப் பையன் ராத்திரி வரவும், "நீங்க இங்க தங்கினது; போதுமப்பா. இனி வேற எடம் பாரு" ன்னுச் சொல்லிற வேண்டியதுதா" என்று தீர்மானம் பண்ணியவாறு அலுவலகத்தில் அங்கிட்டும் இங்கிட்டுமாக நடந்து கொண்டிருந்தார் அறுபது வயசு ராமசாமி. இந்தப் பொது அலுவலகத்தில் தங்கிக் கொள்வதற்காக தனது சொந்த ஊரிலிருந்து இந்த அலுவலகத்திற்கு நெருக்கமான தொடர்புடைய ஒருவரிடமிருந்து வாங்கி வந்திருந்த சிபாரிசுக் கடிதத்தைத் தவிர, சங்கரனுக்கும் இந்த அலுவலகத்திற்கும் வேறெந்த சம்பந்தமும் இல்லை. அவன் இங்கு வந்து தங்க ஆரம்பித்து பத்து நாட்களுக்கும் மேல் ஆகி விட்டிருந்தது தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து முடித்து, ஆறு மணிக்கெல்லாம் வெளியில் கிளம்பிப் போகிற அவன், இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் திரும்ப வருகிறான். இடைப்பட்ட நேரத்தில் ஒருநாள் கூட வந்தது இல்லை. இரவு வந்ததும் படுப்பதும் இல்லை. ஏதேதோ சிந்தித்த வண்ணமிருக்கிறவன், நடுநிசிக்கு மேல் உறங்குவதுண்டு. "இங்கு வந்த முதல்நாளே சென்னைக்கு வந்த நோக்கம், இங்கு பல தினங்கள் தங்கப் போவதின் அவசியம் பற்றித்துருவி விசாரிக்காமல் விட்டது தப்போ?" என்று தோன்றியது ராமசாமிக்கு. இந்த அலுவலகத்திற்கு அவன் இந்த கோலம் அப்படி. அந்தக் கணத்தில் அவனுக்கு உதவ வேண்டுமெனத்தான் தோன்றியதேயன்றி துருவி விசாரிக்க மனமில்லை. அன்று - காலை ஏழரை மணி. பெருத்த இரைச்சலுடன் பேய்மழை குமிறிக் கொட்டிக் கொண்டிருக்க, வேகமாய் வந்த ஆட்டோ ஒன்று அலுவலக வாசலில் நின்றது. முகமெங்கும் மழை நீர் சொட்டச் சொட்ட அந்த ஆட்டோவுக்குள்ளிருந்து முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் சங்கரன் சிறிய தோள்பை ஒன்றைச் சுமந்தபடி அலுவலகத்திற்குள் வந்து நின்றான். ராமசாமிக்கு ஒன்றும் விளங்கவில்லை. "யாரப்பா நீ? என்ன விஷயம்?" எனக்கேட்டார். நெற்றியில் வழிந்தோடிய மழை நீரை ஆள் காட்டி விரலால் நீவி வழித்தபடி, " நா கூடலூருக்குப் பக்கத்திலிருந்து வாறேன். மெட்ராசுக்கு வேல விஷயமா வந்திருக்கேன். சில தினங்கள் இந்த ஆபிசுல தங்கணும்." என்றான், பின் தோள் பையைத் திறந்து பளுப்பு நிறக்கவர் ஒன்றை எடுத்தவன் "இதோ சிபாரிசுக் கடிதம்" என்றபடி அவரிடம் நீட்டினான். வானவிலை மனசில் உறுத்த, சேரிதம்பி.. ரெண்டாவது மாடியில போயித்தங்கிக்க" என்று அனுமதித்தார். சங்கரனின் மழை நீரால் கசங்கிய முகத்தில் மலர்ச்சி. பிளாட் பாரவாசிகள் பெருத்த நகரில் புகழிடம் கிடைத்தப் பூரிப்பு. மறு நொடியே மாடிப்படிகளில் தாவி ஏறியவாறு மேலே போனான். அப்புறம் சிறிது நேரத்திலேயே குளித்து முடித்து, உடை மாற்றி மழைத்தூறலில் நனைந்தவாறே வெளியில் போனான். "வந்ததும் வராததுமா இந்தத் தூரல்ல நனைஞ்சிட்டுப் போறளவுக்கு அப்படி அவனுக்கு என்ன தான் தலைபோற அவசரம்னு தெரியல" என்று முழித்தார் ராமசாமி. நாட்டு நடப்பு அவரது உள்மனசை உலுக்குகிறது. அவனைப் பரிவுடன் தங்கிக் கொள்ள அனுமதித்தது, அவசரப் புத்தியோ?" என அங்கலாய்ப்பு, "நாட்ல எங்க பாத்தாலும் குண்டு வெடிப்புக் கதியா இருக்குது. முன்பின் தெரியாதவங்களயெல்லாம் இப்டி அனுதாபப்பட்டு தங்கிக்க அனுமதிச்சுடறோமே... ஏதாவது ஏடாகூடமாயிட்ட எனக் குழம்பிப் போயிருந்தவருக்கு, அவன் வந்த முதல் நாளே தூக்கம் துப்புரவாக இல்லை. விரித்திருந்த "பெட்ஷ"ட்"ட்டில் அங்கிட்டும் இங்கிட்டுமாக புரண்டு புரண்டு படுத்தார். தலைக்கு மேல் சுற்றுகிற காற்றாடியைப் போலவே, மூளைக்குள் ஆற்றாமை ராட்டினமாய் சுற்றியது. பின், "சரி... விடியட்டும் அந்தப் பையன்கிட்டத் தீரமா விசாரிச்சுடலாம்" என தனக்குள் சமாதானம் பண்ணிக் கொண்ட பிறகே உறக்கம் வந்திருந்தது. மறுநாள் காலை சங்கரன் குளிப்பதற்காக சோப்பு டப்பா, டவல் சகிதமாய் கீழ்தளத்திற்கு வந்த போது, திடுமென்று விழித்துக் கொண்டபடி எழுந்து உட்கார்ந்தார். அவனைப் பற்றிய முழு விபரங்களையும் அலசிக் கேட்பதற்காக நாவில் ஆவல். கடுந்தவம் போலான விபரம் அறிவதற்கான இரவு விழிப்பினால் தூக்கக் கலக்கத்தில் இமைச் சொக்குதலையும் மீறி அகலக் கண் விரித்து அவனைப் பார்த்தார். விசாரிக்க இதயம் எத்தணிக்கிறது. ஆனால், உள்ளுக்குள் தயக்கம். சில மாதங்களுக்கு முன்பு இந்த அலுவலகத்தில் தங்கியிருந்த ஒருவரை விசாரிக்க, அவன் வெடித்து விட்டான். "நாந்தான் இந்த சங்க அலுவலகத்து முக்கியமான ஆளுகிட்டேயிருந்து கடிதம் வாங்கி வந்திருக்கேனே! அப்புறம் எதுக்கு, ஏதோ திருடனக் கண்டது கணக்கா இப்படித் துருவித் துருவி விசாரிக்கிறீங்க?" என்று. ராமசாமிக்கும் கோபம் வந்துவிட்டது. "நாங் கேக்காமெ வேறெந்தப் பய கேப்பான்? இங்க நாந்தான பொறுப்பாளி?" என்று முதியவரானாலும் முறுக்கி நின்று கேட்டார். பக்கத்திலிருந்தவர்கள் சமாதானம் பண்ணிவிட்டிருந்தார்கள். - அந்தச் சம்பவம் மனசில் சலனமிட, "அந்த ஆளப் போல சங்கரணும் கோவிச்சிட்டா? தர்மசங்கிடமாயிருமே!" என்றெண்ணிப் பேசாமலிருந்து விட்டார். ஆனாலும், சங்கரன் மீதான சந்தேக மன அரிப்பு மட்டும் சன்னங்கூட மட்டுப்படாதிருந்தது. ஓயாது உள்ளுக்குள் புலுங்கினார். அவன் மீது தினமும் சந்தேக வலை பின்னியபடியே இருந்தது அவரது பார்வை. "முன்னூறு மைல்களுக்கப்பால் இந்தப் பெரிய நகரத்துல வந்து என்னத்தப் பண்ணப் போறானோ?" துவம்சம் செய்கிற புலப்படாத புதிர்க் கேள்விகள். "உள்ளூர் பயல்கள் படிச்சிட்டு ஆயிரமாயிரமா வீதியில அலையுறப்போ, எதுக்கு இப்டி இங்க வந்து அழுக்குச் சட்டை, வறண்ட தலையுமா அலையணும்? என்னதான் படிச்சவனாயிருந்தாலும் அவ்வளவு சுலபமா வேல கெடைச்சிருமா என்ன? இந்தப் பட்டிக்காட்டானுக்கு யார் வேல தருவாங்க?" புழுதியும், புகைச்சலுமாய் நெஞ்சு நிம்மதியின்றி அற்றலைந்து கொண்டிருந்தது. "சங்கரன் வரவும் இனி இந்த ஆபீஸ்ல தங்க வேணாம்... வேற ஏதாவது எடம் பாத்துத் தங்கிக்கோனு தறாராச் சொல்லிறணும்" என்று மனசுக்குள் அசை போட்டபடி அவனது வருகைக்காக அவன் தங்கியிருக்கிற இரண்டாவது மாடியில் அவனை எதிர்பார்த்து, மரப்பெஞ்சில் பத்திரிகை ஒன்றைப் புரட்டியபடி உட்கார்ந்திருந்த ராமசாமி. அந்த அலுவலகத்துக்குக் கீழ் வீதியில் திடீரென மனிதக் குரல்களின் மல்லுக்கட்டுகிற சலசலப்பு ஓசை செவிகளில் வந்தறைய, எதுவும் விளங்காது மாடிப்படியிறங்கி அப்படியே கீழே வந்து வாசலில் நின்று பார்த்தார். அலுவலகத்தின் முன்பிருக்கிற சுவரின் ஓரம் பெரிய கும்பல் நின்றிருக்க, அவரும் அந்தக் கும்பலுடன் வந்து நின்று கொண்டார். அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆபாச சினிமா போஸ்டர் ஒட்டுகிற ஆசாமி ஒருத்தன், எதிரே உள்ள சுவரில் அந்தப் போஸ்டரை ஒட்டப் போக ஆயத்தப்படுவதும், சங்கரன், "டேய்... ஒனக்கெல்லாம் கொஞ்சமாவது அறிவிருக்குதா? நீ மனுஷன்தானா? பார்டா நல்ல. எதிர்த்தாப்ல இருக்குறது ஒரு பொது அலுவலகம். இந்த மாநிலம் பூராவிலிருந்தும் அந்தச் சங்கத்தச் சேர்ந்த பெண் ஊழியருங்க அடிக்கடி வந்து போறாங்க. அப்டி இருக்கையில், இந்த ஆபீஸ் முன்னால - பல குடும்பங்க பொழைக்கிற இந்த எடத்துல வந்து ஆபாச சினிமா போஸ்டர் ஒட்றியே" என்று அதிரும் குரலில் கூறியவாறு அவனை ஆபாச போஸ்டர் ஒட்ட விடாது இடை மறித்து நிற்பதும் தெரிகிறது. அந்த ஆள், "நா போஸ்டர் ஒட்டாமப் போக மாட்டேன். நீ என்னடா பண்ணுவ?" என்று சங்கரனை முறைத்து எகிற, "நீ ஒட்றதுக்கு நா விடவேமாட்டேன். அதனால என்ன எதிர் விளைவு வந்தாலும் சரித்தான்" கூறிக் கொண்டே மீண்டும் அவனை சுவரை நெருங்க விடாது மறித்து நிற்கிறான், சங்கரன். இப்படியாக இருவருக்குமிடையில் காரசாரமான வாக்குவாதம்! போஸ்டர் ஒட்டப் போவதும்; ஒட்ட விடாததுமாய் அவரவர் குறிக்கோளில் எள்ளளவும் இறங்கி வராத உடும்பின் உறுதி. இறுதியில், "என்ன எதிர் விளைவு வந்தாலும் சரித்தான்" என்ற சங்கரனின் வீர்யமான துணிச்சலில், ஆபாச போஸ்டர்காரனின் அற்ப முயற்சி அப்பளமாய் நொறுங்கிப் போனது. அவன் மீண்டும் பசை வாளியையும், போஸ்டரையும் சைக்கிளில் வைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகன்றான். கும்பலும் கலையத் துவங்கியது. நடந்தவற்றையெல்லாம் நங்கூரப் பார்வையால் ஆழ்ந்து விழுங்கி நெகிழ்ந்து போனார் ராமசாமி. அவ்வளவு சீக்கிரமாய் மீள முடியாத ஆச்சர்யம். "நமக்கேன் வம்பு?" என இந்தத் தெரு வாசிகளே ஆபாசப் போஸ்டரை அனுசரித்துப் போயிருக்க, நூற்றுக்கணக்கான மைல்களுக்கப்பால் இருந்து வந்த சங்கரன், அதை மறுதலித்து மல்லுக்கு நிற்கிற தைரியம் அவரை நெஞ்சுருகச் செய்தது. வேகமாய் அவனுக்கு அருகில் போனவர், அவனைப் பற்றிய கலங்கலான எண்ணத்தைக் கழுவித் துடைத்தபடியும் நெஞ்செல்லாம் நிம்மதிவாசம் மணக்கவுமாய், அவனது கைகளை இருகப் பற்றினார். "என்னப்பா சங்கரா? பிரச்சினை முடிஞ்சதா? ஆபாசப் போஸ்டர்காரன் திரும்பிப் போயிட்டான் போல. சங்கரன், ரியலி யூ ஆர் அவுட் ஸ்டாண்டிங் யூத் ஆஃப் திஸ் கன்ட்ரி" என்றவர். "வா நம்ப ஆபீஸ்ல தங்கிக்கிறலாம். நான் அனுமதி வாங்கித் தாறேன்" என்றவாறு அவனை அரவணைத்தபடி அலுவலகம் நோக்கி நகர்ந்தார். "இதைத்தான் ஒங்க ஊர்ல சண்டியர்த்தனம்னு சொல்றாங்களா? இது மட்டுமில்ல தம்பி இதே ரோட்ல கேடிகளோட மாமூல் வசூல் அது இதுன்னு நிறையக் கோளாறு இருக்குது. நிறையக் கோளாறு இருக்குது. ஒன்னப் போல இளைஞர்களாலதான் அதுக்கெல்லாம் ஒரு விடிவு வரும்" - சொல்லிக் கொண்டே அவனுடன் அலுவலகத்திற்குள் நுழைந்த ராமசாமியின் கண்களில் சங்கரனைப் பற்றி புகார் கூறிய அரசு ஊழியர் தேவதாஸ்! வெட்கிக் குனிந்திருந்த அந்த ஆள் முகத்தில் உயிரில்லை.
விஜய நகர மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி என்று ஒரு மந்திரி இருந்தார். அவர் இதற்கு முன் கிருஷ்ணதேவராயருக்குக் கப்பம் கட்டும் ஒரு குறு நில மன்னரிடம் மந்திரியாக இருந்தார். அந்த மன்னர் ஏதோ காரணத்தால் வரிசையாக சில ஆண்டுகள் கப்பம் கட்ட இயலவில்லை. கிருஷ்ண தேவராயரின் கோபத்துக்கு அஞ்சினார். அவர் சர்வ சாதாரணமாக சம்பந்தப்பட்ட மன்னரை அழைத்து அவரைத் தனிமையில் வைத்து பிரம்பாலேயே அடிப்பார், பிறகு புண்மேல் உப்பு தடவச் செய்வார். அப்பாஜி அம்மன்னனை அழைத்துக் கொண்டு கிருஷ்ண தேவராயரைப் பார்க்க வந்தார். ஊருக்கு வெளியில் ஒரு சத்திரத்தில் மன்னனைத் தங்க வைத்தார். தான் தகவல் தெரிவிக்கும் வரை மன்னன் கிருஷ்ண தேவராயரின் முன்னால் வரக் கூடது என்றுக் கூறி விட்டு அவர் மட்டும் சென்று கிருஷ்ண தேவராயரை சென்று பார்த்தார். கிருஷ்ண தேவராயரும் அவரை வரவேற்று தன்னுடன் வைத்துக் கொண்டார். சில நாட்கள் கழிந்தன.கிருஷ்ண தேவராயரும் அப்பாஜியும் விஜய நகர சந்தை வீதியில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கிருஷ்ண தேவராயர் அப்பாஜியின் முகத்தைப் பார்க்காமல் அவரிடம் “ஆமாம், உங்கள் மன்னர் எங்கே? அவரை நான் பார்க்க வேண்டுமே” என்றார்.அப்பாஜியும் உரியன செய்வதாக வாக்களித்தார்.பிறகு தன் மன்னனிடம் ரகசியத் தூதனுப்பி தன் சொந்த நாடுக்கு உடனே விரைந்துச் செல்லுமாறுக் கூறினார். மன்னரும் ஓடி விட்டார். சில நாட்கள் கழித்து கிருஷ்ண தேவராயர் அப்பாஜியிடம் அவர் மன்னன் இன்னும் வராததற்கானக் காரணம் கேட்டார். அப்பாஜீ அவரிடம் நடந்ததைக் கூறினார்.கிருஷ்ண தேவராயர் ஆச்சரியத்துடன் அவரிடம் “நீங்கள் செய்தது உங்கள் மன்னனைக் காப்பாற்றி விட்டது. அவருக்குத் தக்கத் தண்டனை கொடுக்கவே எண்ணியிருந்தேன். ஆனால் இதை எப்படி உணர்ந்துக் கொண்டீர்கள்?” என்று கேட்டார்.அப்போது அப்பாஜீ “மகாராஜா, நீங்கள் என் மன்னனைப் பற்றிப் பேசும் போது உங்கள் பார்வைப் போன திசையைக் கவனித்தேன். அங்கு ஒரு கசாப்புக் கடையில் ஆடுகள் தோலுறிக்கப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்தவுடனேயே உங்களுக்கு எம் மன்னன் ஞாபகம் வந்தது. ஆகவே இது நல்லதுக்கல்ல என்று நான் உணர்ந்துக் கொண்டேன்” என்றார். அதன் பிறகு அப்பாஜி மகராஜாவிடம் மந்திரியாக இருந்தார். அது வேறு கதை, சோக முடிவுடன். அரசர்களுடன் நெருங்கி பழகுவது எப்போதுமே கத்திமுனையில் நடப்பது போலத்தான்.
இயற்கை வளம் நிறைந்த மலை பறம்பு மலை. அந்த மலையைச் சூழ்ந்து அழகான முந்நூறு ஊர்கள் இருந்தன. பறம்பு நாடு என்று அழைத்தனர். பறம்பு நாட்டைப் பாரி என்ற அரசர் ஆண்டு வந்தார். தமிழ் மீது பேரன்பு கொண்டிருந்தார் அவர். புலவர்களை மதித்துப் போற்றினார். தன்னை நாடி வந்தவர்களுக்கு இல்லை என்னாது வாரி வழங்கினார். வள்ளல் பாரி என்று அவரை எல்லோரும் புகழ்ந்தார்கள். அவர் புகழ் உலகெங்கும் பரவியது. பெரும் புலவர் கபிலர் அவரின் நெருங்கிய நண்பராக விளங்கினார். அவருடைய அரசவையில் புலவர்கள் நிறைந்து இருந்தார்கள். அவரைப் புகழ்ந்து பாடுவதைப் புலவர்கள் பெருமையாகக் கருதினார்கள். வழக்கம் போல அரசவை கூடியிருந்தது. அரியணையில் அமர்ந்து இருந்தார் பாரி. புலவர்கள் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். செல்வம் மிகுந்தவர்களைப் போலப் புலவர்கள் காட்சி தந்தனர். புலவர் எழிலனார் எழுந்தார். அரசர் பெருமான் வாழ்க! அவரைப் போன்று வாரி வழங்கும் வள்ளல் யார் இருக்கிறார்கள்? அவர் வள்ளன்மையால் இரவலர்களே இந்த நாட்டில் இல்லை! என்று புகழ்ந்தார். அடுத்ததாகப் புலவர் திண்ணனார் எழுந்தார். புலவர் எழிலனார் சொன்னது முக்காலத்திற்கும் பொருந்தும். வாரி வழங்கும் வள்ளல் என்றாலே அது பாரி தான். அவரைப் போன்று எந்த அரசரும் கடந்த காலத்தில் இருந்தது இல்லை. நிகழ் காலத்திலும் இல்லை. வரும் எதிர் காலத்திலும் இருக்கப் போவது இல்லை . இது உறுதி என்றார். பயன் நோக்காமல் வாரி வழங்கும் வள்ளல் பாரி ஒருவர் தான். பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் விறலியர் வந்தால் போதும். தம் நாட்டையே பரிசாக நல்குவார். அது மட்டும் அல்ல. தம் உயிரையே கேட்டாலும் மகிழ்ச்சியுடன் தருவார். பழங்கள் நிறைந்த மரத்தைப் பறவைகள் தேடி வரும். அதே போலப் புலவர்கள் பாரியை நாடி வந்த வண்ணம் உள்ளார்கள் என்று புகழ்ந்தார் நன்னனார். அடுத்ததாகப் பெரும் புலவர் கபிலர் எழுந்தார். எப்பொழுதும் கருத்துகளில் மோதும் புலவர்கள் நீங்கள். என்ன வியப்பு! வள்ளல் பாரியைப் புகழ்வதில் ஒன்று பட்டு இருக்கிறீர்கள். புலவர்களிடம் பொது நோக்கு வேண்டாமா? பயன் கருதாமல் வாரி வழங்குபவர் வள்ளல் பாரி மட்டும் தானா? இன்னொருவரும் இருக்கின்றாரே. ஏன் நீங்கள் அவரை மறந்து விட்டீர்கள்? உங்களில் யாரும் அவரைப் புகழ வில்லையே. ஏன்? என்று கேட்டார். பாரியை இகழ்ந்து கபிலர் பேசுகிறாரே என்று புலவர்கள் திகைப்பு அடைந்தனர். கபிலரே! என்ன பேசுகின்றீர்? முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன்னாடு. முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர். இவ்வாறு பாரியைப் புகழ்ந்து பாடியவர் நீங்கள் தானே. ஆனால் இப்பொழுதோ பாரியை இகழ்ந்து பேசுகிறீர். இது முறையா? அவரைப் போன்று வாரி வழங்கும் வள்ளல் யார் இருக்கிறார்கள் என்றார் எழிலனார். பாரியின் அருள் உள்ளத்தை எல்லோரும் அறிவார்கள். அவரைப் போலவே வாரி வழங்க முடியுடை மூவேந்தர்களும் முயன்றனர். அவர்களால் வெற்றி பெற முடிய வில்லை. வள்ளல் என்று சொன்னாலே அது பாரியைத் தான் குறிக்கும். இதை இந்த உலகமே அறியும். கபிலரே! பாரியைப் போன்றே கைம்மாறு கருதாது உதவுபவர் இன்னொருவர் இருக்கிறாரா? யார் அவர்? பெயரைச் சொல்லும் என்று கோபத்துடன் கேட்டார் திண்ணனார். பெரும் புலவர் கபிலரே! வள்ளல் பாரியின் நெருங்கிய நண்பர் நீங்கள். அவரது வள்ளன்மையை நன்கு அறிந்தவர். பறம்பு மலைக்கு வந்து யாரும் பரிசில் பெறாமல் சென்றது இல்லை. கைம்மாறு கருதாமல் வாரி வழங்கும் வள்ளல் பாரி ஒருவர் தான். இன்னொருவர் இருக்கவே இயலாது. அப்படி இருந்தால் சொல்லுங்கள் என்றார் நன்னனார். கபிலர் எழுந்தார். புலவர்களே! வள்ளல் பாரியிடம் நீங்கள் வைத்திருக்கும் பெருமதிப்பைக் கண்டு மகிழ்கிறேன். பாரியைப் போன்றே வாரி வழங்கும் வள்ளல் இன்னொருவர் இருக்கிறார். அவரை உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் அனைவரும் பாரி ஒருவரையே புகழ்ந்து பாடுகிறீர்கள். இன்னொருவரை மறந்து விட்டீர்கள் என்றார் அவர். கபிலரே! புதிர் போடாதீர்கள். பாரியைப் போன்றே வாரி வழங்கும் இன்னொரு வள்ளல் யார்? அவர் பெயரைச் சொல்லுங்கள என்று கேட்டார் எழிலனார். புலவர்களே! பாரி போன்றே மாரியும் கைம்மாறு கருதுவது இல்லை. மழை பொழிந்து இந்த உலகைக் காப்பாற்றுகிறது. மாரி மழை பொழிய வில்லை. பிறகு இந்த உலகின் நிலை என்ன ஆகும்? நீங்கள் மாரியை மறந்து விட்டீர்கள். வாரி வழங்கும் வள்ளல் என்று பாரியையே புகழ்ந்து பாடுகிறீர்கள். இது தகுமா? அதனால் தான் இப்படிக் கேட்டேன் ! என்றார் கபிலர். இந்த விளக்கத்தைக் கேட்ட புலவர்கள் மகிழ்ந்தனர். கபிலரே! வள்ளல் பாரிக்கு இணையானவர் யாரும் இந்த நிலவுலகத்தில் இல்லை. கைம்மாறு கருதாமல் மழை பொழிந்து உலகத்தைக் காக்கிறது. மாரி. அந்த மாரி தான் அவருக்கு ஒப்பாகும். மாரி போன்றவர் பாரி எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர். உங்கள் புலமைக்கு என் பாராட்டுகள் என்றார் நன்னனார். கபிலரே! உம்மைப் பெரும் புலவர் என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். அது உண்மை தான் என்றார் எழிலனார். புலவர்களுக்கு இடையே நடந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார். பார். அவர் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது. அரச உடை அணிந்து பெருமிதமாகக் காட்சி அளித்தார் பாரி. அரண்மனையில் உலாவிக் கொண்டிருந்தார். தேரோட்டி அங்கு வந்தான். அரசே! வாழ்க! நீதி நெறி தவறாத மன்னவ வாழ்க! குடிமக்களைக் காக்கும் கோவே வாழ்க! என்று பணிவாக வணங்கினான். தேரோட்டியே! உன் வருகைக்காகத் தான் காத்திருந்தேன். நம் நாட்டின் மலை வளம் காண விரும்புகிறேன். இப்பொழுதே புறப்பட வேண்டும் என்றார் பாரி. அரசே! அரண்மனை வாயிலில் தேர் நிற்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் புறப்படலாம் என்றார் அவர். தேரோட்டி முன்னே செல்லப் பாரி பின்னால் வந்தார். அரண்மனை வாயிலில் அலங்கரிக்கப் படட அழகான தேர் இருந்தது. அதில் வலிமையான குதிரைகள் பூட்டப் பட்டு இருந்தன. அரசரும் பெருமிதத்துடன் தேரில் ஏறி அமர்ந்தார். சூழ்ந்து நின்ற வீரர்களைப் பார்த்தார் அவர். நான்மலை வளம் காணச் செல்கிறேன். நீங்கள் யாரும் என்னுடன் வர வேண்டாம். நீங்கள் வந்தால் அங்கே பெரும் ஆரவாரம் எழும். நான் காண விரும்பும் இனிய சூழல் கெடும். என்றார். வீரத் தலைவன் அரசரைப் பணிவாக வணங்கினான். அரசே! உங்கள் கட்டளைப் படி நடப்போம் என்றான். தேரோட்டி! தேரைச் செலுத்து என்றார் அரசர் பாரி. தேர் வேகமாகச் செல்லத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தலை நகரம் அவர்கள் கண்ணுக்கு மறைந்தது. மலைப் பாதையில் தேர் ஏறத் தொடங்கியது. தேரோட்டி! தேரை மெல்ல செலுத்து. வளமான பறம்பு மலை எவ்வளவு அழகாகக் காட்சி தருகிறது. இதன் அழகைக் காணக் கண் கோடி வேண்டுமே. ஆட்சியைத் துறந்து இங்கேயே இருந்து விடலாம். அடிக்கடி இங்கு வர விரும்புகிறேன். அரச அலுவல்களால் அது முடிவது இல்லை. இந்த இயற்கைச் சூழலில் என் உள்ளம் புத்துணர்ச்சி பெறுகிறது. வெற்றுப் புகழுரைகளை அரண்மனையில் கேட்டுக் கேட்டு சலித்து விட்டது. இங்கே என்ன அமைதியான சூழல்! எங்கும் பசுமை நிறைந்து வளமாகக் காட்சி அளிக்கிறதே! ஆம் அரசே! இந்த மலை வளம் தான் நம் நாட்டிற்கு வற்றாத செல்வத்தைத் தருகிறது. தேரோட்டி! நீயும் மற்றவர்களைப் போலத் தான் இருக்கிறாய். இந்த மலை தரும் செல்வத்தையே பெரிதாக எண்ணுகிறாய். ஆனால் நானோ இந்தச் செல்வத்தைப் பெரிதாக நினைக்கவில்லை. என்னை அறியாத ஏதோ ஒரு இன்ப வெள்ளத்தில் மூழ்குகிறேன். அருவி கொட்டும் ஓசை உன் செவிகளில் வீழ்கிறதா? அரசே! என் செவிகளிலும் வீழ்கிறது. ஆ! என்ன சுவையான அருவி நீர். இதன் சுவையைப் புகழ்ந்து பாடாத புலவர்களே இல்லையே. இந்த அருவி நீரைக் குடித்தவர்க்குத் தேனும் துவர்க்குமே. நம் நாட்டை வளமாக்கும் வற்றாத அருவி ஆயிற்றே! அந்த அருவி கொட்டும் ஓசை இனிய இசையாக என் செவிகளில் வீழ்கிறது. அந்த இசையில் என்னையே நான் மறந்து விடுகிறேன். மலைப் பகுதிக்கு வந்து விட்டோம். இனிமேல் தேர் அசைந்து மெல்ல செல்லட்டும். தேரில் கட்டியுள்ள மணிகளை எடுத்து விடு. அப்படியே செய்கிறேன். அரசே என்ற தேரோட்டி மணிகளை எடுக்கிறான். எதற்காக மணிகளை எடுக்கச் சொன்னேன்? தெரியுமா? அரசே! தேரின் மணியோசை கேட்டு இங்குள்ள உயிர்கள் அஞ்சும். அவற்றின் இனிமைக்கு எந்த இடையூரும் ஏற்படக் கூடாது. அதனால் தானே இங்கு வரும் போது தேரின் மணிகளை எடுக்கச் சொல்கிறீர்கள். தேரோட்டியே! என் உள்ளத்தைப் புரிந்து வைத்திருக்கிறாய். தேரை நிறுத்து. அதோ அங்கே பார். எவ்வளவு மகிழ்ச்சியாக மான் கூட்டங்கள் துள்ளிக் குதித்து ஓடுகின்றன. அந்த மான் குட்டியின் அழகைப் பார். அதன் மருண்ட பார்வைக்கு இந்த உலகத்தையே பரிசாக அளிக்கலாமே. அரசே! இங்கேயே சிறிது நேரம் இருந்து விட்டோம். மான்கள் கூட்டமும் சென்று விட்டது. தேரை மெல்ல செலுத்தட்டுமா? செலுத்து . தேர் மெல்ல நகர்கிறது. ஆ! மேகக் கூட்டங்களைக் கண்ட மயில்களுக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி! தோகையை விரித்து ஆடுகின்றனவே. இவற்றின் தோகைகள் வான வில்லின் வண்ணத்தையே மிஞ்சுகின்றனவே. என்ன அழகிய காட்சி! இயற்கை தரும் இன்பத்திற்கு ஈடு இணை ஏது? தேர் அங்கிருந்து மெல்ல நகர்கிறது. ஆ! மான்களும் மயில்களும் என்னுடன் பேசுவதைப் போல் உணர்கிறேனே. வண்டுகளும் தும்பிகளும் தேனீக்களும் இசை எழுப்புகின்றனவே. அவை என்னை வாழ்த்துவதைப் போல் உள்ளதே! நிழல் தரும் இந்த இனிய மரங்கள் காற்றில் அசைகின்றனவே. என்னிடம் ஏதோ பேச முற்படுவதைப் போல உள்ளதே. கொடிகள் அசைந்து ஆடுவது என்னிடம் கொஞ்சுவதைப் போல உள்ளதே. உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுமையானது தானே. அதைச் சொல்ல நா வேண்டுமா? கேட்க செவி வேண்டுமா? நமக்கு உணர்வு இருந்தால் எல்லாவற்றின் உணர்வுகளையும் அறிந்து கொள்ளலாமே. சூழ்ச்சி வஞ்சம் ஏதும் அறியாத இனிய உலகம் அல்லவா இது. மானாக மயிலாக நான் பிறக்க வில்லையே. அப்படிப் பிறந்து இருந்தால் இங்கேயே மகிழ்ச்சியாக இருப்பேனே. தேர் மெல்ல சென்று கொண்டிருந்தது. ஒரு முல்லைக் கொடிக்கு அருகில் கொழு கொம்பு இல்லை. அதனால் காற்றில் அங்கும் இங்கும் ஆடிக் கொண்டிருந்தது. இந்த அவலக் காட்சியைக் கண்டார் பாரி. அவர் உள்ளம் துடித்தது. ஆ என்று அலறினார். தேரிலிருந்து கீழே குதித்தார். எதிர்பாராதது நடந்ததைக் கண்டு திகைத்தான் தேரோட்டி, தேரை நிறுத்தினான். தேரை விட்டு இறங்கிய அவன் அரசே என்ன நிகழ்ந்தது? என்று பணிவாகக் கேட்டான். அவரைப் பின் தொடர்ந்தான். ஏதும் பேசாத அவர் அந்த முல்லைக் கொடியின் அருகே சென்றார். கொழுகொம்பு இல்லாததால் காற்றில் தள்ளாடித் தவிக்கும் அந்தக் கொடியை பார்த்தார். அருள் உள்ளம் கொண்ட அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. முல்லைக் கொடியே! உன் நிலை இரங்கத் தக்கது. நீ படர்ந்து தழைக்க அருகே கொழு கொம்பில்லை. காற்று அலைக் கழிக்க நீ அங்கும் இங்கும அசைந்து துன்புறுகிறாய். இந்தக் காட்சி என்னிடம் முறையிடுவது போல உள்ளதே. மன்னனே! எல்லோர்க்கும் நீதி வழங்குபவனே! என் அவல நிலையைப் பார்த்தாயா? கொழு கொம்பின்றித் தவிக்கிறேனே. எனக்கு அருள் செய்ய மாட்டாயா என்று கேட்கிறதே. என்னிடம் வந்து யாரும் வெறுங்கையுடன் சென்றது இல்லை. அவர்கள் நினைத்ததற்கு அதிகமாகப் பரிசிலைப் பெறுவார்கள். மகிழ்ச்சியுடன் செல்வார்கள். முல்லைக் கொடியே! நீ இரந்தது வாரி வழங்கும் வள்ளல் பாரியிடம். பாரியின் வள்ளன்மையை நீ உணரப் போகிறாய் என்று உணர்ச்சியுடன் சொன்னார் அவர். பிறகு தேரோட்டியைப் பார்த்துத் தேரை இந்த முல்லைக் கொடியின் அருகே நிறுத்து என்று கட்டளை இட்டார். தேரை முல்லைக் கொடியின் அருகே இழுத்து வந்து நிறுத்தினான் தேரோட்டி. குதிரைகளை அவிழ்த்து விடு. அவை நம் அரண்மனை சேரட்டும் என்றார் அவர். குதிரைகளை அவிழ்த்து விட்டான் தேரோட்டி. அவை தலை நகரத்தை நோக்கி ஓடத் தொடங்கின. முல்லைக் கொடியின் அருகே நின்றார். அந்தக் கொடியை அன்புடன் தடவிக் கொடுத்தார். மெல்ல அதை எடுத்துத் தேரின் மேல் படர விட்டார். தன்னை மறந்து அங்கேயே நின்று இருந்தார். அதையே மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் கொடி இப்பொழுது காற்றில் அசையவில்லை. தேரில் நன்கு படர்ந்தது. அதன் துன்பத்தைத் தீர்த்ததை எண்ணி அவர் உள்ளம் மகிழ்ந்தது. அந்தக் கொடியை மீண்டும் அன்புடன் தடவிக் கொடுத்தார். நன்றி தெரிவிப்பது போலத் தன் தளிரை அசைத்தது அது. எழுந்த அவர், தேரோட்டி! நாம் நடந்தே அரண்மனை அடைவோம் என்றார். இருவரும் மெல்ல நடந்து தலை நகரத்தை நெருங்கினார்கள். அரசர் நடந்து வருவதை மக்கள் திகைப்புடன் பார்த்தார்கள். தோரோட்டி வாயிலாக நடந்ததை அறிந்தார்கள். மகிழ்ச்சி அடைந்த அவர்கள் வள்ளல் பாரி வாழ்க! முல்லைக்குத் தேரீந்த வள்ளல் வாழ்க! என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள். வள்ளல் பாரி மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குச் சென்றார். 1. பாரி பாரி யென்றுபல வேத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி யொருவனு மல்லன் மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே! (புறநானூற்றுப் பாடல் 107, கபிலர் பாடியது.) 2.இவரே, பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி (புறநானூற்றுப் பாடல் 200, அடிகள் 9 முதல் 12 வரை, கபிலர் பாடியது.)
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும்போது, அதனுள்ளிருந்த வேதாளம், விக்கிரமனை நோக்கி, "மன்னா! இந்த நள்ளிரவில், இந்த பயங்கரக் காட்டில் நீ எதற்காக இத்தனை சிரமப்படுகிறாய் என்பது புரியவில்லை. யசோதரன் எனும் மன்னன் தனக்கு சிறிதும் தொடர்பே இல்லாத ஒரு கந்தர்வன் தனக்குக் கொடுத்த சாபத்தினால் மிகவும் துன்புற்றான். அந்த யசோதரனுடைய கதையைக் கூறுகிறேன், கேள்" என்று கதை சொல்லத் தொடங்கியது. நிஷாதபுரியின் மன்னன் யாசோதரன் தன் குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். ராஜ்யத்தின் எல்லையிலிருந்த காடுகளிலிருந்து கொடிய மிருகங்கள் அடிக்கடி கிராமங்களில் புகுந்து மக்களுக்கு இன்னல்கள் விளைவித்ததால், அவற்றை வேட்டையாடத் திட்டமிட்டு ஒருநாள் அவன் தன் பரிவாரங்களுடன் எல்லையோரக் காடுகளுக்குள் புகுந்தான். யசோதரன் வேட்டையாடிக் கொண்டிருக்கையில், வானிலிருந்து ஒரு கந்தர்வனும் ஒரு கந்தர்வப் பெண்ணும் மலையுச்சியில் இறங்கி சற்றே இளைப்பாற அமர்ந்தனர். அமரன் என்ற அந்த கந்தர்வன், கந்தர்வப் பெண்ணான சர்மிளா மீது மிகவும் அன்பு கொண்டிருந்தான். மலை உச்சியில் அவர்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கும்போது, அவன் அவளை நோக்கி, "சர்மிளா! இந்த மலையுச்சியிலிருந்து கீழேயுள்ள காட்சிகளைப்பார்! ஒவ்வொன்றும் இயற்கையின் எழிலைப் பறைசாற்றுகின்றன. ஆனால் அவை ஒன்றுகூட உன் அழகுக்கு இணையாகாது" என்று கூறினான். ஆனால் அவள் அவன் சொல்வதைச் சிறிதும் கவனிக்கவில்லை. காட்டில் தன் புரவியில் அமர்ந்து காட்டு விலங்குளைத் துரத்தும் யசோதரனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்து ரசிப்பதைக் கண்டதும், பொறாமையினால் அவன் இதயம் பற்றி எரிந்தது. "நான் உன் அழகில் மயங்கி உன்னை வர்ணித்துக் கொண்டு இருக்கும்போது, நீ ஒரு மனிதனின் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறாய். பார், இப்போது அவனை என்ன செய்கிறேன் என்று!" என்று சீறிக்கொண்டே யசோதரனுக்கு சாபம் கொடுத்தான். திடீரென யசோதரன் ஒரு சித்திரக் குள்ளனாக மாறிவிட்டான். தன் உருவம் மாறிப் போனதைக் கண்ட யசோதரன் பலத்த அதிர்ச்சியடைந்தான். அந்தப் பக்கமாக ஓடிக் கொண்டிருந்த ஒரு முயல் அவனை மோதித் தள்ளிக் குட்டிக்கரணமடிக்கச் செய்தது. அதைக் கண்டு அமரன் விழுந்து விழுந்து சிரித்தான். "சர்மிளா! பார்த்தாயா அந்த மனிதனின் கதியை?" என்று பரிகாசம் செய்தான். "அடப்பாவி! என்ன காரியம் செய்து விட்டாய்?" என்று அலறினாள் சர்மிளா. "அவன் குதிரை மீது வாயுவேகமாச் செல்லும் காட்சியைத்தான் ரசித்தேனே தவிர, அவன் அழகில் மயங்கி விடவில்லை. இத்தனை பொறாமை பிடித்தவனா நீ?" என்று சொல்லிவிட்டு வானில் பறந்து விட, திடுக்கிட்டு போன அமர அவளை சமாதானப்படுத்தியவாறே வானில் அவளைப் பின் தொடர்ந்தான். அதற்குள் காட்டில் ஒரு சூறாவளிக் காற்றுவீச, சாண் உயரமேயான யசோதரனைக் காற்று மேலே தூக்கிச் சென்றது. பயந்து நடுங்கிப் போன யசோதரன், அந்த சமயம் வானில் பறந்து கொண்டிருந்த ஒரு கிளியின் வாலினைப் பிடித்துக் கொண்டான். அந்தக் கிளி அண்டை ராஜ்யமான அனந்தபுரியின் இளவரசி ராகலதாவின் வளர்ப்புக்கிளி. தன் தோழிகளுடன் அந்தப்புரத்தில் பந்து விளையாடிக் கொண்டிருந்த ராகலதா தன் வளர்ப்புக்கிளியின் வாலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு வந்த உருவத்தைப் பார்த்து வியப்பு அடைந்தாள். சாண் உயரமேயான உருவம், தலையில் சுண்டைக்காய் போல் ஒரு கிரீடம், கடுகுகள் போன்ற விழிகளைக் கொண்ட அந்த விசித்திரமான மனித உருவத்தை அவள் அதுவரை பார்த்ததேயில்லை. அதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அதற்குள் அவளது தோழிகள், "ஆகா! இது என்ன அதிசயம்?" என்று கூச்சலிட, ராகலதா யசோதரனைத் தன் கையில் எடுத்துக் கொண்டாள். அந்த உருவம் அசைவதைக் கண்டு இளவரசி, "ஆகா! இது உயிருள்ள பொம்மை போலிருக்கிறது" என்றாள். மிக அருகில் ராகலதாவைப் பார்த்த யசோதரன் அவளுடைய அழகில் மதிமயங்கிப் போனான். மணந்தால் அவளையே மணப்பது என்ற தீர்மானித்தான். "ராஜகுமாரி! நான் நிஷாதபுரி மன்னன்! நான் எப்படி இத்தகைய உருவத்தைப் பெற்றேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் வீராதி வீரன்தான்! என்றாவது ஒருநாள் நான் சுயஉருவம் பெறுவேன்" என்றான் யசோதரன். "சாண் உயரத்தில் இருந்து கொண்டு பேச்சைப்பார்!" என்று தோழிகள் கேலி செய்ய, ராகலதா அவர்களை அடக்கினாள். இளவரசி அவனைத் தன்னுடன் அந்தப்புரத்தில் வைத்துக்கொள்ளத் தீர்மானித்தாள். தினமும் அவனுடன் இரகசியமாகப் பொழுதுபோக்கினாள். ராகலதா நன்றாக ஓவியம் வரையக் கூடியவள்! யசோதரன் எல்லாரையும் போல் சராசரி உயரத்தில் இருந்தால் எப்படியிருப்பான் என்று கற்பனை செய்து, அவனுடைய ஓவியத்தைத் தீட்டினாள். ஓவியத்தை அவள் பூர்த்தி செய்தபோது, பின்னாலிருந்து அதை கவனித்த யசோதரன், "ராகலதா! நீ ஓவியத்தில் வரைந்துள்ளதை போல் ஒரு நாள் கட்டாயம் மாறுவேன். அன்று என் மனத்தைத் திறந்து சொல்வதாக இருந்தேன். ஆனால் இப்போதே அதைச் சொல்கிறேன். நான் உன்னிடம் அன்பு கொண்டு உள்ளேன். சுயஉருவம் பெற்றபின் உன்னையே மணப்பேன்" என்றான். ராகலதா அதைக் கேட்டு நாணத்துடன் முகத்தை மூடிக் கொண்டாள்.
ஒரு வியாபாரி உப்பு வாங்குவதற்காகத் தன் கழுதையைக் கடற்கரைக்கு ஓட்டிச் சென்றார். போகிற வழியில் ஓர் ஓடை இருந்தது. திரும்பி வரும்போது கால்தவறிக் கழுதை ஓடையில் விழுந்தது. தண்ணீரில் உப்பு கரைந்து போனதால், கழுதை எழுந்த போது சுமையின் கனம் மிகவும் குறைந்திருந்தது. வியாபாரி திரும்பிப்போய், இன்னும் கூடுதலாக உப்பைத் தனது கோணிகளில் நிரப்பிக்கொண்டான். வேண்டுமென்றே கழுதை மீண்டும் விழுந்து தனது பாரத்தைக் குறைத்துக் கொண்டது. எனவே அது வெற்றிகரமாகக் கனைத்தது. வியாபாரிக்குக் கழுதையின் தந்திரம் புரிந்துபோகவே, மூன்றாம் முறையாக கடற்கரைக்கு அதை ஓட்டிச் சென்றான். அங்கே உப்புக்கு பதிலாகக் கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கினான். ஓடையை அடைந்ததும், மீண்டும் அதே தந்திரத்தைக் கழுதை செய்தது. ஆனால் கடற்பஞ்சு தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு மிகவும் கனத்துப் போனது. தான் செய்த தந்திரம் தன்மீதே பாயவே, கழுதை இரண்டு பங்கு பாரத்தைச் சுமந்தது.
மரியாதை ராமன் தெனாலி ராமன் போல் விகடகவி அல்ல, அவர் மிகவும் புத்திசாலி, இளம் வயதிலேயே பெரியவங்களுக்கு புலப்படாத நுணுக்கமான விசயங்களையும் எளிதில் விடுவிப்பார். மரியாதை ராமனின் தீர்ப்புகள் அனைத்தும் புகழ்பெற்ற கதைகளாக மக்களிடம் பேசப்பட்டு வருகிறது, அதில் ஒன்று இதோ. மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார். ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார். வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார் “உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க” என்றார். ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர். அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்யமுடியவில்லை, வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து, சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார். அப்படி காட்டுவழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கிடந்தது, அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிழையில் வைத்துவிட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார். அப்போ ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்த போது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார். உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன். கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கத்தினான். பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார். சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார், பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல் நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர் மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள். ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான். ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் “சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லல, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்”. மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவிதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.
அது ஒரு அடர்ந்த காடு. அங்கு பல மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அந்த காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி அவர்கள் ஏமாறுவதைக் கண்டு மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது. அதே காட்டில் அறிவு மிக்க கொக்கு ஒன்றும் இருந்ததது. அந்த கொக்கு அணைத்து மிருகங்களிடமும் நன் மதிப்பை பெற்று இருந்தது. இதை பொறுக்க முடியாத நயவஞ்சக நரி அந்த கொக்கை எப்படியாவது ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தது. ஒரு நாள் கொக்கு நரியின் குகை இருக்கும் வழியில் வந்துகொண்டிருந்தது நரி அந்த கொக்கைப் பார்த்து "நண்பனே! உன்னுடைய அறிவைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். நான் நாளை உனக்கு ஒரு விருந்து வைக்க விரும்புகிறேன். உன்னால் வர முடியுமா?" என்று கேட்டது. கொக்கும் சரி வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது. அடுத்த நாள், நரி சுவைமிக்க சூப் ஒன்றை செய்தது. அன்று மாலை கொக்கு நரியின் இடத்திற்கு சென்றது. நரியோ திட்டமிட்டபடி, சூப்பை அகன்ற இரு தட்டில் ஊற்றியது. ஒன்றை கொக்கிடம் கொடுத்தது. கொக்கினால் வாய் அகன்ற தட்டில் உள்ள சூப்பை குடிக்க முடியவில்லை. நரியோ நக்கி நக்கி அந்த சூப்பை குடித்துவிட்டு, "நண்பனே இந்த சூப்பை உனக்காக செய்தேன் எப்படி இருந்தது?" என்று சிரித்துகொண்டே கேட்டது. கொக்கு ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது. நரியிடம், "நண்பனே சூப் மிகவும் ருசியாக இருந்தது" என்று கூறியது . கொக்கு நரியிடம், "இரவு நேரம் ஆக போகிறது நான் செல்ல வேண்டும்" என்று கூறியது. செல்லும்முன் "இன்று நீ எனக்கு விருந்து வைத்தாய்! பதிலுக்கு நான் நாளை உனக்கு விருந்து வைக்கலாம் என்று நினைக்கிறன். உன்னால் வர முடியுமா?" என்று கேட்டது. நரியும் வர சம்மதம் தெரிவித்தது. நரியோ கொக்கை ஏமாற்றி விட்டேன் என்ற கர்வத்துடன் சந்தோசமாக உறங்க சென்றது. கொக்கு பசியுடனும், வருத்ததுடனும் பறந்து சென்றது. அடுத்தநாள் கொக்கு நரிக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தது. பல இறைச்சிகளை போட்டு சுவை மிக்க சூப் ஒன்றை செய்தது. அதன் வாசனை அந்த காடு முழுவதும் பரவியது. அன்று மாலை நரி கொக்கின் வீட்டுக்கு சென்றது. கொக்கு நரி வந்தவுடன், அந்த சுவை மிக்க சூப்பை சிறிய துளை கொண்ட இரண்டு குவளையில் ஊற்றியது. அந்த சூப்பின் வாசனயை முகர்ந்தவுடன் நரிக்கு வாயில் எச்சில் ஊறியது. இன்றைக்கு நல்ல வேட்டை என்று நரி நினைத்தது. கொக்கு குவளையை நரியிடம் கொடுத்தது. கொக்கு தன் வாயை குவளையில் நுழைத்து சூப்பை ருசித்தது. நரியினால், துளை சிறியதாய் இருப்பதனால் குடிக்க முடியவில்லை. குவளையின் ஓரங்களில் சிதறி இருந்த சிறு துளிகளை மட்டுமே நக்கி சாப்பிட முடிந்தது. கொக்கு நரியைப் பார்த்து "சூப் எப்படி இருந்தது என்று கேட்டது?" நரியும், "மிகவும் அருமை இதுபோன்ற ஒரு சூப்பை நான் குடித்ததே இல்லை" என்று பொய் சொல்லியது. அப்போது தான் நரி ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது. நரி, கொக்கிடம் விருந்துக்கு நன்றி என்று கூறிவிட்டு வருத்ததுடன் சென்றது. அப்போது தான் நரி "நாம் மற்றவர்களை ஏமாற்றும் போது அவர்கள் எவ்வாறு வருத்தப்பட்டு இருப்பார்கள்" என்று உணர்ந்தது. அன்று முதல் திருந்திய நரி, பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.
அக்பருக்கும் பீர்பாலுக்கும் அடிக்கடி ஏற்படும் மனவேறு அன்றைக்கும் ஏற்பட்டது. அக்பர் ஏதோ சொல்ல, அதற்கு பதிலாக பீர்பால் எதையோ சொல்ல… பேச்சு வளர்ந்து பெரிய சச்சரவில் கொண்டு போய் விட்டு விட்டது. மன்னர் கோபம் கொண்டார். "இனிமேல் என்னுடைய மண்ணில் நீ வாழக்கூடாது. எனது ஆளுகைக்கு உட்பட்ட மண்ணில் நீர் நடமாடுவதை குற்றமாக நான் கருதுகிறேன். அதனால் என் மண்ணணவிட்டு நீ வெளியேறி விடவேண்டும்!" என்று ஆணை பிறப்பித்தார். "சரி. உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்ட மண்ணில் நான் வாழமாட்டேன்!" என்று வீராப்பாகச் சொன்ன பீர்பால் அங்கிருந்து வெளியாகி சீன நாட்டுக்கு சென்றார். சில ஆண்டுகள் கழித்து ஏராளமான மூட்டைகளுடன் தில்லி வந்து சேர்ந்தார்! பீர்பால் ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்று சிலகாலம் இருந்து விட்டு இப்போது மீண்டும் தில்லிக்கே வந்துவிட்டதை அக்பர் அறிந்தார். உடனே அவருக்கு சினம் வந்தது. தனது தலைமை அமைச்சரை அனுப்பி பீர்பாலைஉடனே அரசவைக்கு அழைத்து வரச் சொன்னார். பீர்பாலின் இல்லம் சென்ற அமைச்சரை அன்போடு வரவேற்று வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினார். "இது என்ன வீட்டுக்குள்ளும் வெளியிலும் மண்ணைக் கொட்டி வைத்திருக்கிறீர்களே?" என்று கேட்டார் அந்த அமைச்சர். "இந்த மண் சீன நாட்டில் இருந்து கொண்டு வந்தேன். ஒரு காரணத்திற்காகத்தான் பரப்பி வைத்திருக்கிறேன்!" என்று கூறினார். பின்னர் அந்த அமைச்சரின் வண்டியைப் பிந்தொடர்ந்து தன் வண்டியிலேயே அரசவை நோக்கி புறப்பட்டார். செல்லும் வழியில்… "இதென்ன வண்டிக்குள்ளும் இவ்வளவு மண்??" என்று கேட்டார் அந்த அமைச்சர். "எல்லாம் காரணமாகத்தான்!" என்று பதில் அளித்தார் பீர்பால். அரண்மனைக்குச் சென்றதும் அரசர் முன் நின்று வணங்கினார் பீர்பால். "என் உத்தரவையும் மீறி இன்னும் தில்லி நகரத்தில் உலவுகிறீர்? என்னுடடய உத்தரவை அலட்சியம் செய்கிறீர்! என்னை மதிக்காமல் இந்த மண்ணில் உம்மால் வாழ்ந்து விட முடியுமா?" என்று கோபத்துடன் கேட்டார் அக்பர். "மன்னர் பெருமானே! தங்கள் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு எனக்கு ஒன்றும் தெரியாது. தங்களின் உத்தரவை அப்படியே பின்பற்றி வருகிறேன்!" என்று சொன்னார் பீர்பால் பவ்யமாக. "எங்கே நிறைவேற்றுகிறீர்? இப்போது தில்லியில் அல்லவா நீர் தங்கி இருக்கிறீர்?" என்றார் அக்பர் சினத்துடன். "தில்லியில் நான் தங்கி இருப்பது உண்மைதான். ஆனால் தங்களின் மண்ணில் நான் நடமாடவில்லை. அமைச்சரைக் கேட்டுப் பாருங்கள். அவரே என் வீட்டுக்கு வந்து பார்த்தாரே!" என்றார் பீர்பால். அக்பர் அமைச்சரை நோக்கினார்… உடனே அமைச்சர் பதில் அளித்தார்.. "மன்னர் அவர்களே! பீர்பால் தம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியிலும் மண்ணைக் கொட்டி பரப்பி இருக்கிறார். பயணம் செய்த வண்டியிலும்கூட மண்ணைக் கொட்டி இருந்தார். எதற்காக இப்படி எல்லாம் செய்திருக்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்டேன்.. காரணமாகத்தான் என்று சொல்கிறார்!" அப்போது பீர்பால், "மன்னர் பிரான் அவர்களே,"என் வீட்டின் உள்ளும் வெளியிலும் நான் பயணம் செய்யும் வண்டியிலும் நான் உலவும் என் வீட்டுத் தோட்டங்களிலும் நான் கொட்டி பரவி இருப்பது சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண். அது தில்லியின் மண் அல்ல. தங்களுக்கு சொந்தமான மண்ணில் நடமாடக் கூடாது என்றீர்கள். அதனால்தான் சீன மண்ணில் நடமாடிக் கொண்டிருக்கிறேன். இது எவ்வாறு தங்கள் உத்தரவை மீறிய செயலாகும்?" என்று அப்பாவி போல் பதில் சொன்னார். பீர்பால் விளக்கம் கொடுத்ததும் அக்பர் உட்பட அவையினர் சிரித்தனர். மன்னருக்கு சினம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று. வாய்விட்டுச் சிரித்தவாறே, "உம்மை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்றே தெரியவில்லை!" என்று மகிழ்ச்சியுடன் சொல்லி தன் உத்தரவினை வாபஸ் வாங்கிக் கொண்டார்.
ஒரு கா‌ட்டி‌ல் பல ‌வில‌ங்குக‌ள் வா‌ழ்‌ந்து வ‌ந்தன. அ‌தி‌ல் ஒரு ‌சி‌ங்கமு‌ம், ந‌ரியு‌ம் வெகு நாளாக உண‌வி‌ன்‌றி அலை‌ந்து ‌தி‌ரி‌ந்து கொ‌‌ண்டிரு‌ந்தன. ஒரு நா‌ள் இர‌ண்டு‌ம் நேரு‌க்கு நே‌ர் ச‌ந்‌தி‌த்து த‌த்தமது ‌நிலைமையை புல‌ம்‌பி‌க் கொ‌ண்டன. இறு‌தியாக இர‌ண்டு‌ம் சே‌ர்‌ந்து வே‌ட்டையாடுவது எ‌ன்ற முடிவு‌க்கு வ‌ந்தன. அத‌ற்கு ‌சி‌ங்க‌ம் ஒரு ‌தி‌ட்ட‌ம் வகு‌த்து‌க் கொடு‌த்தது. அதாவது, ந‌ரி பலமாக ச‌த்த‌ம் போ‌ட்டு க‌த்த வே‌ண்டு‌ம். அ‌ந்த ச‌த்த‌த்தை‌க் கே‌ட்டது‌ம் கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் ‌மிர‌ண்டு அ‌ங்கு‌ம் இ‌ங்கு‌ம் ஓடு‌ம். அ‌ப்படி ஓடு‌ம் ‌மிருக‌ங்களை ‌சி‌ங்க‌ம் அடி‌த்து‌க் கொ‌‌ல்ல வே‌ண்டு‌ம். இ‌ந்த யோசனை ந‌ரி‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌த்‌திரு‌ந்தது. அதனா‌ல் உடனே ஒ‌ப்பு‌க் கொ‌ண்டது. அத‌ன்படி, ந‌ரி தனது பய‌ங்கரமான குர‌லி‌ல் க‌த்த‌த் துவ‌ங்‌கியது. அத‌ன் ‌வி‌சி‌த்‌திரமான ச‌த்த‌த்தை‌க் கே‌ட்ட கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் அ‌ங்கு‌ம் இ‌ங்கு‌ம் வேகமாக ஓடின. அ‌‌ந்த சமய‌த்‌தி‌ல் ‌சி‌ங்க‌ம் ‌நி‌ன்‌றிரு‌ந்த ப‌க்க‌ம் வ‌ந்த ‌வில‌ங்குகளை எ‌ல்லா‌ம் ‌சி‌ங்க‌ம் வே‌ட்டையாடி‌க் கொ‌‌ன்றது. ஒரு க‌ட்ட‌த்‌தி‌ல் ந‌ரி க‌த்துவதை ‌நிறு‌த்தி ‌வி‌ட்டு ‌சி‌ங்க‌த்‌தி‌ன் ப‌க்க‌ம் வ‌ந்தது. அ‌ங்கு வ‌‌ந்தது‌ம் ‌ந‌ரி‌க்கு ஏக‌ப்ப‌ட்ட ச‌ந்தோஷ‌ம். ஏனெ‌னி‌ல் ‌‌நிறைய ‌மிருக‌ங்க‌‌ள் அ‌ங்கு இற‌ந்து ‌கிட‌‌‌ந்தன. அதை‌ப் பா‌ர்‌த்தது‌ம் ந‌ரி, தா‌ன் அகோரமாக‌க் க‌த்‌தியதா‌ல்தா‌ன் இ‌ந்த ‌மிருக‌ங்க‌ள் இற‌ந்து‌வி‌ட்டன எ‌ன்று ‌க‌ர்வ‌ம் கொ‌ண்டது. சி‌ங்க‌த்‌தி‌ன் அரு‌கி‌ல் வ‌ந்து, எ‌ன்னுடைய வேலையை‌ப் ப‌ற்‌றி எ‌ன்ன ‌நினை‌க்‌கிறா‌ய்.. நா‌ன் க‌த்‌தியே இ‌த்தனை ‌மிருக‌ங்களை கொ‌ன்று‌வி‌ட்டே‌ன் பா‌ர்‌த்தாயா எ‌ன்று க‌ர்வ‌த்துட‌ன் கே‌ட்டது. அத‌ற்கு ‌சி‌ங்க‌ம்.. ஆமா‌ம்.. உ‌ன் வேலையை‌ப் ப‌ற்‌றி சொ‌ல்ல வே‌ண்டுமா எ‌ன்ன? ‌நீதா‌ன் க‌த்து‌கிறா‌ய் எ‌ன்று தெ‌ரியாம‌ல் இரு‌ந்‌திரு‌ந்தா‌ல் ஒரு வேளை நானு‌ம் ப‌ய‌த்‌திலேயே செத்து‌ப் போ‌‌யிரு‌ப்பே‌ன் எ‌‌ன்று பாரா‌ட்டியது.‌
ஒரு நாள் ராமு தன்னுடைய சிங்கத்தை அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்க்காக சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப்பற்றி சிங்கமும் ராமுவும் பேசிக்கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியில், "ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது நிற்பதைப்போல" ஒரு சிலை இருந்தது. ''அதைப் பார்த்தாயா? யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது.'' என்றான் ராமு. ''ஓ, அது மனிதன் செய்த சிலை. ஒரு சிங்கம் அந்த சிலை செய்துருந்தால், மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது, தான் நிற்பது போலச் செய்திருக்கும்.'' என்று சொல்லியது சிங்கம். தனக்கென்றால் தனி வழக்குதான்.
முல்லா ஒருநாள் ஒரு பெரிய பணக்காரிடம் சென்றார் ஒரு மனிதனுடைய கஷ்ட நிலையைக் கண்டு மனம் பொறாமல் தங்களிடம் வந்திருக்கிறேன். அந்த மனிதன் ஒரு மனிதரிடம் கொஞ்சம்பணத்தை கடனாக வாங்கி விட்டான். கடன் வட்டிக்கு வட்டியாக பல மடங்கு பெரிய தொகையாக வளர்ந்து விட்டது. அந்தக் கடனைக் கொடுக்க முடியாமல் அவன் மிகவும் சங்கடப்படுகிறான். கடன் தொல்லை தாளமுடியாமல் அவன் தற்கொலை செய்து கொள்வானோ என்று கூட எனக்கு அச்சமாக இருக்கின்றது. அந்த மனிதனின் கடனை அடைக்க ஒரு ஆயிரம் பொற்காசுகள் இருந்தால் கொடுங்;கள். உரிய காலத்தில் உங்கள் தொகையை அவன் திருப்பிக் கொடுத்து விடுவான். அதற்கு நான் உத்தரவாதம் கொடுக்கிறேன் என்று முல்லா மிகவும் உருக்கமாக கூறினார்.அதைக் கேட்டு மனமுருகிய செல்வந்தர் முல்லாவிடம் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து ” அவ்வளவு கஷ்ப்படும் மனிதன் யார்?” என்று கேட்டார். ” வேறு யாருமில்லை, நான்தான் ” என்று கூறிச் சிரித்தவாறு முல்லா சென்று விட்டார்.இரண்டொரு மாதங்கள் கழித்து செல்வந்தரிடம் வாங்கிய பணத்தை முல்லா திருப்பித் கொடுத்து விட்டார். இரண்டொரு மாதங்கள் கழித்த பிறகு ஒரு நாள் அதே பணக்காரரிடம் வந்தார்.;” யாரோ ஒருவர் கடன் வாங்கிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறாராக்கும். அவருக்கு உதவ என்னிடம் கடன் வாங்;க வந்திருக்கிறீர் போலிருக்கிறது” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் செல்வந்தர்.” ஆமாம் ” என்று முல்லா பதில் சொன்னார்.” அந்தக் கஷ்டப்படும் ஆள் நீர்தானே” என்று செல்வந்தர் கேட்டார்.” இல்லை , உண்மையாகவே ஒர் ஏழை தான் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறான் ” என்றார் முல்லா.” உம்மை எவ்வாறு நம்ப முடியும்? பணத்தை வாங்;கிக் கொண்ட பிறகு நான்தான் அந்த ஏழை என்று கூறமாட்டீர் என்பது என்ன நிச்சயம்?” என்று செல்வந்தர் கேட்டார்.” நீங்கள் இவ்வாறு சந்தேகப்படுவீர் என்று தெரிந்துதான் அந்த ஆளை நேரில் கொண்டு வந்து வாசலில் நிறுத்தியிருக்கிறனே” என்றார் முல்லா.பிறகு வாசல் பக்கம் சென்று ஒரு ஏழையை அழைத்து வந்தார்.” நீர்தான் கடன் வாங்கிக் கஷ்டப்படும் ஏழையா?” என்று செல்வந்தர் கேட்டார்.” ஆமாம் ” என்ற அந்த ஏழை பதில் சொன்னான்.செல்வந்தர் முல்லா சொன்ன தொகையை ஏழையிடம் நீட்டினார்.அதனை முல்லா கைநீட்டி வாங்கிக் கொண்டார்.” என்ன பணத்தை நீர் வாங்கிக் கொண்டிர் பழையபடி என்னை ஏமாற்றுகிறீரா?” என செல்வந்தர் கேட்டார்.” நான் பொய் சொல்லவில்லையே கடன் வாங்கியது அந்த ஏழைதான் ஆனால் அவனுக்குக் கடன் கொடுத்தவன் நான். கொடுத்த கடன் இப்போது வசூல் செய்கிறேன் ” என்று கூறியவாறு ஏழையை அழைத்துக் கொண்டு முல்லா நடந்தார்.
சக்கரவர்த்தி அக்பர் சில பிரமுகர்களுடன் நந்தவனத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பீர்பலும் இருந்தார். நந்தவனத்தில் மலர்ந்திருந்த ரோஜாப்பூக்களைப் பார்த்துப் பரவசமான அக்பர், “ஆகா! பூமியில் ஒரு சொர்க்கம் உண்டு எனில் அது இந்த நந்தவனம்தான்!” என்றார். “ஆம், பிரபு! நீங்கள் கூறுவது சரி!” என்று அனைவரும் ஆமோதிக்க, பீர்பல் மட்டும் மௌனமாக இருந்தார். அதைக் கவனித்த அக்பர், “பீர்பல்! சற்று முன் நான் கூறியதில் உனக்கு உடன்பாடு இல்லையா?” என்று கேட்டார். “பிரபு! இந்த நந்தவனத்திற்கு அழகைத் தருவது இந்த ரோஜா மலர்கள் தான். ஆனால் அழகு எங்கே உள்ளதோ, அங்கே அபாயமும் உண்டு!” என்றார் பீர்பல். “ஓகோ! ரோஜாப்பூக்களில் உள்ள முட்களைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்பர் கேட்டார். “இல்லை, பிரபு! நான் அவற்றைச் சொல்லவில்லை!” என்று பீர்பல் சொல்ல, “அப்படியானால், ரோஜாச் செடிகளின் உள்ளே மறைந்திருக்கும் பாம்புகளைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்பர் கேட்டார். “மனிதனால்தான் பாம்புகளுக்கு அபாயம்! நம் காலடியோசையைக் கேட்டவுடனேயே அவை பயந்து ஓடி விடுகின்றன!” என்றார் பீர்பல். “பின் நீ எதைத்தான் அபாயம் என்று குறிப்பிடுகிறாய்?” என்று சலிப்புடன் அக்பர் கேட்க, “பிரபு! அபாயம் என்பது அழகை மட்டுமல்ல; வலிமை, செல்வம், புகழ் ஆகிய அனைத்தையும் அபாயம் சூழ்ந்து உள்ளது. தாங்கள் பாரதத்தின் மிக வலிமை பொருந்திய, மிகப் புகழ்பெற்ற, சகல செல்வங்களையும் ஒருங்கே பெற்ற சக்கரவர்த்தி! ஆனால், மேற்கூறிய விஷயங்களினால், அண்டை ராஜ்யத்து மன்னர்கள் தங்கள் மீது பொறாமை கொண்டுள்ளனர். தங்களை வீழ்த்தி வெற்றிவாகை சூட சதித்திட்டம் இட்டவாறு உள்ளனர். அதனால்தான், பூலோக சொர்க்கம் என்று ஒன்று இருப்பதாக நான் எண்ணவில்லை” என்றார். பீர்பலின் சொற்கள் அக்பரை சிந்திக்கத் தூண்டின. மறுநாள் சபையில் அக்பர், “திடீரென்று ஒருவனை அபாயம் சூழ்ந்தால், அவனுடைய தற்காப்புக்காகப் பயன்படும் சிறந்த ஆயுதம் எது?” என்று சபையோர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்டார்.“வாள்!” என்றார் ஒருவர். “இல்லை!” என்று மறுத்த பீர்பல், சில சமயங்களில் வாள் பிடித்த கரம் செயலற்றுப் போவதுண்டு!” என்றார். “எதிரி மீது தொலைவிலிருந்தே குறிபார்த்து ஈட்டியை வீசுவதன் மூலம் அபாயத்திலிருந்து தப்பலாம்!” என்றார் மற்றொருவர்.“பதற்றத்தில் ஈட்டியின் குறி தவறினால், அது பயன்படாது!” என்றார் பீர்பல். “சரிதான்! வாள், ஈட்டி, என்று எந்த ஆயுதமுமே சரியில்லை என்றால், எதுதான் ஆபத்தில் பயன்படும்?” என்று அக்பர் கேட்க, “சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயற்படும் நமது அறிவே சிறந்த ஆயுதம் ஆகும்!” என்றார் பீர்பல்.“வெறும் பிதற்றல்! நீ ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது உன் மூளை எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கிறேன்!” என்று அக்பர் கிண்டல் செய்ய, சபையோர் அவருடன் சேர்ந்து பீர்பலை எள்ளி நகையாடினர். “சமயம் வரும்போது நான் கூறியது உண்மை என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்!” என்றார் பீர்பல்.மறுநாள், அக்பர் சில பிரமுகர்களுடன் நதிக்கரையில் உலவிக் கொண்டிருந்தபோது, பீர்பலும் உடனிருந்தார். அப்போது, ஒரே கூச்சலும், கூக்குரலும் கேட்க, மக்கள் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர். சக்கரவர்த்தியைக் கண்ட அவர்கள் ஓடோடி வந்து, “பிரபு! ஆபத்து! அபாயம்! பட்டத்து யானைக்கு திடீரென மதம் பிடித்து விட்டது.அது இந்தப் பக்கம்தான் ஓடி வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் உடனே ஓடி விடுங்கள்!” என்று கூச்சலிட்டனர். அவர்கள் கூறி முடிப்பதற்குள் தொலைவில் மதயானை ஓடி வருவது தெரிந்தது.உடனே, அக்பர் தன் இடையிலிருந்து வாளை உருவ, கூடியிருந்த அனைவரும் தங்கள் வாட்களை உருவிக் கொண்டனர். ஆனால், மதம் பிடித்த யானையை வாள் கொண்டு சமாளிக்க முடியாது என்று உணர்ந்ததும், அவர்கள் திக்பிரமை பிடித்து சிலைகளாக நின்றனர். தன்னைப் பெரிய ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதை அக்பரும் உணர்ந்தார்.வாளினாலோ, ஈட்டியினாலோ யானையை ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. ஆனால் கோழையைப் போல் பயந்து ஓடவும் அவருடைய தன்மானம் இடம் தரவில்லை. எல்லாரும் செய்வதறியாது செயலற்று நிற்க, பீர்பல் சட்டென்று அங்கிருந்த ஒரு பூனையைப் பிடித்து யானையின் முதுகில் வீசியெறிந்தார். யானையின் முதுகில் விழுந்ததால் மிரண்ட பூனை, தன் நகங்களினால் யானையைப் பிறாண்டியது.வலி பொறுக்க முடியாத யானை, தன் தும்பிக்கையினால் பூனையைப் பிடிக்க முயல, அது தப்பித்துக் கீழேயிறங்கி ஓடியது. யானையின் கோபம் முழுவதும் பூனையின்பால் திரும்ப, அது பூனையைத் துரத்திக் கொண்டே எதிர் திசையில் ஓடியது.தனது பருத்த உடலைத் தூக்கிக் கொண்டு யானையினால் விரைவாக ஓட முடியவில்லை. போக்குக் காட்டிக் கொண்டே ஓடிய பூனை, சாலையோரப் புதர்களின் உள்ளே மறைய, யானை புதர்களுக்குள் புகுந்து அதைத் தேடியது. இவ்வாறு, யானையின் கவனம் திசை திரும்ப, அக்பரும் மற்றவர்களும் யானையிடம் சிக்காமல் தப்பித்தனர்.சற்றுநேரம் சிலையாய் நின்ற அக்பர் தெளிவடைந்தவுடன் பீர்பலைக் கட்டித் தழுவிக் கொண்டார். “பீர்பல்! சபாஷ்! அறிவுதான் சிறந்த ஆயுதம் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டாய்! சூழ்நிலைக்கு ஏற்றவாறு மூளையைப் பயன்படுத்தி சிந்தித்து செயற்படுவதே சாலச் சிறந்தது என்ற உண்மையை எங்களுக்குப் புரிய வைத்து விட்டாய்! நீ சொன்னதே சரி! உன்னைப் போன்ற அறிவாளி அருகிலிருந்தால் எந்த அபாயத்தையும் எதிர் கொள்ளலாம்!” என்று மனதாரப் பாராட்டினார்.
உடனே கிழவியை நோக்கி, “அம்மா! உன் பை என் இடமே இருக்கட்டும். நீ சொல்வது உண்மையானால் உன் பொற்காசுகள் உனக்குத் திரும்பக் கிடைக்கும்” என்றார். “அந்தக் கடவுள் சத்தியமாக நான் சொன்னது உண்மை!” என்று ஆணித்தரமாகக் கிழவி கூற, “அம்மா! நாளை மறுநாள் வா! அதற்குள் உண்மை புலனாகும்” என்றார் அக்பர். கிழவியும் சலாம் செய்துவிட்டுச் சென்றாள். அதன்பிறகு தர்பார் கலைந்தது. அனைவரும் எழுந்து செல்ல, பீர்பால் பையைக் கையில் ஏந்திக் கொண்டு தீவிரமாக யோசித்தவாறே சென்றார். பீர்பால் மீது பொறாமை கொண்ட சிலர் இந்த வழக்கைத் தீர்க்க முடியாமல் பீர்பால் தோல்வியடைவார் என்றும், அதன்பிறகு அவர் தலை நிமிர்ந்து நடக்க முடியாதென்றும் பீர்பாலை கேலி செய்தவாறு சென்றனர். அவர்கள் தன்னை ஏளனம் செய்வதைப் பொருட்படுத்தாமல் பீர்பால் வீட்டுக்குச் சென்றார். கிழவி கூறியது உண்மை என்று அவருடைய உள்ளுணர்வு கூறினாலும், பையில் இருந்து குல்ஷா எப்படி பொற்காசுகளைத் திருடியிருக்க முடியும் என்பதை மட்டும் ஊகிக்கவே முடியவில்லை. தன் மனைவி தன்னை புன்னகையுடன் வரவேற்றதைக் கூட அவர் கவனிக்கவில்லை. மௌனமாக சாப்பிட உட்கார்ந்தார். கைகள் உணவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாலும், மனம் அந்த வழக்கைப் பற்றி யோசிப்பதிலேயே விரமாக ஆழ்ந்து இருந்தது. திடீரென பீர்பாலுக்கு ஒரு யோசனை உதயமாயிற்று. உடனே தன் படுக்கை அறைக்குச் சென்ற அவர், விலையுர்ந்த படுக்கை விரிப்பு ஒன்றை எடுத்து, அதைக் கத்திரிக்கோலால் சரசரவெனக் கிழித்தார். அதைப்பார்த்த அவர் மனைவி ஓடி வந்து “ஐயோ, உங்களுக்குப் பைத்தியாமா? என்ன காரியம் செய்கிறீர்கள்?” என்று கூச்சலிட்டாள். “உஷ்” என்று அவளை அடக்கிவிட்டுத் தன் வேலையாளை அழைத்த பீர்பால், “இந்த படுக்கை விரிப்பு கிழிந்ததே தெரியாமல் அருமையாகத் தைக்க வேண்டும். அப்படிப்பட்ட திறமையான தையற்காரர் யாராவது தெரியுமா?” என்று கேட்க அவன், “ஐயா! மன்சூர் அலி எனும் தையற்காரன் ஒரு மேதாவி! அவனிடம் கொடுத்தால், கிழிந்ததே தெரியாமல் தைத்து விடுவான்” என்றான். உடனே அவனிடம் பீர்பால் அதைக் கொடுத்தனுப்பினார். மறுநாள் மாலை, வேலைக்காரன் கொடுத்த வேலையைக் கச்சிதமாக முடித்து விட்டுத் திரும்பினான். படுக்கைவிரிப்பைப் புரட்டிப் பார்த்ததும் அது முன்பு கிழிந்திருந்த இடத்தை பீர்பாலினால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நன்றாக மன்சூர் அலி தைத்திருந்தான். “ஆகா! மிகப் பிரமாதமாகத் தைத்து இருக்கிறானே! இந்த மன்சூர் அலியை நேரில் சந்தித்துப் பாராட்ட விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, பீர்பால் தன் வேலைக்காரனுடன் மன்சூர் அலியின் கடைக்குச் சென்றார். “அடடா! பிரபு! நீங்களா! சொல்லிஇருந்தால் நானே உங்களைத் தேடி வந்திருப்பேனே!” என்று மன்சூர் அலி ஓடி வந்தான். “மன்சூர்! உன் கடைக்கு வந்து உன்னை நேரிலே பாராட்ட வேண்டும்என்று தோன்றியது. அதனால்தான் நானே இங்கு வந்து விட்டேன்” என்றார் பீர்பால். உங்கள் பாதம் என் கடையில் பட நான் என்ன பாக்கியம் செய்து இருக்கிறேன்!” என்று மன்சூர் உணர்ச்சிவசப்பட்டான். “இந்தா! நீ செய்த அருமையான வேலைக்குக் கூலி!” என்று பீர்பால் ஒரு தங்கக் காசைக் கொடுத்தார். “இருங்கள்! மீதிப்பணத்தைத் தருகிறேன்” என்று மன்சூர் தன் சட்டைப் பையைத் துழாவ, உடனே பீர்பால் அவனைத் தடுத்தப்படி “அவசியமில்லை நீயே வைத்துக் கொள் என்று அடுத்துக் கிழவியின் பையைக் காட்டினார். “மன்சூர்! இந்தப் பையை சமீபத்தில் நீ தையல் போட்டாயா?” என்று பீர்பால் கேட்டதும், அவன் அதை அடையாளம் கண்டு கொண்டான். “ஆம், பிரபு!” என்ற மன்சூர், பையில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, “இந்த இடம் கிழிந்திருந்தது. இதைத் தையல் போட்டு சரி செய்தேன். ஒரு மாதம் முன்பாக குல்ஷா என்னிடம் இந்த வேலையைச் செய்யச் சொன்னார்” என்றான். பீர்பாலுக்குத் தேவையான தகவல் கிடைத்துவிட, அவர் மன்சூரிடம் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மறுநாள் தர்பார் கூடியது. பீர்பால் ஏற்பாடு செய்திருந்தபடி, கிழவியும், குல்ஷாவும் தர்பாருக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அக்பர் பீர்பாலை நோக்கி, “இந்தக் கிழவி கூறியது உண்மைதானா இல்லை வீணாக குல்ஷா மீது பழி சுமத்துகிறாளா?” என்று கேட்டார். “கிழவி கூறியதுதான் உண்மை” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிய பீர்பால் தான் உண்மையைக் கண்டறிந்த விதத்தை விளக்கினார். அதைக் கேட்ட குல்ஷாவின் முகம் பீதியினால் வெளுத்துக் கை, கால்கள் நடுங்கின. கோபமடைந்த அக்பர், “குல்ஷா! பீர்பால் கூறுவது உண்மைதானா மோசடி செய்தது நீதானா? பொய் சொன்னால் உன்னை இங்கேயே கொன்று விடுவேன்” என்று சீற, குல்ஷா, “பிரபு! பீர்பால் கூறுவது உண்மையே! பேராசை என் கண்களை மறைத்துவிட்டது” என்று அழுதான். கிழவிக்கு அவள் பொற்காசுகள் திரும்பக் கிடைத்தன. பாவம், குல்ஷாவுக்குச் சிறையில் கம்பி எண்ண நேரிட்டது. பீர்பாலின் புத்திசாலித்தனத்தைக் கண்ட அக்பர், அவருக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார். அனைவரும் வியந்து பாராட்டினர்.
முன்னொரு காலத்தில் மணிவர்மன் என்னும் மன்னர் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சிபுரிந்து வந்தார். அவனுடைய மனைவி ராணி பத்மாவதி மீது உயிரையே வைத்திருந்தார். அந்நாட்டு மக்கள் தங்கள் அரசனையும் அரசியையும் மிகவும் நேசித்தனர். எங்கும் பசுமையும் வளமையும் குடிகொண்ட அந்த நாட்டில் மக்களுக்கு எந்த ஒரு குறையும் வைக்காமல் மன்னன் ஆட்சி செய்து வந்தார். மக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் அரசன், அரசி இருவருக்கும் மனதுக்குள் ஒரு பெரும் குறை இருந்தது. திருமணமாகி, பல ஆண்டுகள் ஆகியும் தங்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதுதான் அது. எதிர்காலத்தில் தங்கள் நாட்டை ஆள ஒரு வாரிசு இல்லையே என மக்களும் மிகவும் கவலைப்பட்டார்கள். ராணி கலங்கும்போதெல்லாம் மன்னன் அவரை சமாதானம் செய்துவந்தார். ஒரு நாள் மதுரை மாநகருக்கு முனிவர் ஒருவர் விஜயம் செய்தார். மன்னரும் மகாராணியும் அவரை அன்போடு வரவேற்று உபசரித்தனர். முனிவரின் காலில் விழுந்து வணங்கி, தங்கள் குறையை அவரிடம் தெரிவித்தனர். முனிவர் மன்னரை நோக்கி, “”இந் நாட்டு மக்களில் யாராவது ஒரு தாய், தான் பெற்ற ஒரே குழந்தையை வைகை நதிக்கு அர்ப்பணித்தால் உனக்குக் குழந்தை பிறக்கும்” என்று கூறினார். அதைக் கேட்டதும் மன்னரும் ராணியும் அதிர்ச்சி அடைந்தனர். எந்த ஒரு தாயும் இதற்கு ஒத்துக்கொள்வது என்பது இயலாத காரியம் என்று நினைத்து இருவரும் தயங்கினர். முனிவரும் “இதைத் தவிர வேறு வழியில்லை’ என்று கூறி அங்கிருந்து சென்றார். மன்னர் அமைச்சரை நோக்கி, “”யாரேனும் ஒரு தாய், தான் பெற்ற ஒரே குழந்தையை வைகை நதிக்கு அர்ப்பணித்தால், நாட்டில் பாதி பரிசாக அளிக்கப்படும்” என்று முரசு அறிவிக்கச் சொன்னார். நாடெங்கும் முரசு அறிவிக்கப்பட்டது. ஆயினும் மக்களில் எந்தத் தாயும் தங்களுடைய குழந்தையை ஆற்றில் விடுவதற்கு முன்வரவில்லை. நாட்கள் பல கடந்தன. அரசனும் அரசியும் மிகவும் சோர்ந்துபோயினர். அரசனின் உடல்நிலை இக் கவலையால் மிகவும் பாதிக்கப்பட்டது. அரசனும் அரசியும் கவலைப்படுவதை அரசனின் மெய்க்காப்பாளன் வேலப்பனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு ஓர் ஆண்குழந்தை இருந்தது. பிறந்து ஒரு வருடமே ஆகியிருந்த அக் குழந்தையை வேலப்பனும் அவனது மனைவி ரத்னாவும் மிகவும் நேசித்தனர். சில நாள்கள் சென்றன. கவலையினால் மன்னர் நோயுற்று, படுத்த படுக்கையானார். அரசன் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த வேலப்பனால் இந்தத் துயரைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. ஒரு குழந்தையின்றி, மன்னர் படும் வேதனையைப் பார்க்கச் சகிக்காமல் ஒரு முடிவுக்கு வந்தான். வீட்டுக்குச் சென்று தன் மனைவி ரத்னாவை அழைத்தான். “குழந்தையில்லாத ஏக்கத்தில் நம் மன்னர் இறந்துவிட்டால், பின்னர் நம் நாடு, சரியான தலைமையில்லாமல் பகைவர்களின் கையில் சிக்கி, அடிமையாகிவிடும்” என்றான். “அதற்கு நாம் என்ன செய்வது?” என்றாள் ரத்னா. “நம் நாட்டைக் காப்பாற்ற நாம் ஒரு தியாகம் செய்யவேண்டும். நமது குழந்தையை வைகை ஆற்றுக்கு அர்ப்பணிக்க வேண்டும்” என்றான். ரத்னா இதைக் கேட்டதும் அதிர்ச்சியில் மயங்கும் நிலைக்குச் சென்றாள். குழந்தையைப் பிரிவது - அதுவும் ஆற்றில் விடுவது என்பதை அவளால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. ஆயினும் குழந்தையை விட நாடும், மன்னரும் மிக முக்கியம் என்பதைப் பலவாறு தன் மனைவியிடம் எடுத்துச் சொன்னான் வேலப்பன். கணவனின் வார்த்தையை மீறாத அவன் மனைவியும் கண்ணீரோடு அதற்குச் சம்மதித்தாள். மறுநாள் குழந்தையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு வந்தாள். நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு எந்தவிதச் சலனமும் இல்லாமல் வைகை ஓடிக்கொண்டிருந்தது. ரத்னா ஆற்றில் இறங்கி, கண்ணீரோடு கடைசியாய்த் தன் மகனை முத்தமிட்டாள். ஒரு மூங்கில் தட்டில் குழந்தையைக் கிடத்தி, ஆற்றில் விட்டாள். பிறகு கதறி அழுதவாறே வீட்டுக்குச் சென்றாள். இச் செய்தி அரசனுக்கும் அரசிக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வேலப்பனையும் ரத்னாவையும் அழைத்து, கண்களில் நீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவர்கள் இருவரையும் புகழ்ந்து, “வேலப்பா, நீங்கள் இருவரும் செய்திருக்கும் தியாகத்துக்கு இந்த நாட்டையே பரிசாக உங்களுக்குக் கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாது. ஆயினும் நான் அறிவித்தபடி இந்த நாட்டில் பாதியை உங்களுக்குப் பரிசாகத் தருகிறேன்” என்றார் அரசர். வேலப்பன் மன்னரை வணங்கி, “பிரபு! தாங்கள் அளிக்கும் பரிசுக்காக நாங்கள் இதைச் செய்யவில்லை. தங்கள் மீதுள்ள அன்பினாலும் இந்த நாட்டின் மீது நாங்கள் வைத்திருக்கும் பாசத்துக்காகவும்தான் நாங்கள் இந்தக் காரியத்தைச் செய்தோம்” என்று கூறி, அரசன் அறிவித்த பரிசை ஏற்க மறுத்துவிட்டான். மன்னர் மிகவும் வற்புறுத்தியும் அவர்களிருவரும் பரிசை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. நாடே அவர்களின் தியாகத்தைப் போற்றிப் புகழ்ந்தது. சில நாள்களில் அரசி தாய்மைப்பேறு அடைந்தார். மன்னரும் மக்களும் மிகவும் மகிழ்ந்தனர். மாதங்கள் உருண்டோடின. அரசிக்கு ஓர் அழகிய ஆண்குழந்தை பிறந்தது. செய்தியறிந்து நாடே திருவிழாக் கோலம் பூண்டது. வேலப்பனும் ரத்னாவும் தங்கள் துக்கத்தை மறந்து, இந்த மகிழ்ச்சியில் பங்குகொண்டனர். அன்றிரவு ரத்னாவுக்குத் தன் குழந்தை ஞாபகம் வந்தது. வைகைக் கரைக்குச் சென்றாள். குழந்தையைத் தான் விட்ட இடத்துக்குச் சென்று நின்றுகொண்டு, மகன் நினைவில் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தாள். அப்போது.. திடீரென ஒருவர் ரத்னாவின் முன்னே குழந்தையோடு நிற்பது போலிருந்தது. கண்களைத் துடைத்துவிட்டு, ரத்னா உற்றுப்பார்த்தாள். மன்னருக்கு ஆசி வழங்கிய அதே முனிவர்தான். கையில் குழந்தையோடு நின்று கொண்டிருந்தார். அந்தக் குழந்தை, ரத்னாவின் குழந்தையேதான். ரத்னா வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் முனிவரைப் பார்த்தாள். குழந்தையை ரத்னாவிடம் கொடுத்த முனிவர், அவளைப் பார்த்து, “நீ குழந்தையை ஆற்றில் விட்டவுடன் நான்தான் எடுத்து வளர்த்து வருகிறேன். நீயும் உன் கணவனும் செய்த இந்த மாபெரும் தியாகத்தைப் பாராட்டுகிறேன். உங்கள் இருவருடைய நாட்டுப்பற்றை இந்த உலகம் உணரவே இதுபோல் செய்தேன். எதிர்காலத்தில் உன் மகன், இளவரசனுக்குத் துணையாக நின்று இந்த நாட்டைக் காப்பான்” என்று கூறி, ஆசி வழங்கினார். குழந்தையுடன் ரத்னா வீட்டுக்கு ஓடோடி வந்த மறுநிமிஷம், இச் செய்தி காட்டுத்தீ போல் பரவியது. அரசனும் அரசியும் ரத்னாவுக்கு மீண்டும் குழந்தை கிடைத்ததை அறிந்து மிகவும் மகிழ்ந்தனர். அக் குடும்பத்தை அழைத்து, அரசவையில் உரிய மரியாதை தந்து கவுரவித்தனர். அவர்களின் நாட்டுப்பற்றை நாடே கவுரவித்தது.
புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.“ஏண்டா இன்னைக்கு குளிச்சியா” என்றாள் அப்புவின் அம்மா.“நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடினான். அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது.அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார். “ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா?” என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.“மறந்திட்டேன் சார்” சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான்.அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், “யானை பல் விளக்குகிறதா” என்று கிண்டலாகப் பதில் சொல்வான்.அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை.அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது.ஆனால் பையன்கள் இவனை “அழுக்குமாமா” என்று அழைத்தனர்.அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.“டேய் குளிச்சிட்டுப் போய் படிடா” இது அப்புவின் அம்மா.“குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா” என்பான் அப்பு.பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான்.மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது.அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை.விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.“பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து” என்றார் டாக்டர்.அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான்.“தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராது” என்றார் டாக்டர்.அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான்.அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது.அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. “முதல் மார்க் ரங்கராஜன்” என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான்.ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார்.“சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்” என்றார். அப்பு மௌனமாக இருந்தான்.அடுத்தநாள் அவன் பள்ளிக்கு “பளிச்” என்று வந்தான்.“அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா” என்று ஒருவன் சொல்ல பையன் “கொல்” லென்று சிரித்தனர்.அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.
அக்பருக்கும் பீர்பாலுக்குமமடிக்கடி ஏற்படும் மனவேறு அன்றைக்கும் ஏற்பட்டது. அக்பர் ஏதோ சொல்ல, அதற்கு பதிலாக பீர்பால் எதையோ சொல்ல… பேச்சு வளர்ந்து பெரிய சச்சரவில் கொண்டு போய் விட்டு விட்டது. மன்னர் கோபம் கொண்டார்."இனிமேல் என்னுடைய மண்ணில் நீ வாழக்கூடாது. எனது ஆளுகைக்கு உட்பட்ட மண்ணில் நீர் நடமாடுவதை குற்றமாக நான் கருதுகிறேன். அதனால் என் மண்ணணவிட்டு நீ வெளியேறி விடவேண்டும்!" என்று ஆணை பிறப்பித்தார். "சரி. உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்ட மண்ணில் நான் வாழமாட்டேன்!" என்று வீராப்பாகச் சொன்ன பீர்பால் அங்கிருந்து வெளியாகி சீன நாட்டுக்கு சென்றார். சில ஆண்டுகள் கழித்து ஏராளமான மூட்டைகளுடன் தில்லி வந்து சேர்ந்தார்! ப்பீர்பால் ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்று சிலகாலம் இருந்து விட்டு இப்போது மீண்டும் தில்லிக்கே வந்துவிட்டதை அக்பர் அறிந்தார். உடனே அவருக்கு சினம் வந்தது. தனது தலைமை அமைச்சரை அனுப்பி பீர்பாலைஉடனே அரசவைக்கு அழைத்து வரச் சொன்னார். பீர்பாலின் இல்லம் சென்ற அமைச்சரை அன்போடு வரவேற்று வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினார். "இது என்ன வீட்டுக்குள்ளும் வெளியிலும் மண்ணைக் கொட்டி வைத்திருக்கிறீர்களே?" என்று கேட்டார் அந்த அமைச்சர். "இந்த மண் சீன நாட்டில் இருந்து கொண்டு வந்தேன். ஒரு காரணத்திற்காகத்தான் பரப்பி வைத்திருக்கிறேன்!" என்று கூறினார். பின்னர் அந்த அமைச்சரின் வண்டியைப் பிந்தொடர்ந்து தன் வண்டியிலேயே அரசவை நோக்கி புறப்பட்டார். செல்லும் வழியில்… "இதென்ன வண்டிக்குள்ளும் இவ்வளவு மண்??" என்று கேட்டார் அந்த அமைச்சர். "எல்லாம் காரணமாகத்தான்!" என்று பதில் அளித்தார் பீர்பால். அரண்மனைக்குச் சென்றதும் அரசர் முன் நின்று வணங்கினார் பீர்பால். "என் உத்தரவையும் மீறி இன்னும் தில்லி நகரத்தில் உலவுகிறீர்? என்னுடடய உத்தரவை அலட்சியம் செய்கிறீர்! என்னை மதிக்காமல் இந்த மண்ணில் உம்மால் வாழ்ந்து விட முடியுமா?" என்று கோபத்துடன் கேட்டார் அக்பர். "மன்னர் பெருமானே! தங்கள் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு எனக்கு ஒன்றும் தெரியாது. தங்களின் உத்தரவை அப்படியே பின்பற்றி வருகிறேன்!" என்று சொன்னார் பீர்பால் பவ்யமாக. "எங்கே நிறைவேற்றுகிறீர்? இப்போது தில்லியில் அல்லவா நீர் தங்கி இருக்கிறீர்?" என்றார் அக்பர் சினத்துடன். "தில்லியில் நான் தங்கி இருப்பது உண்மைதான். ஆனால் தங்களின் மண்ணில் நான் நடமாடவில்லை. அமைச்சரைக் கேட்டுப் பாருங்கள். அவரே என் வீட்டுக்கு வந்து பார்த்தாரே!" என்றார் பீர்பால். அக்பர் அமைச்சரை நோக்கினார்… உடனே அமைச்சர் பதில் அளித்தார்.. "மன்னர் அவர்களே! பீர்பால் தம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியிலும் மண்ணைக் கொட்டி பரப்பி இருக்கிறார். பயணம் செய்த வண்டியிலும்கூட மண்ணைக் கொட்டி இருந்தார். எதற்காக இப்படி எல்லாம் செய்திருக்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்டேன்.. காரணமாகத்தான் என்று சொல்கிறார்!" அப்போது பீர்பால், "மன்னர் பிரான் அவர்களே,"என் வீட்டின் உள்ளும் வெளியிலும் நான் பயணம் செய்யும் வண்டியிலும் நான் உலவும் என் வீட்டுத் தோட்டங்களிலும் நான் கொட்டி பரவி இருப்பது சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண். அது தில்லியின் மண் அல்ல. தங்களுக்கு சொந்தமான மண்ணில் நடமாடக் கூடாது என்றீர்கள். அதனால்தான் சீன மண்ணில் நடமாடிக் கொண்டிருக்கிறேன். இது எவ்வாறு தங்கள் உத்தரவை மீறிய செயலாகும்?" என்று அப்பாவி போல் பதில் சொன்னார். பீர்பால் விளக்கம் கொடுத்ததும் அக்பர் உட்பட அவையினர் சிரித்தனர். மன்னருக்கு சினம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று. வாய்விட்டுச் சிரித்தவாறே, "உம்மை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்றே தெரியவில்லை!" என்று மகிழ்ச்சியுடன் சொல்லி தன் உத்தரவினை வாபஸ் வாங்கிக் கொண்டார் அக்பர்.
அது ஒரு அடர்ந்த காடு. பக்கத்துக் கிராமத்திலிருந்து கழுதை ஒன்று அந்தக் காட்டிற்கு வழி மாறி வந்தது. வரும் வழியில் பல மிருகங்கள் பயத்துடன் ஓடி வந்தன, அதில் ஒரு மானும் இருந்தது. அந்த கழுதை மானிடம், "ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி செல்கின்றன?" என்று கேட்டது. அதற்கு மானோ, "இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது. அதைக்கண்டு தான் நாங்கள் அனைவரும் இப்படி ஓடுகின்றோம்." என்று கூறிவிட்டுச் சென்றது. கழுதையும் சிங்கத்தின் வீரத்தை நினைத்துகொண்டே காட்டிற்குள்ளே சென்றது. சிறிது துரம் கடந்து சென்றது களைபடைந்த கழுதை ஒரு ஓடையைப் பார்த்தது. கழுத்தையும் தண்ணீர் குடிக்க அந்த ஓடைக்கு அருகில் சென்றதும் அங்கே சில வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடிய மான், புலி, சிங்கம் போன்ற மிருகங்களின் தோலை அங்கிருந்தப் பாறைகள் மேல் உலர வைத்திருந்தனர். அதைப் பார்த்ததும் கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்துத் தன் உடம்பின் மேல் போர்த்திக்கொண்டது. அந்த கழுத்தையும் பார்பதற்க்கு சிங்கம் போலவே இருந்ததனால், மற்ற மிருகங்களும் கழுதைப் பார்த்துப் பயந்து ஒதுங்கிப் சென்றன. மிருகங்கள் எல்லாம் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழிக் கொடுத்து ஒதுங்கிப் போனதைப் பார்த்து கழுதைக்கு, கர்வம் தலைக்கேறியது. சிறிது தூரம் அந்த கழுதை அந்த காட்டில் உலாவி கொண்டிருந்தது. செல்லும் வழியில் நரி ஒன்றினை அந்த கழுதை பார்த்தது. சரி இந்த நரியையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து, நரியின் அருகில் சென்றது. நரியும் பயத்தில் நடுங்கிக்கொண்டே "சிங்க ராஜ, நான் தெரியாமல் இந்த பக்கம் வந்துவிட்டேன் இனி நான் இந்த காட்டிற்கே வர மாட்டேன்", என்று கழுதையிடம் கூறியது. கழுதையும் சிங்கம் போல கர்ஜிக்கணும்னு நினைச்சு "ங்கெ ங்கெ"ன்னு கத்தியது. அதோட குரல் அது கழுதைன்னு நரிக்கு காட்டிக் கொடுத்தது. அதன் பிறகு அந்த கழுதைய நரி மதிக்கவேயில்லை. "எனக்கு கோவம் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு", என்றது கழுதை. அதற்கு நரியோ, கழுதையைப் பார்த்து "முடியாது" என்று பதில் கூறியது. மேலும் நரி கழுதையிடம், "நீ சிங்கம் போன்று வேஷம் போட்டாலும் உன்னுடைய உண்மையான குணத்தை உன்னால் மாற்ற முடியாது." என்று கூறியது. கழுத்தையும் வெட்கித் தலைகுனிந்தது. நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேடம் போட்டாலோ அல்லது அவரைப் போல நடந்து கொள்வதாலோ அவமானம்தான் மிஞ்சும்.
கபாலிபுரம் என்ற மாநகரில் கபிலன் என்ற ஓவியன் இருந்தான். ஓவியம் வரைவதில் மிகுந்த திறமை உடையவன். யாரைப் பார்த்தாலும் அவர்களை அப்படியே ஓவியம் வரைந்து விடுவான். ஓவியத்திற்கும் அந்த ஆளுக்கும் சிறு வேறுபாடு கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு பொருத்தமாக ஓவியம் வரைவான். பணக்காரர்களை ஓவியமாக வரைந்து கொடுப்பான். அந்த ஓவியத்தை நல்ல விலை கொடுத்து வாங்குவர். அதைத் தங்கள் வீட்டில் அழகாக மாட்டி வைப்பர். அந்த ஊரில் ராஜன் என்ற செல்வன் இருந்தான். யாருக்கும் எதையும் தராத கருமி அவன். அவனுடைய பிறந்த நாள் விழா வந்தது. நிறைய உறவினர்கள் விழாவிற்கு வந்திருந்தனர். ராஜனின் இயல்பை அறியாத கபிலன் அந்த விழாவிற்குச் சென்றான். ராஜனை வணங்கிய அவன், “ஐயா! நான் சிறந்த ஓவியன். உங்களை அப்படியே ஓவியமாக வரைந்து தருகிறேன். உங்களையே நேரில் பார்ப்பது போல இருக்கும். அதை வரவேற்பு அறையில் அழகாக மாட்டி வைக்கலாம். அந்த ஓவியத்திற்கு எவ்வளவு பணம் தருவீர்கள்?” என்று கேட்டான். “உறவினர்கள் தன்னைப் பெருமையாக நினைக்க வேண்டும். பிறகு பணம் தராமல் இவனை ஏமாற்றலாம்’ என்று நினைத்தான் ராஜன். “நீ வரையும் ஓவியம் என்னைப் போலவே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஆயிரம் பணம் தருகிறேன். இல்லாவிட்டால் பணம் எதுவும் தரமாட்டேன்,” என்றான். “உங்களைப் போலவே ஓவியம் வரைந்து ஒரு வாரத்தில் தருகிறேன். குறை ஏதும் இருந்தால் பணம் தர வேண்டாம்,” என்றான் ஓவியன். ராஜனைப் போலவே ஓவியம் வரைந்து எடுத்து வந்தான். அந்த ஓவியத்தை மேலும் கீழும் பார்த்தான் ராஜன். “இந்த ஓவியம் என்னைப் போலவா இருக்கிறது? நீயே பார். இவ்வளவு நரையா என் தலையில் உள்ளது? என்னைக் கிழவனாக்கிவிட்டாயே… நான் இருப்பது போல இளமையாக ஓவியத்தை வரைந்து கொண்டு வா,” என்றான். அந்த ஓவியத்தை எடுத்துச் சென்றான் கபிலன். அதில் சில மாற்றங்கள் செய்தான். அந்த ஓவியத்தை மீண்டும் ராஜனிடம் கொண்டு வந்தான். “என்னைத் தானே ஓவியம் வரையச் சொன்னேன். நீ எவனோ ஓர் இளைஞனை வரைந்து உள்ளாயே… இளமையும் முதுமையும் கலந்தது போல உன்னால் வரைய முடியாதா?” என்று கேட்டான். அந்த ஓவியத்தில் மேலும் சில மாற்றங்களைச் செய்தான் கபிலன். “இந்த ஓவிய மும் என்னைப் போல இல்லை. வேறு ஓவியம் வரைந்து கொண்டு வா,” என்றான் ராஜன். “எப்படி வரைந்தாலும் இவன் ஓவியத்தை வாங்கப் போவது இல்லை. ஏதேனும் குறை சொல்லித் திருப்பி அனுப்பப் போகிறான். என்ன செய்வது?’ என்று சிந்தித்தான் கபிலன். பீர்பாலிடம் வந்து நடந்ததை சொன்னான், “அந்தச் செல்வன் ஓவியம் வாங்காமல் என்னை ஏமாற்றுகிறான். என் உழைப்பிற்கு நீங்கள்தான் ஊதியம் வாங்கித் தர வேண்டும்,” என்று வேண்டினான். ராஜனை வரவழைத்தார் பீர்பால். “ஏன் இந்த ஓவியனை ஏமாற்ற நினைக்கிறீர். பலமுறை திருத்தம் செய்தும் ஓவியத்தை வாங்க மறுக்கிறீராமே?” என்று கேட்டார். “அமைச்சரே! நான் யாரையும் ஏமாற்றவில்லை. என்னைப் போல ஓவியம் வரைந்து தா. ஆயிரம் பணம் தருகிறேன் என்று இவனிடம் சொன்னேன். இவன் வரைந்த ஓவியம் என்னைப் போல இல்லை. அதனால்தான் பணம் தரவில்லை. என்னைப் போலவே ஓவியம் வரைந்து தரச் சொல்லுங்கள். ஆயிரம் பணத்திற்குப் பதில் இரண்டாயிரமே தருகிறேன்,” என்றான் ராஜன். “ஓவியம் என்றாலே சிறு சிறு குறைகள் இருக்கத்தானே செய்யும். இது உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார் பீர்பால். “அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னைப் போலவே ஓவியம் வரைந்து தரச் சொல்லுங்கள். இரண்டு பங்கு பணம் தருகிறேன். குறை இருந்தால் ஒரு பணமும் தரமாட்டேன்,” என்று அடாவடியாகப் பேசினான் அவன். “ஒரு வாரம் சென்று வாருங்கள். உங்களைப் போலவே ஓவியம் இங்கு இருக்கும். அதில் குறை இருந்தால் பணம் தரவேண்டாம்,” என்றார் பீர்பால். “அந்த ஓவியத்திலும் எப்படியும் குறை கண்டுபிடித்து பணம் தராமல் தப்பிக்கலாம்’ என்று புறப்பட்டான் ராஜன். “நீ ஓவியம் ஏதும் வரைய வேண்டாம். அடுத்த வாரம் இங்கு வா. பணத்துடன் செல்லலாம்,” என்றார். ஒரு வாரம் சென்றது. பீர்பாலின் மாளிகைக்கு ஓவியன் முதலில் வந்தான். பிறகு ராஜன் வந்தான். “உங்களைப் போலவே வரையப்பட்ட ஓவியம் இது. திரைச் சீலையால் மூடப்பட்டுள்ளது. சீலையை விலக்கிப் பாருங்கள். சிறு குறையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது,” என்றார். “எப்படியும் வரைந்து இருக்கட்டும். குறை கண்டுபிடித்து விடலாம்’ என்று திரையை விலக்கினான் அவன். அங்கே அவனைப் போலவே ஓவியம் இருந்தது. ஆனால், அந்த ஓவியம் அசைந்தது; கண்களை இமைத்தது. “அது ஓவியம் அல்ல. எதிரே உள்ளவர் வடிவத்தை அப்படியே காட்டும் நிலைக்கண்ணாடி. அதில் தன் வடிவம் தெரிகிறது’ என்பது அவனுக்குப் புரிந்தது. “அமைச்சரே! இது ஓவியம் அல்ல. முகம் பார்க்கும் கண்ணாடி,” என்றான் அவன். “கண்ணாடியில்தான் நம் வடிவம் அப்படியே தெரியும். குறை எதுவும் காணமுடியாது. ஓவியம் என்றால் குறைகள் இருக்கத்தான் செய்யும். இந்தக் கண்ணாடியை எடுத்துச் செல்லுங்கள். ஓவியனுக்கு இரண்டாயிரம் பணம் தாருங்கள்,” என்றார் பீர்பால். “அமைச்சரே! இது நியாயம் அல்ல!” என்றான் அவன். “நியாயத்தைப் பற்றி நீங்கள் பேசாதீர்கள். குறையே இல்லாமல் யாராலும் ஓவியம் வரைய முடியாது. இதை அறிந்த நீங்கள் என்ன செய்தீர்கள்? இந்த ஓவியங்களை எத்தனை முறை வரையச் சொன்னீர்கள்? “நம் வடிவம் கண்ணாடியில்தான் குறை இன்றித் தெரியும். இரண்டாயிரம் பணம் தந்து இதை வாங்கிச் செல்லுங்கள். இல்லையேல் ஏமாற்ற முயன்றதற்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்,” என்றார் பீர்பால். “ஆயிரம் பணம் கொடுத்து அந்த ஓவியத்தையே வாங்கி இருக்கலாம். வீட்டில் அழகாக மாட்டி வைத்து இருக்கலாம். எல்லாரும் பார்த்து மகிழ்ந்து இருப்பர். பத்துப் பணம் பெறாத கண்ணாடி இது. இதற்கு இரண்டாயிரம் பணம் தர வேண்டி வந்ததே’ என்று தன்னையே நொந்து கொண்டான் அவன். ஓவியனிடம் இரண்டாயிரம் பணம் தந்தான். அந்தக் கண்ணாடியை எடுத்துக் கொண்டு வருத்தத்துடன் சென்றான் பணக்காரன்.
ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து ” என் வீட்டில் குடும்ப விழா ஒன்று நடக்கிறது, புழங்குவதற்குப் போதிய பாத்திரங்கள் இல்லை உங்களிடம் இருக்கும் சொற்ப பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடும். வேலை முடிந்ததும் திரும்பித் தந்து விடுகிறேன் ” என்று கேட்டார். முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு மிகவும் பெரிய கெட்டிப் பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடுத்தார். பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மாதிரியான நையாண்டி மனிதர். யாரையும் கேலியும் கிண்டலும் செய்து சிரிக்கச் செய்வது அவரது வழக்கம். முல்லாவிடம் இரவல் வாங்கி பாத்திரத்தை அவர் திரும்பிக் கொடுக்கும் போது ஏதாவது ஒரு விதத்தில் முல்லாவை நையாண்டி செய்து பார்க்க வேண்டும் என அவர் தீர்மானித்தார். அவர் பாத்திரங்களை திரும்பிக் கொடுக்க வந்தபோது, முல்லா கொடுத்த இரண்டு பாத்திரங்கள் கூட ஒரு செம்பும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். ” நான் இந்தச் செம்பை உங்களுக்கு கொடுக்கவில்லையே?” என வியப்புடன் கேட்டார் முல்லா. ” முல்லா அவர்களே உங்களுடைய பாத்திரங்கள் என் வீட்டில் இருந்த போது இந்தச் சொம்பைக் குட்டி போட்டன. அதனால் குட்டியையும் உடனே கொண்டு வந்தேன் ” என்றார் அண்டை வீட்டுக்காரர். சற்று யோசித்த முல்லாவுக்கு அவர் நம்மை நையாண்டி செய்வதற்காக இந்த நாடகமாடுகிறார் என்று புரிந்து கொண்டார். சந்தர்ப்பம் வாய்க்கும் போது அவருக்குச் சரியான புத்தி கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். ” ஆமாம் நண்பரே பாத்திரங்களை கொடுக்கும்போது அவை கர்ப்பமாக இருக்கின்றன என்ற உண்மையைச் சொல்ல மறந்து விட்டேன் ” என்று கூறியவாறு அண்டை வீட்டுக்காரர் கொடுத்த பாத்திரங்களை வாங்கிக் கொண்டார் முல்லா. சில நாட்கள் கடந்தன, ஒரு நாள் முல்லா அண்டை வீட்டுக்காரரிடம் சென்று என் வீட்டில் ஒரு விசேஷம் புழங்குவதற்குத் தேவையான பெரிய பாத்திரம் இல்லை. தயவு செய்து பெரிய பாத்திரங்கள் இரண்டு கொடுங்கள் என்று கேட்டார். அந்த வீட்டுக்காரரும் இரண்டு பெரிய பாத்திரங்களை கொடுத்தார். முல்லா அவற்றை வீட்டுக்கு எடுத்து வந்தார். இரண்டு நாட்கள் கழித்து முல்லா ஒரு பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அண்டை வீட்டுக்காாரிடம் சென்றார். ” உங்களிடம் வாங்கிய பாத்திரம் இதோ இருக்கிறது. பெற்றுக்கொள்ளுங்கள” ் என்றார். ” நான் இரண்டு பாத்திரம் கொடுத்தேனே ஒன்றுதான் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் ?” என அண்டை வீட்டுக்காரர் கேட்டார். முல்லா தமது முகத்தில் வருத்தம் பிரதிபலிக்க ” நண்பரே ஒரு தீய நிகழ்ச்சியினைச் சொல்வதற்காக வருந்துகிறேன். தாங்கள் எனக்கு அளித்த பாத்திரங்களில் ஒன்றான பெண் பாத்திரம் கர்ப்பமாக இருந்திருக்கிறது. என் வீட்டுக்கு வந்த இரவே அது பிரசவ வேதனைப்பட ஆரம்பித்து விட்டது. துரதிர்ஷ்டவசமாக அது பிரசவித்த குழந்தையும் செத்து விட்டது. தாயும் இறந்து விட்டது. அவை இரண்டையும் தகனம் செய்து விட்டேன் ” என்றார். முல்லா தனக்குச் சரியானபடி பதிலடி தருகிறார் என்பதைப் புரிந்து கொண்ட அண்டை வீட்டுக்காரர் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ” இனி இந்த மாதிரி உங்களை நையாண்டி செய்ய மாட்டேன். தயவு செய்து என் பாத்திரத்தைத் திருப்பித் கொடுத்து விடுங்களஞ் என்று வேண்டிக் கொண்டார். முல்லா அவரடைய பாத்திரத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.
வெறுமையில் வெளிறிய வானம், தன்னில் எதுவுமே இல்லை என்று கைவிரித்துக் கிடந்தது. மொட்டை மாடியின் கட்டைச் சுவர் ஈரக் கரும்பச்சை நிறத்தில் இந்த உச்சி வெயிலிலும் தண்மை உள்ளோடியிருந்தது. "பானு..." என்று வட்ட விளிம்பில் பெயர் பொறித்த வட்டிலில் பருப்புச் சாதமும், பட்டாணிப் பொரியலும் வைத்து என்னை மாடிக்கு ஏற்றிவிட்டிருந்தாள் அம்மா. ஆரம்பப்பள்ளி நாள்களில் ஸ்கூல் மெஸ்ஸ•க்குக் கொண்டு போகவென்று, அம்மா தினமும் காலையில் புதிது போல் துலக்கிய வட்டிலையும், டம்ளரையும் அவரவர் பையில் எடுத்து வைப்பாள். வரிசையாக எங்களைப் புகுந்த வீடு அனுப்பிய பிறகும் அந்த வட்டில்கள் எங்கள் பெயர்களோடு அம்மாவின் சமையலறையில் தங்கிவிட்டன. இந்த வெறிச்சென்ற வெயில், உலகத்தில் பறவைகளே இல்லை என்று எண்ண வைத்தது. ஆனால் அம்மா மிகுந்த நம்பிக்கையோடு கைசொல்லியிருந்தாள். அது வரும் - சரியாக மதியம் பன்னிரண்டே முக்கால் மணிக்கு. அடுப்பில் குக்கரின் விசில் அடங்கி இருக்காது. கொதிக்கும் குழம்பின் மேல் எண்ணெயின் ஏடு படியச் சற்றுக் காத்திருக்க வேண்டியிருக்கும். அதற்குள், "அம்மா பசிக்குது, பசிக்குது" என்று பானு தவித்துவிடுவாள். "என்ன அதிசயம் பாரு, தினமும் அதே பனிரெண்டே முக்காலுக்கே அந்தக் காக்காவும் வந்திடுது, என் கைச் சோற்றைச் சாப்பிட." அம்மா முகம் கலங்கி நிலைக்கச் சொன்ன போது எனக்கு அதில் சிறிதும் நம்பிக்கை வரவில்லை. "நீ தினமும் அதே நேரத்துக்கு மாடிக்குப் போவதால் அதுவும் வருது" என்று சொல்ல நினைத்தேன். இது இழந்துவிட்ட மகளின் இருப்பை எதிலோ காண அம்மா செய்யும் பலவீனமான முயற்சி. அதில் அவள் அடையும் மெல்லிய ஆறுதலை நான் எதற்காக அழிக்க வேண்டும்? மாடிச் சுவருக்குக் கீழாக வரிசையாகச் செந்நிறத் தொட்டிகளிருந்தன. சிறு பூச்செடிகளும், குரோட்டன்களும். அவற்றில் அந்தச் சாமந்தி பானு நட்டது. அது இன்னும் செழிப்பாக, பூத்துச் சிரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நீண்ட கம்பிக் கொடிகளில் நானும், அவளும் சேர்ந்து எத்தனையோ நாள்கள் துவைத்த துணிகளை உதறி உலரப் போட்டிருக்கிறோம்; துணிகளின் விளிம்புகளைச் சேர்த்துச் சேர்த்துச் சீராக்கி க்ளிப் மாட்டி நகரும் அவள் விரல்கள் இப்போதும் கம்பிக் கொடி மீது தத்திக் கொண்டிருப்பதாகத்தான் உணர்கிறேன். கோடைக்கால அதிகாலைகளில் அம்மா வடகத்திற்காக மாவரைத்து, கூழ் காய்ச்சி, வீட்டு வேலை பார்க்கும் தாயக்காவிடம் பானையைக் கொடுத்து மாடிக்கு அனுப்புவாள். நாங்களும் அடம் பிடித்து பின்னாலேயே ஓடுவோம். இந்த நீர்த்தொட்டியின் நிழலில் அம்மாவின் புடவையை விரித்து, நாற்புறமும் கற்கள் வைத்து, கிண்ணங்களில் அம்மா ஊற்றித் தந்த வடகக் கூழைச் சின்ன ஸ்பூனால் சீரான வட்டங்களாக ஊற்றி வைத்திருக்கிறோம் எவ்வளவோ முறை. "வெயில் வர்ரதுக்கு முன்னாடி மடமடன்னு ஊத்திட்டு இறங்குங்க." - அம்மா குரல் கொடுப்பாள் கீழேயிருந்து. தாயக்காவின் விரல்கள் வேகம் பிடிக்கும். நானும், தங்கைகளும் கீழே கொஞ்சம், மேலே கொஞ்சம், வாயில் கொஞ்சம், சேலை விரிப்பில் கொஞ்சம் என்று ஊற்றி விளையாடுவோம். இளவெயில் ஆரம்பித்திருக்கும். ஊற்ற, ஊற்ற வடகம் மெல்லிய கண்ணாடித் தாள் துண்டங்களாக உலர்ந்துகொண்டே வரும். அதன் மினுமினுப்பில் சீரகம் பதிந்து தெரியும். யார் கிண்ணம் முதலில் தீருமென்று போட்டி போட்டுக்கொண்டு ஊற்றுவோம். எல்லாப் போட்டிகளிலும் முதலில் ஜெயிப்பவள் பானுதான். இப்போதெல்லாம் இது போன்ற ஞாபகங்களை யாரோ எழுதிய பக்கங்களைப் போல வறண்ட விழிகளோடு வாசிக்க முடிவது ஆச்சர்யம்தான். தங்கைக்குப் பிடித்த நிற உடைகளை அணிகையிலும், தின்பண்டங்களை ருசிக்கும் போதும் ஏற்பட்ட கடுமையான குற்ற உணர்வு வரவர மங்கித் தேய்ந்து வருகிறது. "நான் அவளை மறந்து விடுவேனோ?" என்று நடுக்கத்தோடு நினைத்துக் கொள்கிறேன். "வந்ததா?" படிக்கட்டிற்குக் கீழிருந்து கேட்ட அம்மாவிடம், "இன்னும் வரலைம்மா" என்றேன் சலிப்போடு. "மணி இப்பதான் பனிரெண்டு நாற்பது" என்றாள் அம்மா. சொல்லி வாய் மூடியிருக்கமாட்டாள். அவள் குரலின் கடைசி ஒலித்துணுக்கு என் காதுகளுக்குள் இறங்கிக் கொண்டிருக்கும் போதே வானில் ஒரு கதவு திறந்துகொள்ள அது உதித்தது. பூமியிலிருந்து வானத்துக்குப் போனதா அல்லது வானத்தில் வசித்துக்கொண்டு எப்போதாவது பூமிக்கு வருதா என்று அதிசயித்தேன். அதன் கரிய இறக்கைகள்; அசையாத கண்கள்; சுவர்த் திட்டில் உட்கார்ந்ததும் அது காட்டிய சவத் தன்மை என்னை அண்ட விடாமல் அச்சுறுத்தியது. கோயிலில் நவக்கிரகச் சந்நிதியை அம்மாவோடு சுற்றும் போது, "ஹை, கல் காக்கா" என்றுவிட்டு, தலையில் குட்டு வாங்கி, "கன்னத்தில் போட்டுக்கோ. சனி பகவான் அது" என்று அம்மா அறிவுரை சொல்வாள். பசிப் பரபரப்போ, இரையையடைந்த பரபரப்போ சற்றுமின்றி அது சாதத் தட்டை உற்றுப் பார்த்தது. இருள் தகடுகள் போன்ற இறக்கைகளை விரித்து இறங்கி, தனக்கான நிவேதனத்தை ஏற்கிற நிதானத்தோடு ஒரேயொரு பருக்கையை நாசூக்காகக் கொத்திக் கொண்டது. நான் அதை வெறித்தபடி இருந்தேன். சற்றுச் சாய்ந்த கழுத்து, உயிரற்றதோவென்று திகைக்க வைக்கும் கோலிக்குண்டுக் கண்கள். காகம் நளினமாகச் சுவர்த் திட்டில் நடை பயின்றது. ஒரு நீண்ட உரையாடலைத் துவக்கப் போவதுபோல் தொண்டையைச் செருமிக் கொண்டது. இறக்கைகளை விரித்துப் படபடவென்று அசைத்தது. அந்தச் செயல் தன்னைத் தழுவ வேண்டுமெனத் தரையிலிருந்து தாவும் பிள்ளையை நினைப்பூட்டியது. ஏதோ ஒரு உறவுக்கான ஏக்கம் அதன் அசைவுகளில் கசிந்து கொண்டிருக்கையிலேயே நான் சகிக்க முடியாத ஒரு நாடகத்திலிருந்து வெளியேறுபவளாக உணவுத் தட்டை அங்கேயே விட்டுவிட்டுப் படிகளுக்கு ஓடினேன். என் கண்கள் ஏனோ கசிந்தன. எரிபட்ட காகிதச் சுருளென அந்தக் காகத்தின் பறப்பு தாழ்வாரத்திலிருந்து மேலே பார்த்த போது தெரிந்தது. உடனடியாக இந்த வீட்டிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்றிருந்தது எனக்கு. எந்த மூலையிலிருந்தாலும் பானுவின் பூஜையறைப் புகைப்படத்திலிருந்து நீண்டு வந்து தொடும் புன்னகை. உயிர் பொங்கும் வாசனை. தரையில் உலராமல் கண்ணீர்த் துளிகள் சிதறிக் கிடப்பதாகவே பிரமையேற்படுகிறது. அம்மா, "இருந்துவிட்டுப் போயேன் ஒரு இரண்டு நாளாவது" ஏக்கமாய்ச் சொன்னாள். "இல்லைம்மா, கிளம்பறேன். இங்கிருந்தா என்னென்னவோ ஞாபகம் வருது." துணிகளைப் பெட்டிக்குள் திணித்துக் கொண்டே சொன்னேன். அவசரமாகக் காரிலேறிப் பயணம் துவங்கியதும் நிம்மதியாக உணர முடிந்தது. சாலையை அகலப்படுத்தவென்று வெட்டிச் சாய்க்கப்பட்ட மரங்கள். பிரேதங்களைப் பார்க்கும் போது ஏற்படும் துயரத்தை அவற்றின் பிளந்த சதையைக் காண்கையில் அநுபவித்தேன். எல்லாவற்றையும் கடந்து கார் வேகமாகப் போய்விட வேண்டும் என்று பதைபதைத்தேன். வேகமாக, இன்னும் வேகமாக, மிகமிக வேகமாக. உருவற்ற எதிலிருந்தோ ஓடித் தப்பி விடுகிறதாக இருந்தது என் பதற்றம். வயல்களின் பசுமை; மலைகளின் நீலம்; மலர்களின் மஞ்சள்; அந்தி வானின் ஆரஞ்சு. நல்லவேளை, உலகம் வர்ணக் கோலாகலங்களாலானது. கறுப்பின் துக்கம் மட்டுமே அதை ஆக்ரமித்திருக்கவில்லை. இருக்கையில் நிதானமாய்ச் சாய்ந்து, நீண்ட மூச்சுக்களை ஆழமாக இழுத்து விட்டேன். ஜன்னல் கண்ணாடி வழியாக, வருடக்கணக்காய்ப் பார்த்துப் பழகிய இந்தப் பாதையை இன்றுதான் புதிதாக - முதல் முறையாகப் பார்ப்பது போல் விழி விரிய ஆர்வத்துடன் கவனித்த போது அதைப் பார்த்தேன். அதுவேதான். வானின் துல்லியமான வெறுமை. கரிய அலையொன்று நடுவில் மடிக்கப்பட்டு நீண்டு உடலாகி, இருபுறமும் சிறகுகள் விரிய, தலையும் அலகும் முளைத்தாற்போல் அது ஒன்றுமின்மைக்குள்ளிருந்து தோன்றியது. உலகத்தின் அத்தனை துன்பங்களையும் மொத்தமாகத் தன் சிற்றுடல் மேல் சுமப்பது போல் கவிழ்ந்து காரின் ஓட்டத்திற்கு இணையாகப் பறந்து கொண்டிருந்தது. இல்லை, இது எப்படி அதே காகமாக இருக்க முடியும்? ஆனால் அதே சாய்ந்த பார்வை. கழுத்தடியில் அதே சிறு வெண்திட்டு. அதை அடையாளப்படுத்துவதாக. எனக்குள் அச்சம் பெருகியது. அதன் பார்வை என்னை நோக்கித் திரும்பியது. மூடிய ஜன்னல் கண்ணாடியைத் துளைத்துக்கொண்டு உள் நுழைந்த அதன் மன்றாடல்கள் எனக்குள் எரிச்சலையே விளைவித்தன. இடைவிடாத அதன் தொடரலைக் கவனியாதது போல், கண்டுகொள்ளாதது போல், நிராகரிப்பது போல் பாவனை செய்வது வசதியாக இருந்தது. அது ஏன் என்னையே பின் தொடர வேண்டும்? சலிக்காமல். சிறகடிப்புகளில் உரத்து ஒலிக்கிற இறைஞ்சல்களுடன் பிடிவாதமாக. என்னவோ ஒரு செய்தியை ஏந்தி வருகிற தூதுவன் போல். என்னிடம் எதையோ சொல்லத் தவிப்பது போல. நான் விரும்பாவிட்டாலும் அந்தத் தகவல் என் மனதில் ஊன்றப்படப் போகிறது ஆழமாக. ஒரு சிறிய இடைவெளியில் அது விலகி, என் கண்ணில் படாமல் காணாமல் போனபோது பெரும் ஆசுவாசத்தையடைந்தேன். ஊர் நெருங்கிவிட்டது. இந்த ஊருக்குள் அது வராது என்று எனக்கு நானே உறுதி செய்துகொண்டேன் ஏனோ. விரிந்த கதவுகளோடிருந்த வீட்டின் அரவணைப்பை இதமாக உணர்ந்தேன். இரண்டு நாட்கள். நான் வீட்டுக்குள்ளேயே பதுங்கிக் கொண்டேன். முற்றம், ஜன்னல், வாசல், தோட்டம் என்று காகங்களைச் சந்திக்கும் இடங்களைக் கவனமாகத் தவிர்த்தேன். கறுப்பு நிறப் புடவைகள், ஸ்டிக்கர் பொட்டுகள், கறுப்பு அட்டையுள்ள புத்தகங்கள் எல்லாவற்றையும் மறைத்துவிட்டால் மரணத்தின் நிச்சயத்தன்மையையும் தவிர்த்து விடலாமென நம்பினேன் அபத்தமாக. சீரான ஒழுங்கமைதியோடு ஓடுகிற தின வாழ்க்கை அலுப்பூட்டுவது, திருப்பங்களில்லாதது. ஆனால் அபாயங்களற்றது. நாட்களின் நகர்வில் அந்தக் காகத்தை நான் மறந்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். பானுவின் பிறந்த தேதியன்று சமைக்கும் போதும், துணிகளை மடித்து அடுக்குகையில், புத்தகத்தில் என்னைப் புதைக்க முற்படும்போதும் அவள் நினைவுகள் வேதனை தந்தன. அப்படியே அடுத்த பிறவியிருந்தாலும் பானு ஒரு காகமாகவா பிறப்பாள்? சே... இல்லவே இல்லை. அவள் ஒரு புறாவாகப் பிறந்திருக்கக் கூடும். அல்லது மயிலாக; இல்லை, ஒரு சிட்டுக்குருவியாகவாவது. பட்டாம்பூச்சியாகப் பூக்களுக்கிடையில் திரிந்து கொண்டிருப்பாள் என்று நினைக்கப் பிடித்திருந்தது. உடனே "மறுபிறவியாவது ஒன்றாவது" என என்னையே மறுத்துக்கொண்டேன். புழுங்கிக் குமைந்த பகலைக் கோடைமழை ஊடுருவியது. ஜன்னல் கண்ணாடியில் வழியும் மழைத் தாரைகளைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அது வரப்போகிறது என்பது என் உள்ளுணர்வுக்குத் தெரிந்தே இருந்தது. அது மழையில் நனைந்து சொட்டும் சிறகுகளோடு வந்து ஜன்னல் மரச் சட்டத்தின் வெளித்திட்டில் உட்காந்தது. அப்போதுதான் எனக்கு நினைவு வந்தது அது ஒருமுறையேனும் மற்ற காகங்களைப் போல் கரையவேயில்லை என்பது. அது சிறகுகளைச் சிலுப்பி நீரை உதறிக்கொண்டது. அந்த வரிகளை எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேனா என்ன? "ஆத்மா என்ற நிலையில் அனைவரும் அழிவற்றவர்கள். உடல் அழிவதால் ஆத்மா நாசமுறாது. அது நித்யமானது. எப்படி ஜீவாத்மாவுக்கு இந்த உடலில் இளமையும், முதுமையும் வருகின்றனவோ அவ்வாறே வேறு உடலும் வந்து சேர்கிறது." தலையை உலுக்கிக் கொண்டேன். ஜன்னலை விட்டு நகர்ந்து படுக்கையில் விழுந்தேன். மனம் காகங்களை நான் வெறுப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டுக் காட்டியது. உலர்ந்த துணிகளை எடுக்க மாடியேறினால் உச்சந்தலையில் அலகால் கொத்துவது. ஒரு நாள் ரத்தமே வந்துவிட்டது. பல வருடம் முன்பு இருந்த தாத்தாவின் குட்டி ஆக்ஸ்ஃபோர்டு டிஸ்னரியைப் பத்தாம் வகுப்பு படிக்கும்போது வைத்திருந்தேன். அதைப் பால்கனியில் வைத்துவிட்டு, வீட்டுக்குள் போய்த் திரும்புமுன் கீறிக் கிழித்துக் குதறியிருந்தது ஒரு காகம். இந்தக் காகங்கள் வழக்கமான மீனின் தலையையோ, கோழியின் எலும்பையோ கோலத்தின் மீது போட்டுவிட்டுப் போகும். யோசித்தபடியே தூங்கிவிட்டேன்; இருளின் ஆழத்திலிருந்து எழுந்த காகத்தின் பாதங்கள் என் மேல் நடக்கின்றன. அதன் இறக்கைகள் படபடக்கின்றன. அந்தக் கூர்மையான அலகு என் உடலைக் கிழிப்பதற்குள் விழித்துவிட்டேன். விடிந்ததும் வானில் சூரியனுக்குப் பதில் ஒரு காகம்தான் உட்கார்ந்திருக்கும் என்று வெறுப்போடு ஜன்னலைத் திறந்தேன். சூரியனின் ஒளி கண்ணைக் கூசச் செய்தது. நிறையக் காகங்கள்; எதற்காகவோ இப்போதே விழித்து, என்ன தேடியோ எங்கெங்கும் பறந்து "கா...கா..." வென்ற குரலால் உலகை நிறைத்து... நல்லவேளை இதில் எந்தக் காகத்திற்கும் கழுத்தில் வெண்திட்டு இல்லை. அது கண்ணில் தென்படாமலேயே சில நாட்கள் கடந்தன. அதன் வருகைக்காகக் காத்திருக்கத் துவங்கிவிட்டதாக உணர்ந்தேன். இல்லை; அது வரவேண்டும் என நான் விரும்பவில்லையென்றும் எனக்குள் சொல்லிக்கொண்டேன். "என்னவோ போகட்டும்; அது ஒரு சாதாரண ஜீவன். அடுத்த முறை வந்தால் அதற்கு ஒரு கவளச் சாதத்தை வைத்தால் போயிற்று" என் தீர்மானம் எனக்கு வியப்பாயிருந்தது. கனவென்றுதான் சொல்ல வேண்டும். இரவின் கருமை முழுவதும் ஒரே புள்ளியாகக் குவிந்தது. பிறகு அந்தச் சிறு புள்ளி என் நெற்றியில் தொற்றிப் பதிந்து, மூக்கு, உதடு, கழுத்து என்று நகர்ந்தது. அது மார்பில் நிலை கொண்டுவிடும் என்று நினைத்த போது நிதானமாகித் திரண்டு கருப்பைக்குள் புகுவதைக் கண்டேன். நொடியில் எண்ணற்ற பறவைக் குஞ்சுகள் பொரிந்து சிறகு பெற்று என் அடிவயிற்றில் நீந்தின. மிகவும் அவசரமாக விடிந்துவிட்டது போலிருந்தது. காலையின் குளிர் என் சருமத்தில் ஊசி முனைகளாகப் பதிந்தது. வாசலின் முதல் படியை விட்டு இறங்கியபோது பாதத்தில் எதுவோ பட்டது. வெதுவெதுப்பான, மிருதுவான, விலுவிலுவென்ற என்னவோ. குனிந்து பார்த்தபோது முதலில் அது ஒரு கறுப்புத் துணியாகத்தான் தெரிந்தது. திறந்த விழிகளும், விறைத்த உடலுமாக அது உயிரற்றுக் கிடந்தது. பெருக்குமாற்றால் அந்தச் செத்த காகத்தைப் புரட்டினேன். என் கை நடுங்கியது. மெல்லிய ரோமங்கள் விலக, அதன் கழுத்திலிருந்த அந்த வெண்திட்டு வெளிப்பட்டது.